என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட அமைதிப் பேரணி நடைபெற்றது.
    • ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி செல்கிறது.

    பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட அமைதிப்பேரணி நடைபெற்றது.

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெறுகிறது.

    ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணியை தொடங்கினார். பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு பங்கேற்றனர்.

    • நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (04.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    திருமுல்லைவாயல்: வெள்ளனூர், போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே.வள்ளி வேல் நகர், தாய் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    • கடந்த 2021-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
    • இலவச பயணம் என்றாலும் பயணிகள் கண்டிப்பாக டிக்கெட் வாங்க வேண்டும்.

    நெல்லை:

    தமிழக அரசு, பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மகளிர் விடியல் பயண திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணித்து வருகிறார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 2 பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.

    அதாவது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை டவுன் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன்பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளிடமும் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்தனர். அதில், அந்த பஸ்சில் பயணித்த 2 பெண்களிடம் டிக்கெட் இல்லை. இதனால் டிக்கெட் பரிசோதகர்கள், 2 பெண்களுக்கும் தலா ரூ.100 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த பஸ்சில் பயணம் செய்த பெண் பயணிகள் கூறும்போது, ''கண்டக்டர்கள் டிக்கெட் கொடுக்கும்போது 3 பேருக்கும் சேர்த்து ஒரு டிக்கெட், 6 பேருக்கு சேர்த்து ஒரு டிக்கெட் என மொத்தமாக கொடுக்கிறார்கள். ஆனால் டிக்கெட் வாங்கிய நபர் அவரது நிறுத்தம் வந்ததும் இறங்கி சென்றுவிட்டால் மற்றவர்களுக்கு டிக்கெட் இருக்காது.

    இதுபோன்ற குளறுபடியான சம்பவத்தினாலேயே அந்த 2 பெண் பயணிகளிடம் டிக்கெட் இல்லை. இதுகுறித்து அவர்கள் விளக்கம் அளித்தும் அபராதம் விதித்துள்ளனர்'' என்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பெண் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எந்த தகவலும் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. இருப்பினும் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இலவச பயணம் என்றாலும் பயணிகள் கண்டிப்பாக டிக்கெட் வாங்க வேண்டும். கண்டக்டர்களும் தனித்தனியாக அனைவருக்கும் டிக்கெட் கொடுத்திருக்க வேண்டும்.

    எனினும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பெண் பயணிகளிடம் அபராதம் வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்களை எச்சரித்து அனுப்பி இருக்கலாம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான்.
    • அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.

    பேரறிஞர் அண்ணாவின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,

    பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி!

    நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!

    அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.

    மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான்!

    ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!

    • ஒரே நாளில் 3,81,476 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    கடந்த ஜனவரி மாதம் 93.28 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர் என்றும் அதிகபட்சமாக ஜன.9ம் தேதியில் மட்டும் 3.81 லட்சம் பேர் மெட்ரோ போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2026 ஜனவரி மாதத்தில் 93.28 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்

    சென்னை மெட்ரோ ரெரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 93,28,937 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதிகபட்சமாக 09.01.2026 அன்று 3,81,476 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2026, ஜனவரி மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 46,52,834 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 43,107 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 46,32,996 பயணிகள் (Single journey Paper QR /Token 19,60,685; Online QR – 1,26,665; Static QR 2,27,737; Whatsapp - 4,55,401; Paytm 3,35,852; ONDC – 10,38,782; PhonePe – 2,76,216; CMRL Mobile App 60,240; Chennai One App – 1,43,620; Event QR - 7,798) பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தோம்.
    • மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.

    மத்திய பட்ஜெட் குறித்த கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர்,

    ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தோம்.

    இந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்த்தோம்.

    அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம், மிக அதிகரித்துள்ளது
    • உலகத் தரம் வாய்ந்த கல்வியை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை.

    தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளி இடைநிற்றல் அளவு அதிகரித்துள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 

    "தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம், மிக அதிகரித்துள்ளது, மத்திய கல்வித்துறை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2021–22 ஆம் ஆண்டிலிருந்து, தற்போது மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், தொடக்கப் பள்ளி வகுப்புகளில் 0% ல் இருந்து 2.7% ஆகவும், நடுநிலை வகுப்புகளில் 0% ல் இருந்து 2.8% ஆகவும், உயர்நிலை வகுப்புகளில் 4.47% ல் இருந்து 8.5% ஆகவும் அதிகரித்துள்ளது.

    கடந்த நான்கரை ஆண்டுகளாக, தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் பணம் சம்பாதிக்க, அரசுப் பள்ளிகளில், வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் என, அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை முழுமையாக சிதைத்ததே, இதற்கு முக்கியக் காரணம்.

    உலகத் தரம் வாய்ந்த கல்வியை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று திமுக அரசு கொண்டு வந்த வினோத கல்விக் கொள்கை, ஒரு தோல்வியடைந்த கல்விக் கொள்கை என்பது நிரூபணமாகியிருக்கிறது.

    ஏழை, எளிய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சம் கூடக் கருத்தில் கொள்ளாமல், கல்வியை வியாபாரமாக்கி, நடுத்தர குடும்பத்தினர் மீது, பெரும் கடன் சுமையைத் திணித்திருக்கிறது திமுக அரசு. வரும் தேர்தல் முடிந்த பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, அரசுப் பள்ளிகள் இழந்த பெருமையை நிச்சயம் மீட்டெடுக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
    • பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நலம் விசாரித்தார்.

    சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    அந்த வகையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நலம் விசாரித்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    • மாபெரும் மக்கள் சக்தியாக நம்ம அணி ஒரு பக்கம்.
    • அவர் டான்ஸ் ஆடினால், டான்ஸ் மட்டும் ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய்,

    "தமிழ்நாட்டில் மும்முனை போட்டி, 4 முனை போட்டி என்று சொல்கிறார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும் அப்படியே இருக்கட்டும். மாபெரும் மக்கள் சக்தியாக நம்ம அணி ஒரு பக்கம். அடுத்து தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம். அடுத்து பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர்." என தெரிவித்தார்.  

    இதுகுறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

    அதற்கு பதிலளித்த அவர்,

    "விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். ஒரு நாட்டின், கட்சியின் தலைவராக இருந்துகொண்டு தமிழ்நாட்டில், தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்னவென்று தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார்.

    அவர் டான்ஸ் ஆடினால், டான்ஸ் மட்டும் ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். என்டிஏ என்றால் பாஜக இருக்கிறது, அதிமுக இருக்கிறது, தமிழ் மாநில காங்கிரஸ், மேலும் பல கட்சிகளும் விவசாய அமைப்புகளும் இருக்கின்றன. இதுகூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்தால் எப்படி?" என்று தெரிவித்துள்ளார். 

    • ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது.
    • உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே எடுத்துக்காட்டு

    மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று பராளுமன்றத்தில் உரையாற்ற தொடங்கியபோது, முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதியதாக கூறப்படும், இன்னும் வெளியிடப்படாத ஒரு புத்தகத்தை சார்ந்த இதழ் கட்டுரையை கையில் ஏந்தி பேச தொடங்கினார். இது, ஆளும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

    2020ஆம் ஆண்டு இந்தியா–-சீனா இடையே லடாக் எல்லை பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்து எழுதப்பட்டுள்ள குறிப்புகள் அடங்கிய ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற வெளியிடப்படாத புத்தகத்தை ராகுல் காந்தி மேற்கோள் காட்டியதும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

    "வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டுவது அவை விதிகளுக்கு எதிரானது" என்று அவர் கூறினார்.

    கிழக்கு லடாக் எல்லை பகுதியில் பதற்றம், 2020 மே 5ஆம் தேதி, பாங்காங் ஏரி பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்கு பிறகு தீவிரமடைந்தது. இந்த சம்பவம் குறித்து, ஜெனரல் நரவணே தனது வெளியிடப்படாத நினைவு குறிப்புகளில் எழுதியுள்ளதாகவும், அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ஒரு பிரபல இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அந்த இதழின் அச்சு பிரதியை கையில் வைத்திருந்த ராகுல் காந்தி, புத்தகத்தில் உள்ள தகவல்கள் குறித்து பேச முயன்றார். ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கீரன் ரிஜிஜு ஆகியோரும் அவரை கடுமையாக எதிர்த்தனர்.

    தொடர்ச்சியான இடையூறுகளுக்கிடையே, ராகுல் காந்தி, "இதில் என்ன இருக்கிறது, அவர்களை இவ்வளவு பயமுறுத்துகிறது? அவர்கள் பயப்படவில்லை என்றால், நான் தொடர்ந்து வாசிக்க அனுமதிக்கப்பட வேண்டும்," என்றார். தான் மேற்கோள் காட்டிய கட்டுரையும் புத்தகமும் "100 சதவீதம் உண்மையானவை" என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

    இதனால் அவையில் ஏற்பட்ட கடும் அமளி மற்றும் சலசலப்பு ஏற்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்திய ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய "விதியின் நான்கு நட்சத்திரங்கள்" புத்தகத்தின் வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் போராடியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே

    எழுதிய "விதியின் நான்கு நட்சத்திரங்கள்" (Four Stars of Destiny) என்ற புத்தகத்தின் ஐந்து வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் கடந்த ஒன்றரரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் போராடினர்.

    ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது. உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு" என்று தெரிவித்துள்ளார்.

    • முதல்வரை எழுப்பி எந்த சின்னத்தில் வாக்களித்தீர்கள் என்று கேட்டால், விசில் சின்னத்திற்கு என்றுதான் கூறுவார்.
    • தூக்கத்தில் இருந்து எழுந்தவர்களால் உடனடியாக பொய்சொல்ல முடியாது.

    த.வெ.க. கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் முடிவடைந்து, 3-வது ஆண்டு தொடங்கிய நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அபோது திமுக மற்றும் அதிமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    திமுக மற்றும் அதன் கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து பேசுகையில் "2 ஆண்டுகளுக்கு முன்பு, முதல்-அமைச்சர், கட்சி நிர்வாகிகள் நடவடிக்கையால் தூக்கம் வரவில்லை என்று கூறினார்.

    என்றைக்காவது ஒருநாள் நன்றாக தூங்கினார் என்றால், அவரை எழுப்பி எந்த சின்னத்தில் வாக்களித்தீர்கள் என்று கேட்டால், விசில் சின்னத்திற்கு என்றுதான் கூறுவார். (Stalin would ask the people to vote for 'whistle' (TVK election symbol) when he was asked in the midst of his deep slumbe). தூக்கத்தில் இருந்து எழுந்தவர்களால் உடனடியாக பொய்சொல்ல முடியாது.

    அப்படி இருக்கும் நிலையில், நகர்ப்புறங்களில்தான் த.வெ.க.வுக்கு செல்வாக்கு இருக்கிறது. கிராமப்புறங்களில் இல்லை என்று கூறுகிறார்கள். விசில் சின்னம் ஊதாத ஊரே இல்லை. இங்கெல்லாம் த.வெ.க. இருக்கிறது" என்றார்.

    இதற்கு திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கிண்டல் அடிக்கும் தொனியில் பதில் அளித்துள்ளார்.

    டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பதிலில் "விஜயால்தான் ஜிடிபி-யில் தமிழ்நாடு நம்பர் ஒன்னாக இருக்கிறது. விஜயால்தான் எல்லோரும் கல்வி பெற்று வருகிறார்கள். தமிழ்நாடு மக்களுக்காக அவர் ஏராளமாக செய்திருக்கிறார். விஜய் நிம்மதியாக தூங்கும்போது, மக்களிடம் த.வெ.க.வுக்கு வாக்களிக்கும்படி முதலமைச்சர் கேட்பார் என நினைக்கிறார். என்னவொரு யோசனை" எனக் கிண்டல் அடிக்கும் வகையில் கூறியுள்ளார்.

    • எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை சந்தித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நலம் விசாரித்தார்

    ×