search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும், சென்னை வரும் பிரதமரை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை விடுக்கப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #AllPartyMeeting
    சென்னை:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் கடந்த 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 192 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீரின் அளவு 14.75 டி.எம்.சி. குறைந்துள்ளது.

    மேலும், காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரகாலத்திற்குள் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பதற்காக தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித்தலைவர்கள் தங்களது கருத்துக்கள், இந்த விவகாரத்தில் அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்தனர்.

    கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

    தமிழகத்திற்கு நீரினை உரிய காலத்தில் வழங்குவதற்கு ஏதுவாக, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்டின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டபடி 6 வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வலியுறுத்தப்படும்.

    நடுவர் மன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட பங்கினை சுப்ரீம் கோர்ட் குறைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அனைத்துக்கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

    முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும், தமிழகத்திற்கு சாதகமாக உள்ள சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அம்சங்களை உடனடியாக நிறைவேற்றித் தருமாறும் வலியுறுத்தப்படும்

    என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #CauveryVerdict #AllPartyMeeting
    Next Story
    ×