என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    2025 REWIND: ஜிஎஸ்டி 2.O..! அமலுக்கு வந்த இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தம்
    X

    2025 REWIND: ஜிஎஸ்டி 2.O..! அமலுக்கு வந்த இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தம்

    • 5%, 12%, 18% மற்றும் 28% என 4 வகையான வரி அடுக்குகளை ஜிஎஸ்டி கொண்டிருந்தது.
    • 8 ஆண்டுகளாக இவ்வரி மாற்றமின்றி வசூலுக்கப்பட்டு வந்தது.

    நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மாநில அரசும், மத்திய அரசும் தனித்தனியாக வரி வசூலிப்பதை தவிர்க்கும் வகையில், அன்றாட பயன்பாட்டுப் பொருட்களுக்கு 5%, பொது பயன்பாட்டுப் பொருட்களுக்கு 12 %, அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 18% வரி மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு 28% வரி என விகிதங்கள் வகுக்கப்பட்டன.

    ஜி.எஸ்.டி. வரி முறை அமலுக்கு வந்த பிறகு பல்வேறு பொருட்களும் இந்த வரி விதிப்புக்குள் கொண்டு வரப்பட்டது.

    இதில் சில பொருட்களுக்கு அதிகபட்ச வரி விகிதம் இருந்தது. இதனால் அதை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வந்தன.

    அதையடுத்து அவ்வப்போது வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனாலும்கூட இன்னும் சில பொருட்களுக்கான வரி அதிகமாக இருப்பதாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

    மேலும் குறு, சிறு தொழில்களும் இந்த வரிமுறைக்கு கொண்டு வரப்பட்டன. குறைந்த முதலீட்டில் தொழில் செய்யும் நபர்களும் ஜி.எஸ்.டி.-க்குள் கொண்டு வரப்பட்டதால் அவர்கள் பல்வேறு கஷ்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது.

    குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும், ஒவ்வொரு கொள்முதல் மற்றும் விற்பனையை பதிவு செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி.யில் பதிவான நிறுவனங்களிடம் மட்டும் தான் கொள்முதல் செய்ய வேண்டும்.

    அவை ஒவ்வொன்றையும் ஜி.எஸ்.டி. பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால் சிறு தொழில் செய்பவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகினர்.

    5%, 12%, 18% மற்றும் 28% என 4 வகையான வரி அடுக்குகளை கொண்டிருந்த ஜிஎஸ்டி. வரி 8 ஆண்டுகளாக மாற்றமின்றி வசூலுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைத்து அறிவிக்கப்பட்டது.

    அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி, 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வரி முறை அமலுக்கு வந்தது. மேலும், சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் விலை குறையும் பொருட்கள்:

    உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12% ஆக இருந்த வரி பூஜ்யமாக குறைகிறது. பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டதால் விலை குறைகிறது.

    மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதும் நீக்கப்பட்டதால் விலை குறைந்தது.

    தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டதால் பிரீமியம் தொகை குறைந்தது.

    வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்படுள்ளதால் விலை குறைந்தது.

    ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை மற்றும் பல் ஃப்ளாஸ் போன்ற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.

    குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.

    வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.

    இதேபோல் நொறுக்குதீனிகளுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.

    தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.

    ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் உள்ளிட்டவற்றிற்கு வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.

    மருத்துவத்துறையில், தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.

    Next Story
    ×