என் மலர்
2025 - ஒரு பார்வை
- டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து மேலூர் தாலுகாவில் இருந்து மதுரை மாநகர் வரை பிரமாண்ட பேரணி நடந்தது.
மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட முக்கிய கனிம தொகுதிகளில் ஏலம் விடுவது குறித்து தமிழ்நாடு அரசுக்கு 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி கடிதம் எழுதியதாக மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு 2023-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்ததாக தெரிவித்துள்ள மத்திய அரசு, அதில் முக்கியமான கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுகளிடமும் இருக்க வேண்டும் அவர் கோரியதாக குறிப்பிட்டது.
2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி மதுரை நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட ஏலத்திற்கு விடப்பட உள்ள 3 முக்கியமான கனிமத் தொகுதிகளின் விவரங்களை வழங்க கோரி தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. 2024 பிப்ரவரி 8-ந்தேதி அந்த விவரங்களை தமிழ்நாடு புவியியல், சுரங்கத் துறை ஆணையர் வழங்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த கனிமத் தொகுதி, 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கூட்டு உரிமமாக ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது.
நவம்பர் 7-ந்தேதி, அரிட்டாபட்டியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
டங்ஸ்டன் சுரங்க திட்டம் கொண்டுவரப்பட்டால் அந்த பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் அழியும் என்றும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறி அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.

அரிட்டாபட்டி பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் வன விலங்குகள் பாதிக்கப்படும். இயற்கை சூழல் கெடுவதோடு விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நவம்பர் 29-ந்தேதி இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், பிரதமர் உடனே தலையிட்டு மத்திய அரசு வழங்கி உள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
டிசம்பர் 9-ந்தேதி டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர், எக்காரணம் கொண்டும், தமிழ்நாட்டிற்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மாநில அரசு அனுமதிக்காது. நான் முதல்வராக உள்ளவரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன். டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் ராஜினாமா செய்யவும் தயார். டங்ஸ்டன் சுரங்கம் அமையும் சூழல் ஏற்பட்டால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று கூறினார்.

ஜனவரி 7-ந்தேதி டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து மேலூர் தாலுகாவில் இருந்து மதுரை மாநகர் வரை பிரமாண்ட பேரணி நடந்தது.
இதற்கிடையே, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி விவசாயிகள் குழுவினர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக விவசாயிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது மத்திய இணைய அமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இதையடுத்து டங்ஸ்டன் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாபட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மக்கள் ஆனந்தமாக கொண்டாடினர். இது அரிட்டாபட்டி மக்களுக்கு மறக்க முடியாத வெற்றியாகும்.
இதுகுறித்து கூறிய அரிட்டாபட்டி மக்கள், "எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மத்திய அரசு திட்டத்தை கைவிட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ வழி செய்திருக்கிறார்கள். அரிட்டாபட்டி மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த மற்ற கிராம மக்களுக்கும் நன்றி. டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்றும் தெரிவித்தனர்.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அரிட்டாபட்டி மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தினர். முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று, "இந்த விழா உங்களுக்கானது, மக்களுக்கான வெற்றி" என்று கூறி, மக்களுக்கு நன்றி தெரிவித்து, திட்டம் ரத்து செய்யப்பட்டது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார், இது மக்களை மகிழ்வித்தது.

அரிட்டாபட்டிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று பேசுகையில்,
மக்களின் அன்பு கட்டளையை ஏற்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இந்த பாராட்டு விழா உங்களுக்கானது. டங்ஸ்டன் திட்டம் ரத்து நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. போராட்டத்தை முன்னெடுத்த மக்களுக்கு தான் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவாக தான் நான் பார்க்கிறேன். எனக்கு எதற்கு பாராட்டு விழா ? அது எனது கடமை. பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை. மக்களை பற்றி தான் எனக்கு கவலை. டங்ஸ்டன் தீர்மானத்தை ஆதரித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி. என்றுமே உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.
- ஏப்ரல் மாதம் தனது பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார்.
- அண்ணாமலைக்கு பிறகு நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.
கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் அண்ணாமலை. இவர் பா.ஜ.க. மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.
இதனால் பா.ஜ.க. தமிழக மாநில துணைத்தலைவராக 2020-ம் ஆண்டு பதவியேற்றார். அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு தலைவராக பதவியேற்றார். இதன் பிறகு தமிழக பா.ஜ.க. அரசியல் களத்தில் மும்முரமாக செயல்பட்டு வந்தது. இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெறாததே காரணம். அதற்கு அண்ணாமலையே காரணம் என ஒரு சாரார் குற்றம்சாட்டினர்.
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு பல திடுக்கிடும் சம்பவங்களை செய்து அண்ணாமலை பேசும்பொருளானார். அதில் ஒன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் கூறி, தமிழக அரசை கண்டித்து அண்ணாமலை ஒரு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தனக்குத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டம், தமிழக அரசியல் களத்தில் முதல்முறை எனக் கூறப்படும் ஒரு நூதன முறையாக இருந்ததுடன், பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

மேலும், தி.மு.க. ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை காலணி அணியாமல் வெறும் காலுடன் நடப்பேன் என்று சபதம் எடுத்த அண்ணாமலை சில மாதங்கள் செருப்பு அணியாமல் நடந்து வந்தார். இதன்பின் ஏப்ரல் 12-ந்தேதி அன்று தனது சபதத்தை முடித்துக்கொண்டு மீண்டும் காலணி அணியத் தொடங்கினார்.
இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியை போல் சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி ஏற்படக்கூடாது என்று கருதிய டெல்லி மேலிடம் அ.தி.மு.க.வை அணுகியது. அதற்கு அ.தி.மு.க. தரப்பில் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடிக்கும் வரை கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் தனது பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார். அண்ணாமலைக்கு பிறகு நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையே, அண்ணாமலை பதவியில் இருந்து விலகியதற்கு எடப்பாடி பழனிசாமி போட்ட கண்டிஷன் மட்டுமே காரணம் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்கு வேறொரு காரணம் சொல்லப்படுகிறது.

அதாவது, கோயம்புத்தூரில் அண்ணாமலை வாங்கிய நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் என்றும், அது சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாகவும், மாதத்திற்கு ரூ. 6 லட்சம் வாடகை செலுத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இவ்வளவு பெரிய தொகைக்கு நிலத்தை வாங்குவதற்கு நிதி எப்படி வந்தது என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு அண்ணாமலை தரப்பில், ஜூலை 12, 2025 அன்று விவசாய நிலம் வாங்கியது உண்மைதான். அனைத்து நடைமுறைகளும் சட்டப்பூர்வமாகப் பின்பற்றப்பட்டன. நிலத்தை வாங்கத் தனது மற்றும் தனது மனைவியின் சேமிப்பு மற்றும் வங்கிக் கடன் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
நிலப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வைக்காக ரூ. 40.59 லட்சம் மாநில அரசுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் மற்றும் பால் பண்ணை அமைப்பதற்காகவே நிலம் வாங்கப்பட்டது என்றும், இதற்காக பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுவே தான் வாங்கிய முதல் அசையா சொத்து என்றும், அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கையில் அனைத்து விவரங்களும் தெரியவரும் என்றார்.

முன்னதாக, அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவராக பதவி வகித்த போது ஆளும் கட்சிக்கு எதிரான கண்டனங்களையும், போராட்டங்களையும் தீவிரமாக முன்னெடுத்து வந்தார். மேலும், பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் புதிய பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் சில மாதங்கள் ஆக்டிவாக இல்லாமல் இருந்த அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அண்ணாமலை பா.ஜ.க.வில் தான் நீடிக்கிறார். ஆனால் 2026-ம் ஆண்டிலும் அண்ணாமலை பா.ஜ.க.வில் தான் இருப்பாரா? அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுமா? இல்லை அதிருப்தியில் தனிக்கட்சி தொடங்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- இட்லியை அதிகம் தேடியவர்களும் இந்தியர்களாகத்தான் இருப்பார்கள்
- என்றும் தென்னிந்திய உணவாகவே இருந்துவிட்டு போகட்டும்.
'இன்னைக்கும் இட்லிதானா' என சொல்பவர்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கான பதிவுதான் இது. இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளில் இட்லிதான் முதலிடம் பிடித்துள்ளதாம். டின்னருக்கு நீங்க எப்புடியோ (உப்மா), அதுபோல ப்ரேக்ஃபர்ஸ்ட்க்கு அவங்க (இட்லி) என சுந்தரபாண்டியன் பட டயலாக்கை வைத்து எப்படி கலாய்த்தாலும், அய்யாதான் ஆல் ஏரியாலயு கிங்கு என கில்லி பட டயலாக்போல தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முதலிடம் பிடித்துள்ளது இட்லி. 'நீங்க நெனக்கிறமாதிரி நா சாதாரணமான ஆள் இல்லடா' என்பது போல பல குணாதியசங்களை கொண்டது இட்லி.
அதாவது தொட்டுப் பார்த்தால் பஞ்சு, கடித்துப் பார்த்தால் ரப்பர் (சில ஹோட்டல்களில்), சட்னியில் முக்கி எடுத்தால் சோப்பு நுரை போல உறிஞ்சும் தன்மை என சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஒரு தனித்துவம். இன்னும் சொல்லப்போனால் இட்லி ஒரு மகாத்மா மாதிரி. மென்மையான உடம்பு, பெரிய மனசு, எல்லாருக்கும் பிடிக்கும். இன்னும் ஏதாவது சொல்லலாம் என நினைத்தால், புழந்தது போதும், எனக்கு புகழ்ச்சி புடிக்காது என இட்லியே கூறிவிடும். அதனால் இதனை இதோடு நிறுத்திக் கொள்வோம்.

இட்லியை வைத்து பெரும் அரசியல் நடந்தது
ஆனால் யார் இட்லியை தேடியிருப்பார்கள்? இட்லியை ஏன் தேடவேண்டும்? என நீங்கள் நினைப்பீர்கள். அதுகுறித்து பார்ப்போம். அட வேற யாரு இல்லங்க. எல்லாம் நம்ம பசங்கதான் என்று கூறுவதற்கு ஏற்ப இட்லியை அதிகம் தேடியவர்களும் இந்தியர்களாகத்தான் இருப்பார்கள் என்பதும் எனது கணிப்பு. காரணம் மும்மொழி கொள்கை, ஹிந்தி திணிப்பு சர்ச்சை இந்த வருட நடுவில் எழுந்தது. உங்களுக்கு நியாபகம் உள்ளதா? இந்த வாக்குவாதம் ரயில்நிலையம், பேருந்து நிலையம், சமூக வலைதளங்கள் என அனைத்து பக்கங்களும் முற்றியது.
முடிவுதான் என்ன?. வாக்குவாதம் முற்ற ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை விமர்சிக்க தொடங்கினர். அதாவது சமூக வலைதளங்களில் வடமாநிலத்தவர்களும், தென் மாநிலங்களுக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது தென்னிந்தியர்களை கிண்டலடிக்கும் விதமாக பல போஸ்டுகள் பதிவிடப்பட்டன. அதில் ஒன்றுதான் இட்லி. அதாவது தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் 'தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி' என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது. இப்படி இட்லியை வைத்து ஒரு அரசியலே நடந்தது.
அப்போது இட்லி பற்றி தெரிந்துகொள்ள வட இந்தியர்கள் பலரும் தேடியிருக்கலாம். எது எப்டியோ நம்ம ரூட் கிளியர் ஆனா சரிதா என்பதுபோல அனைவரும் கூகுளில் தேட, 2025-ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் பட்டியலில் இடம்பிடித்தார் இட்லி.

இட்லி
இவ்ளோ தெரிஞ்சிகிட்ட நாம இவரோட (இட்லி) வரலாறு தெரியாம போனா எப்டி?
இவ்ளோ நாளா நாம எல்லாரும் இட்லி, நம்ம ஊர்ல பிறந்ததுன்னு நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, அது எங்கயோ வெளிநாட்டுல இருந்து வந்துதுனு நிறைய பேர் சொல்றாங்க. எங்க இருந்து வந்தா என்ன? நம்ம ஊருக்கு வந்த பிறகு, நம்மளோட ஒன்னுக்குள்ள ஒன்னாய்ட்டாய்ங்க. அதனால வெளிநாடு வரலாறு எல்லாம் வேண்டாம். வட இந்தியர்கள் கிண்டலடித்ததுபோல அவர் என்னைக்கும் தென்னிந்திய உணவாகவே இருந்துவிட்டு போகட்டும்.
2025-ம் ஆண்டு தொடங்கியது முதல் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இதனால், உயிர் சேதங்களும் அதிகளவில் ஏற்பட்டன. இந்தியாவில் நடந்த இந்த துயரச் சம்பவங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்..
திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனம்:

ஆந்திரப் பிரதேசம் திருமலையில் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி அன்று வைகுண்ட துவார தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் வாங்குவதற்காக பக்தர்கள் முண்டியடித்தபோது பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
மகா கும்பமேளா:
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த ஜனவரி 29ம் தேதி, அதாவது மௌனி அமாவாசையன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காகக் கூடியிருந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கினர்.

இந்த விபத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
டெல்லி ரெயில் நிலையம்:

பிப்ரவரி மாதம் 15ம் தேதி அன்று, டெல்லி ரெயில் நிலையத்தில் மகா கும்பமேளாவிற்குச் செல்ல ரெயில் ஏறுவதற்காகக் காத்திருந்த பயணிகள் இடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீலைராய் தேவி கோயில் திருவிழா:

கோவாவில் உள்ள ஷிர்காவ் கிராமத்தில் கடந்த மே 3ம் தேதி அன்று நடந்த வருடாந்திர விழாவின்போது அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு ஐபிஎல் வெற்றி கொண்டாட்டம்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த ஜூன் 4ம் தேதி அன்று நடந்த ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது மைதானத்தின் நுழைவாயிலில் ஏற்பட்ட நெரிசலால் இந்த துயரச் சம்பவம் நடந்தது.
கரூர் த.வெ.க. பரப்புரைக் கூட்டம்:
தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் இந்த விபத்து ஏற்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஆந்திரா வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் ஏகாதசி விழா:
கடந்த நவம்பர் 1ம் தேதி அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் ஏகாதசி விழாவின்போது ஏற்பட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்தனர்.

- டிசம்பர் மாதத்தில் 31 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
- குறிப்பாக டிசம்பர் 1-ந் தேதி மட்டும் 8 பேர் உயிரிழந்தனர்.
உலக அளவில் நிறைய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. விளையாட்டு போட்டிகளின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து அளித்த வீரர்கள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் 2025-ம் ஆண்டில் மறைந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த பிரபலங்களின் தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.
ஜனவரி மாதத்தில் மறைந்த வீரர்கள் குறித்த தகவலை பார்க்கலாம். அதன்படி அமெரிக்காவை சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரரான கிரெக் பெல் தனது 94 வயதில் ஜனவரி 25-ந் தேதி மறைந்தார். இவர் 1956-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தார்.
அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்து உரிமையாளர் (பிலடெல்பியா ) ஹரோல்ட் காட்ஸ் (Harold Katz), 87 வயதில் ஜனவரி 25-ந் தேதி மறைந்தார்.
பிரெஞ்சு நாட்டை சேர்ந்து அர்னால்டோ கிருவாரின் (86 வயது)(Arnaldo Gruarin). ரக்பி யூனியன் வீரரான இவர் ஜனவரி 28-ந் தேதி மறைந்தார்.

ரஷிய நாட்டை சேர்ந்த ஜோடி ஸ்கேட்டர் விளையாட்டு வீராங்கனை எவ்ஜெனியா ஷிஷ்கோவா (Evgenia Shishkova). இவர் தனது 52 வயதில் ஜனவரி 29-ந் தேதி காலமானார். இவர் 1994-ம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார்.

மே
நினோ பென்வெனுட்டி (Nino Benvenuti), 87 வயது, இத்தாலியன், குத்துச்சண்டை வீரர் (ஒலிம்பிக் தங்கம் 1960, உலக சாம்பியன்). மறைந்தது மே 20.

ஜிம் இர்சே (Jim Irsay), 65 வயது, அமெரிக்கன், அமெரிக்கன் கால்பந்து உரிமையாளர் (இண்டியானாபோலிஸ் கொல்ட்ஸ்), மறைந்தது மே 21.
ஜூன்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி (Dilip Doshi). சுழற்பந்து வீச்சாளராக இவர் தனது 77 வயதில் ஜூன் 23-ந் தேதி மறைந்தார்.

டியாகோ செகுய் (Diego Seguí), 87 வயது, கியூபன், பேஸ்பால் பிட்சர், மறைந்தது ஜூன் 24.

டக் எக்கர்ஸ் (Doug Eggers), அமெரிக்கன், அமெரிக்கன் கால்பந்து வீரர், ஜூன்.
ஜூலை
பெலிக்ஸ் பாம்கார்ட்னர் (Felix Baumgartner), 56, ஆஸ்திரியன், எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் (ஸ்கைடைவர்), மறைந்தது ஜூலை 17.
ஹல்க் ஹோகன் (Hulk Hogan), 71, அமெரிக்கன், மல்யுத்த வீரர், மறைந்தது ஜூலை 24.

செப்டம்பர்
கென் டிரைடன் (Ken Dryden), 78, கனடியன், ஐஸ் ஹாக்கி கோல்கீப்பர் (ஸ்டான்லி கப் வென்றவர்), மறைந்தது செப்டம்பர் 5.

நவம்பர்
கென்னி ஈஸ்லி (Kenny Easley), 66, அமெரிக்கன், அமெரிக்கன் கால்பந்து வீரர் (சீஹாக்ஸ்), மறைந்தது நவம்பர் 14.

ராட்னி ரோஜர்ஸ் (Rodney Rogers), 54, அமெரிக்கன், கூடைப்பந்து வீரர் (NBA), மறைந்தது நவம்பர் 21.

ஜான் பீம் (John Beam), அமெரிக்கன், அமெரிக்கன் கால்பந்து பயிற்சியாளர், நவம்பர்.
மற்ற மாதங்களை விட டிசம்பரில் அதிக வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதன்படி 31 வீரர்கள் இந்த மாதத்தில் மறைந்துள்ளார். குறிப்பாக டிசம்பர் 1-ந் தேதி மட்டும் 8 பேர் மறைந்துள்ளனர்.
டிசம்பர்
1. ஜிம்மி மரியானோ (Jimmy Mariano), 84, பிலிப்பைன்ஸ், கூடைப்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளர், டிசம்பர் 7.
2. வோலோடிமிர் சிசென்கோ (Volodymyr Sysenko), 63, உக்ரைன், கால்பந்து வீரர் மற்றும் மேலாளர், டிசம்பர் 7.
3. டாம் ஹிக்ஸ் (Tom Hicks), 79, அமெரிக்கன், விளையாட்டு உரிமையாளர் (லிவர்பூல் FC, டல்லாஸ் ஸ்டார்ஸ்), டிசம்பர் 6.
4. நிக் ஜோனைட்ஸ் (Nick Joanides), 55, அமெரிக்கன், ரேசிங் டிரைவர், டிசம்பர் 6.
5. விக்டர் மிரோஷ்னிசென்கோ (Viktor Miroshnichenko), 66, உக்ரைன், குத்துச்சண்டை வீரர் (ஒலிம்பிக் வெள்ளி 1980), டிசம்பர் 6.
6. அப்துல் ரஷீட் (Abdul Rashid), 46, பாகிஸ்தான், ஹர்டில்ஸ் வீரர் (ஒலிம்பிக் 2008), டிசம்பர் 6.
7. மனோலோ வில்லனோவா (Manolo Villanova), 83, ஸ்பெயின், கால்பந்து வீரர் மற்றும் மேலாளர், டிசம்பர் 6.
8. மைக்கேல் அன்னெட் (Michael Annett), 39, அமெரிக்கன், ரேசிங் டிரைவர், டிசம்பர் 5.
9. வாசிலே கரவுஸ் (Vasile Carauș), 37, மோல்டோவன், கால்பந்து வீரர், டிசம்பர் 5.
10. ஸ்டீவ் ஹெர்ட்ஸ் (Steve Hertz), 80, அமெரிக்கன், பேஸ்பால் வீரர், டிசம்பர் 4.
11. ராய் கிரேமர் (Roy Kramer), 96, அமெரிக்கன், கல்லூரி புட்பால் பயிற்சியாளர், டிசம்பர் 4.
12. மேபெல் போச்சி (Mabel Bocchi), 72, இத்தாலியன், கூடைப்பந்து வீரர், டிசம்பர் 4.
13. அன்டோனியோ வர்கியு (Antonio Vargiu), 86, இத்தாலியன், பீல்ட் ஹாக்கி வீரர் (ஒலிம்பிக் 1960), டிசம்பர் 3.
14. மொஹம்மது ரஹ்மதுல்லா (Mohammed Rahmatullah), 87, இந்தியன், கால்பந்து வீரர் மற்றும் மேலாளர், டிசம்பர் 3.
15. லூயிஸ் அன்டோனியோ சில்வா டாஸ் சான்டோஸ் (Luiz Antônio Silva dos Santos), 55, பிரேசிலியன், கால்பந்து ரெஃப்ரீ, டிசம்பர் 3.
16. மௌரிசியோ தெர்ம்ஸ் (Maurizio Thermes), 86, இத்தாலியன், கால்பந்து வீரர், டிசம்பர் 3.
17. அலெக்ஸ் சான்செஸ் (Alex Sánchez), 95, கோஸ்டா ரிகன், கால்பந்து வீரர், டிசம்பர் 5.
18. மாட்டி சுண்டெலின் (Matti Sundelin), 91, பின்னிஷ், கால்பந்து வீரர், டிசம்பர் 5.
19. மௌஸ்தபா அலி (Moustafa Ali), 59, எகிப்தியன்-கனடியன், கால்பந்து வீரர், டிசம்பர் 2.
20. அனடோலி பெல்யாயேவ் (Anatoli Belyayev), 73, பெலாருசியன், ஐஸ் ஹாக்கி வீரர், டிசம்பர் 2.
21. மார்வின் ஹின்டன் (Marvin Hinton), 85, இங்கிலீஷ், கால்பந்து வீரர், டிசம்பர் 2.
22. எஸாவ் கன்யெண்டா (Essau Kanyenda), 43, மலாவியன், கால்பந்து வீரர், டிசம்பர் 2.
23. ஆர்காடியோ வென்டூரி (Arcadio Venturi), 96, இத்தாலியன், கால்பந்து வீரர், டிசம்பர் 2.
24. எல்டன் கேம்ப்பெல் (Elden Campbell), 57, அமெரிக்கன், கூடைப்பந்து வீரர், டிசம்பர் 1.
25. ராபின் ஸ்மித் (Robin Smith), 62, தென்னாப்பிரிக்கா-இங்கிலீஷ், கிரிக்கெட் வீரர், டிசம்பர் 1.
26. ஹென்னி வான் சில் (Hennie van Zyl), 89, தென்னாப்பிரிக்கா, ரக்பி யூனியன் வீரர், டிசம்பர் 1.
27. டெனிஸ் டர்னியன் (Denis Durnian), 75, இங்கிலீஷ், கோல்ஃப் வீரர், டிசம்பர் 1.
28. இபோ எல்டர் (Ebo Elder), 46, அமெரிக்கன், குத்துச்சண்டை வீரர், டிசம்பர் 1.
29. கேப்ரியல் மோய்சியானு (Gabriel Moiceanu), 91, ரோமானியன், சைக்கிள் வீரர் (ஒலிம்பிக் 1960, 1964), டிசம்பர் 1.
30. வோலோடிமிர் முன்ட்யான் (Volodymyr Muntyan), 79, உக்ரைன், கால்பந்து வீரர் மற்றும் மேலாளர், டிசம்பர் 1.
31. நிகோலா பீட்ராங்கெலி (Nicola Pietrangeli), 92, இத்தாலியன், டென்னிஸ் வீரர், டிசம்பர் 1.
- இந்தாண்டு வெளியான 90% படங்கள் தோல்வியை தான் தழுவின.
- அதிக பட்ஜெட் கொண்ட படங்களின் தோல்வி தான் நம் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும்.
2025 ஆம் ஆண்டு நவம்பர் வரை தமிழ் சினிமாவில் 250க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் சுமார் 25 படங்கள் மட்டுமே வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 90% படங்கள் தோல்வியை தான் தழுவின.
வழக்கம் போல இந்தாண்டு வெளியான பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அதிக பட்ஜெட் கொண்ட படங்களின் தோல்வி தான் நம் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும்.
அவ்வ்கையில் இந்தாண்டு பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி வணிக ரீதியாக தோல்வி அடைந்த படங்களின் பட்டியலை பார்ப்போம்:

1. தக் லைஃப்
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான 'தக் லைஃப்' திரைப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரிய தோல்வியை தழுவியது.
சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.100 கோடி கூட வசூலிக்கவில்லை. கமல்ஹாசன் நடிப்பில் முன்னதாக வெளியான இந்தியன் 2 படத்தை விடவும் இப்படம் படுதோல்வி அடைந்தது.

2. விடாமுயற்சி
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் முதலில் நல்ல வசூலை பெற்ற இப்படம் பின்னர் வசூலில் சறுக்கியது. இப்படம் மொத்தமாக உலக அளவில் 135 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது.
இப்படத்தின் மொத பட்ஜெட் சுமார் ரூ.200 கோடி வரை இருக்கும் என்று கூறப்படும் நிலையில், படத்தின் பட்ஜெட்டை விட குறைவாக வசூல் செய்ததால் இப்படம் தோல்வி அடைந்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றது.

3. ரெட்ரோ
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ரெட்ரோ. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
முதல் நாள் வசூலாக இப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்தது. அதே சமயம் இப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்ததால் இப்படத்தில் வசூல் பாதிக்கப்பட்டது. கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு சூர்யாவின் கம்பேக் படமாக ரெட்ரோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை.
உலகளவில் ரெட்ரோ படம் ரூ.104 கோடி வசூலை கடந்ததாக கூறப்பட்டாலும் இப்படம் சூர்யாவுக்கு தோல்வி படமாகவே அமைந்தது.

4. மதராஸி
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் 'மதராஸி'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அமரன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து மதராஸி படம் வெளியானதால் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. அமரன் படம் 300 கூடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த நிலையில், மதராஸி படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யவே திணறியது.
இப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தாலும் சிவகார்த்திகேயனுக்கு தோல்வி படமாகவே அமைந்தது.

5. கூலி
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கூலி படம் மக்களிடையே எதிர்மறை விமர்சனங்களையே பெற்றது. வசூலை வாரி குவித்தாலும் விமர்சன ரீதியாக இப்படம் தோல்வி படமாகவே அமைந்தது. இணையத்தில் இப்படத்தின் காட்சிகள் ட்ரோல் செய்யப்பட்டன.
- விமான நிலைய ரன்வேயில் இருந்து வானில் விமானம் பறந்தது.
- திடீரென கீழே இறங்கி அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி தீப்பிடித்தது.
அகமதாபாத்:
அழகான மாலை நேரம். பார்க்கில் வாக்கிங் செல்பவர்கள் தங்களது நண்பர்களுடன் பேசிக் கொண்டும், காதில் இயர்போன் மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்.
அங்குள்ள பெஞ்சில் 65 வயது பெரியவர் சபேசன் உட்கார்ந்து இருந்தார். அங்குள்ளவர்களை சுற்றிலும் நோக்கினார்.
அப்போது ஒருவர் வந்து அவரிடம், ஐயா என்னை நினைவிருக்கிறதா என கேட்டார்.
சரியாக ஞாபகம் இல்லையேப்பா என சபேசன் கூறினார்.
ஐயா, நான் தங்களிடம் படித்த மாணவன். என பெயர் முருகேஷ் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். படித்து வெளியூர் சென்று விட்டேன். தற்போது தான் இந்த ஊருக்கு வந்துள்ளேன் என்றார்.
ரொம்ப சந்தோஷம்பா, என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டாய்? என கேட்டார்.
எங்களுக்கு எளிதில் புரியும் விதமாக ஒரு உதாரணம் சொல்லி தானே சார் நீங்க பாடம் நடத்துவீங்க. அதை எப்படி என்னால மறக்க முடியும் என உற்சாகமாக சொன்னார்.
நல விசாரிப்புகள் முடிந்தபின் ஊர் உலக நடப்புகள் பற்றிய பேச்சு வந்தது.
அப்போது அந்த ஆசிரியர், சரி உனக்கு எமன் கிட்ட இருந்து தன் புருஷனை மீட்ட சாவித்ரி பத்தி சொல்லி இருக்கேனே, அதுமாதிரி கடந்த ஆண்டு ஒரு ஆள் எமன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்கான் தெரியுமா உனக்கு என புதிர் போட்டார்.
யாருன்னு எனக்கு சரியா தெரியலையே சார், சொல்லுங்க சார் ஞாபகம் வச்சிக்கிறேன் என்றார்.
ஆசிரியர் கூறிய விஷயம் இதுதான்:
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ஜூன் மாதம் 12-ம் தேதி புறப்பட்டுச் சென்றது.

ரன்வேயில் இருந்து வானில் பறந்த விமானம் திடீரென கீழே இறங்கி, விமான நிலையத்தின் அருகில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உள்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிரிட்டனைச் சேர்ந்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்பவரே அந்த அதிசய மனிதர். விமான விபத்தில் இவரது உறவினர் பலியானதால் சோகத்தில் ஆழ்ந்தார்.
நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி எனக்கூறிய அவர், பிரதமர் மோடி நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறியது ஊக்கம் அளித்தது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இப்படித்தான் அந்த ஆள் எமன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்தான் என கூறி முடித்த சபேசன், சரி, நான் கிளம்பறேன். வீட்டில் தேடுவாங்க. அடிக்கடி வந்துட்டு போப்பா. வேற யாராவது பார்த்தாலும் இங்க வரச்சொல்லு பேசலாம் என வீட்டுக்கு புறப்பட்டார்.
தனது பள்ளி பருவ ஆசிரியரை சந்தித்த நிறைவுடன் முருகேசும் வீடு திரும்பினார்.
- விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த எரிபொருள் டேங்கரில் இருந்து கசிந்த எரிபொருளை மக்கள் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
- மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு குழுமியிருந்தவர்களில் குறைந்தது 231 பேர் உயிரிழந்தனர்.
2025 இல் உலகில் பல அழிவுகரமான விபத்துகள் அரங்கேறி உள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவற்றை கால வரிசைப்படி இங்கு பார்ப்போம்.

98 பேர் உடல் கருகி உயிரிழந்த நைஜீரிய எரிபொருள் டேங்கர் விபத்து
2025 தொடக்கத்தில் ஜனவரி 18 அன்று நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் சுலேஜா அருகே நிகழ்ந்த கோரமான விபத்தில் 98 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த எரிபொருள் டேங்கரில் இருந்து கசிந்த எரிபொருளை மக்கள் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

78 பேர் பலியான துருக்கி ஹோட்டல் விபத்து
ஜனவரி 21 அன்று துருக்கியில் புகழ்பெற்ற Ski Resort அமைந்துள்ள கார்தால்காயாவில் ஒரு சொகுசு ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 78 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். ஜனவரி மாத நடுப்பகுதியில், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்தது.
இரவு நேரத்தில் தீப்பிடித்ததால், பலர் தங்கள் அறைகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டாலும், ஹோட்டலின் மரக்கட்டமைப்பு மற்றும் குளிர்சாதன அமைப்புகளால் தீ வேகமாக பரவியதில் விபத்தின் சேதம் பன்மடங்கு அதிகரித்தது.

55 பேர் மரணித்த குவாத்தமாலா பேருந்து விபத்து
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு குவாத்தமாலா குடியரசு. இதன் தலைநகரான குவாத்தமாலா சிட்டியில் உள்ள லாஸ் வேகாஸ் ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 10 அன்று அதிகாலையில் லாஸ் வேகாஸ் ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்றில் இருந்து, பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். பேருந்தில் இருந்தவர்களில் பலர் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளர்கள்.

59 பேர் பலி மரணித்த நைட் கிளப் விபத்து:
பால்கன் நாடுகளில் ஒன்றான வடக்கு மாசிடோனியாவில் கோச்சானி நகரில் ஒரு பரபரப்பான இரவு விடுதியில் கடந்த மார்ச் 16 ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உடல் கருகி இறந்தனர். இந்த விபத்தில் 155 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது விடுதிக்குள் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவசரகால வெளியேறும் வழிகள் போதுமானதாக இல்லாததும், நெரிசலும் உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

231 பேர் பலி உயிரிழந்த டொமினிகன் நைட் கிளப் விபத்து
கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் சான்டோ டொமிங்கோ நகரில் பிரபல பாடகர் ரூபி பெரெஸ் பங்கேற்ற இசை நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 8 அன்று இரவு விடுதி ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு குழுமியிருந்தவர்களில் குறைந்தது 231 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் பாடகர் ரூபி பெரெஸும் உயிரிழந்தார். நிகழ்ச்சியின் போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதும், கட்டிடத்தின் தரமற்ற கட்டுமானமும் இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

148 பேர் பலி உயிரிழந்த காங்கோ படகு விபத்து
ஏப்ரல் 15 அன்று ஆபிரிக்க நாடான காங்கோவின் மண்டாகா நகருக்கு அருகில் உள்ள காங்கோ ஆற்றில் மரப் படகு தீப்பிடித்துக் கவிழ்ந்ததில் குறைந்தது 148 பேர் உயிரிழந்தனர்.
மோட்டார் மூலம் ஆற்றில் படகு அதிவேகமாக இயக்கப்பட்டதும் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக இல்லாததும் இந்த விபத்துக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. படகில் இருந்த பலர் நீச்சல் தெரியாததாலும், தீக்காயங்களாலும் உயிரிழந்தனர்.

70 பேர் பலியான ஈரான் துறைமுக விபத்து
ஈரானின் முக்கிய வர்த்தக மையமான பந்தர் அப்பாஸில் உள்ள ஷாஹித் துறைமுகத்தில் ஏப்ரல் 26 பெரும் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
துறைமுகத்தில் சேமிக்கப்பட்டிருந்த எரிபொருள் அல்லது இரசாயனப் பொருட்கள் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஈரானின் ஏற்றுமதி இறக்குமதி செயல்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

79 பேர் பலியான ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து
ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து, ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு லாரி மீது மோதிய விபத்தில் 79 பேர் பலியாகினர்.

159 பேர் பலியான ஹாங்காங் அடுக்குமாடி தீ விபத்து
நவம்பர் 23 அன்று ஹாங்காங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நெருக்கமாக அமைந்திருந்த கட்டடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 159 பேர் கொல்லப்பட்டதுடன், 150-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். அந்த கட்டடங்களில் மூங்கில் உள்ளிட்ட தீப்பற்றக்கூடிய பொருட்கள் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று பின்னர் தெரிய வந்தது.
- யார் அந்த சார்? என்று தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி வந்தார்.
- மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தி.மு.க. அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் சம்பவத்தன்று 'சார்' என்று குறிப்பிட்டு பேசியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து யார் அந்த சார்?' என்ற கேள்வி தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
யார் அந்த சார்? என்று தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி வந்தார்.
இதற்கு பதில் அளித்த தி.மு.க. அமைச்சர்கள், அப்படி யாரும் இல்லை, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டின் சட்டசபையின் முதல் கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யார் அந்த சார்? என அச்சிடப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'யார் அந்த சார்?' என்று கேள்வி எழுப்பி, அமைச்சர்கள் யாரையோ காப்பாற்றப் பேசுவதாக குற்றஞ்சாட்டினார்.

'யார் அந்த சார்?' என்ற கேள்வியுடன் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அ.தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார் (SIR)? #SaveOurDaughters என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- விழுப்புரத்தில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டம் தொடர்பான பேனரில் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டது.
- பதவியில் இருக்கிறோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பொன்முடி பேசிவிட முடியுமா?.
தி.மு.க. அமைச்சர்களில் சிலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி அவ்வப்போது பிரச்சனையில் மாட்டிக்கொள்வது இந்த ஆண்டும் தொடர்ந்தது. இதில் அமைச்சராக இருந்த பொன்முடி நிறைய சர்ச்சைகளில் சிக்கியதோடு, அமைச்சர் பதவி, கட்சி பதவி ஆகியவற்றை இழந்துள்ளார்.
பொன்முடி பேசிய சர்ச்சை பேச்சுகள் குறித்து பார்ப்போம்...
பொன்முடி சர்ச்சைகள்:
அரசு பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் செய்வதை பொன்முடி, 'ஓசி பயணம்' என்று பேசியதும், அதன் பின்னர் பெண் மக்கள் பிரதிநிதி ஒருவரை சாதியின் பெயரைக் குறிப்பிட்டுக் கேள்வி கேட்டது பெரும் சர்ச்சையானது.

மேலும், பள்ளிக்கட்டிட திறப்பு விழா ஒன்றில் பொன்முடி பங்கேற்றிருந்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய பெண் ஒருவர், தங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சனை உள்ளதாக புகார் அளித்தார். பெண்ணின் கோரிக்கையை தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலரிடம் பொன்முடி விசாரித்துக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, பேசிய பொன்முடி, "எனக்கா ஓட்டு போட்டு கிழி கிழினு கிழிச்சிட்டீங்க. நீங்க வந்து கேக்குறீங்க. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஓட்டு போட்டவர்கள், போடாதவர்களுக்கும் நல்லதைச் செய்ய சொல்லியிருக்கிறார் முதலமைச்சர். ரோடு போட்டது நான், பஸ் விட்டது நான், குடி தண்ணீர் விட்டது நான்! ஏதாவது குறை இருந்தால் எழுதிக் கொடுங்கள், சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு கத்திக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்?" என்று காட்டமாக கூறினார்.
இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அய்யா ஆஸ்பத்திரி வேணும் என்று கேட்டவர்களிடம், "நீ என்ன எனக்கா ஓட்டுப் போட்டாய்" என்று மீண்டும் கேட்டதாக பெரும் சர்ச்சையாக மாறியது.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் பகுதியில் மகளிர் உரிமைத் தொகை குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஆய்வு செய்த பொன்முடி, அங்கிருந்த பெண்களிடம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கேள்வி கேட்டு விளக்கம் அளித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் பொன்முடி விளக்கம் அளிக்காமல் ஒருமையில் பேசினார். இதனை தொடர்ந்து, அவரது உயர்க் கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, வனத்துறை ஒதுக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில், பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாகவும், சைவ, வைணவ மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொன்முடியின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
மேலும், சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது,
"பதவியில் இருக்கிறோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பொன்முடி பேசிவிட முடியுமா?. ஒரு நபரை கொலை செய்துவிட்டு நான் கொலை செய்ய விரும்பவில்லை என்று கூற முடியுமா? சைவம் வைணவம் பிரிவுகள் தொடர்பாக இஷ்டம் போல் கருத்து தெரிவிப்பது சரியா? இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது. இது ஜனநாயக நாடு, மக்களுடன்தான் தானும் வசிக்கிறோம் என்ற எண்ணம் அமைச்சருக்கு வரவேண்டும்," என்று நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.
ஓரம்கட்டப்பட்ட பொன்முடி:
இதற்கிடையே, தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.வில் ஏழு மண்டல பொறுப்பாளர்களை கட்சித் தலைமை நியமித்தது. கே.என்.நேரு, எ.வ. வேலு, ஆ.ராசா, கனிமொழி, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, செந்தில் பாலாஜி ஆகியோர் ஏழு மண்டலங்களிலும் கூட்டங்களை நடத்தி வந்தனர். ஏழு மண்டங்களாக இருந்தது எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. கட்சி ரீதியில் கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு ஆகிய பகுதிகளுக்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். இதில் பொன்முடிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
மேலும் பொன்முடி மகன் கவுதமசிகாமணியின் வசம் இருந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் 2 சட்டமன்ற தொகுதிகளை பறித்து கட்சியில் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் கவுதமசிகாமணியின் பொறுப்பையும் கட்சி மேலிடம் குறைத்தது. இதனால், பொன்முடி மீது கட்சி தலைமை கடும் கோபத்தில் உள்ளது வெட்ட வெளிச்சமானது.

விழுப்புரத்தில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டம் தொடர்பான பேனரில் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டது. விழுப்புரத்திலேயே பொன்முடி ஓரம்கட்டப்பட்டதால் தி.மு.க.வில் இருந்து மொத்தமாக அவர் ஓரங்கப்பட்டப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.
பொன்முடி என்றால் விழுப்புரம், விழுப்புரம் என்றால் பொன்முடி என்ற வகையில் பிரபலமான அவருக்கு இறங்குமுகமாகவே இருந்தது.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இருப்பினும் அவருக்கு அமைச்சருக்கான பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
2025-ம் ஆண்டு பொன்முடிக்கு போதாத காலமாக அமைந்துவிட்டது. தவளை தன் வாயால் கெடும் என்பது போல பொன்முடி தனது அரசியல் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டார். வரவிருக்கும் 2026-ம் ஆண்டு பொன்முடி தனது அரசியல் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகருவாரா? காலம் தான் முடிவு செய்யும்.
- நியூயார்க்கின் முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர்.
- மக்களை எளிதில் அணுகக்கூடிய உத்திகளை கையாண்டவர்.
"இந்தப் பக்கம் பாத்தா சோனு மழ... இந்தப் பக்கம் பாத்தா சோனு மழ... சரி பின்னாடி திரும்பி பாப்போமேனு பாத்தா அந்த பக்கமு மழ" என்பது வடிவேலு காமெடி. அந்த மழைபோல 2025ல் எல்லா பக்கமும் பேசப்பட்டவர்தான் நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி. "மழ பெஞ்சா சுத்தியுதாண்டா பெய்யும்" என்ற பிரபுவின் பதில்போல, ஒரு நாட்டில் நடக்கும் முக்கிய செய்தி உலக நாடுகளுக்கு பரவும் அல்லவா. அப்படி பரவினார் மம்தானி.
நியூயார்க்கின் முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர். ஆளும்கட்சியை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் உறுப்பினரான இவர் நியூயார்க் மேயர் ஆகிறார். உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் மேயர் தேர்தல் நடக்கும். எந்தக் கட்சியின் உறுப்பினராவது வெற்றிப் பெற்றுதான் ஆகவேண்டும். அவர்கள் பதவி ஏற்பார்கள். ஆனால் மம்தானிக்கு மட்டும் எப்படி இவ்வளவு பிரபலம் கிடைத்தது? நம்பர் 1 டிரெண்டிங் ஆனது எப்படி?

"பில்டப் பண்ட்ரனோ, பீலா விட்ரனோ அது முக்கியமில்ல. நம்ம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மல உடனே திரும்பி பாக்கணு" எனும் வடிவேலு வசனத்திற்கு ஏற்ப தனது நடவடிக்கைகள் மூலம் பெரும் கவனம் ஈர்த்தவர் மம்தானி. குஜராத் கலவர வழக்கில் மோடியை பகிரங்கமாக விமர்சித்தவர். இஸ்ரேல் - காசாப் போரில் காசாவுக்கு ஆதரவாக பேசினார். மற்றொரு முக்கிய விஷயம் மக்களை எளிதில் அணுகக்கூடிய உத்திகளை கையாண்டவர். அதாவது உடை, உணவு, இருப்பிடம், இலவசப் பேருந்து சேவை என மக்களின் அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இந்தியாவில் மும்மொழிக் கொள்கையால், பல்வேறு பிரச்சனைகள் எழுத்தொடங்கின. தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கலில் ரூபாய் குறியீடு எல்லாம் மாற்றப்பட்டு ரூ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் பெரும் பூகம்பம் வெடித்தது. இதற்கு காரணம் ஹிந்தி திணிப்பு எனவும் வாதங்கள் வைக்கப்பட்டன.
இந்த புயல் ஓயத்தொடங்கிய சில மாதங்களில் அமெரிக்காவில் ஹிந்தியில் ஓட்டு கேட்டவர் மம்தானி. இவற்றையெல்லாம் தாண்டி மிக முக்கியமாக தமிழ்நாட்டு அரசியலை, இந்திய அரசியலை கையிலெடுத்தார். அதாவது புதிதாக வரும் கட்சிகள், எப்படி ஆளும் கட்சியை விமர்சித்து கவனம் பெறுகிறதோ, அதுபோல அமெரிக்காவின் முக்கிய தலை, அதாவது அதிபர் டிரம்புக்கும் நேரடி தாக்குதான்.

இன்னும் சொல்ல வேண்டுமானால் தனது பதவி ஏற்பு விழாவில் நேருவின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார். இது இன்னும் கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்தது. இதுபோன்ற செயல்களால் இளம் வயதினர் மத்தியிலும் மிகவும் பிரபலமடைந்தார். சமூக வலைதளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் மம்தானி தனது பெயரை உச்சரித்த விதம் "The Name Is M-A-M-D-A-N-I" என்ற சொற்கள் பாடலாகவே வைரலானது. தற்போதுவரை வைரலாகிக்கொண்டுதான் இருக்கிறது.
இப்படி, யாரு சாமி நீ? என அனைவரும் ஆச்சயர்ப்பட்டு கூகுளில் தேட, 2025-ல் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் நியூயார்க் மேயர் மம்தானி.
- மருத்துவமனையின் வளாகத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது.
- நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நிர்பயா சம்பவத்தை எப்படி யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதோ.. அதேபோல், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் யாராலும் மறக்க முடியாது...!
கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9ம் தேதி அன்று மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வளாகத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது.

ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவராக பயின்று வந்த 31 வயதான பெண் மருத்துவர், கடந்த ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி இரவு பணியில் முடித்துவிட்டு மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூட்டத்தில் அதிகாலை 3 மணியளவில் உறங்கச் சென்றார்.
மறுநாள் காலையில், அவர் தலை, முகம் சிதைக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கொல்கத்தாவில் போராட்டங்கள் வெடித்தன. மாநிலத்தை தாண்டி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல்.. மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

மருத்துவர்களுக்கும், குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லை என அரசாங்கத்தை கண்டித்து பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர். இதனால், மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் அடுத்த கட்டத்தை எட்டியது. காவல்துறையினர் விசாரணைக் குழுவை அமைத்தனர். தீவிர விசாரணை மற்றும் சிசிடிவி ஆய்வை தொடர்ந்து, அதே மருத்துவமனையில் தன்னவார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்ற நபரை அதிரடியாக கைது செய்தனர்.இதைதொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார்.
உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து கொல்கத்தா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கை விசாரித்தது. நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது. அதோடு, ஒரு தேசிய விசாரணைக் குழுவை அமைத்தது.

போராட்டங்களின் எதிரொலியாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையைத் தொடர்ந்தும், கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CBI) மாற்றப்பட்டது.
சிபிஐ தனது விசாரணையில், சஞ்சய் ராயை மட்டுமே பிரதான குற்றவாளியாக உறுதி செய்தது. இதற்கிடையே, சிபிஐ வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை கைது செய்தது. முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் மீது சிபிஐ கடந்த அக்டோபர் 7ஆம் தேதி குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி அன்று இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளதி என சியால்டா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் ஜனவரி 20ம் தேதி அன்று குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பளித்தார். ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு மேற்கு வங்க அரசு ₹17 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், பாதிக்கப்பட்டவரின் குடும்பம் இந்த நிவாரணத் தொகையை வாங்க மறுத்துவிட்டனர்.
இருப்பினும், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து சிபிஐ தரப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பமும், சிபிஐயும் அவருக்கு மரண தண்டனை கோரி வருகின்றனர்.

மேற்கு வங்க அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இதே கோரிக்கையை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது, ஆனால் சிபிஐயின் மனுவை ஏற்று விசாரணைக்கு எடுத்துள்ளது. அதன் மீதான பிரதான விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. உயர் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை உறுதி செய்யலாமா அல்லது சிபிஐ கோரியபடி மரண தண்டனையாக மாற்றலாமா என்று முடிவு செய்யும்.






