search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஜிஆர் பிறந்தநாள்"

    • பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
    • பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் செய்து வந்தார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

    வருகிற 19 மற்றும் 21-ந் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட செயலாளர்கள் இக்கூட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை (19-ந்தேதி) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புறையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஏ.இ.கோவில் சந்திப்பில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடந்தது.

    அதில் 10,107 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் செய்து வந்தார்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் 'கேலோ' இந்திய விளையாட்டு போட்டியை அவர் தொடங்கி வைக்கிறார்.

    இதனால் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுகிறார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி கூட்டம் வருகிற 31-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

    ஆர்.கே.நகர் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதால் முழு அளவிலான போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஏற்றிய கொடியை கீழே இறக்கி விட்டு தங்களது சார்பில் அ.தி.மு.க. கொடியை ஏற்றினர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்களான நகர செயலாளர் அப்துல்சமது தலைமையில் தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் கொடியேற்றினர்.

    மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளரான முருக்கோடை ராமர், நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் நீங்கள் எப்படி கொடியேற்றலாம்? நீங்கள் அ.தி.மு.க. கரைவேட்டி கட்டக்கூடாது, கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது உங்களுக்கு தெரியாதா? என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஏற்றிய கொடியை கீழே இறக்கி விட்டு தங்களது சார்பில் அ.தி.மு.க. கொடியை ஏற்றினர். இதனால் ஓ.பி.எஸ். அணியினர் அவர்களுடன் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இது குறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து கூச்சலிட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.

    எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அங்கு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    • தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தவர்.
    • ஆறு முதல் அறுபது வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர்.

    சென்னை :

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த பொன்மனச் செம்மல், எம்.ஜி.ஆர்."

    தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தவர். ஆறு முதல் அறுபது வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர்.

    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற அவரது பாடல் போல இன்னும் மக்கள் மனதில் ஆழமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தலைவர். எளிய மக்கள் அனைவராலும் "புரட்சித் தலைவர்" என்று அன்போடு அழைக்கப்பட்டவர், அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, மக்கள் நலனுக்காக பணி செய்தவர்.

    தமிழக முன்னாள் முதல்வர், பாரத ரத்னா, தெய்வத்திரு டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரைப் போற்றி வணங்குவோம்! என கூறியுள்ளார்.

    • எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு சிந்தனை உடைய தலைவராகவும் இருந்தார்.
    • எம்.ஜி.ஆரின் பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது என கூறியுள்ளார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் எம்.ஜி.ஆர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை இன்று நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு சிந்தனை உடைய தலைவராகவும் இருந்தார். தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்த அவர் தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது என கூறியுள்ளார்.

    • அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளல் கரங்களுக்குச் சொந்தக்காரர் புரட்சித் தலைவர்.
    • புரட்சித் தலைவர் இந்த நாட்டில் செய்து காட்டிய சாதனைகளை ஒரு மடலில் சொல்லி விட முடியாது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒரு மனிதர் மறைந்த பிறகும் நீண்ட காலம் நினைக்கப்படுகிறார் என்றால் அவர் நல்ல மனிதர்; மறைந்து பல ஆண்டுகள் கழித்தும் மக்கள் மனங்களில் ஒரு மனிதர் சிம்மாசனமிட்டு அமர்ந்து, உள்ளங்களை ஆட்சி செய்கிறார் என்றால், காலத்தால் வெல்லப்பட முடியாத நாயகராக வீற்றிருக்கிறார் என்றால் அவர் மாமனிதர்; அவரே மனிதருள் மாணிக்கம்; அவர் தான் நம் புரட்சித் தலைவர்.

    கொடூர வறுமையின் கோரப்பிடியில் பிறந்து, தன் உழைப்பால், தன் ஆற்றலால், தனது விடா முயற்சியால் வறுமையில் இருந்து மீண்டு, யாரும் தொடாத புகழின் உச்சத்தைத் தொட்டு நின்ற நாளிலும், மக்கள் வறுமையைக் களைய வேண்டும் என்று அரசியல் களம் புகுந்து அதிலும் வென்று காட்டிய புரட்சித் தலைவரின் புகழ் வாழ்க்கை சொல்லச் சொல்ல தீராத காவியம்!

    'தர்மம் தலைகாக்கும்' என்பார்கள். அவர் செய்த தர்மம் அவர் தலையை மட்டுமல்ல, அவரின் தலைமுறையையே காக்கிறது. அவர் தொடங்கிய கழகம், அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எதிரிகளாலும், துரோகிகளாலும் வீழ்த்தப்பட முடியாதபடி அவர் செய்த தர்மம் காத்து நிற்கிறது. அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளல் கரங்களுக்குச் சொந்தக்காரர் புரட்சித் தலைவர்.

    இன்றைக்கும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் பேருவகையோடு நோக்குகிற, "தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தை" தன்னுடைய தமிழ் மீதான ஆர்வத்தாலும், தொலைநோக்காலும் உருவாக்கி உயிர் கொடுத்தவர் புரட்சித் தலைவர்.

    இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு பேரறிஞர் அண்ணா கண்டார். அவரின் பாதையிலேயே அரசியல் நடத்திய புரட்சித்தலைவர் 5-ம் உலகத்தமிழ் மாநாட்டை உலகே வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டினார்.

    ஏழை, எளிய மக்கள் உள்ளம் குளிர்ந்ததும் புரட்சித்தலைவரின் ஆட்சியில்தான். குடில்களில் மின்சார விளக்குகள் எரிந்ததும் அவரின் பொற்கால ஆட்சியில்தான்.

    பரம்பரை பரம்பரையாய் அதிகாரம் செலுத்தி வந்த நிலையை, வாரிசுகள் அதிகாரம் செலுத்தும் கிராம முன்சீப் பதவி முறையை ஒழித்து, தகுதி உள்ளவர்கள் அதிகாரத்திற்கு வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு முறையைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் குடியாட்சிக்கு வலுசேர்த்தவர் நம் புரட்சித் தலைவர். 

    இந்திய மாநிலங்களில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சகோதர, சகோதரிகள் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை இன்று பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எடுத்த உறுதியான மனிதநேயமிக்க சமூக நீதியை நிலைநாட்டும் 68 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் முடிவுதான் காரணம்.

    ஒன்றா, இரண்டா சாதனைகள்? புரட்சித் தலைவர் இந்த நாட்டில் செய்து காட்டிய சாதனைகளை ஒரு மடலில் சொல்லி விட முடியாது. அந்த மாபெரும் மக்கள் தலைவர் காட்டிய பாதையில் நாம் பெருமையுடன் நடைபோடுகிறோம். அந்த மாசற்ற தலைவர் உருவாக்கிய இயக்கத்தை புரட்சித் தலைவி அம்மாவின் காலத்திற்குப் பிறகு எதிரிகளும், துரோகிகளும் சூறையாட முனைந்த நேரத்தில், புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான, புரட்சித் தலைவியின் போர்ப்படை வீரர்களான உங்கள் அனைவரின் துணையோடு அவர்களை வீழ்த்தி, நாம் அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காத்து வருகின்றோம்.

    புரட்சித் தலைவரின் பிறந்தநாளை முன்னெடுக்கின்ற கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பெருந்துயரால் பாதிக்கப்பட்டு ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டு நிற்கின்ற லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைப் பாதுகாக்கின்ற வகையில் அவர்களோடு தோளோடு தோள் நின்று, முடிந்தவரை நலத்திட்ட உதவிகளை நல்கி, எப்போதும் போல் கழகம் மக்களோடு நிற்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த வேண்டும் என்று பேரன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    வந்திருக்கும் தை மகள் நல்லதொரு வழியைக் காட்டுவாள். தமிழ் நாட்டு மக்கள் தேர்தல் களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மகத்தான வெற்றிபெறச் செய்வார்கள். புரட்சித் தலைவரின் பிறந்த நாளில் தீய சக்திகளை தேர்தல் களத்தில் அப்புறப்படுத்த, கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் சூளுரை ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க நகர செயலாளர் ஏ.கணேசன் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அண்ணாநகர், பூஞ்சேரி, தேவநேரி பகுதியிலும் விழாக்கள் நடைபெற்றது.

    மாமல்லபுரம்:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழா இன்று மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் எதிரில் அ.தி.மு.க நகர செயலாளர் ஏ.கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. பேரூராட்சி துணைத் தலைவர் க.ராகவன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து அண்ணாநகர், பூஞ்சேரி, தேவநேரி பகுதியிலும் விழாக்கள் நடைபெற்றது. இன்று காணும் பொங்கல் என்பதால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அவர்களுக்கு கட்சியினர் அன்னதானம் வழங்கினார்கள்.

    • தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கு சென்று ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
    • தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

    எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை குறிப்பிடும் வகையில் 106 கிலோ பிரமாண்ட கேக்கும் வெட்டப்பட்டது. அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கோகுலஇந்திரா, வளர்மதி, பொன்னையன் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், வக்கீல் சதாசிவம், பெரும்பாக்கம் ராஜசேகர், டாக்டர் சுனில், முகப்பேர் இளஞ்செழியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வி.எஸ்.பாபு, ஈஸ்வரன், சைதை கடும்பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தில் பணிபுரிந்து மரணம் அடைந்த சந்திரசேகரன், குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க. கொடியை கட்டும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொண்டர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், வெல்ல மண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளர் மங்காராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதன் பின்னர் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கும் சென்று ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட 15-வது வார்டு அதிமுக மாவட்ட கவுன்சிலரும், ஒன்றிய கழக இணைச் செயலாளருமான எம்.அம்மினி மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில், பாசறை மாவட்ட தலைவர் ஜி.ராஜீவ் காந்தி, மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் எம்.ராஜா, ஒன்றிய மாணவர் அணி இணைச் செயலாளர் கே.புஷ்பராஜ், கிளைச் செயலாளர் சி.கே.சீனிவாசன், தமிழ்மன்னன், சரவணன், முருகன், நாகப்பன், ஜெகதீஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆரை இந்த உலகம் இன்றும் கொண்டாடுகிறது என்றால், அதற்கு காரணம் அவரது மனிதநேயமே.
    • ''இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்'' என்ற வைர வரிகளுக்கு பொருத்தமாக வாழ்ந்த மக்கள் திலகம் மனிதநேயம் எம்.ஜி.ஆர்.

    ஏழைகளிடம் இரக்கம் காட்டுவதும், வள்ளல் தன்மையும் புரட்சித்தலைவரின் ரத்தத்திலே ஊறிய குணம். ஆம், நாடக நடிகராக இருக்கும்போதே அறச்செயல்களை செய்தார். நலிந்தவரை பார்த்த கணத்தில், அவர்கள் கேட்காமலேயே உதவி செய்வார். அவர் யார், அவரால் ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா? என்றெல்லாம் எம்.ஜி.ஆர். கணக்கு பார்க்காமல் மனிதநேயத்துடன் தேடிப்போய் உதவிகள் செய்ததாலே அவரை மக்கள் 'பரங்கிமலை பாரி'யாக பார்க்கிறார்கள். கடையெழு வள்ளல்களுக்கு பிறகு கலியுக கர்ணன் என்று புகழப்படும் எம்.ஜி.ஆரின் வள்ளல்தன்மைக்கு சில உதாரணங்களை மட்டும் கூறுகிறேன்.

    1962-67-ல் நடைபெற்ற சீன படையெடுப்பின்போது, நாட்டின் பாதுகாப்பு நிதிக்கு ஒரு லட்சம் தருவதாக எம்.ஜி.ஆர். அறிவித்து, முதல் தவணையாக ரூ.75 ஆயிரத்துக்கான காசோலையை, பெருந்தலைவர் காமராஜரிடத்தில் நேரில் சென்று ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர். சார்பாக வழங்கினார். அதற்கு பிரதமர் ஜவகர்லால் நேரு நன்றி கடிதம் அனுப்பினார். 1964-ல், இரண்டாவது தவணையான ரூ.25 ஆயிரத்தை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனிடமும் நன்கொடையாக வழங்கினார். அவரும் நன்றி கடிதம் அனுப்பினார்.

    ரிக்ஷா தொழிலாளர்களுக்கு அன்றைய மதிப்பில் ரூ.3 லட்சத்தில் அனைவருக்கும் உயர்தரமான மழை கோட்டு வழங்கினார். கலைவாணர் என்.எஸ்.கே. வீட்டை ஏலத்தில் இருந்து மீட்டுக்கொடுத்தார். தனுஷ்கோடி புயல் நிவாரணம், கமலா சர்க்கஸ் தீ விபத்து நிவாரணம், மதுரை சரஸ்வதி பள்ளி தீ விபத்துக்கும் அள்ளிக்கொடுத்த வள்ளல் அவர். மேலும், அவ்வை இல்லம், ஆந்திர மகிள சபா, பெங்களூரு அனாதை பள்ளியின் வளர்ச்சியில் எம்.ஜி.ஆருக்கு பெரும் பங்கு உண்டு. தியாகராஜர் கல்லூரி, எஸ்.ஐ.டி. பெண்கள் கல்லூரி, அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை திரு.வி.க. பள்ளிக்கு நிதியுதவி என எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மைக்கு சான்றுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

    எம்.ஜி.ஆர். மறைந்து 35 ஆண்டுகள் கடந்த பிறகும், எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் அவர் பெயரில் அன்னதானமும், நலத்திட்ட உதவிகளும் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் செய்து வருகிறார்கள். டிஜிட்டல் யுகமான இன்றைக்கும், எம்.ஜி.ஆர். படம் 'ரிலீஸ்' ஆகும் தியேட்டர்களில் விழா எடுத்து, நலிந்தவர்களுக்கு உதவிகள் செய்து, எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். பொதுமக்களும், இளைஞர்களும் புதுப்படத்தை பார்ப்பதை போல அவரது படங்களை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். எம்.ஜி.ஆரை இந்த உலகம் இன்றும் கொண்டாடுகிறது என்றால், அதற்கு காரணம் அவரது மனிதநேயமே.

    'மனிதன் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு எத்தனை மன்றங்கள், பாராட்டுகள் கிடைப்பது என்பது பெரிதல்ல. அவன் மறைந்த பிறகு, என்னையே நான் எடுத்துக்கொள்கிறேன், என் மறைவுக்கு பிறகு எத்தனை மன்றங்கள், எத்தனை மக்கள் என்னை நினைக்கிறார்கள் என்பதை பொறுத்துத்தான், நான் வாழ்ந்ததற்கு ஏதாவது நியாயமான காரணம் இருந்திருக்கிறது என்று நினைப்பதற்கு அது உதவியாக இருக்க முடியும்'' என்பது எம்.ஜி.ஆர். பேசிய ஒப்பற்ற உரை.

    எம்.ஜி.ஆர். உடன் சைதை துரைசாமி இருப்பதை காணலாம்.

    எம்.ஜி.ஆர். உடன் சைதை துரைசாமி இருப்பதை காணலாம்.

     அப்படி எண்ணி பேசிய எம்.ஜி.ஆரின் ஆசையும், எதிர்பார்ப்பும் நிறைவேறியுள்ளது. உலகெங்கும் அவர் மீது அன்பு செலுத்தி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதை நினைக்கும்போது, எத்தனை பெரிய தீர்க்கதரிசி எம்.ஜி.ஆர். என்பதை உணரமுடிகிறது. தமிழக வரலாற்றில் அவருக்கு கிடைத்த பெரும் புகழ், அவர் சாதித்த சாதனைகள் எல்லாம் முதன்மையான இடத்தில் உள்ளது. ''வாழும்போது வரலாறாகி மறைந்த பின்னர் சரித்திரமாக'' வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவருடைய அறநெறி சார்ந்த மனிதநேய பாதையை, வாழ்க்கை நெறியாக தேர்வு செய்து, 2005-ல் மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற, என்னுடைய குடும்ப நிதியில் அறக்கட்டளை தொடங்கி, அவருடைய வள்ளல்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வி அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். என்னைப்போல், ஆயிரக்கணக்கான எம்.ஜி.ஆர். பக்தர்கள் சேவை செய்து, இன்று வரை அவர் புகழை பரப்பி வருகிறார்கள்.

    எம்.ஜி.ஆர். மறைந்தபோது, ஒரு மாநில முதல்-அமைச்சரின் மறைவுக்கு மத்திய மந்திரிசபை கூடி முதல் முறையாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது எம்.ஜி.ஆருக்குத்தான். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள், கவர்னர்கள் மற்றும் இலங்கை மந்திரிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்தியாவில் உள்ள எல்லா சட்டமன்றங்களும், அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. இலங்கை அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனே, பிரதமர் பிரேமதாசா ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்தியா முழுவதும் அவர் மறைந்த அன்று, பணிகளை நிறுத்தி துக்கம் அனுசரித்தது. அமெரிக்க, மலேசிய அரசு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது.

    உலக அரங்கில் இறந்த ஒரு மனிதரின் உடலுக்கு 75 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தினார்கள் என்றால், அது எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான். அவரது இறுதி ஊர்வலத்தில் மட்டும் 28 லட்சம் பேர் பங்கேற்றது இன்னமும், சாதனையாகவே உள்ளது. அவர் மறைந்ததற்கு பிறகு, மத்திய அரசு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. எம்.ஜி.ஆரின் மனிதநேய உள்ளத்தை உணர்ந்த காரணத்தாலே, 1965-ல் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அந்தமான் சுற்றுப்பயணத்தின்போது எம்.ஜி.ஆரின் பணத்தோட்டம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தை திறந்து வைத்தார். 2019-ல் பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு, டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் ரெயில் நிலையம் என்று பெயர் சூட்டி பெருமை சேர்த்தார்.

    தான் உழைத்து சம்பாதித்த சொத்துகளை இந்த மக்களுக்கும், மண்ணுக்கும் வாரி வாரி வழங்கியது, தன் மறைவுக்கு பின்னால் தனது சொத்துகள் அனைத்தையும் மக்களுக்காக உயில் எழுதி வைத்தது, இப்படிப்பட்ட மனிதநேயத்தின் உச்சமாக, 20-ம் நூற்றாண்டில் அனைவராலும் போற்றத்தக்கக்கூடிய மாமனிதராக வாழ்ந்து, மனிதநேயத்தின் அடையாளமாக விளங்கிக்கொண்டிருக்கின்ற எம்.ஜி.ஆர். பிறந்ததினமான ஜனவரி 17-ந்தேதியை (இன்று), இந்தியாவின் மனிதநேய தினமாக அறிவிக்கக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பாகவும், எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பாகவும் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் சார்பாகவும் இந்த தினத்தில் வேண்டுகோள் வைக்கிறேன்.

    பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டி, அவரது பெரும் புகழை அங்கீகரித்தது போல் இந்த கோரிக்கையையும் நிறைவேற்றி, தமிழக மக்களின் பேரன்பை பெறுவார். ''இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்'' என்ற வைர வரிகளுக்கு பொருத்தமாக வாழ்ந்த மக்கள் திலகம் மனிதநேயம் எம்.ஜி.ஆர்.

    - சைதை துரைசாமி-பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்

    • தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆட்சியாளர்கள் விவசாயிகளை புறக்கணித்து வருகிறார்கள்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் எங்ககெல்லம் குளம், குட்டைகள் உள்ளதோ அங்கெல்லாம் தூர்வாரி குடிமாரமத்து பணி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றினோம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று மாட்டு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    அமைப்பு செயலாளர் பொன்னையன், மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், எம்.எல்.ஏ.க்கள் மணி, ராஜமுத்து, சித்ரா பாலசுப்பிரமணியன், ஜெயசங்கர், நல்லத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நானும் ஒரு விவசாயி. விவசாயி பெருமக்களோடு இந்த மாட்டு பொங்கல் விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. இன்றைக்கு வேளாண் பெருமக்கள் தான் நாட்டுக்கு உணவளிக்கின்றனர். விவசாய பணி என்பது கடுமையான பணி. நாட்டு மக்கள் வளம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆட்சியாளர்கள் விவசாயிகளை புறக்கணித்து வருகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் எங்ககெல்லம் குளம், குட்டைகள் உள்ளதோ அங்கெல்லாம் தூர்வாரி குடிமாரமத்து பணி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றினோம்.

    விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்தது அம்மாவுடைய அரசு தான். 2 முறை தள்ளுபடி செய்தோம். பல தடுப்பணைகள், பல பாலங்கள் கட்டி கொடுத்தோம். விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மானியமாக வழங்கப்பட்டது.

    சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம், தருமபுரி மாவட்டங்களில் மக்கா சோளம் பயிரில் அமெரிக்கன் படை பழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயிகள் கேட்காமலே ரூ.150 கோடி நிவாரணம் நான் வழங்கினேன். மேலும் ரூ.48 கோடி வழங்கி எங்கெல்லாம் மக்காச்சோளம் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோ அங்கு அரசாங்கமே பூச்சிக்கொல்லி மருந்து அடித்து விவசாயிகளை காப்பாற்றிய அரசாங்கம் அம்மா அரசாங்கம்.

    ஆனால் தி.மு.க. அரசு, மரவள்ளி கிழங்கு பயிரில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உதவவில்லை. விவசாயிகளை பாதுகாக்க தி.மு.க. அரசு தவறி விட்டது.

    ஏழை, எளிய மக்கள் அதிகம் பேர் தான் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்கள். கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு எப்படி கொடுத்தார்கள் என உங்களுக்கு தெரியும். ஒழுகிற வெல்லம் என அப்படிப்பட்ட பொங்கல் தொகுப்பை தான் தி.மு.க. ஆட்சியில் கொடுத்தார்கள்.

    அம்மா மறைவுக்கு பிறகு நான் முதல்-அமைச்சராக இருந்தபோது, நான் ஒரு விவசாயி என்ற காரணத்தினாலே தை பொங்கல் பண்டிகையை கிராமபுறங்கள் மகிழ்ச்சியோடும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொதுமக்களின் கோரிக்கை ஏற்று ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 2500 ரூபாய் பொங்கல் தொகுப்போடு வாரி வழங்கினேன். பச்சரிசி, ஏலக்காய், முந்திரி, முழுகரும்பு என பொங்கல் தொகுப்போடு கொடுத்தேன்.

    ஆனால் இந்த ஆண்டு கரும்பு கொடுக்க மறுத்தார்கள். ஆங்காங்கே விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். நானு அறிக்கை விட்டேன். தி.மு.க.வுடைய கவனத்துக் கொண்டு சென்ற பிறகு தான் இந்த ஆண்டு உங்களுக்கு முழு செங்கரும்பு கிடைக்க பெற்றது. இல்லையென்றால் பொங்கலுக்கு உங்களுக்கு செங்கரும்பு கிடைத்திருக்காது. ஆகவே விவசாயிகளை புறக்கணிக்கின்ற அரசு தி.மு.க.,

    ஆகவே போராடி, போராடி தான் மக்களுக்கு நன்மை பெற வேண்டும். அப்படிபட்ட ஆட்சி தான் மு.க. ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என்ன? நன்மை பெற்றார்கள். சிந்தித்து பாருங்கள். எந்த நன்மையும் கிடையாது. திராவிட மாடல் ஆட்சி விளம்பரத்துக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்து கொண்டிருக்கிறார்கள்.

    வீட்டுக்கு பயன்படுத்துகின்ற மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். 18 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி விட்டார்கள். கடை, வீடுகளுக்கு வரி, குடிநீர் வரி ஆகியவற்றையும் உயர்த்தி விட்டார்கள். உயர்த்தாத வரி கிடையாது. இவ்வளவு வரியை உயர்த்தியும், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அம்மா அரசு இருந்தபோது கிராமத்தில் கால்நடை வளர்ப்பு முகாம் நடத்தினோம். கோமாரி நோய் பாதிக்கப்படுகின்ற இடங்களுக்கு நேரில் சென்று தடுப்பு மருந்து வழங்கி கால்நடைகளை காப்பாற்ற வேண்டும். ஆனால் இந்த அரசு செய்ய தவறிவிட்டது.

    கிராமபுற மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுககு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அ.தி.மு.க. அரசு சாதனை படைத்தது, மு.க.ஸ்டாலினும், அவரது மகனும் தமிழகத்தை கூறு போட்டு ஆட்சி நடத்தி வருகிறார்கள். பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்தது தி.மு.க. இந்த அரசை வீட்டிற்கு அனுப்ப எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.

    எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நாம் அனைவருக்கும் பொன்னாள், எம்.ஜி.ஆர். பிறந்ததும் வரலாறு, அவர் மறைந்ததும் வரலாறு, அத்தகைய வரலாற்றை யாரும் படைக்கவில்லை. அண்ணாவின் புகழை பரப்பியவர் எம்.ஜி.ஆர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், அதே போல அ.தி.மு.க.வுக்கு வழி பிறந்து விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்றைய தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்தது.
    • மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்ப, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் வீர சபதம் ஏற்று, கண்துஞ்சாது களப்பணி ஆற்றி, மீண்டும் கழகத்தின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்கிடுவோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. என்ற மாபெரும் பேரியியக்கத்தை புரட்சித் தலைவர் தொடங்கி, அதன் தலைவராக மக்களின் பேராதரவை பெற்று 3 முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராக நல்லாட்சியை வழங்கினார்.

    சங்க இலக்கிய காலத்தில் இருந்த கடையேழு வள்ளல்களைத் தொடர்ந்து, வாரி வாரி வழங்கி எட்டாவது வள்ளலாகத் திகழ்ந்தவர். எம்.ஜி.ஆர். தான் உழைத்து சேகரித்த செல்வத்தை, ஏழை, எளியோர்களுக்கும், நலிவடைந்தவர்களுக்கும் வழங்கிய வள்ளல் பெருந்தகை.

    தனது திரைப்படப் பாடல்கள், வசனங்கள், கதைகள் மூலமாக இயக்கத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை கிராமங்கள் தோறும் சென்றடையச் செய்து அடித்தட்டு மக்களின் பேராதரவினைப் பெற்று, அவர்களின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தவர்.

    1972-ம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்றவாறு பஞ்சப்படி கொடுக்கப்படும் என்று அறிவித்து அரசாணையை வெளியிட்டது. அப்போது தமிழக முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி இதை மாநில அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த மறுத்தார். பிறகு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான பஞ்சப்படி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கொடுக்கும் பொருட்டு, ஊதியக் குழு ஒன்றினை அமைத்து, அதை அமல்படுத்திக் காட்டி, அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

    இன்றைய தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்தது.

    இந்த மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்ப, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் வீர சபதம் ஏற்று, கண்துஞ்சாது களப்பணி ஆற்றி, மீண்டும் கழகத்தின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்கிடுவோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×