search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி
    X
    ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி

    உள்ளாட்சித் தேர்தல் வியூகம்- அதிமுக தலைமை அறிவுறுத்தலால் உற்சாகத்தில் நிர்வாகிகள்

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாக அதிமுக மூத்த தலைவர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களால் கட்சி நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், கிராம பஞ்சாயத்து என 5 விதமான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

    மாநகராட்சிகள்-15 உள்ளன. நகராட்சிகள்-148, டவுன் பஞ்சாயத்துக்கள்-561, பஞ்சாயத்து யூனியன்கள்-388, கிராம பஞ்சாயத்துக்கள் 12 ஆயிரத்து 524 உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் பல ஆயிரம் உறுப்பினர் பதவிகள் இருக்கின்றன.

    இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வார்டு வரையறை செய்ததில் குளறுபடி இருப்பதாக தி.மு.க. சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போனது. தற்போது வார்டு வரையறை முடிந்து விட்ட நிலையில் தேர்தல் தேதி அட்டவணையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே மத்திய அரசும், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டால்தான் நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று கூறியது. இதனால் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு தேவையான மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தயார்படுத்தப்பட்டு விட்டன.

    உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் இறுதிப் பட்டியலும் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் தேதி அட்டவணை வெளியிடப்படும். அனேகமாக அடுத்த வாரம் உள்ளாட்சித் தேர்தல் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மூன்று கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதுபற்றி இறுதி முடிவு எடுக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சின்னம் ஒதுக்கீடு, பிரசார கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஆகியவை குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.

    அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விடும் என்று தமிழக அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தமிழக கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. தற்போது அ.தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதுபோல தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகளும், உள்ளாட்சித் தேர்தலில் நீடிக்கும் என்று தெரியவந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் பிரதானமாக உள்ளன. விரைவில் இந்த கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சு நடக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்க அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    சுமார் 2 மணி நேரம் உள்ளாட்சி தேர்தல் பற்றி அ.தி.மு.க. தலைவர்கள் விவாதித்தனர். சில நிர்வாகிகள், உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். சட்டசபை தேர்தலுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று தெரிவித்தனர். ஆனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அதை ஏற்கவில்லை.

    உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும். அதில் மாற்றம் இல்லை. எனவே உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பணிகளை உடனே தொடங்குங்கள் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கேட்டுக்கொண்டனர்.

    கிராம பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை குழுக்களை அமைத்து தேர்தல் பணியை தொடங்கவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் கூட்டணி கட்சியினருடன் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவீத வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதை கருத்தில் கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகளை கவனிக்குமாறும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெற்றது போல வெற்றி பெற வேண்டும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதற்காக அரசின் நலத்திட்டங்கள் பற்றி மக்களிடம் எடுத்து கூறுமாறு அறிவுறுத்தினார்.

    ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வியூகம் அமைக்க முடியும். எல்லா கட்சிகளையும் நம் பக்கம் இழுத்து தி.மு.க.வை தனிமைப்படுத்த முடியும் என்று தெரிவித்தார். அ.தி.மு.க. மூத்த தலைவர்களின் இத்தகைய அறிவுறுத்தல்களால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×