search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. இளைஞரணியினர் தூர்வாரிய குளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டபோது எடுத்தபடம்.
    X
    தி.மு.க. இளைஞரணியினர் தூர்வாரிய குளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டபோது எடுத்தபடம்.

    பட்டாசு வெடிப்பதையும் தி.மு.க.வினர் நிறுத்தவேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

    பேனர் கலாச்சாரத்தை தொடர்ந்து பட்டாசு வெடிப்பதையும் தி.மு.க.வினர் நிறுத்தவேண்டும் என்று கரூரில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
    கரூர்:

    தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தான்தோன்றி ஒன்றியம் ஜெகதாபி ஊராட்சி முத்துகாபட்டி சொட்டை குளம் தி.மு.க. இளைஞரணி சார்பில் தூர்வாரப்படுவதை அவர் பார்வையிட்டார்.

    பின்னர் கரூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் வேலாயுதம்பாளையம் பகுதியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    உறுப்பினர் சேர்க்கையின் போது பொதுமக்களுக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைக்காதீர்கள் என்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் கட்டளையை தொண்டர்கள் ஏற்று கொண்டு கடைபிடித்து வருவதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் பட்டாசு வெடிக்கும் கலாசாரத்தையும் வேண்டாம் என நினைக்கிறேன். அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு அதனையும் பின்பற்றுங்கள்.

    ஒவ்வொரு வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞரணியை வலுப்படுத்த ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். இந்தியை பொதுவான மொழியாக்குவது பற்றிய கருத்தினை பா.ஜ.க.வின் அமித்ஷா கூறியவுடன், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் குரல் எழுப்பியது தி.மு.க.தான். ஆர்ப்பாட்ட அறிவிப்பும் வெளியிப்பட்டது. எப்போதும் கவர்னர், முதல்-அமைச்சரை தான் அழைத்து பேசுவார். ஆனால் இந்த போராட்ட அறிவிப்புக்கு பின் எதிர்கட்சி தலைவரை (ஸ்டாலின்) அழைத்து கவர்னர் பேசியுள்ளார்.

    இதிலிருந்து மக்கள் உண்மையாக நம்புவது எதிர்கட்சி தலைவரை தான் என்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது. மேலும் அமித்ஷாவே இப்போது தனது கருத்தில் இருந்து பின்வாங்கி விட்டார். ஆகவே ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இது தற்காலிக ஒத்திவைப்பு தான். தி.மு.க. தலைமை அறிவித்தால் இளைஞரணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×