என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம்.
    • மத்தியில் உள்ள NDA அரசும், தமிழகத்திற்கான நிதிகள், திட்டங்களை வாஞ்சையோடு வழங்கும்.

    பிரதமர் சொல்லும் டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது என்ற முதலமைச்சரின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    இன்றைய தினம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் இந்திய திருநாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் இணைந்து பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி.

    அதிமுக தலைமையிலான நம் வெற்றிக் கூட்டணியின் சார்பில் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று,

    இன்றைய நமது கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம், ஆளுங்கட்சி திமுக-வை ஆட்டம் காண வைத்துள்ளதை ஆணித்தரமாக எடுத்துரைத்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும்,

    "திமுக ஆட்சி என்றாலே அது ஒரு பூஜ்ஜியம் ஆட்சி" என்ற உண்மையை உரக்கச் சொன்ன பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும்,

    "மக்கள் விரோத திமுக குடும்ப ஆட்சியை அகற்றி, மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய அம்மாவின் தொண்டர்கள் ஒன்றாக இணைந்து அயராது உழைக்க வேண்டும்" என்று உரைத்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர், அன்புச் சகோதரர் டிடிவி தினகரன் அவர்களுக்கும், இம்மாபெரும் பொதுக்கூட்டத்தை சிறப்பித்த

    ஜி.கே.வாசன் அவர்களுக்கும், ஜான் பாண்டியன் அவர்களுக்கும்,

    ஜகன் மூர்த்தி அவர்களுக்கும், புதிய நீதிகட்சித் தலைவருக்கும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர்க்கும்,

    மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கும், பல்வேறு அமைப்பை சார்ந்த தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    எங்கள் கூட்டணியின் எழுச்சியை நேரலையில் மு.க.ஸ்டாலின்

    பார்த்து அலறிப் போய் விட்டார் போல. உடனே எக்ஸ் தளத்தில் தனது புலம்பலை ஆரம்பித்துவிட்டார்.

    "அடி மேல் அடி வைத்தால் அம்மி கூட நகரும்" என்பார்கள். ஆனால்,

    நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராத,

    ஒரு "ஓடாத ஓட்டை எஞ்ஜின் ஆட்சி"யை நடத்திவிட்டு, இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம்.

    வரும் சட்டமன்றத் தேர்தலில் அமையவுள்ள அதிமுக அரசு, நமது மாநிலத்தின் நியாயமான தேவைகளை மத்திய அரசிடம் உரிமையோடு கேட்டுப் பெறும். மத்தியில் உள்ள NDA அரசும், தமிழகத்திற்கான நிதிகள், திட்டங்களை வாஞ்சையோடு வழங்கும்.

    "மதுரை மெட்ரோ எங்கே?

    கோவை மெட்ரோ எங்கே?" என்று வாய்கிழிய கேட்கும் நீங்கள், எதற்காவது ஒழுங்கான ஆவணங்களை, அறிக்கைகளை

    மத்திய அரசிடம் சமர்பித்தீர்களா?

    இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்? நீங்கள் தான் ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர் ஆச்சே... உங்கள் அதிகாரிகளிடம் இதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல், எதற்காக வெறும் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?

    தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என எல்லாவற்றையும் கொடுத்த தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாமல் ஏமாற்றி நீங்கள் நடத்திய #FraudModel_திமுகஆட்சி-யைக் கண்ட பிறகு, நீங்கள் எத்தனை தகிடுத்தத்தங்கள் போட்டாலும், இனி #தமிழ்நாடு_ஏமாறாது !

    குடும்ப ஆட்சியை, ஊழல் ஆட்சியை, மக்களின் பாதுகாப்பை சீர்குலைத்த விடியா ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் ஒருமித்த எண்ணம்.

    மக்களின் எண்ணத்தை ஈடேற்ற அமைந்ததே அதிமுக தலைமையிலான இந்த வெற்றிக் கூட்டணி!

    எங்கள் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தைக் கண்டு இப்படி பயந்துவிட்டீர்களே மு.க.ஸ்டாலின் அவர்களே-

    இது தொடக்கம் தான்...

    Lot more to come!

    மாண்புமிகு அம்மா அவர்கள் கூறுவது போல்,

    நமது இலட்சியம் உயர்வானது!

    நமது பார்வை தெளிவானது!

    நமது வெற்றி உறுதியானது!

    நாளை நமதே!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் வந்தவுடனேயே நீங்கள் அடையும் பதற்றம் உங்களது டிவீட்டில் நன்றாகவே தெரிகிறது
    • பாஜக -தே.ஜ.கூட்டணியின் டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும்

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தே.ஜ.கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், "பாஜக -தே.ஜ.கூட்டணியின் டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம்" என பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இதற்கு, பிரதமர் சொல்லும் "டபுள் எஞ்சின்" எனும் "டப்பா எஞ்சின்" தமிழ்நாட்டில் ஓடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதலமைச்சரின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், 

    "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே நீங்கள் ஒரு ட்ரபிள் என்ஜின் (trouble engine) கவர்ன்மென்ட் வைத்துக்கொண்டு எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக டபுள் இன்ஜின்(double engine) கவர்ன்மென்ட் நடத்திக் கொண்டிருக்கும் மோடி அவர்களை விமர்சிக்கிறீர்கள்.

    குஜராத்,  மகாராஷ்டிரா, உத்தர் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மாநில அளவில் வெற்றியை தருவது மட்டுமல்லாமல் மாநகராட்சி அளவில் வெற்றியை தந்து அது ட்ரிபிள் இஞ்சின் trible என்ஜின் கவர்மெண்டாக போய்க்கொண்டிருக்கிறது.  ஆனால் பஞ்சாயத்து தேர்தலை கூட நடத்த பயந்து தமிழ்நாட்டில் ட்ரபிள் இன்ஜின் (trouble engine) கவர்ன்மென்ட் ஆக போதை, கடன், பாதுகாப்பின்மை போன்றவற்றை ஏற்படுத்தி ஒட்டிக்கொண்டு இருக்கும் உங்கள் கவர்ன்மென்ட் போல் அல்லாமல் ..

    தமிழ்நாட்டில் நல்ல டபுள் இன்ஜின் கவர்மெண்ட் கொண்டுவர வேண்டுமென்றால் அதை "டப்பா இஞ்சின்" என்று விமர்சிக்கிறீர்கள். நீங்கள் தான் "தப்பான இன்ஜினை" வைத்துக்கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள் முதல்வர் அவர்களே...... தமிழ்நாட்டிற்கு பிரதமர் வந்தவுடனேயே நீங்கள் அடையும் பதற்றம் உங்களது டிவீட்டில் நன்றாகவே தெரிகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • ஆகஸ்ட் 16, 2022-ல் வருமான வரித்துறை உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
    • வருமான வரிச் சட்டத்தின் கீழ் இந்த அபராதம் முறையாகவே விதிக்கப்பட்டுள்ளது

    வருமான வரித்துறைக்கு எதிராக நடிகரும், தவெக தலைவருமான விஜய் தாக்கல் செய்த மனுமீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    2015-16 நிதியாண்டில் 'புலி' படத்திற்காக பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, 2022-ல் வருமான வரித்துறை விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி ஆகஸ்ட் 16, 2022-ல் வருமான வரித்துறை உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், இந்த அபராத உத்தரவு சட்டப்பூர்வமான காலக்கெடுவுக்குள் பிறப்பிக்கப்படவில்லை என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்டதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் இந்த அபராதம் முறையாகவே விதிக்கப்பட்டுள்ளது என்றும், விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வருமான வரித்துறை வாதிட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார். 

    • எங்களுக்குள் இருந்த குடும்ப பிரச்சனை, கட்சி பிரச்சனை, அதனை மறந்து ஒன்றிணைந்துள்ளோம்.
    • அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

    மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நிறைவடைந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    டிடிவி தினகரன் கூறியதாவது:-

    எங்களுக்குள் இருந்த குடும்ப பிரச்சனை, கட்சி பிரச்சனை, அதனை மறந்து ஒன்றிணைந்துள்ளோம். நானும் எடப்பாடி பழனிசாமியும் முன்பு எப்படி இருந்தோமோ அதோபோல் ஒன்றிணைந்துவிட்டோம். எப்போதும்போல் அண்ணன், தம்பி போல் நானும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவோம். அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

    எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. திமுக பற்றி விமர்சித்து பேசிய வைகோ மீண்டும் திமுக உடன் கூட்டணி வைத்துள்ளாரே அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. புதிய கட்சிகள் கூட்டணிக்கு வரும்போது நிச்சயம் தெரிவிப்போம்.

    அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும், அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்.

    • பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது
    • ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது.  இதில், "பாஜக - தே.ஜ.கூட்டணியின் டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம்" என பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் சொல்லும் "டபுள் எஞ்சின்" எனும் "டப்பா எஞ்சின்" தமிழ்நாட்டில் ஓடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    "மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் "டபுள் எஞ்சின்" மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் "டப்பா எஞ்சின்" நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.

    தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும், உங்களின் துரோகங்களை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு_தலைகுனியாது!" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • அதாவது சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் குறைந்துள்ளது.

    சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து, அதாவது சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலைக்குறைவை தொடர்ந்து தற்போது வெள்ளிவிலையும் குறைந்துள்ளது. அதன்படி காலையில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்திருந்த நிலையில், தற்போது வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் குறைந்து ரூ.3,45000க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.345க்கு விற்பனை ஆகிறது.  

    • எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதாக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வந்துள்ளோம்.
    • எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மை.

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது.

    இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன்,

    "தமிழ்நாட்டில் நடக்கும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர அமமுக தே.ஜ.கூட்டணியில் இடம்பெற வேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். இந்தக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதாக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வந்துள்ளோம். நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள், புரட்சித்தலைவர் வழிவந்தவர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டனர். எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அ.ம.மு.க.வின் நலனுக்காகவும் பிரதமரின் அழைப்பை ஏற்று, மனதில் இருந்த எல்லா கோப, தாபங்களையும் விட்டுவிட்டு மீண்டும் அம்மா ஆட்சியை மலரசெய்ய இந்த கூட்டணியில் இணைந்துள்ளோம்.

    ஒரு விஷயத்தை எதிர்ப்பது என்றால் அதிலும் உறுதி, ஆதரிப்பது என்றால் அதிலும் உறுதியாக இருக்கக்கூடிய தன்மையை ஜெயலலிதா எனக்கு கொடுத்திருக்கிறார். ஒரேக் குடும்பத்தை சேர்ந்தவர்கள்; பங்காளிகளாக இருந்தவர்கள். எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மை. ஆனால் மக்களாட்சியை தமிழ்நாட்டில் நிறுவவேண்டும் என்பதற்காக நாங்கள் முழுமனதோடு இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாடே இன்று கொலை, கொள்ளை நாடாக மாறிக் கிடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதைப்பொருள் புழக்கம். தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வருத்தத்தில் இருக்கும்போது மகனை முதலமைச்சராக துடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்தக் குடும்ப ஆட்சியை முழுமையாக முறியடிப்போம்" என தெரிவித்தார். 

    • 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எனது முதல் பயணம் இது.
    • தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகிவிட்டது என்பது தான்.

    பாரத் மாதா கீ ஜே எனக் கூறி பிரதமர் மோடி உரையைத் தொடங்கினார். அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோரை பிரமர் வரவேற்று பேசினார்.

    கூட்டணி கட்சி தலைவர்கள் பெயர்களை கூறிய பிரதமர் மோடி, இளம் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம் என்று கூறினார்.

    பின்னர் மேலும் அவர் கூறியதாவது:-

    2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எனது முதல் பயணம் இது. பொங்கலுக்கு பின் சிறப்பான ஆனந்தம் நிறைந்திருக்கிறது.

    பொங்கல், எம்ஜிஆர் பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பான நாட்கள் உள்ள மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளேன்.

    மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமரை வணங்குகிறேன், தமிழ்நாட்டின் நலனிற்காகவும் வேண்டிக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக மனிதர் எம்ஜிஆர். இங்கு கூடியுள்ள கூட்டம் நாட்டிற்கு ஒரு செய்தி சொல்கிறது. தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகிவிட்டது என்பது தான்.

    மோசமான திமுக ஆட்சியில் இருந்து தமிழ்நாடு விடுபடத்துடிக்கிறது, தமிழ்நாடு என்டிஏ கூட்டணியை விரும்புகிறது.

    தமிழ்நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது தான் நம் அனைவரின் உறுதிப்பாடு.

    திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மோடி சென்னைக்கு வந்ததும் சூரியன் மறைந்துவிட்டது.
    • திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றமுடியவில்லை. சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறுகிறார்கள்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் அனைவரும் வரவேற்றுப் பேசிய நயினார் நாகேந்திரன்,

    "மோடி சென்னைக்கு வந்ததும் சூரியன் மறைந்துவிட்டது. தே.ஜ.கூட்டணி கூட்டம் நடக்கிறது; சூரியன் இல்லவே இல்லை. இந்த இயக்கம் மாபெரும் இயக்கம். ஆட்சி மாற்றம் நிச்சயம் உறுதி. அதற்காக வேலையை பிரதமர் மோடியும், இபிஎஸ்-ம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றமுடியவில்லை. சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை ஒழிக்க வேலை நடந்துகொண்டிருக்கிறது.

    11 மருத்துவ கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு தந்துள்ளார்கள். 11 வந்தே பாரத் ரயில்கள் தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளார். இந்த 11 ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி தமிழ்நாட்டிற்கு நிதி அளித்துள்ளார்" என தெரிவித்தார். 

    • திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எஞ்சியது துன்பமும் வேதனையும் தான்.
    • ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுராந்தகத்தில் நடக்கும் என்டிஏ கூட்டணி கூட்டத்தில் பிரதமர் என்ன பேசப்போகிறார் என நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

    என்டிஏ கூட்டணி பொபதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பதால் இயற்கையே இன்று சூரியனை மறைத்துவிட்டது.

    நம்மை எதிர்ப்பவர்கள் தீயவர்களாக இருந்தாலும் உரியவர்களோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

    திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எஞ்சியது துன்பமும் வேதனையும் தான்.

    ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் அவர்களின் ஒரே சாதனை ஊழல், ஊழல், ஊழல் மட்டும் தான்.

    இந்த தேர்தல் தான் திமுகவிற்கு இறுதித்தேர்தல், தீயச்சக்தி திமுகவை நீக்குவோம், எம்ஜிஆர், அம்மா கண்ட கனவை நிறைவேற்றுவோம்.

    குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல், ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்.

    அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று பல திட்டங்களை செயல்படுத்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்.
    • மதுராந்தகம் பகுதிக்கு ஹெலிகாப்டரில் பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.

    தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்கள், பிரசாரங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தல் வியூகங்களில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.

    இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகம் பகுதிக்கு ஹெலிகாப்டரில் பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • அரசியல் அறமற்ற இந்தச் செயலைத் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்
    • திகார பலத்தைப் பயன்படுத்திச் சின்னத்தை அபகரிக்க நினைக்கும் இச்செயலைத் தேர்தல் ஆணையம் உடனடியாகக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

    இந்த பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சிகளின் சின்னங்கள் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் பாமகவின் மாம்பழ சின்னம் இடம்பெற்றுள்ளது. அதற்கு தான் உருவாக்கிய மாம்பழ சின்னத்தை பிரதமர் பங்கேற்கும் மேடையில் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

    "இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவில், நான் நிறுவிய பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாற்றுச் சின்னமான 'மாம்பழம்' சின்னம் மேடையின் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தற்போது பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நிலவும் தலைமைப் போட்டியால் 'மாம்பழம்' சின்னம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள ஒரு பிரிவினர் (அன்புமணி தரப்பு), தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படாத ஒரு சின்னத்தை, நாட்டின் பிரதமரே பங்கேற்கும் ஒரு பொதுக்கூட்ட மேடையில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

    இதன் மூலம் நான் தெரிவித்துக் கொள்வது:

    தேர்தல் ஆணையத்தின் வசம் நிலுவையில் உள்ள ஒரு சின்னத்தை மேடையில் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. பிரதமர் பங்கேற்கும் ஒரு நிகழ்வில், இத்தகைய சட்டவிரோதச் செயல்களைச் செய்வது பிரதமரின் பதவிக்கும், ஜனநாயக மரபுகளுக்கும் இழைக்கப்படும் அவமரியாதையாகும். 'மாம்பழம்' சின்னம் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களின் அடையாளம். அது இன்னும் யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், அதனை ஒரு குறிப்பிட்ட அணி தனக்கானதாகக் காட்டிக்கொள்வது தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பூர்வமான தலைமை மற்றும் சின்னம் குறித்த வழக்கு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில், அதிகார பலத்தைப் பயன்படுத்திச் சின்னத்தை அபகரிக்க நினைக்கும் இச்செயலைத் தேர்தல் ஆணையம் உடனடியாகக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் அறமற்ற இந்தச் செயலைத் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    இதற்கு பதிலளித்துள்ள அன்புமணி, மாம்பழம் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ×