என் மலர்
உள்ளூர் செய்திகள்

தை பிறந்ததால் அ.தி.மு.க.வுக்கு வழி பிறந்து விட்டது- எடப்பாடி பழனிசாமி பேச்சு
- தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆட்சியாளர்கள் விவசாயிகளை புறக்கணித்து வருகிறார்கள்.
- அ.தி.மு.க. ஆட்சியில் எங்ககெல்லம் குளம், குட்டைகள் உள்ளதோ அங்கெல்லாம் தூர்வாரி குடிமாரமத்து பணி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றினோம்.
சேலம்:
சேலம் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று மாட்டு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
அமைப்பு செயலாளர் பொன்னையன், மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், எம்.எல்.ஏ.க்கள் மணி, ராஜமுத்து, சித்ரா பாலசுப்பிரமணியன், ஜெயசங்கர், நல்லத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நானும் ஒரு விவசாயி. விவசாயி பெருமக்களோடு இந்த மாட்டு பொங்கல் விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. இன்றைக்கு வேளாண் பெருமக்கள் தான் நாட்டுக்கு உணவளிக்கின்றனர். விவசாய பணி என்பது கடுமையான பணி. நாட்டு மக்கள் வளம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆட்சியாளர்கள் விவசாயிகளை புறக்கணித்து வருகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் எங்ககெல்லம் குளம், குட்டைகள் உள்ளதோ அங்கெல்லாம் தூர்வாரி குடிமாரமத்து பணி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றினோம்.
விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்தது அம்மாவுடைய அரசு தான். 2 முறை தள்ளுபடி செய்தோம். பல தடுப்பணைகள், பல பாலங்கள் கட்டி கொடுத்தோம். விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மானியமாக வழங்கப்பட்டது.
சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம், தருமபுரி மாவட்டங்களில் மக்கா சோளம் பயிரில் அமெரிக்கன் படை பழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயிகள் கேட்காமலே ரூ.150 கோடி நிவாரணம் நான் வழங்கினேன். மேலும் ரூ.48 கோடி வழங்கி எங்கெல்லாம் மக்காச்சோளம் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோ அங்கு அரசாங்கமே பூச்சிக்கொல்லி மருந்து அடித்து விவசாயிகளை காப்பாற்றிய அரசாங்கம் அம்மா அரசாங்கம்.
ஆனால் தி.மு.க. அரசு, மரவள்ளி கிழங்கு பயிரில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உதவவில்லை. விவசாயிகளை பாதுகாக்க தி.மு.க. அரசு தவறி விட்டது.
ஏழை, எளிய மக்கள் அதிகம் பேர் தான் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்கள். கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு எப்படி கொடுத்தார்கள் என உங்களுக்கு தெரியும். ஒழுகிற வெல்லம் என அப்படிப்பட்ட பொங்கல் தொகுப்பை தான் தி.மு.க. ஆட்சியில் கொடுத்தார்கள்.
அம்மா மறைவுக்கு பிறகு நான் முதல்-அமைச்சராக இருந்தபோது, நான் ஒரு விவசாயி என்ற காரணத்தினாலே தை பொங்கல் பண்டிகையை கிராமபுறங்கள் மகிழ்ச்சியோடும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொதுமக்களின் கோரிக்கை ஏற்று ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 2500 ரூபாய் பொங்கல் தொகுப்போடு வாரி வழங்கினேன். பச்சரிசி, ஏலக்காய், முந்திரி, முழுகரும்பு என பொங்கல் தொகுப்போடு கொடுத்தேன்.
ஆனால் இந்த ஆண்டு கரும்பு கொடுக்க மறுத்தார்கள். ஆங்காங்கே விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். நானு அறிக்கை விட்டேன். தி.மு.க.வுடைய கவனத்துக் கொண்டு சென்ற பிறகு தான் இந்த ஆண்டு உங்களுக்கு முழு செங்கரும்பு கிடைக்க பெற்றது. இல்லையென்றால் பொங்கலுக்கு உங்களுக்கு செங்கரும்பு கிடைத்திருக்காது. ஆகவே விவசாயிகளை புறக்கணிக்கின்ற அரசு தி.மு.க.,
ஆகவே போராடி, போராடி தான் மக்களுக்கு நன்மை பெற வேண்டும். அப்படிபட்ட ஆட்சி தான் மு.க. ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என்ன? நன்மை பெற்றார்கள். சிந்தித்து பாருங்கள். எந்த நன்மையும் கிடையாது. திராவிட மாடல் ஆட்சி விளம்பரத்துக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்து கொண்டிருக்கிறார்கள்.
வீட்டுக்கு பயன்படுத்துகின்ற மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். 18 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி விட்டார்கள். கடை, வீடுகளுக்கு வரி, குடிநீர் வரி ஆகியவற்றையும் உயர்த்தி விட்டார்கள். உயர்த்தாத வரி கிடையாது. இவ்வளவு வரியை உயர்த்தியும், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அம்மா அரசு இருந்தபோது கிராமத்தில் கால்நடை வளர்ப்பு முகாம் நடத்தினோம். கோமாரி நோய் பாதிக்கப்படுகின்ற இடங்களுக்கு நேரில் சென்று தடுப்பு மருந்து வழங்கி கால்நடைகளை காப்பாற்ற வேண்டும். ஆனால் இந்த அரசு செய்ய தவறிவிட்டது.
கிராமபுற மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுககு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அ.தி.மு.க. அரசு சாதனை படைத்தது, மு.க.ஸ்டாலினும், அவரது மகனும் தமிழகத்தை கூறு போட்டு ஆட்சி நடத்தி வருகிறார்கள். பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்தது தி.மு.க. இந்த அரசை வீட்டிற்கு அனுப்ப எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.
எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நாம் அனைவருக்கும் பொன்னாள், எம்.ஜி.ஆர். பிறந்ததும் வரலாறு, அவர் மறைந்ததும் வரலாறு, அத்தகைய வரலாற்றை யாரும் படைக்கவில்லை. அண்ணாவின் புகழை பரப்பியவர் எம்.ஜி.ஆர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், அதே போல அ.தி.மு.க.வுக்கு வழி பிறந்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.






