search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR Birth Day"

    • அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளல் கரங்களுக்குச் சொந்தக்காரர் புரட்சித் தலைவர்.
    • புரட்சித் தலைவர் இந்த நாட்டில் செய்து காட்டிய சாதனைகளை ஒரு மடலில் சொல்லி விட முடியாது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒரு மனிதர் மறைந்த பிறகும் நீண்ட காலம் நினைக்கப்படுகிறார் என்றால் அவர் நல்ல மனிதர்; மறைந்து பல ஆண்டுகள் கழித்தும் மக்கள் மனங்களில் ஒரு மனிதர் சிம்மாசனமிட்டு அமர்ந்து, உள்ளங்களை ஆட்சி செய்கிறார் என்றால், காலத்தால் வெல்லப்பட முடியாத நாயகராக வீற்றிருக்கிறார் என்றால் அவர் மாமனிதர்; அவரே மனிதருள் மாணிக்கம்; அவர் தான் நம் புரட்சித் தலைவர்.

    கொடூர வறுமையின் கோரப்பிடியில் பிறந்து, தன் உழைப்பால், தன் ஆற்றலால், தனது விடா முயற்சியால் வறுமையில் இருந்து மீண்டு, யாரும் தொடாத புகழின் உச்சத்தைத் தொட்டு நின்ற நாளிலும், மக்கள் வறுமையைக் களைய வேண்டும் என்று அரசியல் களம் புகுந்து அதிலும் வென்று காட்டிய புரட்சித் தலைவரின் புகழ் வாழ்க்கை சொல்லச் சொல்ல தீராத காவியம்!

    'தர்மம் தலைகாக்கும்' என்பார்கள். அவர் செய்த தர்மம் அவர் தலையை மட்டுமல்ல, அவரின் தலைமுறையையே காக்கிறது. அவர் தொடங்கிய கழகம், அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எதிரிகளாலும், துரோகிகளாலும் வீழ்த்தப்பட முடியாதபடி அவர் செய்த தர்மம் காத்து நிற்கிறது. அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளல் கரங்களுக்குச் சொந்தக்காரர் புரட்சித் தலைவர்.

    இன்றைக்கும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் பேருவகையோடு நோக்குகிற, "தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தை" தன்னுடைய தமிழ் மீதான ஆர்வத்தாலும், தொலைநோக்காலும் உருவாக்கி உயிர் கொடுத்தவர் புரட்சித் தலைவர்.

    இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு பேரறிஞர் அண்ணா கண்டார். அவரின் பாதையிலேயே அரசியல் நடத்திய புரட்சித்தலைவர் 5-ம் உலகத்தமிழ் மாநாட்டை உலகே வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டினார்.

    ஏழை, எளிய மக்கள் உள்ளம் குளிர்ந்ததும் புரட்சித்தலைவரின் ஆட்சியில்தான். குடில்களில் மின்சார விளக்குகள் எரிந்ததும் அவரின் பொற்கால ஆட்சியில்தான்.

    பரம்பரை பரம்பரையாய் அதிகாரம் செலுத்தி வந்த நிலையை, வாரிசுகள் அதிகாரம் செலுத்தும் கிராம முன்சீப் பதவி முறையை ஒழித்து, தகுதி உள்ளவர்கள் அதிகாரத்திற்கு வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு முறையைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் குடியாட்சிக்கு வலுசேர்த்தவர் நம் புரட்சித் தலைவர். 

    இந்திய மாநிலங்களில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சகோதர, சகோதரிகள் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை இன்று பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எடுத்த உறுதியான மனிதநேயமிக்க சமூக நீதியை நிலைநாட்டும் 68 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் முடிவுதான் காரணம்.

    ஒன்றா, இரண்டா சாதனைகள்? புரட்சித் தலைவர் இந்த நாட்டில் செய்து காட்டிய சாதனைகளை ஒரு மடலில் சொல்லி விட முடியாது. அந்த மாபெரும் மக்கள் தலைவர் காட்டிய பாதையில் நாம் பெருமையுடன் நடைபோடுகிறோம். அந்த மாசற்ற தலைவர் உருவாக்கிய இயக்கத்தை புரட்சித் தலைவி அம்மாவின் காலத்திற்குப் பிறகு எதிரிகளும், துரோகிகளும் சூறையாட முனைந்த நேரத்தில், புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான, புரட்சித் தலைவியின் போர்ப்படை வீரர்களான உங்கள் அனைவரின் துணையோடு அவர்களை வீழ்த்தி, நாம் அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காத்து வருகின்றோம்.

    புரட்சித் தலைவரின் பிறந்தநாளை முன்னெடுக்கின்ற கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பெருந்துயரால் பாதிக்கப்பட்டு ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டு நிற்கின்ற லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைப் பாதுகாக்கின்ற வகையில் அவர்களோடு தோளோடு தோள் நின்று, முடிந்தவரை நலத்திட்ட உதவிகளை நல்கி, எப்போதும் போல் கழகம் மக்களோடு நிற்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த வேண்டும் என்று பேரன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    வந்திருக்கும் தை மகள் நல்லதொரு வழியைக் காட்டுவாள். தமிழ் நாட்டு மக்கள் தேர்தல் களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மகத்தான வெற்றிபெறச் செய்வார்கள். புரட்சித் தலைவரின் பிறந்த நாளில் தீய சக்திகளை தேர்தல் களத்தில் அப்புறப்படுத்த, கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் சூளுரை ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×