என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • புதியவர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பே மாவட்ட தலைவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் பட்டியல் வெளியிடப்படவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதியவர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலில் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னை கிழக்கு கராத்தே ஆர்.செல்வம், மத்திய சென்னை மேற்கு கோபி, வட சென்னை கிழக்கு மதர்மா கனி, வட சென்னை மேற்கு தில்லிபாபு, தென் சென்னை மத்திய ஜோதி பொன்னம்பலம், தென் சென்னை கிழக்கு விஜயசேகர், தென் சென்னை மேற்கு திலகர், செங்கல்பட்டு வடக்கு செந்தில்குமார், செங்கல்பட்டு தெற்கு பிரபு ஆகியோர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர்களுக்கான பட்டியல் இந்த அறிவிப்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    • தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,280-க்கும், ஒரு சவரன் 1,06,240-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் வார தொடக்கத்தில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,450-க்கும், சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 318 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    17-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    16-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840

    15-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,320

    14-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-1-2026- ஒரு கிராம் ரூ.310

    17-1-2026- ஒரு கிராம் ரூ.310

    16-1-2026- ஒரு கிராம் ரூ.306

    15-1-2026- ஒரு கிராம் ரூ.310

    14-1-2026- ஒரு கிராம் ரூ.307

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று முதல் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கலையொட்டிய தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிறுவனங்களை நடத்தி வருபவர்களும் தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து விட்டு அவர்களும் ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தனர்.

    பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று முதல் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    இன்று முதல் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படுவதால், விடுமுறைக்காக குடும்பத்துடன் தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பி வரத்தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக திருச்சி சென்னை NH சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை நோக்கி வரும் கார்கள், பேருந்துகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் பேருந்துகள் நகர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

    சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்புவதையடுத்து செங்கல்பட்டு டோல்கேட், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி ஜன. 21, 23-ந்தேதிகளிலும் நடைபெற உள்ளது.
    • ஜன.26-ந்தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்ற உள்ளார்.

    சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே ஜன.26-ந்தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவுக்கான முதல் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி ஜன. 21, 23-ந்தேதிகளிலும் நடைபெற உள்ளது.

    ஜன.26-ந்தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்ற உள்ளார்.

    குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஜன.26, ஒத்திகை நடைபெறும் நாட்களான 21, 23 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,

    அடையாறு பகுதியிலிருந்து காமராஜா் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உள்பட) காந்தி சிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பப்பட்டு, ராயப்பேட்டை 1 பாயிண்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொளடியா மட் சாலை, ராயபேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டா்ஸ் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

    மயிலாப்பூா் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயப்பேட்டை 1 பாயிண்ட்டில், இதர வாகனங்கள் இடதுபுறமாகவோ அல்லது வலதுபுறமாகவோ திரும்பி தங்களின் இலக்கை அடையலாம்.

    மாநகர பேருந்துகள் இடதுபுறமாக திரும்பி டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே.சாலை.கொளடியா மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக பிராட்வே சென்றடையலாம்.

    டாக்டா் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் ஹவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பிவிடப்படும். டாக்டா்.பெசன்ட் சாலையிலிருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பிவிடப்படும்.

    காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் சாலை நோக்கி திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளா் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

    அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் மாற்றப்படும். பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜா் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையில் செல்லாமல் வடக்கு துறைமுக சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, அண்ணாசிலை, ஜி.பி.சாலை, ராயப்பேட்டை மணி கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜி.ஆா்.எச். சாலை, அஜந்தா சந்திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை (வி.பி.ராமன் சாலை), ஜஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடதுபுறம் அல்லது வலதுபுறம் திரும்பி டாக்டா்.ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.

    அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை (வாலாஜா பாய்ண்ட்) சந்திப்பிலிருந்து போா் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

    இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
    • சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணை முடிந்த நிலையில் விஜய் சென்னை திரும்பினார்.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வரும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து த.வெ.க. தலைவர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்? உங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதா?, நிகழ்ச்சிக்கு செல்ல பல மணி நேர தாமதம் ஏன்?, கூட்டம் அதிகரித்தபோது கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா?, கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்? இதுகுறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா?, தண்ணீர், பாதுகாப்பான நுழைவு, வெளியேறும் வழி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டதா?' என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை விஜயிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர்.

    அனைத்து கேள்விகளுக்கும் விஜய் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணை முடிந்த நிலையில் அவர் சென்னை திரும்பினார். அவர் அடுத்தகட்ட விசாரணைக்காக பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு நாளை (ஜன.19-ந்தேதி) டெல்லியில் மீண்டும் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.

    இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்காக 2-வது முறையாக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சி.பி.ஐ. முன்பு 2-வது முறையாக இன்று விஜய் ஆஜராகிறார். இன்றும் சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    • தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் விருது வழங்கப்படும்
    • சாகித்ய அகாடமி விருதுகளில் அரசியல் தலையீடு இருப்பதை விமர்சித்து, இந்த மாற்று ஏற்பாடு குறித்து அவர் அறிவித்தார்.

    தமிழ்மொழி மட்டுமின்றி பிற இந்திய மொழிகளின் இலக்கியப் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் "செம்மொழி இலக்கிய விருது" என்ற புதிய தேசிய விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அறிவித்தார். சாகித்ய அகாடமி விருதுகளில் அரசியல் தலையீடு இருப்பதை விமர்சித்து, இந்த மாற்று ஏற்பாடு குறித்து அவர் அறிவித்தார். 

    இதன் கீழ், முதற்கட்டமாக தமிழ் உட்பட 7 மொழிகளின் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராத்தி) சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் விருது வழங்கப்படும். வெளிப்படைத்தன்மையுடன் விருதுகளைத் தேர்வு செய்ய, ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாகச் சிறந்த எழுத்தாளர்களைக் கொண்ட தன்னாட்சி பெற்ற தேர்வுக் குழுக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் இந்த அறிவிப்பில் ஹிந்தி மொழி இடம்பெறாதது கவனம் பெற்றுவருகிறது. தமிழ்நாட்டிற்கும் - மத்திய அரசிற்கும் இடையே ஹிந்தி திணிப்புக்கு இடையேயான மோதல்கள் வலுத்து வரும்நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது. 

    இதற்கு முன்னதாக, "கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது" தகுதியுள்ள தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • திமுகவில் கனிமொழி தலைமையிலும், தவெகவில் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
    • இக்குழுவில் மாநிலத் துணைத்தலைவர் துரைசாமி உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் வியூகங்கள், தேர்தல் அறிக்கை பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவில் கனிமொழி தலைமையிலும், தவெகவில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலும் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் முதற்கட்ட தேர்தல் அறிக்கையே வெளியாகிவிட்டது. 

    இந்நிலையில் தமிழ்நாடு பாஜக அக்கட்சியின் மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை நியமித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், 

    'தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது, முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் அமைக்கப்படுகிறது.' எனக் குறிப்பிட்டுள்ளது. இக்குழுவில் மாநிலத் துணைத்தலைவர் துரைசாமி உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர். 


    • நான்தான் பாமக தலைவர் என அன்புமணி கூறுவதை ஊடங்கள் வெளிப்படுத்தக்கூடாது
    • பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும்

    விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்,

    டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தவாறும், நீதிமன்ற தீர்ப்பின்படியும் அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று சொல்லமுடியாது; சொல்லக்கூடாது. பாமகவின் அடிப்படை உறுப்பினராகக்கூட அவர் இருக்கமுடியாது என செயற்குழு, நிர்வாககுழு, பொதுக்குழு என மூன்று குழுக்களும் சொல்லியபிறகும், அவர் பாமகவின் தலைவர் என சொல்லிக்கொண்டு திரிகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். நான்தான் பாமக தலைவர் என அன்புமணி கூறுவதை ஊடங்கள் வெளிப்படுத்தக்கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீதிமன்ற தீர்ப்பின்படி கட்சியின் கொடி, சின்னம், பெயரை அவர் பயன்படுத்தக்கூடாது. என தெரிவித்தார். 

    தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து பேசிய அவர், 

    பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும்; இதுதான் 'சிறந்த கூட்டணி, நல்ல கூட்டணி, நாணயமான கூட்டணி" என்று மக்கள் பேசுகின்ற அளவிற்கு இந்தக் கூட்டணி அமையும். அப்படிப்பட்ட கூட்டணியை அமைக்க தீவிரமாக முயன்று வருகிறோம். என தெரிவித்தார். 

    அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், 

    தேர்தல் வாக்குறுதிகளில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். எப்படியாவது ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த வகையில் மக்கள்தான் தீர்ப்பளிப்பர் என தெரிவித்தார். 

    • எங்களுடைய நோக்கம் மிகவும் தெளிவாக உள்ளது.
    • அதுவே முதன்மையான நோக்கமாகும்.

    வருகிற மார்ச்- ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என வியூகங்கள் அமைத்து பாஜக செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மத்திய அமைச்சரான அர்ஜுன் ராம் மெக்வால் "நாங்கள் ஐந்து மாநில தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். எங்களுடைய நோக்கம் மிகவும் தெளிவாக உள்ளது. அதுவே முதன்மையான மற்றும் தலையாய நோக்கமாகும். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி மற்றும் நல்லாட்சி அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்வோம்" என்றார்.

    பிரதமர் மோடி 23-ம் தேதி தமிழகம் வருகிறார். மதுராந்தகத்தில் நடைபெறும் பேரணியில் கலந்த கொண்டு பேச இருக்கிறார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், தமிழக தேர்தலுக்கான பாஜக கட்சியின் துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பியூஷ் கோயல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அர்ஜுன் ராம் மெக்வால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகம் வந்திருந்தார். அப்போது பாஜக கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    • கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
    • டெல்லியில் நட்சத்திர விடுதி ஒன்றில் விஜய் தங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மற்றும் நேரில் சம்பவத்தை பார்த்தவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து, கரூர் சம்பவம் தொடர்பாக கடந்த 12-ந்தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார். அப்போது அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதையடுத்து விஜயிடம் மேலும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு இருந்த நிலையில், பொங்கல் விடுமுறையை காரணம் காட்டி அடுத்த நாட்களில் ஆஜராக விஜய் விலக்கு கேட்டு இருந்தார். இதை ஏற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் நாளை ஆஜராகுமாறு தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், நாளை சி.பி.ஐ. விசாரணைக்காக ஆஜராக உள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். டெல்லியில் நட்சத்திர விடுதி ஒன்றில் விஜய் தங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • மாலை 4 மணிக்கு முடியும் படகு போக்குவரத்து 1 மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடந்தது.
    • அனைவரும் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து கடந்த 15-ந்தேதி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து அன்று முதல் இன்று வரை 2 மணி நேரம் முன்னதாக அதிகாலை 6 மணிக்கு தொடங்கியது. அதேபோல மாலை 4 மணிக்கு முடியும் படகு போக்குவரத்து 1 மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடந்தது.

    தொடர் விடுமுறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை 56 ஆயிரத்து 609 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர். போகிப்பண்டிகையான 14-ந்தேதி 9 ஆயிரத்து 593 பேரும், பொங்கல் பண்டிகையான 15-ந்தேதி 16 ஆயிரத்து 564 பேரும், மாட்டுப்பொங்கல் தினமான நேற்று முன்தினம் 14 ஆயிரத்து 737 பேரும், காணும் பொங்கல் தினமான நேற்று 15 ஆயிரத்து 715 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

    ×