search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மனிதநேயம் கொண்ட மாமனிதர்- இன்று எம்.ஜி.ஆர். பிறந்தநாள்
    X

    மனிதநேயம் கொண்ட மாமனிதர்- இன்று எம்.ஜி.ஆர். பிறந்தநாள்

    • எம்.ஜி.ஆரை இந்த உலகம் இன்றும் கொண்டாடுகிறது என்றால், அதற்கு காரணம் அவரது மனிதநேயமே.
    • ''இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்'' என்ற வைர வரிகளுக்கு பொருத்தமாக வாழ்ந்த மக்கள் திலகம் மனிதநேயம் எம்.ஜி.ஆர்.

    ஏழைகளிடம் இரக்கம் காட்டுவதும், வள்ளல் தன்மையும் புரட்சித்தலைவரின் ரத்தத்திலே ஊறிய குணம். ஆம், நாடக நடிகராக இருக்கும்போதே அறச்செயல்களை செய்தார். நலிந்தவரை பார்த்த கணத்தில், அவர்கள் கேட்காமலேயே உதவி செய்வார். அவர் யார், அவரால் ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா? என்றெல்லாம் எம்.ஜி.ஆர். கணக்கு பார்க்காமல் மனிதநேயத்துடன் தேடிப்போய் உதவிகள் செய்ததாலே அவரை மக்கள் 'பரங்கிமலை பாரி'யாக பார்க்கிறார்கள். கடையெழு வள்ளல்களுக்கு பிறகு கலியுக கர்ணன் என்று புகழப்படும் எம்.ஜி.ஆரின் வள்ளல்தன்மைக்கு சில உதாரணங்களை மட்டும் கூறுகிறேன்.

    1962-67-ல் நடைபெற்ற சீன படையெடுப்பின்போது, நாட்டின் பாதுகாப்பு நிதிக்கு ஒரு லட்சம் தருவதாக எம்.ஜி.ஆர். அறிவித்து, முதல் தவணையாக ரூ.75 ஆயிரத்துக்கான காசோலையை, பெருந்தலைவர் காமராஜரிடத்தில் நேரில் சென்று ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர். சார்பாக வழங்கினார். அதற்கு பிரதமர் ஜவகர்லால் நேரு நன்றி கடிதம் அனுப்பினார். 1964-ல், இரண்டாவது தவணையான ரூ.25 ஆயிரத்தை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனிடமும் நன்கொடையாக வழங்கினார். அவரும் நன்றி கடிதம் அனுப்பினார்.

    ரிக்ஷா தொழிலாளர்களுக்கு அன்றைய மதிப்பில் ரூ.3 லட்சத்தில் அனைவருக்கும் உயர்தரமான மழை கோட்டு வழங்கினார். கலைவாணர் என்.எஸ்.கே. வீட்டை ஏலத்தில் இருந்து மீட்டுக்கொடுத்தார். தனுஷ்கோடி புயல் நிவாரணம், கமலா சர்க்கஸ் தீ விபத்து நிவாரணம், மதுரை சரஸ்வதி பள்ளி தீ விபத்துக்கும் அள்ளிக்கொடுத்த வள்ளல் அவர். மேலும், அவ்வை இல்லம், ஆந்திர மகிள சபா, பெங்களூரு அனாதை பள்ளியின் வளர்ச்சியில் எம்.ஜி.ஆருக்கு பெரும் பங்கு உண்டு. தியாகராஜர் கல்லூரி, எஸ்.ஐ.டி. பெண்கள் கல்லூரி, அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை திரு.வி.க. பள்ளிக்கு நிதியுதவி என எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மைக்கு சான்றுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

    எம்.ஜி.ஆர். மறைந்து 35 ஆண்டுகள் கடந்த பிறகும், எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் அவர் பெயரில் அன்னதானமும், நலத்திட்ட உதவிகளும் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் செய்து வருகிறார்கள். டிஜிட்டல் யுகமான இன்றைக்கும், எம்.ஜி.ஆர். படம் 'ரிலீஸ்' ஆகும் தியேட்டர்களில் விழா எடுத்து, நலிந்தவர்களுக்கு உதவிகள் செய்து, எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். பொதுமக்களும், இளைஞர்களும் புதுப்படத்தை பார்ப்பதை போல அவரது படங்களை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். எம்.ஜி.ஆரை இந்த உலகம் இன்றும் கொண்டாடுகிறது என்றால், அதற்கு காரணம் அவரது மனிதநேயமே.

    'மனிதன் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு எத்தனை மன்றங்கள், பாராட்டுகள் கிடைப்பது என்பது பெரிதல்ல. அவன் மறைந்த பிறகு, என்னையே நான் எடுத்துக்கொள்கிறேன், என் மறைவுக்கு பிறகு எத்தனை மன்றங்கள், எத்தனை மக்கள் என்னை நினைக்கிறார்கள் என்பதை பொறுத்துத்தான், நான் வாழ்ந்ததற்கு ஏதாவது நியாயமான காரணம் இருந்திருக்கிறது என்று நினைப்பதற்கு அது உதவியாக இருக்க முடியும்'' என்பது எம்.ஜி.ஆர். பேசிய ஒப்பற்ற உரை.

    எம்.ஜி.ஆர். உடன் சைதை துரைசாமி இருப்பதை காணலாம்.

    அப்படி எண்ணி பேசிய எம்.ஜி.ஆரின் ஆசையும், எதிர்பார்ப்பும் நிறைவேறியுள்ளது. உலகெங்கும் அவர் மீது அன்பு செலுத்தி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதை நினைக்கும்போது, எத்தனை பெரிய தீர்க்கதரிசி எம்.ஜி.ஆர். என்பதை உணரமுடிகிறது. தமிழக வரலாற்றில் அவருக்கு கிடைத்த பெரும் புகழ், அவர் சாதித்த சாதனைகள் எல்லாம் முதன்மையான இடத்தில் உள்ளது. ''வாழும்போது வரலாறாகி மறைந்த பின்னர் சரித்திரமாக'' வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவருடைய அறநெறி சார்ந்த மனிதநேய பாதையை, வாழ்க்கை நெறியாக தேர்வு செய்து, 2005-ல் மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற, என்னுடைய குடும்ப நிதியில் அறக்கட்டளை தொடங்கி, அவருடைய வள்ளல்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வி அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். என்னைப்போல், ஆயிரக்கணக்கான எம்.ஜி.ஆர். பக்தர்கள் சேவை செய்து, இன்று வரை அவர் புகழை பரப்பி வருகிறார்கள்.

    எம்.ஜி.ஆர். மறைந்தபோது, ஒரு மாநில முதல்-அமைச்சரின் மறைவுக்கு மத்திய மந்திரிசபை கூடி முதல் முறையாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது எம்.ஜி.ஆருக்குத்தான். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள், கவர்னர்கள் மற்றும் இலங்கை மந்திரிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்தியாவில் உள்ள எல்லா சட்டமன்றங்களும், அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. இலங்கை அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனே, பிரதமர் பிரேமதாசா ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்தியா முழுவதும் அவர் மறைந்த அன்று, பணிகளை நிறுத்தி துக்கம் அனுசரித்தது. அமெரிக்க, மலேசிய அரசு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது.

    உலக அரங்கில் இறந்த ஒரு மனிதரின் உடலுக்கு 75 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தினார்கள் என்றால், அது எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான். அவரது இறுதி ஊர்வலத்தில் மட்டும் 28 லட்சம் பேர் பங்கேற்றது இன்னமும், சாதனையாகவே உள்ளது. அவர் மறைந்ததற்கு பிறகு, மத்திய அரசு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. எம்.ஜி.ஆரின் மனிதநேய உள்ளத்தை உணர்ந்த காரணத்தாலே, 1965-ல் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அந்தமான் சுற்றுப்பயணத்தின்போது எம்.ஜி.ஆரின் பணத்தோட்டம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தை திறந்து வைத்தார். 2019-ல் பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு, டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் ரெயில் நிலையம் என்று பெயர் சூட்டி பெருமை சேர்த்தார்.

    தான் உழைத்து சம்பாதித்த சொத்துகளை இந்த மக்களுக்கும், மண்ணுக்கும் வாரி வாரி வழங்கியது, தன் மறைவுக்கு பின்னால் தனது சொத்துகள் அனைத்தையும் மக்களுக்காக உயில் எழுதி வைத்தது, இப்படிப்பட்ட மனிதநேயத்தின் உச்சமாக, 20-ம் நூற்றாண்டில் அனைவராலும் போற்றத்தக்கக்கூடிய மாமனிதராக வாழ்ந்து, மனிதநேயத்தின் அடையாளமாக விளங்கிக்கொண்டிருக்கின்ற எம்.ஜி.ஆர். பிறந்ததினமான ஜனவரி 17-ந்தேதியை (இன்று), இந்தியாவின் மனிதநேய தினமாக அறிவிக்கக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பாகவும், எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பாகவும் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் சார்பாகவும் இந்த தினத்தில் வேண்டுகோள் வைக்கிறேன்.

    பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டி, அவரது பெரும் புகழை அங்கீகரித்தது போல் இந்த கோரிக்கையையும் நிறைவேற்றி, தமிழக மக்களின் பேரன்பை பெறுவார். ''இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்'' என்ற வைர வரிகளுக்கு பொருத்தமாக வாழ்ந்த மக்கள் திலகம் மனிதநேயம் எம்.ஜி.ஆர்.

    - சைதை துரைசாமி-பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்

    Next Story
    ×