என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • ஒரே நேரத்தில் 38 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம்.
    • சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    பெருநகர சென்னை காவல்துறையில் நிர்வாக நலன் கருதி, ஒரே நேரத்தில் 38 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

     

    • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகி இருந்தார்.
    • தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்.

    பா.ஜ.க. கூட்டணியில் இணைவதை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகி இருந்தார். தற்போது மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்.

    இந்நிலையில், டிடிவி தினகர் தலைமையிலான அமமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை வரவேற்கிறேன் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமித்ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வளமான தமிழகம் - வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி.

    டிடிவி தினகரன் அவர்கள் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை நான் வரவேற்கிறேன்.

    திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்து, பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருப்பதை ஆசீர்வதிக்க தயாராக இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கஞ்சா மாடல் தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
    • மாநிலம் முழுவதும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

    கஞ்சா மாடல் திமுக ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    கோவையில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் இளைஞரை கொடூரமாக தாக்கும் வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    இது ஒரு இடத்தில நடந்த வன்முறை சம்பவம் அல்ல, சமீபத்தில் திருத்தணி, சென்னை, நேற்று கோவையில் நடந்துள்ளது.

    இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பாவது:-

    கஞ்சா மாடல் தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    கோவை கணபதி பகுதியில், கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல் ஒரு இளைஞரை மிகக் கொடூரமாகத் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கிருந்த பொது மக்கள் சரியான நேரத்தில் தலையிட்டிருக்காவிட்டால், அந்தத் தாக்குதல் ஒரு உயிரிழப்பில் முடிந்திருக்கும்.

    இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. சமீபத்தில் திருத்தணியிலும், பிறகு சென்னையின் வேளச்சேரியிலும், நேற்று கோவையிலும் என மாநிலம் முழுவதும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

    தி.மு.க-வோடு தொடர்புடையவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவது மீண்டும் மீண்டும் அம்பலமாகும் போது, ஏன் கஞ்சா வலைப்பின்னல் செழித்து வளர்கிறது என்பதும், வன்முறை ஏன் கட்டுக்கடங்காமல் போகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2 வாரங்களில் பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரா வருமான வரி வழக்கில் வசூல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வருமான வரி பாக்கி தொடர்பாக அனுப்பிய, நோட்டீசை எதிர்த்து ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    • இபிஎஸ் பெயரை சொல்லவே டிடிவி தினகரன் தயங்குகிறார்.
    • தற்போதுவரை பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியை கொடுக்கவில்லை.

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தக கண்காட்சியை கடந்த 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று புத்தக கண்காட்சியை காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கண்காட்சி பலருக்கும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தார்.

    தொடர்ந்து அவரிடம் அ.ம.மு.க. தே.ஜ.கூட்டணியில் இணைந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,.  

    "இயற்கைக்கு முரணான கூட்டணி. தமிழ்நாடு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. ஒருநாளும் மக்கள் அந்தக் கூட்டணியை ஏற்கமாட்டார்கள். நேற்றுவரை இபிஎஸ்-க்கு துரோகி பட்டத்தை கொடுத்துவந்தார் டிடிவி தினகரன். இனி எப்படி அவருடன் வாக்கு கேட்பார், களம் காண்பார்? இன்று அவரது பெயரை சொல்லவே தயங்குகிறார். தற்போதுவரை பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியை கொடுக்கவில்லை. ரூ.3400 கோடி வரை நிலுவையில் உள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் இந்த நிதி விடுவிக்கப்படும் என கூறுகிறார்கள். அவர்கள் எப்படி தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கு கேட்பார்கள்? இந்த கூட்டணியின் படையெடுப்பை தமிழ்நாடு மக்கள் முறியடிப்பார்கள்." என தெரிவித்தார். 

    • தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம்.
    • திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் அதிமுகவினர் செயல்படுவதால் வேதனை அளிக்கிறது.

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார். இந்தநிலையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் வைத்திலிங்கம் இணைந்தார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சசிசலா கூறியதாவது:

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது துரதிருஷ்டவசமானது. தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம்.

    திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் அதிமுகவினர் செயல்படுவதால் வேதனை அளிக்கிறது.

    இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். ஒரு சிலரின் சுயநலத்தால் நடக்கிறது.

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்வதில் எங்களைவிட நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள்.
    • தே.மு.தி.க.வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை கலந்தாலோசித்து தெளிவான ஒரு முடிவை உங்களை அழைத்து அறிவிப்பேன்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி: மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். கூட்டணியை பலப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகள் போய் கொண்டிருக்கிறது. கூட்டணி தொடர்பாக உங்கள் முடிவு என்ன என்று தொண்டர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

    பதில்: எங்கள் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள் என்றால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள்தான் காத்திருக்கிறீர்கள். தொண்டர்கள் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள்.

    நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்வதில் எங்களைவிட நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள். உங்களை நான் அழைத்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். பியூஷ் கோயல் வந்திருப்பதாகவும் எங்களுடன் பேச இருப்பதாகவும் நீங்கள்தான் சொல்கிறீர்கள். எங்களுக்கு இன்னும் தகவல் வரவில்லை. இது தான் உண்மை.

    எங்களுக்கு அப்படி ஒரு செய்தி இந்த நிமிடம் வரை வரவில்லை. எங்களை யாரும் அணுகவும் இல்லை. தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளவில்லை. பியூஷ் கோயல் எதற்காக வந்திருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. கூட்டணி தொடர்பாக முடிவு எடுத்தால் முதலில் உங்களை கூப்பிட்டு தெரிவிக்கிறேன்.

    கேள்வி: யாருடன் கூட்டணி என்று முடிவு எடுத்திருக்கிறீர்கள்?

    பதில்: நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாளை மறுநாள் (23-ந்தேதி) பிரதமர் வருகிறார் என்பதை தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். அது அவர்கள் கட்சி சார்பான கூட்டமா அல்லது கூட்டணி தொடர்பான கூட்டமா என்பது கூட தெரியவில்லை.

    தே.மு.தி.க.வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை கலந்தாலோசித்து தெளிவான ஒரு முடிவை உங்களை அழைத்து அறிவிப்பேன். வருகிற 24-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை 4-ம் கட்ட பயணத்துக்கு நாங்கள் கிளம்புகிறோம். அந்த பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்.

    கேள்வி: கூட்டணி குறித்து நாங்கள் உறுதி செய்து விட்டோம். உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று மாநாட்டில் அறிவித்தீர்களே?

    பதில்: எங்கள் கட்சிக்குள் கலந்து ஆலோசித்து இருக்கிறோம். அவர்களின் கருத்துக்களை கேட்டு இருக்கிறேன். அவர்கள் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்கள். அதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

    கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணி குழப்பத்தில் உள்ளதா?

    பதில்: பா.ஜ.க. தலைவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் பதில் இல்லை.

    கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணியில் அழைத்தால் சேருவீர்களா?

    பதில்: நடக்காத ஒரு விஷயத்துக்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

    கேள்வி: பியூஷ் கோயல் அழைத்தால் சந்தித்து பேச தயாராக இருக்கிறீர்களா?

    பதில்: இதுவரை அழைக்கவில்லை. அப்படி வந்தால் உங்களுக்கு சொல்கிறேன். பிரதமர் மோடி நாளை மறுநாள் (23-ந்தேதி)தான் வருகிறார். அன்றைக்கு பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணன் டிடிவி தினகரன் அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் டிடிவி தினகரன் அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 254 மீன்பிடிப் படகுகளும் தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர்
    • இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாக சீர்குலைத்துள்ளது

    மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

    அக்கடிதத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளில் வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் இன்று சிறைபிடிக்கப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதும் தடையின்றித் தொடர்வது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இன்றுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 254 மீன்பிடிப் படகுகளும் தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளதாகக் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். 

    தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் கடலோர சமூகத்தினருக்கு கடுமையான இன்னல்களை ஏற்படுத்தியுள்ளதாகச் கட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், தமிழக மீனவர்கள் இலங்கையில் நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும். அவர்களது குடும்பத்தினருக்கு கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும் தொடர்ச்சியான மன உளைச்சலையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாகச் சீர்குலைத்துள்ளது என்றும் தனது கடிதத்தில் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திடவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெறுவதைத் தடுக்கவும், ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். 

    • கட்சியின் நலன் மற்றும் தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
    • தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன்.

    சென்னை:

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்று இணைந்தது. இணைப்புக்கு பிறகு மத்திய மந்திரியும், பா.ஜனதா தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் பேட்டி அளித்தனர். அப்போது அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த அ.ம.மு.க. உறுதுணையாக இருக்கும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று 2021-ம் ஆண்டிலேயே அமித்ஷா விரும்பினார்.

    2021-ம் ஆண்டு அமைக்க தவறிய ஜெயலலிதா ஆட்சியை இந்த முறை அமைத்தே தீருவோம். நாங்கள் எங்கள் பங்காளி சண்டைகளை ஓரம் வைத்து விட்டு அனைத்தையும் மறந்து சேர்ந்திருக்கிறோம். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்ற நோக்கில் இணைந்திருக்கிறோம்.

    எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தூக்கி எறிந்துவிட்டு முழு மனதோடு கூட்டணிக்கு வந்து இருக்கிறோம். கட்சியின் நலன் மற்றும் தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என உங்களுக்கே தெரியும்.

    தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். இந்த கூட்டணி ஆட்சியில் அ.ம.மு.க. இடம் பெறும். தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்து உள்ளதற்கும் பேரை குறிப்பிடாமல் அவருக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்தார்.

    • கடந்த சில நாட்களாக மாணவி காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
    • மாணவி தங்கி இருந்த விடுதியில் உள்ள மேலும் 7 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிந்தது.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.

    இங்கு கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த மாணவி சரண்யா (வயது20) என்பவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

    நேற்று அதிக அளவில் உடல்நிலை மோசம் அடைந்ததால் சரண்யா கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதேபோல் மாணவி தங்கி இருந்த விடுதியில் உள்ள மேலும் 7 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிந்தது. அவர்களில் 4 பேர் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மற்ற 3 பேரும் தங்களது ஊர்களுக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளனர். இறந்து போன மாணவிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு காரணமா? என்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    • ஆளுநர் உரையில் என்ன இடம்பெற வேண்டுமென்பதை ஆளும் பீடத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் தாம் முடிவு செய்வர் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் மரபாகும்.
    • தி.மு.க. அரசுக்கு எதிரான திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட அவதூறு ஆகும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சட்டமன்றத்தில் ஆளுநர் தனது கடமையை ஆற்றாமல் அவையில் இருந்து வெளியேறியிருப்பது அவரது வாடிக்கையான அணுகுமுறை தான். இதில் அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை. அவர் இப்பொறுப்பில் இருக்கும் வரை இத்தகைய அடாவடிகளைத் தொடரவே செய்வார். அதற்கு ஏதேனும் சாக்குபோக்குகளையும் சொல்வார்.

    ஆளுநர் உரையில் என்ன இடம்பெற வேண்டுமென்பதை ஆளும் பீடத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் தாம் முடிவு செய்வர் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் மரபாகும். ஆனால், இவர் தாம் விரும்புவதுபோல 'ஆளுநர் உரை' அமைய வேண்டுமென எதிர்பார்க்கிறார். இது அவரது திட்டமிட்ட 'அவை மரபு' மீறலாகும். தொடர்ந்து சட்டப் பேரவையை அவமதிக்கும் அவரது இப்போக்கை வி.சி.க. வன்மையாகக் கண்டிக்கிறது.

    'தமிழ்த்தாய் வாழ்த்து' என்பது அவை நடவடிக்கைகளின் தொடக்கத்திலும் 'தேசிய கீதம்' என்பது அவை நிறைவிலும் தான் இசைக்கப்படும் என்பது அவருக்குத் தெரிந்த ஒன்று தான். எனினும், தொடக்கத்திலேயே ஏன் இசைக்கவில்லை என்பது குதர்க்க வாதம். இது தி.மு.க. அரசுக்கு எதிரான திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட அவதூறு ஆகும்.

    சனாதன சக்திகளிடம் வலுப்பெற்றுள்ள 'திராவிடக் கருத்தியலுக்கு' எதிரான 'ஒவ்வாமையின்' வெளிப்பாடு தான் ஆளுநரின் இத்தகைய செயல் என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும்.

    இந்நிலையில், குடியரசு நாளையொட்டி ஆளுநர் அளிக்கவுள்ள வழக்கமான 'தேநீர் விருந்தில்' விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த ஆண்டும் பங்கேற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×