search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி
    X
    ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி

    எம்.ஜி.ஆர்.சிலைக்கு 17-ந்தேதி மாலை அணிவித்து மரியாதை: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை

    எம்.ஜி.ஆரின். 105-வது பிறந்த நாளான 17-ந்தேதி அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
    சென்னை:

    அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எம்.ஜி.ஆரின். 105-வது பிறந்த நாளான (17.1.2022) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்க உள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும், எம்.ஜி.ஆர். பிறந்த நாளான 17.1.2022 அன்று, எம்.ஜி.ஆருடைய நினைவுகளை எப்பொழுதும் நெஞ்சில் சுமந்துள்ள, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஆங்காங்கே அமைந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடைய திருஉருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

    கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் மற்றும் குவைத் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17.1.2022 அன்று ஆங்காங்கே எம்.ஜி.ஆரின் திருஉருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்வதோடு, மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×