என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: மகா கும்பமேளா முதல் கரூர் வரை..! இந்தியாவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவங்கள்
2025-ம் ஆண்டு தொடங்கியது முதல் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இதனால், உயிர் சேதங்களும் அதிகளவில் ஏற்பட்டன. இந்தியாவில் நடந்த இந்த துயரச் சம்பவங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்..
திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனம்:

ஆந்திரப் பிரதேசம் திருமலையில் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி அன்று வைகுண்ட துவார தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் வாங்குவதற்காக பக்தர்கள் முண்டியடித்தபோது பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
மகா கும்பமேளா:
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த ஜனவரி 29ம் தேதி, அதாவது மௌனி அமாவாசையன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காகக் கூடியிருந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கினர்.

இந்த விபத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
டெல்லி ரெயில் நிலையம்:

பிப்ரவரி மாதம் 15ம் தேதி அன்று, டெல்லி ரெயில் நிலையத்தில் மகா கும்பமேளாவிற்குச் செல்ல ரெயில் ஏறுவதற்காகக் காத்திருந்த பயணிகள் இடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீலைராய் தேவி கோயில் திருவிழா:

கோவாவில் உள்ள ஷிர்காவ் கிராமத்தில் கடந்த மே 3ம் தேதி அன்று நடந்த வருடாந்திர விழாவின்போது அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு ஐபிஎல் வெற்றி கொண்டாட்டம்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த ஜூன் 4ம் தேதி அன்று நடந்த ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது மைதானத்தின் நுழைவாயிலில் ஏற்பட்ட நெரிசலால் இந்த துயரச் சம்பவம் நடந்தது.
கரூர் த.வெ.க. பரப்புரைக் கூட்டம்:
தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் இந்த விபத்து ஏற்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஆந்திரா வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் ஏகாதசி விழா:
கடந்த நவம்பர் 1ம் தேதி அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் ஏகாதசி விழாவின்போது ஏற்பட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்தனர்.







