என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: கனடாவில் அஸ்தமித்த 'ட்ரூடோ' சகாப்தம்.. ஆட்சி மாற்றமும் 'கார்னி' நிகழ்த்திய காட்சி மாற்றமும்!
- கனடாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது 25% வரிகளை விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்திய நேரம் அது.
- இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்குத் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ கடந்த ஆண்டு பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2013 முதல் லிபரல் கட்சியின் தலைவராகவும் 2015 முதல் கனடாவின் 23வது பிரதமராகவும் இருந்த ட்ரூடோவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
உணவுப் பொருட்களின் விலையேற்றம், வீட்டுவசதி நெருக்கடி உள்ளிட்ட காரணிகளும் ட்ரூடோவின் செல்வாக்கு சரிய வழிவகுத்தது.
எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விட லிபரல் கட்சி வெகு பின்தங்கியிருப்பதை கருத்துக்கணிப்புகள் காட்டின.
அடுத்த தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் ட்ரூடோவால் பாதிக்கப்படுவதாக லிபரல் கட்சி எம்பிக்கள் கருதினர். இதனால் பலர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்தினர்.

மேலும் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைக்கப் போகிறேன் என அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து கனடாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது 25% வரிகளை விதிப்பதாக அச்சுறுத்திய நேரம் அது.
டிரம்ப் அச்சறுத்தலுக்கு ட்ரூடோ போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கனடா துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிரீலேண்ட் திடீரெனப் பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கு சில வாரங்களுக்கு பின் நாலாபுறமும் அழுத்தம் காரணமாக ஜனவரி 7 ட்ரூடோ தனது கட்சித் தலைவர் பதவியையும் அதன்மூலம் பிரதமர் பதவியையும் விட்டு விலகுவதாக அறிவித்தார்.

மார்க் கார்னி வருகை
இதைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வான மார்க் கார்னி கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க் கார்னி 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராகவும். 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் பணியாற்றியவர். எனவே டிரம்ப்பின் வர்த்தக போரை சமாளிக்க அவரால் முடியும் என லிபரல் எம்.பிக்கள் நம்பினர்.
அதன்படி ஏகோபித்த ஆதரவுடன் கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி மார்ச் 14 அன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற சில நாட்களிலேயே கார்னி தேர்தலை அறிவித்தார்.
அதன்படி ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி, பியரே பொய்லிவ்ரே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்து நான்காவது முறையாக வெற்றி பெற்றது.

மே மாதம் மார்க் கார்னி தனது புதிய அமைச்சரவையுடன் பதவியேற்றார். அதுமுதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய மிரட்டல்களுக்கு வரிவிதிப்புகளுக்கும் தீர்க்காமான பதிலடியை கார்னி கொடுத்து வருகிறார்.
மேலும் ட்ருடோ ஆட்சியில் நெருக்கடியை சந்தித்த வீட்டு வசதியை மேம்படுத்த புதிய கட்டுமானங்களுக்கு தடையாக இருந்த சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் பிற விதிமுறைகளை எளிதாக்கும் 'பில் சி-5' போன்ற சட்டங்களை மார்க் கார்னி இயற்றினார்.
இந்தியாவுடனான உறவில் மாற்றம்:
முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டிருந்தார்.
பஞ்சாபை தனி நாடாக பிரிக்கப் கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்குத் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ கடந்த ஆண்டு பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அதல பாதாளத்திற்குக் கொண்டு சென்றது.

ட்ரூடோவின் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்தது. தொடர்ந்து மோதல் முற்றவே, இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்பபெற்றன. இந்த விவகாரம் அங்கு அதிகம் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், அரசியல் ஆதாயத்திற்காக ட்ரூடோ காலிஸ்தான் ஆதரவாளர்களை திருப்திபடுத்துவதாக இந்தியா குற்றம் சாட்டியது.
இந்தத் தொடர் சர்ச்சைகள் ட்ரூடோவின் அரசியல் சரிவுக்கு மேலும் ஒரு காரணமாக அமைந்தது. இதன்பின் பிரதமரான மார்க் கார்னி, தேர்தல் பிரசாரத்தின்போதே இந்தியா உடனான உறவுகள் மீட்டெடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
மேலும் தேர்தலில் வென்று பிரதமர் ஆன பின் அவரது புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 எம்.பிக்கள் இடம்பெற்றனர்.
ட்ரூடோ தனிப்பட்ட வாழ்க்கை:
டிசம்பர் 25, 1971 பிறந்தவர் ட்ரூடோ. இவரது தந்தை பியர் ட்ரூடோவும் கனடாவின் பிரதமராக இருந்தவர். ஜஸ்டின் ட்ரூடோ 2008-ல் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013-ல் லிபரல் கட்சியின் தலைவரானார்.
அமெரிக்க அதிபர் நிக்சன், ட்ரூடோ பிறந்து சில மாதங்களிலேயே கனடாவின் எதிர்காலப் பிரதமராவார் என்று என்று கணித்ததாகக் கூறப்படுகிறது.

2005 இல் சோபி கிரேகோர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ட்ரூடோ. இந்த தம்பதிக்கு 3 [பிள்ளைகள் உள்ளனர். 2023 இல் சோபியை ட்ரூடோ பிரிந்தார்.
இதன் பின் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ட்ரூடோ, ஆண்டின் பிற்பகுதியில் தற்போது பிரபல அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி உடன் டேட்டிங் செய்து வருகிறார். பொது இடங்களில் அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.







