என் மலர்
2025 - ஒரு பார்வை
- செனாப் ரெயில்வே பாலம் காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.
- சுமார் 15 ஆண்டாகக் கட்டப்பட்ட இந்தப் பாலம் பிரான்சின் ஈபிள் கோபுரத்தைவிட உயரமானது.
ஸ்ரீநகர்:
வரவிருக்கும் அரையாண்டு தேர்வுக்காக லைப்ரரிக்கு சென்று குறிப்புகள் எடுத்து படித்துக் கொண்டிருந்தான் சுந்தர். அப்போது அங்கு வந்த சுமதி டீச்சரைப் பார்த்தான். உடனே, டீச்சர் எப்படி இருக்கீங்க? என்றான் சுந்தர்.
நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படிடா இருக்கே? எங்கே இந்தப் பக்கம்? என பதில் கூறினார் சுமதி டீச்சர்.
நான் இங்க அடிக்கடி வருவேன் டீச்சர். பேப்பர் மட்டுமின்றி பல புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். பொது அறிவையும் தெரிஞ்சு வச்சுக்கலாம்னு வந்தேன் என்றான்.
அப்படியா? அப்ப உன்னோட பொது அறிவை சோதிச்சுர வேண்டியதுதான் என்ற டீச்சர், உலகிலேயே உயரமான
ரெயில்வே பாலம் எங்க இருக்கு சொல்லு பார்ப்போம்? என கேட்டார். பதில் தெரியாமல் சுந்தர் முழித்தான்.
இதைக் கண்ட டீச்சர், தெரியலைன்னா பரவாயில்லை. நான் சொல்றேன் கேட்டுத் தெரிஞ்சுக்கோ. உலகிலேயே உயரமான ரெயில்வே பாலம் இந்தியாவில் தான் இருக்கு தெரியுமா? என புதிர் போட்டார்.
என்ன நம்ம இந்தியாவிலா? எங்க டீச்சர் இருக்கு, அதைப் பத்தி சொல்லுங்களேன் என ஆவலோடு கேட்டான்.
சுமதி டீச்சர் சொன்ன விஷயங்களின் சுருக்கம் இதுதான்:

ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது ரெயில்வே பாலம். இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 6-ம் தேதி திறந்து வைத்தார். அதன்பின், பிரதமர் மோடி அந்தப் பாலத்தின் மீது தேசியக் கொடியைப் பிடித்தபடி நடந்து சென்றார்.
இது உலகின் மிக உயரமான ரெயில்வே இரும்பு வளைவு பாலம் என்ற சிறப்பைப் பெற்றது.
இது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் பாதை திட்டத்தின் முக்கியப் பகுதியாகும்..
இதன்மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படுகிறது.
சுமார் 15 ஆண்டாகக் கட்டப்பட்ட இந்தப் பாலம் பிரான்சின் ஈபிள் கோபுரத்தைவிட உயரமானது.

நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டது என கூறி முடித்தார் சுமதி டீச்சர்.
டீச்சர் சொன்னதைக் கேட்ட சுந்தர், ரொம்ப சந்தோஷம் டீச்சர். இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே. இந்த விஷயத்தை, நமது இந்தியாவின் பெருமையை என் பிரெண்ட்ஸ் கிட்டயும் கண்டிப்பா சொல்லப்போறேன் என்றபடி. அங்கிருந்து வீடு நோக்கி புறப்பட்டான் சுந்தர்.
- 5%, 12%, 18% மற்றும் 28% என 4 வகையான வரி அடுக்குகளை ஜிஎஸ்டி கொண்டிருந்தது.
- 8 ஆண்டுகளாக இவ்வரி மாற்றமின்றி வசூலுக்கப்பட்டு வந்தது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாநில அரசும், மத்திய அரசும் தனித்தனியாக வரி வசூலிப்பதை தவிர்க்கும் வகையில், அன்றாட பயன்பாட்டுப் பொருட்களுக்கு 5%, பொது பயன்பாட்டுப் பொருட்களுக்கு 12 %, அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 18% வரி மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு 28% வரி என விகிதங்கள் வகுக்கப்பட்டன.
ஜி.எஸ்.டி. வரி முறை அமலுக்கு வந்த பிறகு பல்வேறு பொருட்களும் இந்த வரி விதிப்புக்குள் கொண்டு வரப்பட்டது.
இதில் சில பொருட்களுக்கு அதிகபட்ச வரி விகிதம் இருந்தது. இதனால் அதை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வந்தன.
அதையடுத்து அவ்வப்போது வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனாலும்கூட இன்னும் சில பொருட்களுக்கான வரி அதிகமாக இருப்பதாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
மேலும் குறு, சிறு தொழில்களும் இந்த வரிமுறைக்கு கொண்டு வரப்பட்டன. குறைந்த முதலீட்டில் தொழில் செய்யும் நபர்களும் ஜி.எஸ்.டி.-க்குள் கொண்டு வரப்பட்டதால் அவர்கள் பல்வேறு கஷ்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது.
குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும், ஒவ்வொரு கொள்முதல் மற்றும் விற்பனையை பதிவு செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி.யில் பதிவான நிறுவனங்களிடம் மட்டும் தான் கொள்முதல் செய்ய வேண்டும்.
அவை ஒவ்வொன்றையும் ஜி.எஸ்.டி. பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால் சிறு தொழில் செய்பவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகினர்.

5%, 12%, 18% மற்றும் 28% என 4 வகையான வரி அடுக்குகளை கொண்டிருந்த ஜிஎஸ்டி. வரி 8 ஆண்டுகளாக மாற்றமின்றி வசூலுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைத்து அறிவிக்கப்பட்டது.
அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி, 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வரி முறை அமலுக்கு வந்தது. மேலும், சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் விலை குறையும் பொருட்கள்:
உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12% ஆக இருந்த வரி பூஜ்யமாக குறைகிறது. பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டதால் விலை குறைகிறது.
மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதும் நீக்கப்பட்டதால் விலை குறைந்தது.
தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டதால் பிரீமியம் தொகை குறைந்தது.
வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்படுள்ளதால் விலை குறைந்தது.
ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை மற்றும் பல் ஃப்ளாஸ் போன்ற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.
குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.
வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.
இதேபோல் நொறுக்குதீனிகளுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.
தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.
ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் உள்ளிட்டவற்றிற்கு வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.
மருத்துவத்துறையில், தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.
- கனடாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது 25% வரிகளை விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்திய நேரம் அது.
- இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்குத் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ கடந்த ஆண்டு பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2013 முதல் லிபரல் கட்சியின் தலைவராகவும் 2015 முதல் கனடாவின் 23வது பிரதமராகவும் இருந்த ட்ரூடோவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
உணவுப் பொருட்களின் விலையேற்றம், வீட்டுவசதி நெருக்கடி உள்ளிட்ட காரணிகளும் ட்ரூடோவின் செல்வாக்கு சரிய வழிவகுத்தது.
எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விட லிபரல் கட்சி வெகு பின்தங்கியிருப்பதை கருத்துக்கணிப்புகள் காட்டின.
அடுத்த தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் ட்ரூடோவால் பாதிக்கப்படுவதாக லிபரல் கட்சி எம்பிக்கள் கருதினர். இதனால் பலர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்தினர்.

மேலும் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைக்கப் போகிறேன் என அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து கனடாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது 25% வரிகளை விதிப்பதாக அச்சுறுத்திய நேரம் அது.
டிரம்ப் அச்சறுத்தலுக்கு ட்ரூடோ போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கனடா துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிரீலேண்ட் திடீரெனப் பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கு சில வாரங்களுக்கு பின் நாலாபுறமும் அழுத்தம் காரணமாக ஜனவரி 7 ட்ரூடோ தனது கட்சித் தலைவர் பதவியையும் அதன்மூலம் பிரதமர் பதவியையும் விட்டு விலகுவதாக அறிவித்தார்.

மார்க் கார்னி வருகை
இதைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வான மார்க் கார்னி கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க் கார்னி 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராகவும். 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் பணியாற்றியவர். எனவே டிரம்ப்பின் வர்த்தக போரை சமாளிக்க அவரால் முடியும் என லிபரல் எம்.பிக்கள் நம்பினர்.
அதன்படி ஏகோபித்த ஆதரவுடன் கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி மார்ச் 14 அன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற சில நாட்களிலேயே கார்னி தேர்தலை அறிவித்தார்.
அதன்படி ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி, பியரே பொய்லிவ்ரே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்து நான்காவது முறையாக வெற்றி பெற்றது.

மே மாதம் மார்க் கார்னி தனது புதிய அமைச்சரவையுடன் பதவியேற்றார். அதுமுதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய மிரட்டல்களுக்கு வரிவிதிப்புகளுக்கும் தீர்க்காமான பதிலடியை கார்னி கொடுத்து வருகிறார்.
மேலும் ட்ருடோ ஆட்சியில் நெருக்கடியை சந்தித்த வீட்டு வசதியை மேம்படுத்த புதிய கட்டுமானங்களுக்கு தடையாக இருந்த சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் பிற விதிமுறைகளை எளிதாக்கும் 'பில் சி-5' போன்ற சட்டங்களை மார்க் கார்னி இயற்றினார்.
இந்தியாவுடனான உறவில் மாற்றம்:
முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டிருந்தார்.
பஞ்சாபை தனி நாடாக பிரிக்கப் கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்குத் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ கடந்த ஆண்டு பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அதல பாதாளத்திற்குக் கொண்டு சென்றது.

ட்ரூடோவின் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்தது. தொடர்ந்து மோதல் முற்றவே, இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்பபெற்றன. இந்த விவகாரம் அங்கு அதிகம் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், அரசியல் ஆதாயத்திற்காக ட்ரூடோ காலிஸ்தான் ஆதரவாளர்களை திருப்திபடுத்துவதாக இந்தியா குற்றம் சாட்டியது.
இந்தத் தொடர் சர்ச்சைகள் ட்ரூடோவின் அரசியல் சரிவுக்கு மேலும் ஒரு காரணமாக அமைந்தது. இதன்பின் பிரதமரான மார்க் கார்னி, தேர்தல் பிரசாரத்தின்போதே இந்தியா உடனான உறவுகள் மீட்டெடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
மேலும் தேர்தலில் வென்று பிரதமர் ஆன பின் அவரது புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 எம்.பிக்கள் இடம்பெற்றனர்.
ட்ரூடோ தனிப்பட்ட வாழ்க்கை:
டிசம்பர் 25, 1971 பிறந்தவர் ட்ரூடோ. இவரது தந்தை பியர் ட்ரூடோவும் கனடாவின் பிரதமராக இருந்தவர். ஜஸ்டின் ட்ரூடோ 2008-ல் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013-ல் லிபரல் கட்சியின் தலைவரானார்.
அமெரிக்க அதிபர் நிக்சன், ட்ரூடோ பிறந்து சில மாதங்களிலேயே கனடாவின் எதிர்காலப் பிரதமராவார் என்று என்று கணித்ததாகக் கூறப்படுகிறது.

2005 இல் சோபி கிரேகோர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ட்ரூடோ. இந்த தம்பதிக்கு 3 [பிள்ளைகள் உள்ளனர். 2023 இல் சோபியை ட்ரூடோ பிரிந்தார்.
இதன் பின் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ட்ரூடோ, ஆண்டின் பிற்பகுதியில் தற்போது பிரபல அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி உடன் டேட்டிங் செய்து வருகிறார். பொது இடங்களில் அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

- 2025 ஆசிய கோப்பையில் "நோ-ஹேண்ட்ஷேக்" சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
- 2024-25 ஐ-லீக் (I-League) சீசனில் இன்டர் காஷி (Inter Kashi) மற்றும் சர்ச்சில் பிரதர்ஸ் எஃப்சி போட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது.
2025-ம் ஆண்டில் இந்திய விளையாட்டுக்களில் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவங்கள் பல நடந்துள்ளது. இதில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளில் சர்ச்சையான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
1. 2025 ஆசிய கோப்பையில் "நோ-ஹேண்ட்ஷேக்" சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
போட்டி நடைபெறும் இடம் மாற்றம்: ஆரம்பத்தில் இந்தியா நடத்துவதாக இருந்த 2025 ஆசிய கோப்பை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதட்டங்கள் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) மாற்றப்பட்டது.
கை குலுக்க மறுப்பு: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மூன்று போட்டிகளிலும், இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்துவிட்டனர்.
இந்திய நிலைப்பாடு: இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இது அணி நிர்வாகம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஒப்புதலுடன் எடுக்கப்பட்ட "கூட்டு முடிவு" என்றும், "விளையாட்டுத் திறனுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்கள் உள்ளன" என்றும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் எதிர்வினை: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இது "விளையாட்டு உணர்வுக்கு எதிரானது" என்று கூறி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் (ACC) முறையிட்டது. மேலும், போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட்-ஐ (Andy Pycroft) நடுவர் குழுவிலிருந்து நீக்கக் கோரியது, ஆனால் இந்தக் கோரிக்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ICC) நிராகரிக்கப்பட்டது.
வீரர்களுக்கு அபராதம்: போட்டியில் நடத்தைக் குறியீட்டை மீறியதற்காக, இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் உள்ளிட்ட வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் ஹாரிஸ் ரவூஃப் இரண்டு போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டார்.
2. கோப்பை வழங்கும் விழாவில் சர்ச்சை:
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகும் இதே நிலைப்பாடு தொடர்ந்தது. இந்திய அணி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள் துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க மறுத்தது, இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்திய அணி, கோப்பையை எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் காலித் அல் சரூனியிடமிருந்து (Khalid Al Zarooni) பெறத் தயாராக இருந்தது. ஆனால், மொஹ்சின் நக்வி அதற்குக் கீழ்ப்படிய மறுத்து, தாமே கோப்பையை வழங்க வலியுறுத்தினார். இதன் காரணமாக, பரிசளிப்பு விழா ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமானது, இறுதியில் கோப்பை வழங்கப்படாமலேயே நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. தற்போது வரை கோப்பையை இந்திய அணி வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3. ஆர்சிபி முதல் முறை கோப்பை மற்றும் கூட்ட நெரிசல் சர்ச்சை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கோப்பையை முதன்முறையாக வென்றது. ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது. 18 ஆண்டுகளாக கோப்பைக்காகக் காத்திருந்த ஆர்சிபி அணிக்கு 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் கனவை நனவாக்கியது. இது விராட் கோலி போன்ற நீண்ட நாள் வீரர்களின் கனவை நனவாக்கிய ஒரு உணர்வுப்பூர்வமான வெற்றியாக அமைந்தது.
வெற்றிக்குப் பிறகு, பெங்களூருவில் உள்ள எம். சின்னசுவாமி ஸ்டேடியம் அருகே அணிக்கு பாராட்டு விழா மற்றும் கோப்பை காட்சிப்படுத்தும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் போதுதான் சோகம் நிகழ்ந்தது.
ஜூன் 4, 2025 அன்று நடந்த கொண்டாட்டத்தின் போது, ஆர்சிபி அணிக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும், வீரர்களைப் பார்க்கவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.
மைதானத்திற்கு வெளியே மற்றும் நுழைவாயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்பு வேலிகள் தள்ளப்பட்டு, நெரிசல் உருவானது.
இந்தத் துயர சம்பவத்தில் சிக்கி 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அனுமதிகள் பெறாமல் ஆர்சிபி நிர்வாகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததே நெரிசலுக்குக் காரணம் என்று கர்நாடக அரசு குற்றம் சாட்டியதுடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தப்பட்டது.
கர்நாடக மாநில அரசு உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் (இருபது லட்சம் ரூபாய்) நிதி உதவி அறிவித்தது.
4. 2024-25 ஐ-லீக் (I-League) சீசனில் இன்டர் காஷி (Inter Kashi) மற்றும் சர்ச்சில் பிரதர்ஸ் எஃப்சி (Churchill Brothers FC) இடையேயான கோப்பைக்கான போட்டி ஒரு பெரும் குழப்பம் மற்றும் சட்டப் போராட்டங்களால் நிறைந்த ஒரு "ரோலர்கோஸ்டர்" அனுபவமாக இருந்தது. இந்த விவகாரம் இந்திய கால்பந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2024-25 சீசன் இறுதிவரை நான்கு அணிகள் கோப்பை வெல்லும் வாய்ப்புடன் இருந்தன. இதில் சர்ச்சில் பிரதர்ஸ் மற்றும் இன்டர் காஷி அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னணியில் இருந்தன.
மார்ச் 30, 2025 அன்று இரு அணிகளும் மோதிய போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. சர்ச்சில் பிரதர்ஸ் அணி கடைசி நிமிடத்தில் அடித்த கோலால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இந்தக் கோல் சர்ச்சைக்குரியதாக இருந்தது (பந்தை கையால் தொட்டிருக்கலாம் என்ற சந்தேகம்).
சீசன் முடிவில், சர்ச்சில் பிரதர்ஸ் 40 புள்ளிகளுடனும், இன்டர் காஷி 39 புள்ளிகளுடனும் இருந்தன. இதனால், சர்ச்சில் பிரதர்ஸ் கோப்பையை வென்றதாகத் தோன்றியது.
போட்டியின் முடிவுகள் களத்தில் தீர்மானிக்கப்பட்டாலும், டைட்டில் வெற்றியாளர் யார் என்பதில் நீதிமன்ற வழக்குகள் தலையிட்டன:
தகுதியற்ற வீரர் விவகாரம்: இன்டர் காஷி அணி, சீசனின் ஆரம்பத்தில் ஒரு போட்டியில் தகுதியற்ற வீரரான ஸ்பானிஷ் ஸ்ட்ரைக்கர் மரியோ பார்கோவை (Mario Barco) களமிறக்கியதாக சர்ச்சை எழுந்தது.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (AIFF) மேல்முறையீட்டுக் குழு, இன்டர் காஷி தகுதியற்ற வீரரை பயன்படுத்தியதால், சம்பந்தப்பட்ட போட்டிகளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புள்ளிகள் கழிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், சர்ச்சில் பிரதர்ஸ் 2025 ஏப்ரல் 20 அன்று சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த முடிவை எதிர்த்து இன்டர் காஷி அணி சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்தது.
நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 2025 ஜூலை 18 அன்று CAS தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. AIFF-ன் முந்தைய முடிவை CAS ரத்து செய்தது. இன்டர் காஷி அணிக்கு எதிரான புள்ளிக்குறைப்பு முடிவை நீக்கியதுடன், புள்ளிகள் அட்டவணையை மீண்டும் சரிசெய்ய AIFF-க்கு உத்தரவிட்டது.
CAS தீர்ப்பின்படி, திருத்தப்பட்ட புள்ளிப்பட்டியலில் இன்டர் காஷி 42 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது, சர்ச்சில் பிரதர்ஸ் 40 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்தது.
இதன் விளைவாக, இன்டர்காஷி எஃப்சி 2024-25 ஐ-லீக் சாம்பியன்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது மற்றும் இந்தியன் சூப்பர் லீக்கிற்கு (ISL) பதவி உயர்வு பெற்றது.
5. இந்தியன் சூப்பர் லீக் ஒத்திவைப்பு
இந்தியன் சூப்பர் லீக் (ISL) 2025-26 சீசன் ஒத்திவைக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம், லீக்கை நடத்தும் அமைப்பான கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு லிமிடெட் (FSDL) மற்றும் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) இடையேயான ஒப்பந்தச் சிக்கல்கள் ஆகும்.
AIFF மற்றும் FSDL இடையே 2010 இல் கையெழுத்திடப்பட்ட 15 ஆண்டுகால மாஸ்டர் ரைட்ஸ் ஒப்பந்தம் (MRA), 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதியுடன் காலாவதியாகிறது.
புதிய ஒப்பந்தத்தை (MRA) புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல மாதங்களாக நடந்து வந்தபோதிலும், எந்த ஒரு சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. இதனால், டிசம்பர் மாதத்திற்குப் பிறகு லீக்கின் வணிக ரீதியான எதிர்காலம் குறித்த தெளிவின்மை நிலவியது.
ஒரு உறுதியான ஒப்பந்தம் இல்லாத நிலையில், 2025-26 சீசனை திறம்படத் திட்டமிடவோ அல்லது வணிகமயமாக்கவோ முடியாது என்று FSDL உணர்ந்தது. இதன் காரணமாக, ஜூலை 2025 இல், லீக் "தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக" FSDL அறிவித்தது.
AIFF-ன் வரைவு அரசியலமைப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை FSDL உடன் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட AIFF-க்கு சட்டரீதியான தடைகள் இருந்தன.
இந்த நிச்சயமற்ற நிலை கிளப்புகள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மத்தியில் பெரும் கவலையையும், நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியது. சில கிளப்புகள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாகக் கூட அறிவித்தன.
இருப்பினும், செப்டம்பர் 2025 இல் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, லீக் தொடங்குவதற்கு ஒரு வழியை வகுத்தது. அதன்படி, 2025-26 சீசன் அக்டோபர் கடைசி வாரத்தில் அல்லது டிசம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக சினிமா என்றால் ஹாலிவுட் சினிமா தான் என்ற பார்வை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.
- இந்தாண்டு அனிமேஷன் படங்கள் அதிக வசூலை வாரிக்குவித்து வருகின்றன.
2025 ஆம் ஆண்டு உலக சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆண்டாக அமைந்தது. உலக சினிமா என்றால் ஹாலிவுட் சினிமா தான் என்ற பார்வை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. சீனா, தென் கொரியாவை சேர்ந்த படங்களும் உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகின்றன.
லைவ் ஆக்சன் படங்களை விட சமகாலத்தில் அனிமேஷன் படங்கள் அதிக வசூலை வாரிக்குவித்து வருகின்றன. இந்தாண்டும் அதிக வசூலித்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை அனிமேஷன் திரைப்படம் தான் பிடித்துள்ளது.
அவ்வகையில் இந்தாண்டு உலக அளவில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் பட்டியலில் இந்த ரீவைண்டில் பார்ப்போம்.

1. Ne Zha 2
சீன அனிமேஷன் திரைப்படமான Ne Zha 2 திரைப்படம் உலக அளவில் ரூ.19,750 கோடி வசூலித்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹாலிவுட் படங்களே எப்போதும் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் நிலையில் அந்த இடத்தை Ne Zha 2 இந்தாண்டு தட்டி பறித்துள்ளது.

2. Lilo & Stitch
2002 ஆம் ஆண்டு வெளியான டிஸ்னியின் அனிமேஷனை திரைப்படமான Lilo & Stitch மாபெரும் வெற்றியை பெற்றது. அதனால் இப்படத்தை தற்கால தொழில் நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி லைவ் ஆக்சன் படமாக டிஸ்னி வெளியிட்டது. இப்படம் உலக அளவில் ரூ.9,350 கோடி வசூல் குவித்து இப்பட்டியலில் 2 ஆம் பிடித்துள்ளது.

3. A Minecraft Movie
உலக புகழ்பெற்ற Minecraft என்ற வீடியோ கேமை மையமாக கொண்டு A Minecraft Movie படம் உருவாக்கப்பட்டது. இப்படம் வீடியோ கேமிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உலக அளவில் ரூ.8,600 கோடி வசூலை ஈட்டி இப்பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்துள்ளது.

4. Jurassic World: Rebirth
வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகிக்கும் யுனிவர்சல் பிக்சர்ஸின் ' ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்' திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
டைனோசர் படங்களின் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தது. உலக அளவில் இப்படம் ரூ.7,800 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 4 ஆம் இடம் பிடித்துள்ளது.
5. How to Train Your Dragon
How to Train Your Dragon என்ற அனிமேஷன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் லைவ் ஆக்சன் திரைப்படம் இந்தாண்டு வெளியானது. அனிமேஷனை படத்தை போலவே இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. உலக அளவில் இப்படம் ரூ.5690 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ளது.

6. F1: The Movie
டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசஃப் கொசின்ஸ்கி அடுத்ததாக பிராட் பிட் நடிப்பில் F1 படத்தை இயக்கினார். இப்படம் இந்தாண்டு வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
காசுக்காக பல ரேஸ்களில் ஈடுப்பட்டு வரும் ப்ராட் பிட் தன் நண்பனின் டிம்ம் F1 ரேஸில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அங்கு ரேஸ் ஓட்ட வருகிறார். அங்கு ஏற்கனவே இளம் ரேஸரான ஜோஷ்வா இருக்கிறார். அவர்களுக்கு இடையே முரண் ஏற்படுகிறது. இதைத்தாண்டி எப்படி அவர்கள் ரேசில் வென்றார்கள் என்பதே படத்தின் கதையாகும்.
உலக அளவில் இப்படம் ரூ.5580 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.

7. Superman
ஹென்றி கேவில் நடித்த சூப்பர்மேன் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தாண்டு ரீபூட் செய்யப்பட்ட புதிய சூப்பர்மேன் படம் வெளியானது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. உலக அளவில் இப்படம் ரூ.5525 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 7 ஆம் இடம் பிடித்துள்ளது.

8. Mission: Impossible – The Final Reckoning
Mission: Impossible படங்களின் கடைசி பாகம் என்ற எதிர்பார்ப்போடு The Final Reckoning படம் வெளியானது. டாக் குரூஸ் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாட உலக அளவில் இப்படம் ரூ.5360 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 8 ஆம் இடம் பிடித்துள்ளது.

9. The Fantastic Four: First Steps
வழக்கமாக டிசி படங்களை விட மார்வெல் படங்கள் அதிக வசூலை ஈட்டும் நிலையில், இந்தாண்டு மாற்வல் படங்கள் வசூலில் சற்று சறுக்கியது. மார்வெல் தயாரிப்பில் வெளியான The Fantastic Four: First Steps படம் நல்ல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. உலக அளவில் இப்படம் ரூ.4650 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 9 ஆம் இடம் பிடித்துள்ளது.
10. Captain America: Brave New World
இப்பட்டியலில் கடைசி இடத்தை Captain America: Brave New World படம் பிடித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியான எதிர்பார்த்த வசூல் பெறவில்லை. உலக அளவில் இப்படம் ரூ.3725 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 10 ஆம் இடம் பிடித்துள்ளது.
- அரசியலில் நிரந்தர நண்பனும், எதிரியும் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு தாவும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
- சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகத்தில் நாஞ்சில் சம்பம் இணைந்து கொண்டார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டசபைக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. எப்போதும் போல் இல்லாமல் இத்தேர்தலுக்காக கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு முன்னதாகவே 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்', 'உள்ளம் தேடி- இல்லம் நாடி', 'தமிழக மக்கள் உரிமை மீட்பு', 'மக்கள் சந்திப்பு', என பல பெயர்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியலில் நிரந்தர நண்பனும், எதிரியும் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு தாவும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், இதுவரை தாய் கழகம் என்று சொல்லிக்கொண்டு மற்றக் கட்சிக்கு தாவிய முக்கிய அரசியல் தலைவர்கள் குறித்து பார்ப்போம்...
சி.டி.ஆர்.நிர்மல்குமார்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகிய சி.டி.ஆர்.நிர்மல்குமார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு சென்ற சி.டி.ஆர்.நிர்மல்குமார் அங்கு ஐ.டி.விங்க் நிர்வாகியாக பணியாற்றி வந்தார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். அவருக்கு இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
மைத்ரேயன்
பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர் மைத்ரேயன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிருப்தியில் இருந்து வந்த மைத்ரேயன் தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் இணைந்த உடனே அவருக்கு பதவியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மருது அழகுராஜ்
அ.தி.மு.க.வின் பிரசார பீரங்கிகளில் ஒருவராக பார்க்கப்பட்ட மருது அழகுராஜ், ஜெயலலிதா இருந்த போது நமது எம்.ஜி.ஆர், அதன்பிறகு நமது அம்மா கட்சி ஆகிய நாளிதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர். அதன்பின் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சென்றபோது அவருக்கு ஆதரவாக இருந்தவர் திடீரென தி.மு.க.வில் இணைந்தார்.

அன்வர் ராஜா
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. உடைந்து ஓ.பி.எஸ் அணி – இ.பி.எஸ் அணி என்று பிரிந்தபோது இ.பி.எஸ் அணியில் இருந்தவர் அன்வர் ராஜா. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் இணைந்த பின்னர் சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தலைமைக்கு எதிராக பேசி வந்தார். இதனால் 2021-ம் ஆண்டு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், தி.மு.க.வில் இணையப்போவதாக அப்போது செய்திகள் வந்தாலும், வேறு கட்சியில் சேராமல் அ.தி.மு.க. சார்பாகவே இருந்ததால் அவரை மீண்டும் 2023-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததால் அதிருப்தி அடைந்த அன்வர் ராஜா, "தமிழ்நாட்டில் காலூன்ற துடிப்பது பா.ஜ.க.வின் எண்ணமாக இருந்தாலும் அது ஒரு போதும் நடக்காது'' என்று கடுமையாக விமர்சித்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
மனோஜ் பாண்டியன்
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பி.ஹெச். மனோஜ் பாண்டியன். அ.தி.மு.க.வின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒருவரான மனோஜ் பாண்டியன் வழக்கறிஞரும் கூட. அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தபோது ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். தி.மு.க.வில் சேர்வதற்கு முன்னதாக தனது பதவியை அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
செங்கோட்டையன்
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் பணியாற்றி வந்தவர் செங்கோட்டையன். 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் அ.தி.மு.க.வில் பயணித்து ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து ஓரங்கப்பட்ட செங்கோட்டையன், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் செங்கோட்டையன், தி.மு.க.வில் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்த மறுநாளே தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். அவருக்கு த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து பலர் விலகுவார்கள் என செங்கோட்டையன் கூறியுள்ளார் என்பது குறிப்பிட்டதக்கது.

நாஞ்சில் சம்பத்
அரசியல் பிரசார பீரங்கியாக செயல்பட்டவர் நாஞ்சில் சம்பத். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.ம.மு.க.வில் இணைந்தாலும் தி.மு.க. ஆதரவாளராகவே மேடைகளில் பேசிவந்தார் நாஞ்சில் சம்பத். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகத்தில் நாஞ்சில் சம்பம் இணைந்து கொண்டார்.
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் தற்போது வரை தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, த.வெ.க., என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்த எண்ணிக்கையானது குறைவதும், உயர்வதும் பொறுத்து ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு மாறும் தலைவர்களின் எண்ணிக்கையும் கூடும். இதற்கு காலம் தான் பதில் சொல்லும்... பொறுத்திருந்து பார்ப்போம்...
- வரி என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான வருவாய் ஆதாரம்
- இந்தியாவில் நான்கு அடுக்குகளாக இருந்த வரிச்சுமை இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டது
இன்னும் சிலநாட்களில் நாம் புத்தாண்டை பூரிக்க இருக்கிறோம். அதாவது 2025 முடியப் போகிறது. ஒவ்வொரு வருடம் முடியும்போதும் அந்த வருடத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நினைவுக்கூறுவோம். அப்படிதான் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை, அதாவது நீங்கள் டிரெண்ட் செய்த முக்கிய நிகழ்வுகளை, தகவல்களை உங்களுக்கு நினைவுப்படுத்தி வருகிறோம்.
அந்த வரிசையில் இன்றைய தலைப்பு 'வரி'. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு என விஜயகாந்த் கூறியதுபோல வரி என்ற வார்த்தையே கேட்டாலே அனைவருக்கும் ரத்தம் கொதிக்கும் அளவிற்கு கோபம் வரலாம். அனைவரின் கோபமும் நியாமானதுதான். மக்களின் இந்த கோபத்திற்கு காரணம் என்ன?
வரி என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாகும். இந்த நிதியைக் கொண்டே அரசாங்கம் பொதுச் சேவைகளான சாலைகள் அமைத்தல், மருத்துவமனைகள், பள்ளிகள், பாதுகாப்பு மற்றும் பிற நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆனால் நம் நாட்டில் இருக்கும் சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகளின் நிலை என்ன? பாதுகாப்பு குறித்து பேசவேக்கூடாது. அந்த நிலைமை.

நாம் கடையில் பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்கி செல்லும்போது, அந்தப் பொருள் சரியில்லை என்றால் மறுநாள், ஏன் அந்த நாளே வந்து கடைக்காரரை உண்டில்லை என ஆக்கிவிடுவோம். அப்படி இருக்கையில் நமக்கான அடிப்படை தேவைகளுக்காக நாம் செலுத்தும் வரி பயனற்று போகும்போது யாருக்குதான் ஆத்திரம் வராது?. அதனால் உங்களின் கோபம் நியாயமானதுதான். இந்தக் கதையை தொடர்ந்தால் சென்றுக்கொண்டே இருக்கும். அதனால், அதைவிடுத்து இந்த கட்டுரைக்கான தலைப்புக்குள் வருவோம்.
இந்தாண்டு பேசப்பட்ட, கூகுளில் தேடப்பட்ட முக்கிய தலைப்புகளில் ஒன்று வரி. ஏன்? இந்திய அரசு வரியை குறைத்தது. அதாவது நான்கு அடுக்குகளாக இருந்த வரிச்சுமையை, இரண்டு அடுக்குகளாக குறைத்தனர். இந்த நடைமுறை கடந்த செப்டம்பர் முதல் அமலுக்கு வந்தது. இதனால் மக்கள் கொஞ்சம் செலவு குறையும் என மகிழ்ந்தனர். மற்றொன்று அமெரிக்க அரசின் வரிவிதிப்பு. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல, உள்நாட்டு வரியையே தாங்கமுடியாத நிலையில் இருக்கும் மக்களுக்கு, அமெரிக்கா மேலும் ஒரு குண்டை வீசியது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
அதாவது இந்தியப் பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா அரசு அதிகரித்தது. இந்தியப் பொருட்களின் மீது கூடுதல் 25% வரி விதித்து, மொத்த வரிகளை 50% ஆக உயர்த்தியது. கண்ணாடிய திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும் என்பதுபோல இதற்கு ரஷ்யாவை எல்லாம் காரணம் கூறியது அமெரிக்கா. இது போதாது என்று, நீங்கள் இன்னும் நிறைய வரிகளை பார்க்கப்போகிறீர்கள் என்றும் டிரம்ப் கூறுகிறார். மக்களின் அச்சத்திற்கு காரணம் அந்த வரியை ஈடுகட்ட நம்மீது தாக்கம் வெளிப்படுத்தப்படும் என்ற எண்ணம்தான்.
நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? என்ற திரைப்பட டயலாக்தான் மக்களின் நிலை. ஏனெனில் கொடுப்பவர்களும் அவர்கள்தான். அடிவாங்குபவர்களும் அவர்கள்தான்.
இப்படித்தான் டிரெண்டானது வரி.
- மணிப்பூரில் இன வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி ஆட்சி (President's Rule) அமல்படுத்தப்பட்டது.
மணிப்பூரில் இன வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி ஆட்சி (President's Rule) அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், மணிப்பூரில் வன்முறை உச்சத்தில் இருந்தபோது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படவில்லை. ஆனால், 2025 -ம் ஆண்டின் தொடக்கத்தில் மாநிலத்தில் ஏற்பட்ட ஆட்சியமைப்பு முடக்கம் (Constitutional Breakdown) காரணமாக ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மைதேயி (Meitei) மற்றும் குக்கி (Kuki) சமூகத்தினருக்கு இடையே இன வன்முறை தொடங்கியது. இது சுமார் 250க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்தது. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வுக்கு வழிவகுத்தது. 2023-ம் ஆண்டில் வன்முறை உச்சத்தில் இருந்தபோதும், அம்மாநில முதல்வர் ந. பிரேன் சிங் தலைமையிலான அரசு நீடித்தது.

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்
அப்போது, மத்திய அரசு, Article 356 (ஜனாதிபதி ஆட்சி) ஐப் பயன்படுத்தாமல், மத்திய படைகள் மற்றும் நிர்வாகத்தின் மூலம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முயன்றது. இதன் எதிரொலியால், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முதல்வர் ந. பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவ நெருக்கடி மற்றும் புதிய முதல்வரைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டிய 6 மாத காலக்கெடு காலாவதியானது.
இதன் விளைவாக, மாநில ஆளுநரின் பரிந்துரையின் பேரில், அரசியலமைப்பின் பிரிவு 356 இன் கீழ், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இது இன வன்முறையின் தொடர்ச்சியாக உருவான அரசியலமைப்பு இயந்திரத்தின் முடக்கம் (Failure of Constitutional Machinery) என்ற அடிப்படையில் நிகழ்ந்தது.
மணிப்பூரைப் பொறுத்தவரை, ஆளும் கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியாக இருந்ததால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்குப் பதிலாக, மத்திய அரசு படைகளை அனுப்பி, மாநில நிர்வாகத்துடன் இணைந்து நிலைமையைச் சமாளிக்க முதலில் முயற்சி செய்தது. சுருக்கமாக, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி, இன வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக அல்லாமல், முதல்வர் ராஜினாமா செய்தபின் புதிய அரசு அமையாததால் ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியை (2025) தீர்க்கும் கடைசி முயற்சியாகவே அமல்படுத்தப்பட்டது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
ஜனாதிபதி ஆட்சி என்றால் என்ன? (Article 356)
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 356 என்பது, ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் முடங்கிவிட்டது என்று குடியரசுத் தலைவர் கருதினால், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அதிகாரம் அளிக்கிறது.
உயிரிழப்புகளும் சேதங்களும்:
மணிப்பூர் வன்முறை மோதல்கள் 2023 மே 3 அன்று தொடங்கி, 2025 ஆம் ஆண்டிலும் ஆங்காங்கே தொடர்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிலவரப்படி, இந்த இன வன்முறையில் 258 பேர் உயிரிழந்துள்ளனர். (மார்ச் 2025 நிலவரப்படி 260 க்கும் அதிகமான உயிரிழப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.)

கலவரத்தின்போது
- இதில் மைதேயி மற்றும் குக்கி-ஜோ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் அடங்குவர்.
- 1,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 30 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
- 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
- 4,700 க்கும் மேற்பட்ட வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன.
- சுமார் 400 க்கும் மேற்பட்ட தேவாலயங்களும் (Churches), 130 க்கும் மேற்பட்ட கோயில்களும் (Temples) சேதப்படுத்தப்பட்டன.
- காவல் துறையின் ஆயுதக் கிடங்குகளில் இருந்து 5,600 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் வன்முறைக் குழுக்களால் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் 1,800 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வன்முறைக்குப் பிறகு இரண்டு சமூகத்தினரும் தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளுக்குத் தனித்தனியே சென்று குடியேறிவிட்டதால், இரு சமூகத்தினருக்கும் இடையே கிட்டத்தட்ட முழுமையான பிரிவு நிலை (Segregation) ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான வன்முறைகள் குறைந்தாலும், 2025 மார்ச் மாதத்திலும் சில இடங்களில் மோதல்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
- தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவுகளின்படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வென்றது.
- 27 ஆண்டுக்கு பிறகு தலைநகரில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது.
புதுடெல்லி:
அது ஒரு அரசியல் கட்சி அலுவலகம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் அனைவரும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
கட்சியின் தலைவரான சொக்கலிங்கம் அங்கிருந்த நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சண்முகம் என்ற தொண்டர், என்ன தலைவரே, அடுத்த ஆண்டும் நமது வெற்றிப் பயணம் தொடருமா என கேட்டார். அதற்கு தலைவர், நாம் செய்யற வேலைகளில் தான் வெற்றியின் சதவீதம் அதிகரிக்கும். எனவே தீவிரமாக வேலை செய்யணும் என்றார்.
என்ன செஞ்சு பலன் கிடைக்க மாட்டேங்குதே தலைவரே என சண்முகம் நொந்து கொண்டார்.
அப்படி சொல்லாதே, நமது செயல் திட்டங்களைப் பார்த்து மக்கள் நம்மை மதிச்சு வாக்களிக்கணும். அப்படி நாம் நடந்துக்கணும் என்ற சொக்கலிங்கம்,இப்படி செஞ்சதாலே தான் போன ஆண்டு டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என கூறினார்.
மேலும், 27 ஆண்டுக்கு பிறகு ஆட்சியைப் பிடிச்சுதுன்னா சும்மாவா என அசால்ட்டாக தெரிவித்தார்.
அப்படியா, எப்படின்னே அவங்களால முடிஞ்சது? அது பற்றி விவரமா சொல்லுங்கன்ண்ணே? என்றார் சண்முகம்.
இதையடுத்து, சொக்கலிங்கம் கூறியதன் விவரம் வருமாறு:
டெல்லி சட்டசபையின் 70 தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
அதன் முடிவுகளின்படி, பா.ஜ.க. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றது.

தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவுகளின்படி பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
2015-ல் நடந்த சட்டசபை தேர்தலில் 3 இடங்களையும், 2020-ல் நடந்த சட்டசபை தேர்தலில் 8 இடங்களையும் பெற்ற பா.ஜ.க. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் 27 ஆண்டுக்குப் பிறகு பா.ஜ.க. டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், கடந்த செப்டம்பரில் நடந்த துணை ஜனாதிபதி தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது என நினைவு கூர்ந்தார்.
ஓகேண்ணே, சொல்லிட்டீங்கள, இனிமே பாருங்க எப்படி தீயா வேலை செஞ்சு நமது கட்சியை ஆட்சிக்கு வரவைக்கறோம்னு பாருங்க என்று சொன்னபடியே கட்சி அலுவலகத்தை விட்டுக் கிளம்பினார் சண்முகம்.
- 27 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா அணி முதல்முறையாக ஐசிசி கோப்பையை கைப்பற்றி உள்ளது.
- இந்தியா முதல் முறையாக மகளிர் ஒருநாள் உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
2025-ம் ஆண்டில் கிரிக்கெட் தொடரில் நடந்த வரலாற்று வெற்றிகள் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம். அதன்படி இந்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய்) ஆகிய நாடுகளில் நடைபெற்றது.

இத்தொடரில், இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா தனது மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றதன் மூலம் அதிக முறை இப்பட்டத்தை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றது. இது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வென்ற ஒரு முக்கிய ஐசிசி கோப்பையாகும்.
ஐபிஎல் 2025 தொடரின் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் ஐபிஎல் கோப்பையை 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா அணி முதல்முறையாக ஐசிசி கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன் கடைசியாக 1998-ம் ஆண்டில் ஐசிசி நாக்-அவுட் டிராபியை தென் ஆப்பிரிக்கா வென்றிருந்தது.
மகளிர் உலகக் கோப்பை செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

இதில் இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா, உலகக் கோப்பைப் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் ஆண் அல்லது பெண் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.

தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று தென் ஆப்பிரிக்கா வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.
ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

இதன் மூலம் ஆசிய கோப்பையை வென்று தனது அதிக வெற்றிகள் சாதனையை (மொத்தம் 9 முறை) தொடர்ந்தது.
பார்டர் -கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் (2024-2025) நடைபெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு (2014-15க்குப் பின்) இந்தத் தொடரை வென்று, கோப்பையை மீட்டெடுத்தது. இந்தியா தொடர்ச்சியாக இரு முறை (2018-19, 2020-21) ஆஸ்திரேலியாவில் வென்றிருந்த நிலையில், இது ஆஸ்திரேலியாவின் வரலாற்று சாதனையாக பார்க்கப்பட்டது.
- இந்தாண்டு இதுவரை எந்த படமும் ரூ.1000 கோடி வசூலை அடையவில்லை
- சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பல படங்கள் மிகப்பெரிய வசூலை ஈட்டியது.
ஒருகாலகட்டத்தில் பாலிவுட் படங்கள் மட்டுமே பெரும் வசூல் குவித்து வந்த நிலையில், அதற்கு போட்டியாக டோலிவுட், கோலிவுட் படங்களும் வசூலை வாரிக்குவித்தன. இந்த வசூல் போட்டியில் தற்போது சாண்டல்வுட், மோலிவுட் படங்களும் வரிசை கட்டி வரத்தொடங்கியுள்ளன.
பாகுபலி படத்திற்கு பின்பு உருவான பான் இந்தியா படம் என்ற கான்செப்டில் பல தென்னிந்திய படங்கள் வசூலை வாரிக்குவித்தன. பாகுபலி 2, கே.ஜி.எப். 2, RRR , புஷ்பா 2 படங்கள் ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன.

கே.ஜி.எப். 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து கன்னட சினிமாவில் உருவானா காந்தாரா 1 மற்றும் 2 ஆம் பாகங்கள் வசூலை வாரிக்குவித்து கன்னட சினிமாவிற்கு புத்துயிர் ஊட்டின. அதே போல், எம்புரான், லோகா சாப்டர் 1 படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலை குவித்து மலையான சினிமாவும் கோடிகளில் வசூலை குவிக்கும் என்பதை காட்டியது.
இந்தாண்டு இதுவரை எந்த படமும் ரூ.1000 கோடி வசூலை எட்டவில்லை என்றாலும் சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பல படங்கள் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. குறிப்பாக தென்னிந்திய படங்கள் இந்தாண்டு அதிக வசூலை ஈட்டின.
அவ்வகையில் இந்தாண்டு இந்திய அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள் குறித்த பட்டியலை பார்ப்போம்.

1. காந்தாரா சாப்டர் 1
காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் காந்தி ஜெயந்தியை தினத்தன்று வெளியாகியது. 2022 ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் முன்கதையாக 4 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இந்த படம் அமைந்தது. இப்படம் உலகளவில் ரூ. 852 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்தது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

2. சாவா
இயக்குநர் லக்ஷ்மண் உதேக்கர் இயக்கிய 'சாவா' திரைப்படம் பாலிவுட்டில் வசூல் சாதனை படைத்தது. மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவானது.
சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷலும் சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருந்தனர்.
இப்படம் உலக அளவில் சுமார் ரூ.800 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 800 கோடிவசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

3. சையாரா
அஹான் பாண்டே மற்றும் அனீத் பத்தா நடிப்பில் உருவான காதல் படம் சயாரா. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி ரூ. 500 கோடி வசூலை கடந்தது. வெறும் 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.550 கோடிக்கும் மேல் வசூலித்து அனைவரையும் வாய்பிளக்க வைத்தது. அறிமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான ஒரு படம் இவ்வளவு வசூலை குவிப்பது இதுவே முதல்முறையாகும்.

4. கூலி
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற சாதனையை கூலி படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது. மொத்தத்தில் இப்படம் உலக அளவில் 518 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.500 கோடி வசூலை மட்டுமே குவித்து ஏமாற்றம் தந்தது.

5. வார் 2
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான வார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்தது மற்றும் கியாரா அத்வானியின் பிகினி காட்சிகள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை.
சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் அதன் பட்ஜெட்டான ரூ.400 கோடி அளவிற்கு தான் வசூல் செய்தது.
6. மகாவதார் நரசிம்மா
அஷ்வின் குமார் இயக்கத்தில் அனிமேஷன் திரைப்படமாக வெளியான மகாவதார் நரசிம்மா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.
வெறும் ரூ.15 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அதிக வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது.

7. லோகா சாப்டர் 1
நஸ்லேன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான லோகா சாப்டர் 1 மலையாள சினிமாவில் வசூல் சாதனை படைத்தது.
வெறும் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரூ.300 கோடி வசூலை கடந்து இப்படம் சாதித்தது. இதன்மூலம் கதாநாயகி முதன்மை கதாபாத்திரமாக நடித்த படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற பெருமையை இப்படம் படைத்தது.
உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இப்படம், மலையாளத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை கடந்தது குறிப்பிடத்தக்கது.
8. they call him OG
சுஜித் இயக்கத்தில் they call him OG என்ற திரைப்படத்தில் பவன் கல்யாண் நடித்தார். இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.
பவன் கல்யாணின் சினிமா வாழ்க்கையில் அதிக பொருட்செலவில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சுமார் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கிட்டத்தட்ட ரூ.300 கோடி வரை வசூல் செய்தது.

9. எம்புரான்
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தாண்டு வெளியானது.
முதல் படத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்தது. சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. மோகன்லால் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் குவித்த படமாக இப்படம் அமைந்தது.

10. சித்தாரே ஜமீன் பர்
2022 இல் வெளியான லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பின்பு நடிப்பில் இருந்து விலகி இருந்த அமீர் கான் 2025 இல் சித்தாரே ஜமீன் பர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்க, அமீர் கான் தயாரித்திருந்தார். இப்படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார்.
இந்தாண்டில் மிக சிறந்த படங்களில் ஒன்று என்று அனைவராலும் பாராட்டப்பட்ட இப்படம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. சுமார் ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரும் வெற்றியை பெற்றது.
- நற்கருணை என்பது பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு பரிசு அல்ல, ஆனால் பலவீனமானவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்து என்று கூறுவார்.
- அறிமுகமில்லாத பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கருத்துக்களைக் கொண்டு வருபவர்கள் உட்பட மற்றவர்கள் மீது நமது நம்பிக்கையைப் புதுப்பிக்க விரும்புகிறேன்.
வாடிகனின் கத்தோலிக்க திருசபையின் தலைவராக கடந்த 2012 முதல் செய்யப்பட்டு வந்தவர் போப் பிரான்சிஸ். நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் இந்த ஆண்டு ஏப்ரல் 21 காலை காலமானார்.
அவரது விருப்பப்படி அவரின் உடல் வாடிகனுக்கு வெளியே அவருக்கு பிடித்தமான புனித மேரி மேஜர் பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்துகொண்டனர்.
சேரிகளின் போப் என்று அன்போடு அழைக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உடைய மறைவு உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

யார் இந்த போப் பிரான்சிஸ்?
அர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் உடைய இயற்பெயர் ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ. புவெனஸ் ஐரிஸ் நகரில் இத்தாலியைச் சேர்ந்த கணக்காளரான மரியோ ஜோஸ் பெர்கோக்லியோ மற்றும் இத்தாலிய குடியேறிகளின் மகள் ரெஜினா மரியா சிவோரி ஆகியோருக்கு ஐந்து குழந்தைகளில் மூத்தவராகப் ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ பிறந்தார்.
அரசுப் பள்ளியில் படிப்பை முடித்து, புவெனஸ் ஐரிஸ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற இவர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இயேசு சபையில் 1958இல் துறவு நிலை ஏற்றார். 1998 இல், புவெனஸ் ஐரிஸ் பேராயராகப் பொறுப்பேற்றார். 2001 இல் கார்டினலாக உயர்த்தப்பட்டார்.
2013, மார்ச் 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கத்துக்கு மாறாக அப்போதைய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பதிவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் பரபரப்பான சூழலில் திருத்தந்தை ஆன ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ, போப் பிரான்சிஸ் ஆக தன்னை அடையாளப்படுத்தினார்

சேரிகளின் போப்
ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புக்காக பிரான்சிஸ் "சேரிகளின் போப்" என்ற புனைபெயரைப் பெற்றார்.
அர்ஜென்டினாவில் பேராயராக இருந்தபோதும், வாடிகனில் போப் ஆகவும் தனது ஊழியம் முழுவதும், அவர் தொடர்ந்து வறிய சமூகத்தினரிடையே கருணை செலுத்தினார். சமூக நீதிக்காகவும், புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக திருச்சபை இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

சீர்திருத்தவாதி
பழமைவாதத்தின் பேரில் புலம்பெயர்ந்தோர், LGBTQ கத்தோலிக்கர்கள் மற்றும் திருச்சபையால் பெரும்பாலும் விலக்கப்பட்ட மக்களையும் ஏற்று போப் பிரான்சிஸ் கத்தோலிக்க பொது மனப்பான்மையில் சீர்திருத்தங்களைச் செய்தார்.
வாடிகன் நிதி மற்றும் கட்டமைப்புகளில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினார். முதலாளித்துவ அமைப்புகளை சவால் செய்தல், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையை ஆதரித்தல் மற்றும் விவாகரத்து மற்றும் ஒர் பாலின உறவு போன்ற பிரச்சினைகளில் அவர்களுக்கு சமூகத்திலும் மதத்திலும் கோட்பாட்டு ரீதியாக இருந்த புறக்கணிப்பை எதிர்த்தல் ஆகியவை பழமைவாதத்தை எதிர்த்து போப் பிரான்சிஸ் செய்த முக்கிய பணிகளாகும். மத அடிப்படைவாதத்தை பிளேக் நோய் என்று போப் பிரான்சிஸ் கூறினார்.

குரலற்றவர்களுக்கான குரலாகவும், சீர்திருத்தவாதியாகவும், திருச்சபையின் பணியின் மையத்தில் ஏழைகளுக்கான நற்பணியை தொடர்ந்து முன்னிறுத்திய மேய்ப்பராகவும் போப் பிரான்சிஸ் உடைய என்றும் மரபு நிலைத்திருக்கும்.
ஏழைகளை விலக்கி வைக்கும் உலக பொருளாதார அமைப்பைக் கண்டிக்கும் பிரான்சிஸ், "நற்கருணை என்பது பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு பரிசு அல்ல, ஆனால் பலவீனமானவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்து" என்று கூறுவார்.
இறுதி செய்தி
மறைவுக்கு முன் போப் பிரான்சிஸ் உலகத்திற்க்கு வழங்கிய தனது கடைசி ஈஸ்டர் செய்தியில்,
"எவ்வளவு பெரிய மரண தாகம், கொலைக்கான தாகம், நம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பல மோதல்களில் நாம் ஒவ்வொரு நாளும் காண்கிறோம்! பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது, குடும்பங்களுக்குள்ளும் கூட, எவ்வளவு வன்முறையை நாம் காண்கிறோம்! பாதிக்கப்படக்கூடியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது சில நேரங்களில் எவ்வளவு அவமதிப்பு இழைக்கப்படுகிறது!.
இந்த நாளில், நாம் அனைவரும் புதிதாக நம்பிக்கை வைத்து, நம்மை விட வித்தியாசமானவர்கள், அல்லது தொலைதூர நாடுகளிலிருந்து வந்து, அறிமுகமில்லாத பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கருத்துக்களைக் கொண்டு வருபவர்கள் உட்பட மற்றவர்கள் மீது நமது நம்பிக்கையைப் புதுப்பிக்க விரும்புகிறேன்! ஏனென்றால் நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்" என்று தெரிவித்திருந்தார்.

புதிய போப்:
போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு புதிய போப்-ஐ தேர்வு செய்வதற்கு வாடிகனில் உலகெங்கிலும் உள்ள 250 கார்டினல்கள் கூடினர். அதில் வாக்களிக்க தகுதியான 80 வயதிற்குட்பட்ட 133 கார்டினல்கள் வெளியுலக தொடர்புகளை துண்டித்துக்கொண்டு தேவாலயத்தில் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
முதல் வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.

இது புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டதை குறிக்கிறது. புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் ஆவார். மே 8 அன்று போப் ஆக பதவியேற்றிக்கொண்ட இவர் தனக்கு போப் லியோ XIV என்று பெயர் சூட்டிக் கொண்டார்.






