search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மத நல்லிணக்கத்துக்கு எதிராக பேசும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் வழக்கு
    X

    மத நல்லிணக்கத்துக்கு எதிராக பேசும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் வழக்கு

    • ஏராளமான புகார்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்றுள்ளது.
    • மோடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மென்மை போக்கை கடைபிடிக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    நாட்டில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்தவில்லை. மத்தியில் உள்ள ஆளும்கட்சியின் விருப்பத்தின்படியே தேர்தலை நடத்துகிறது. உதாரணத்துக்கு தேர்தல் அறிவிப்புக்கு 2 நாட்களுக்கு முன்புதான் புதிய தேர்தல் ஆணையர்களை, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு நியமித்துள்ளது. நேர்மையான, வெளிப்படையான தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும்.

    ஆனால், தேர்தலில் வெற்றிப் பெற மாட்டோம் என்ற பயத்தின் காரணமாக ஆளும் பா.ஜ.க.,வினர், நம் நாட்டை இந்து தேசம் என்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசும்போது, முஸ்லிம்கள் நாட்டில் ஊடுருவிகள் என்று கூறியுள்ளார்.

    அதுமட்டுமல்ல, நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்கள் என்றும் இந்துக்களின் வளம் எல்லாம் முஸ்லிம்களுக்கு சென்று விடுகிறது என்றெல்லாம் பேசியுள்ளார்.

    இதுபோல குஜராத் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்திலும் பேசியுள்ளார். இதுகுறித்து ஏராளமான புகார்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்றுள்ளது.

    ஆனால், மோடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மென்மை போக்கை கடைபிடிக்கிறது. பா.ஜ.க. தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் மட்டும் அனுப்புகிறது. எனவே, மோடிக்கு எதிராக நான் கடந்த 1-ந்தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில், மதநல்லிணக்கத்துக்கு எதிராக பேசும் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், மேற்கொண்டு இது போல பேசுவதை தடுக்கவும், தேர்தலை நேர்மையாக நடத்தவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கலைமதி ஆகியோர் முன்பு மனுதாரர் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி கோரிக்கை விடுத்தனர். அப்போது, பிரதமருக்கு எதிரான இந்த வழக்கை, ஐகோர்ட்டு பதிவுத்துறை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், மனுவில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய மனுவை தாக்கல் செய்யும்படி வக்கீல்களுக்கு உத்தரவிட்டனர்.

    Next Story
    ×