என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND:வாயைப் பிளக்க வைக்கும் உலகின் உயரமான ரெயில்வே பாலம்-ஈபிள் டவரை விட பெரியது
- செனாப் ரெயில்வே பாலம் காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.
- சுமார் 15 ஆண்டாகக் கட்டப்பட்ட இந்தப் பாலம் பிரான்சின் ஈபிள் கோபுரத்தைவிட உயரமானது.
ஸ்ரீநகர்:
வரவிருக்கும் அரையாண்டு தேர்வுக்காக லைப்ரரிக்கு சென்று குறிப்புகள் எடுத்து படித்துக் கொண்டிருந்தான் சுந்தர். அப்போது அங்கு வந்த சுமதி டீச்சரைப் பார்த்தான். உடனே, டீச்சர் எப்படி இருக்கீங்க? என்றான் சுந்தர்.
நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படிடா இருக்கே? எங்கே இந்தப் பக்கம்? என பதில் கூறினார் சுமதி டீச்சர்.
நான் இங்க அடிக்கடி வருவேன் டீச்சர். பேப்பர் மட்டுமின்றி பல புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். பொது அறிவையும் தெரிஞ்சு வச்சுக்கலாம்னு வந்தேன் என்றான்.
அப்படியா? அப்ப உன்னோட பொது அறிவை சோதிச்சுர வேண்டியதுதான் என்ற டீச்சர், உலகிலேயே உயரமான
ரெயில்வே பாலம் எங்க இருக்கு சொல்லு பார்ப்போம்? என கேட்டார். பதில் தெரியாமல் சுந்தர் முழித்தான்.
இதைக் கண்ட டீச்சர், தெரியலைன்னா பரவாயில்லை. நான் சொல்றேன் கேட்டுத் தெரிஞ்சுக்கோ. உலகிலேயே உயரமான ரெயில்வே பாலம் இந்தியாவில் தான் இருக்கு தெரியுமா? என புதிர் போட்டார்.
என்ன நம்ம இந்தியாவிலா? எங்க டீச்சர் இருக்கு, அதைப் பத்தி சொல்லுங்களேன் என ஆவலோடு கேட்டான்.
சுமதி டீச்சர் சொன்ன விஷயங்களின் சுருக்கம் இதுதான்:
ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது ரெயில்வே பாலம். இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 6-ம் தேதி திறந்து வைத்தார். அதன்பின், பிரதமர் மோடி அந்தப் பாலத்தின் மீது தேசியக் கொடியைப் பிடித்தபடி நடந்து சென்றார்.
இது உலகின் மிக உயரமான ரெயில்வே இரும்பு வளைவு பாலம் என்ற சிறப்பைப் பெற்றது.
இது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் பாதை திட்டத்தின் முக்கியப் பகுதியாகும்..
இதன்மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படுகிறது.
சுமார் 15 ஆண்டாகக் கட்டப்பட்ட இந்தப் பாலம் பிரான்சின் ஈபிள் கோபுரத்தைவிட உயரமானது.
நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டது என கூறி முடித்தார் சுமதி டீச்சர்.
டீச்சர் சொன்னதைக் கேட்ட சுந்தர், ரொம்ப சந்தோஷம் டீச்சர். இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே. இந்த விஷயத்தை, நமது இந்தியாவின் பெருமையை என் பிரெண்ட்ஸ் கிட்டயும் கண்டிப்பா சொல்லப்போறேன் என்றபடி. அங்கிருந்து வீடு நோக்கி புறப்பட்டான் சுந்தர்.






