என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    • மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.
    • அடுத்த மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும்.

    வாடா ரமேஷ் எப்படிடா இருக்கே?

    நான் நல்லா இருக்கேன் சுரேஷ். நீ எப்படி இருக்கே?

    நான் இந்த வாரம் வெளிநாட்டுக்கு போகப் போறேண்டா. நீ எங்கேயும் போகலையாடா ரமேஷ்.

    இல்லைடா சுரேஷ். நான் இந்தியாவை விட்டு தாண்டலைடா.

    ஆமா, நீ தான் ஒரு செய்தி சேனல் ஆச்சே. எங்க இந்த ஆண்டு நடந்த முக்கியான செய்திகளை சுருக்கமா சொல்லு கேட்போம்.

    எனக்கு தெரிந்ததைச் சொல்றேன். கேட்டுக்கோ.

    முதல்ல ஜனவரியில் நடந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி பத்தி சொல்றேன்.

    மகா கும்பமேளா 144 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

    யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட விழாதான் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா.


    கும்பமேளாவில் சில வகைகள் உள்ளன. ஆர்த் கும்பமேளா 6 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். பூர்ண கும்பமேளா 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். மகா கும்பமேளா ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். இது 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவதுதான் மகா கும்பமேளா.

    உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி மாதம் 13-ம் தேதி தொடங்கியது.

    45 நாட்கள் கோலாகலமாக நடந்த மகா கும்பமேளா பிர்ப்ரவரி 26-ம் தேதியுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

    உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

    பிரயாக்ராஜ் மாவட்டம் சார்பில் ரூ.2,100 கோடியும், உத்தர பிரதேச மாநில அரசு ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்து பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஜனவரி 29-ம் தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.

    கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடியைத் தாண்டியது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.


    கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அப்போதைய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.

    இனி அடுத்த மகா கும்பமேளா 2169-ம் ஆண்டுதான் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது என கூறினான் சுரேஷ்.

    பரவால்லடா, இவ்வளவு தகவல் சொல்லுவேன்னு நான் நினைக்கலடா. உண்மையிலேயே நீ ஒரு மினி செய்தி சேனல் தாண்டா.

    என் மூஞ்சிக்கு நேரா என்னைப் புகழாதடா, எனக்கு பிடிக்காது ஓகேவா என பேச்சை நிறைவு செய்தான்.

    • ஒரு ஆண்டில் அதிக கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்ற ஆண்டாக 2025-ம் ஆண்டு பார்க்கப்படுகிறது.
    • 2022-ல் 9 வீரர்களும், 2023-ல் 18 வீரர்களும் ஓய்வு பெற்றுள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் 2025-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஒட்டு மொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற வீரர்கள் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    அதன்படி ஒரு ஆண்டில் அதிக கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்ற ஆண்டாக 2025-ம் ஆண்டு பார்க்கப்படுகிறது. 2015-ல் 11 வீரர்களும், 2021-ல் சுமார் 10-15 வீரர்களும் 2022-ல் 9 வீரர்களும், 2023 இல் 18 வீரர்களும் ஓய்வு பெற்றுள்ளனர்.

    2024 ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து குறைந்தபட்சம் ஒரு வடிவத்தில் (டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20) ஓய்வு பெற்ற வீரர்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளது. இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையாக இருந்த நிலையில் 2025-ல் 28 வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.

    2025 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களின் நாடு மற்றும் ஓய்வு பெற்ற வடிவங்கள் மற்றும் அவர்கள் விளையாடிய போட்டிகள் உட்பட தகவல்கள்.

    ரிஷி தவான் (இந்தியா) - வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஓய்வு (ஓடிஐ & டி20ஐ) - ஜனவரி.


    டெஸ்ட்: விளையாடியதில்லை.

    ஒருநாள்: 3 போட்டிகள், 1 ரன், சராசரி 1.00, 4 விக்கெட்டுகள், சராசரி 41.25

    டி20: 1 போட்டி, 1 ரன், சராசரி 1.00, 1 விக்கெட், சராசரி 14.00

    மார்ட்டின் குப்டில் (நியூசிலாந்து) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜனவரி 8.


    டெஸ்ட்: 47 போட்டிகள், 2,586 ரன்கள், சராசரி 29.00

    ஒருநாள்: 198 போட்டிகள், 7,346 ரன்கள், சராசரி 42.00

    டி20: 122 போட்டிகள், 3,531 ரன்கள், சராசரி 31.00

    வருண் ஆரோன் (இந்தியா) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜனவரி 10.


    டெஸ்ட்: 9 போட்டிகள், 18 விக்கெட்டுகள், சராசரி 52.61

    ஒருநாள்: 9 போட்டிகள், 11 விக்கெட்டுகள், சராசரி 38.09

    டி20: விளையாடியதில்லை.

    தமீம் இக்பால் (வங்கதேசம்) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு- ஜனவரி 10.


    டெஸ்ட்: 70 போட்டிகள், 5,134 ரன்கள், சராசரி 39.00

    ஒருநாள்: 243 போட்டிகள், 8,357 ரன்கள், சராசரி 37.00

    டி20: 78 போட்டிகள், 1,758 ரன்கள், சராசரி 24.00

    ஷபூர் சத்ரான் (ஆப்கானிஸ்தான்) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜனவரி 31.


    டெஸ்ட்: விளையாடியதில்லை.

    ஒருநாள்: 44 போட்டிகள், 43 விக்கெட்டுகள், சராசரி 36.93

    டி20: 30 போட்டிகள், 34 விக்கெட்டுகள், சராசரி 23.21

    ரித்திமான் சஹா (இந்தியா) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - பிப்ரவரி 1.


    டெஸ்ட்: 40 போட்டிகள், 1,353 ரன்கள், சராசரி 29.00

    ஒருநாள்: 9 போட்டிகள், 41 ரன்கள், சராசரி 14.00

    டி20: விளையாடியதில்லை

    மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ஆஸ்திரேலியா) - ஓடிஐ - பிப்ரவரி 6.


    டெஸ்ட்: விளையாடியதில்லை

    ஒருநாள்: 70 போட்டிகள், 1,485 ரன்கள், சராசரி 27.00, 49 விக்கெட்டுகள்

    டி20: 59 போட்டிகள், 940 ரன்கள், சராசரி 28.00, 30 விக்கெட்டுகள்

    டிமுத் கருணாரத்னே (இலங்கை) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - பிப்ரவரி.


    டெஸ்ட்: 100 போட்டிகள், 7,222 ரன்கள், சராசரி 39.00

    ஒருநாள்: 50 போட்டிகள், 1,316 ரன்கள், சராசரி 31.00

    டி20: 1 போட்டி, 0 ரன்கள்

    ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - ஓடிஐ மட்டும் ஓய்வு - 2025 (சாம்பியன்ஸ் டிராபி பிறகு).


    டெஸ்ட்: 120 போட்டிகள், 10,496 ரன்கள், சராசரி 56.00

    ஒருநாள்: 164 போட்டிகள், 5,681 ரன்கள், சராசரி 43.00

    டி20: 67 போட்டிகள், 1,094 ரன்கள், சராசரி 25.00

    முஷ்பிகுர் ரஹீம் (வங்கதேசம்) - ஓடிஐ மட்டும் ஓய்வு - 2025 (சாம்பியன்ஸ் டிராபி பிறகு).


    டெஸ்ட்: 100 போட்டிகள், 6,510 ரன்கள், சராசரி 39.00

    ஒருநாள்: 274 போட்டிகள், 7,795 ரன்கள், சராசரி 36.00

    டி20: 102 போட்டிகள், 1,500 ரன்கள், சராசரி 20.00

    மஹ்முதுல்லா (வங்கதேசம்) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - 2025 (சாம்பியன்ஸ் டிராபி பிறகு).


    டெஸ்ட்: 50 போட்டிகள், 2,914 ரன்கள், சராசரி 33.00

    ஒருநாள்: 239 போட்டிகள், 5,689 ரன்கள், சராசரி 36.00

    டி20: 143 போட்டிகள், 2,555 ரன்கள், சராசரி 23.00

    ரோகித் சர்மா (இந்தியா) - டெஸ்ட் மட்டும் ஓய்வு- மே 7.


    டெஸ்ட்: 67 போட்டிகள், 4,301 ரன்கள், சராசரி 41.00

    ஒருநாள்: 262 போட்டிகள், 10,709 ரன்கள், சராசரி 49.00

    டி20: 159 போட்டிகள், 4,231 ரன்கள், சராசரி 31.00

    விராட் கோலி (இந்தியா) - டெஸ்ட் மட்டும் ஓய்வு- மே 12.


    டெஸ்ட்: 123 போட்டிகள், 9,230 ரன்கள், சராசரி 47.00

    ஒருநாள்: 292 போட்டிகள், 13,906 ரன்கள், சராசரி 58.00

    டி20: 125 போட்டிகள், 4,188 ரன்கள், சராசரி 49.00

    க்ளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) - ஓடிஐ மட்டும் ஓய்வு - ஜூன் 2.


    டெஸ்ட்: 7 போட்டிகள், 339 ரன்கள், சராசரி 26.00

    ஒருநாள்: 149 போட்டிகள், 3,990 ரன்கள், சராசரி 34.00, 72 விக்கெட்டுகள்

    டி20: 113 போட்டிகள், 2,728 ரன்கள், சராசரி 30.00, 47 விக்கெட்டுகள்

    ஹென்ரிச் க்ளாசென் (தென் ஆப்பிரிக்கா) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜூன் 2.


    டெஸ்ட்: 4 போட்டிகள், 104 ரன்கள், சராசரி 13.00

    ஒருநாள்: 60 போட்டிகள், 2,141 ரன்கள், சராசரி 44.00

    டி20: 58 போட்டிகள், 1,250 ரன்கள், சராசரி 28.00

    பியூஷ் சாவ்லா (இந்தியா) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜூன் 6.


    டெஸ்ட்: 3 போட்டிகள், 7 விக்கெட்டுகள்

    ஒருநாள்: 25 போட்டிகள், 32 விக்கெட்டுகள், சராசரி 34.00

    டி20: 7 போட்டிகள், 4 விக்கெட்டுகள்

    நிக்கோலஸ் பூரன் (மேற்கிந்தியத் தீவுகள்) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜூன் 9.


    டெஸ்ட்: விளையாடியதில்லை

    ஒருநாள்: 61 போட்டிகள், 1,983 ரன்கள், சராசரி 40.00

    டி20: 106 போட்டிகள், 2,275 ரன்கள், சராசரி 26.00

    ஏஞ்சலோ மேத்யூஸ் (இலங்கை) - டெஸ்ட் மட்டும் ஓய்வு - ஜூன்.


    டெஸ்ட்: 119 போட்டிகள், 8,214 ரன்கள், சராசரி 44.00, 33 விக்கெட்டுகள்

    ஒருநாள்: 226 போட்டிகள், 5,916 ரன்கள், சராசரி 40.00, 120 விக்கெட்டுகள்

    டி20: 90 போட்டிகள், 1,416 ரன்கள், சராசரி 28.00, 38 விக்கெட்டுகள்

    பீட்டர் மூர் (ஜிம்பாப்வே/அயர்லாந்து) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜூலை.


    டெஸ்ட்: 15 போட்டிகள், 734 ரன்கள், சராசரி 25.00

    ஒருநாள்: 49 போட்டிகள், 827 ரன்கள், சராசரி 21.00

    டி20: 32 போட்டிகள், 795 ரன்கள், சராசரி 22.00

    ஆண்ட்ரே ரசல் (மேற்கிந்தியத் தீவுகள்) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜூலை 22.


    டெஸ்ட்: 1 போட்டி, 2 ரன்கள், 1 விக்கெட்

    ஒருநாள்: 56 போட்டிகள், 1,034 ரன்கள், சராசரி 27.00, 70 விக்கெட்டுகள்

    டி20: 81 போட்டிகள், 955 ரன்கள், சராசரி 20.00, 53 விக்கெட்டுகள்

    புஜாரா (இந்தியா) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஆகஸ்ட் 24.


    டெஸ்ட்: 103 போட்டிகள், 7,195 ரன்கள், சராசரி 44.00

    ஒருநாள்: 5 போட்டிகள், 51 ரன்கள், சராசரி 10.00

    டி20: விளையாடியதில்லை

    மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - டி20 மட்டும் ஓய்வு - செப்டம்பர்.


    டெஸ்ட்: 101 போட்டிகள், 412 விக்கெட்டுகள், சராசரி 26.64

    ஒருநாள்: 121 போட்டிகள், 236 விக்கெட்டுகள், சராசரி 22.96

    டி20: 65 போட்டிகள், 79 விக்கெட்டுகள், சராசரி 24.00

    ஆசிப் அலி (பாகிஸ்தான்) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - செப்டம்பர்.

    டெஸ்ட்: விளையாடியதில்லை

    ஒருநாள்: 21 போட்டிகள், 382 ரன்கள், சராசரி 25.00

    டி20: 58 போட்டிகள், 577 ரன்கள், சராசரி 15.00

    உஸ்மான் ஷின்வாரி (பாகிஸ்தான்) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - செப்டம்பர் 9.

    டெஸ்ட்: விளையாடியதில்லை

    ஒருநாள்: 17 போட்டிகள், 32 விக்கெட்டுகள், சராசரி 24.00

    டி20: 16 போட்டிகள், 13 விக்கெட்டுகள், சராசரி 32.00

    கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - செப்டம்பர் 29.


    டெஸ்ட்: 62 போட்டிகள், 2,034 ரன்கள், சராசரி 25.00, 195 விக்கெட்டுகள், சராசரி 29.00

    ஒருநாள்: 122 போட்டிகள், 1,524 ரன்கள், சராசரி 24.00, 173 விக்கெட்டுகள், சராசரி 30.00

    டி20: 33 போட்டிகள், 153 ரன்கள், சராசரி 17.00, 31 விக்கெட்டுகள், சராசரி 26.71

    அமித் மிஸ்ரா (இந்தியா) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - செப்டம்பர் 4.


    டெஸ்ட்: 22 போட்டிகள், 76 விக்கெட்டுகள், சராசரி 35.72

    ஒருநாள்: 36 போட்டிகள், 64 விக்கெட்டுகள், சராசரி 23.60

    டி20: 10 போட்டிகள், 16 விக்கெட்டுகள், சராசரி 14.75

    கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - டி20 மட்டும் ஓய்வு - நவம்பர் 2.


    டெஸ்ட்: 106 போட்டிகள், 9,279 ரன்கள், சராசரி 55.00

    ஒருநாள்: 175 போட்டிகள், 7,256 ரன்கள், சராசரி 49.00

    டி20: 93 போட்டிகள், 2,575 ரன்கள், சராசரி 33.00

    28. மோகித் ஷர்மா (இந்தியா) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - டிசம்பர் 3.

    டெஸ்ட்: விளையாடியதில்லை

    ஒருநாள்: 26 போட்டிகள், 31 விக்கெட்டுகள், சராசரி 31.77

    டி20: 8 போட்டிகள், 6 விக்கெட்டுகள், சராசரி 24.00

    • இந்தாண்டு கோலிவுட்டில் 25 படங்கள் மட்டுமே வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன
    • இந்தாண்டு கோலிவுட்டில் வெளியான 90% படங்கள் தோல்வியை தான் தழுவின.

    2025 ஆம் ஆண்டு நவம்பர் வரை தமிழ் சினிமாவில் 250க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் சுமார் 25 படங்கள் மட்டுமே வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 90% படங்கள் தோல்வியை தான் தழுவின.

    அவ்வகையில் இந்தாண்டு அதிக வசூல் குவித்த டாப் 10 தமிழ் படங்கள் குறித்து ஒரு REWIND பார்ப்போம்.

    1. கூலி

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. பின்னர் எதிர்மறை விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது. மொத்தத்தில் இப்படம் உலக அளவில் 518 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

     2. குட் பேட் அக்லி - வசூல் 248 கோடி

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. மொத்தமாக இப்படம் உலக அளவில் 248 கோடி ரூபாய் வசூல் செய்து இப்பட்டியலில் 2 ஆம் பிடித்துள்ளது.

    3. டிராகன் வசூல் - 150 கோடி

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது.

    லவ் டுடே படத்தை தொடர்ந்து டிராகன் படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றி படமாக அமைந்தது. இப்படம் மொத்தமாக உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூலை கடந்து இப்பட்டியலில் 3 ஆம் பிடித்துள்ளது.

     4. விடாமுயற்சி - 135 கோடி

    நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

    இதனால் முதலில் நல்ல வசூலை பெற்ற இப்படம் பின்னர் வசூலில் சறுக்கியது. இப்படம் மொத்தமாக உலக அளவில் 135 கோடி ரூபாய் வசூலை கடந்து இப்பட்டியலில் 4 ஆம் பிடித்துள்ளது.

    5. டியூட் - 113 கோடி

    கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ நடிப்பில் வெளியான டியூட் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சரத்குமாரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

    டியூட் படம் உலகளவில் 6 நாட்களில் ரூ.100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் மொத்தமாக உலக அளவில் 113 கோடி ரூபாய் வசூலை கடந்து இப்பட்டியலில் 5 ஆம் பிடித்துள்ளது.

     6. மதராஸி - 90 கோடி

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் 'மதராஸி'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

    உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் இப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது. இதன்மூலம் இப்பட்டியலில் இப்படம் 6 ஆம் பிடித்துள்ளது.

     7. ரெட்ரோ - 90 கோடி

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ரெட்ரோ. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

    முதல் நாள் வசூலாக இப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்தது. அதே சமயம் இப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்ததால் இப்படத்தில் வசூல் பாதிக்கப்பட்டது. இருப்பினும் ரெட்ரோ படம் உலக அளவில் ரூ.104 கோடி வசூலை கடந்தது. இதன்மூலம் இப்பட்டியலில் இப்படம் 7 ஆம் பிடித்துள்ளது.

    8. தலைவன் தலைவி -85 கோடி

    விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமாக உருவான 'தலைவன் தலைவி' படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    திரையரங்குகளில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.85 கோடிக்கும் மேல் வசூல் குவித்தது. இதன்மூலம் இப்பட்டியலில் இப்படம் 8 ஆம் பிடித்துள்ளது.

     9. டூரிஸ்ட் பேமிலி - 85 கோடி

    சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படம் உலக அளவில் பெரும் வரவெற்பிற் பெற்று வசூலை வாரி குவித்தது.

    இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலில் கடந்தது. உலகளவில் 75 கோடி ரூபாய்-க்கு அதிகமாக வசூலை குவித்துள்ளது.கம்மியான பட்ஜெடில் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட மில்லியன் டால்டர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு இப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்துது. இதன்மூலம் இப்பட்டியலில் இப்படம் 9 ஆம் பிடித்துள்ளது.

    10. மாமன் - 41 கோடி

    பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாரானது. கிராம மக்களை வெகுவாக கவர்ந்த இப்படம் ரூ. 41.15 கோடி வசூல் குவித்தது. இதன்மூலம் இப்பட்டியலில் இப்படம் 10 ஆம் பிடித்துள்ளது.

    தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருந்தாலும் தமிழ்நாட்டில் அப்படம் பெரிய அளவில் வசூலிக்கவில்லை. தெலுங்கு மாநிலங்களில் தான் அப்படம் வசூலித்தது. அதன் காரணமாக இப்படம் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. 

    • இது சரிபட்டு வராது என வெள்ளை மாளிகையில் தனது ஓவல் அலுவலக இருக்கையை விட்டு குதித்தெழுந்தார் டிரம்ப்.
    • தனக்கு பிடிக்காத இடதுசாரி மதுரோ ஆட்சியில் இருப்பதால், அவரை எதிர்க்கும் தன்னைப் போன்ற தீவிர வலதுசாரி மரியாவுக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது டிரம்புக்கு ஆறுதலாக அமைந்தது.

    2017-21 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக செயல்பட்ட டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரான இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸை வீழ்த்தி மீண்டும் அதிபாராக தேர்வானார்.

    பிரசார கூட்டதில் கொலை முயற்சி உள்ளிட்டவற்றில் இருந்து உயிர்தப்பி, உலக பணக்காரர் எலான் மஸ்க் ஏகோபித்த ஆதரவுடன் அமெரிக்கா அமெரிக்கார்களுக்கே என்று முழங்கிய குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப், தூங்கி வழிந்த ஜோ பைடன் நிர்வாகத்துக்கு மாற்றாக ஒரு உறுதியான தலைமையாக இருக்கும் என்று கருதிய அமெரிக்கர்கள் அவரை வெற்றி அடைய செய்தனர்.

    அதன்படி இந்த ஆண்டு, 2025 தொடக்கத்தில் ஜனவரி 20 அன்று அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார்.

    அதன் பின் நிகழ்ந்தவை இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும் வரலாறாக மாறின. அது ஒரு தரப்புக்கு உறுதியான முடிவுகளாகவும், மற்றொரு தரப்பிற்கு கிறுக்குத் தனமான முடிவுகளாகவும் படலாம்.

    ஆனால் உலகின் மிகப்பெரிய வல்லரசின் தலைவராக டிரம்ப் செய்த காரியங்கள் மொத்த உலகத்திற்கும் எதிரொலித்தன. வெள்ளை மாளிகையின் ஒவ்வொரு அறிவிப்பும் உலகை ஒரு புயல் போலச் சுழற்றியடித்தது.

    அப்படி அவர் செய்த விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

    முதலாவதாக வர்த்தகம். உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதாக தொடர்ந்து புலம்பிய டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை தான் பதில் "வரிவிதிப்பு". அதுவரை உயிர் பயத்தை காட்டும் உலகப் போரை மட்டுமே கேள்விப்பட்டிருந்த பலருக்கு 'வர்த்தக போர்' எப்படி இருக்கும் என்பதை காட்டியவர் டிரம்ப்.

    உலகளாவிய வர்த்தக முறையை தலைகீழாக மாற்றி, பங்குச்சந்தைகளை பல்லிளிக்க வைத்த டிரம்ப்பின் வரிவிதிப்புகள் பிரசித்தி பெற்றவை.

    ஏப்ரல் 2 ஆம் தேதி டிரம்ப் எடுத்த அஸ்திரம் தான் வரிவிதிப்பு. ஏப்ரல் 2-ஐ அமெரிக்காவின் 'விடுதலை தினம்' என வர்ணித்த டிரம்ப் உலக நாடுகள் மீது உயர்த்தப்பட்ட இறக்குமதி வரிகளை நிர்ணயம் செய்து அறிவித்தார். பெரும்பாலான நாடுகளின் பொருட்களுக்கு 10% அடிப்படை வரி அமலுக்கு வந்தது.

    இதுவே வர்த்தக போரின் தொடக்கமாக அமைந்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்வதறியாது திகைத்தாலும் சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் பதில் வரிகளை விதித்தன. இப்படி தொடர்ந்து மாறி மாறி வரி விதித்துக் கொண்டே பாதி வருடம் கழிந்தது. இதனால் உலக பங்குச்சந்தைகளும் பல முறை ஆட்டம் கண்டன. உலகளாவிய வர்த்தகத்தில் நிச்சயமின்மை ஏற்பட்டது.

    நிலைமை இப்படி இருக்க இந்தியாவை குறிவைத்து டிரம்ப் அம்பு எய்ய தொடங்கினார். ஏற்கனவே இந்தியா அமெரிக்கா மீது அதிக வரி விதிப்பதாக புலம்பி வந்த டிரம்ப், ரஷியா மீதான மேற்கு நாடுகளின் தடைகளை பயன்படுத்தி உக்ரைன் போருக்கு நிதியளிக்கும் வகையில் இந்தியா ரஷியாவிடம் இருந்து அதிகளவில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டி இந்தியாவுக்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார் டிரம்ப்.

    இது ஏற்கனவே இருந்த 25 வரியுடன் சேர்த்து இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரிச்சுமையாக மாறியது. ஒரு புறம் பிரதமர் மோடியை தனது நண்பர் என்று புகழ்ந்தபடி மறுபுறம் இந்த பாரபட்சமான வரிகளை டிரம்ப் இந்தியா மீது விதித்தது கவனிக்கத்தக்கது. இதனால் தமிழ்நாட்டிலும் பல இறக்குமதி சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டன.

    வரியை நிறுத்தி வைக்க எந்தவித கால நீட்டிப்பும் கிடையாது என்று அறிவித்த டிரம்ப், 90 நாட்கள் என்ற குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை எட்டும்படி சுமார் 200 நாடுகளை வலியுறுத்தியது அவரது வர்த்தக அடாவடி அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

    அடுத்ததாக குடியேற்றம். ஜனவரியில் பதவியேற்ற முதல் நாளிலேயே அமெரிக்க மண்ணில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கும் விதியை தூக்கி எறிய "பிறப்பால் குடியுரிமை" பெறுவதற்கு கட்டுப்பாடு விதித்து நிர்வாக உத்தரவு பிறப்பித்தார். இது பின்னர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டு கீழ் நீதிமன்றங்கள் கடந்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்த ஷாக் ட்ரீட்மென்ட்க்கு பிறகு அமெரிக்காவின் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்துவதாக ஆரம்பித்த டிரம்ப் அரசின் நடவடிக்கை மனிதாபிமற்ற முறையில் மாறியது. டிரம்ப் அரசின் குடிவரவு துறை அதிகாரிகள் பாரிய சோதனைகளை நிகழ்த்தி பல குடும்பங்களை ராணுவ விமானத்தில் கை கால்களை சங்கிலியால் பிணைத்து அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தியது. இந்த ஆண்டு 3,258 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் மக்களவையில் தெரிவித்திருந்தார்.

    அடுத்ததாக போர் நிறுத்தம். நீண்டகாலமாக நடைபெற்று வந்த உலகின் முக்கிய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக கங்கணம் கட்டிய டிரம்ப் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். காசா போரை தவிர்த்து இதற்கும் அவர் பயன்படுத்திய அஸ்திரம் வர்த்தகம் தான்.

    காசா மீது இஸ்ரேல் இரக்கமற்ற முறையில் நடத்திக்கொண்டிருந்த தாக்குதல்களில் இதுவரை 70,000 மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்தம் அமலில் இருந்தது. ஆனால் அதன் பின் இஸ்ரேல் ரத்த வெறி அடங்காமல் மீண்டும் போரை தொடங்கியது.

    காசா முற்றிலுமாக சிதைக்கபட்டது. மக்களுக்கு செல்ல வேண்டிய அத்தியாவசிய பொருட்களை தடுத்து நிறுத்தி மனிதனால் உருவாக்கப்பட்ட பெரும் பஞ்சத்தை இஸ்ரேல் உருவாக்கியது. பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் குறிப்பாக குழந்தைகள் எலும்பும் தோலுமாக மாண்டனர்.

    சர்வதேச அழுத்தங்களுக்கு செவிமடுக்காத இஸ்ரேல், எஜமானர் ஸ்தானத்தில் உள்ள அமெரிக்காவுக்கு மட்டும் அஞ்சியது. அதே நேரம் இஸ்ரேலை செல்லப் பிள்ளையாக நடத்திய அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி அரவணைத்தது. அதேநேரம் இது சரிபட்டு வராது என வெள்ளை மாளிகையில் தனது ஓவல் அலுவலக இருக்கையை விட்டு குதித்தெழுந்த டிரம்ப் தனது 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார்.

    அதன்படி அக்டோபர் 9 முதல் போர் நிறுத்தம் பெயரளவில் அமலுக்கு உள்ளது. ஒப்பந்தப்படி ஹமாஸ், எஞ்சிய இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைத்தது. ஆனால் போர் நிறுத்தத்தை மீறி அக்டோபர் 9 க்கு பிறகும் இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே டிரம்ப் காசா மக்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி விட்டு அந்நகரை பணக்காரர்களுக்கான ரிசார்ட் நகரமாக மாற்றும் தனது தொலைநோக்கு திட்டத்தையும் முன்வைத்து விமர்சனத்துக்கு உள்ளார். காசாவை சர்வதேச படைகள் கட்டுப்பாட்டில் எடுப்பது என ஏறக்குறைய டிரம்ப் உடைய 20 அம்ச அமைதி திட்டமும் அதற்கான கூறுகளையே அதிகம் கொண்டுள்ளது.

    இதற்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக மே 7 இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது.இதைத்த்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் வெடித்த மோதல் 3 நாட்களில் அதாவது மே 9 ஆம் தேதி மாலை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    மோதலை தொடர்ந்தால் வர்த்தகம் செய்யமாட்டேன் என பிரதமர் மோடியையும், பாக் பிரதமர் ஷெரீபையும் மிரட்டி தானே இந்த போரை நிறுத்தியதாக டிரம்ப் இதுவரை 60 முறைக்கும் மேல் கூறிவிட்டார். அதேநேரம் இந்தியா பாகிஸ்தானுடன், தாய்லாந்து - கம்போடீயா, தாய்லாந்து ருவாண்டா உள்ளிட்ட 8 போர்களை 6 மாதத்தில் தான் நிறுத்தியதாக தம்பட்டம் தட்டிய டிரம்ப் தனது அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என அடம் பிடித்தார். ஆனால் அது வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு கொடுக்கப்பட்டது.

    வெனிசுலாவில் தனக்கு பிடிக்காத இடதுசாரி மதுரோ ஆட்சியில் இருப்பதால், அவரை எதிர்க்கும் தன்னைப் போன்ற தீவிர வலதுசாரி மரியாவுக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது டிரம்ப்புக்கு ஆறுதலாக அமைந்தது. அதேநேரம் அண்மையில் உலக கால்பந்து சம்மேளனம் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி அவரின் வட்டத்தை போக்கியது. சொல் பேச்சு கேட்டும் மற்ற நாடுகளின் போரை நிறுத்தியது போல் உக்ரைன் மீதான ரஷியா போரை நிறுத்த டிரம்ப் அவ்வளவு சுலபமாக நிறுத்த முடியவில்லை.  

    ரஷிய அதிபர் புதினை, ரஷியாவை ஒட்டிய அமெரிக்க பிரதேசமாக அலாஸ்காவில் நேரில் சந்தித்து டிரம்ப் பேசிப் பார்த்தார். பேரம் படியவில்லை.தொடர்ந்து அமைதியை நிலைநாட்டியே தீருவேன் என டிரம்ப் உறுதியுடன் இருக்கிறார்.

    ஆனால் கடந்த ஜூன் 22 ஆம் தேதி ஈரானுக்கு அமேரிக்காவில் இருந்து போர் விமானங்களை அனுப்பி தாக்குதல் நடத்தச் செய்த டிரம்ப், அந்நாட்டின் அணு ஆயுத கிடங்குகளை அழித்ததாக அறிவித்தார். ஆனால் ஈரான் இதை மறுத்து வருகிறது. அந்த சமயத்தில் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே

    இதுதவிர பிந்தங்கிய நாடுகளுக்கு வல்லரசு என்ற முறையில் UNAID திட்டம் மூலம் அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவிகளை மானாவாரியாக நிறுத்திய டிரம்ப், அமெரிக்கர்களையும் விட்டுவைக்கவில்லை. சிக்கனம் பிடிக்கிறேன் பேர்வலி என்ற பெயரில் அரசுத்துறைகளில் ஆயிரக்கணக்கில் பணி நீக்கங்கங்களை மேற்கொண்டார்.

    இருப்பினும் காண்டில் இருந்த அமெரிக்கர்களை பிக் பியுட்டிபுல் பில் என்ற வரிக்குறைப்பு மசோதா மூலம் சற்று தாஜா செய்தார் டிரம்ப். இருப்பினும் ஜனநாயக விழுமியங்களை நசுக்கும் விதமாக தனது பேச்சை கேட்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதியை நிறுத்தியது, ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு என ஒரு சர்வாதிகார தலைவருக்கு ஏற்ற சர்வ லட்சணங்களோடு டிரம்ப் செயல்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே வெவ்வேறு துறைகளுக்கு நிதி வழங்குவதில் எதிர்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பட்டால் அமெரிக்காவில் பொதுமுடக்கம் ஏற்பட்டது. இதனால் பல அரசு துறைகள் ஊதியமின்மை, ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்தது.

    இந்த முடக்கம் 43 நாட்கள் தொடர்ந்து கடந்த நவம்பரில் எதிர்கட்சிகளுடன் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டு முடிவுக்கு வந்தது. இதற்கிடையே தற்போது போதைப்பொருட்களை தடுக்கிறேன் என கூறி களமிறங்கி உள்ள டிரம்ப் தனது பரம எதிரி வெனிசுலா அதிபர் மதுரோ மீது தனது முழு கவனத்தையும் திரும்பியுள்ளார். வெனிசுலா அமைந்துள்ள கரீபியன் கடற்பரப்பில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்துவது, மதுரோ தலைக்கு விலை வைப்பது என படு பிஸியாக டிரம்ப் இயங்கி வருகிறார்.

    வயதானதால் டிரம்ப் என்ன செய்கிறார், என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியவில்லை என்று சிலர் கருதினாலும், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற அவரின் கொள்கையில் அவர் உறுதியாக இருப்பது கண்கூடு.

    வெளிநாட்டு பணியாளர்களுக்கான H1B விசா கட்டுப்பாடுகள், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகள், மூன்றாம் உலக நாட்டவர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை உள்ளிட்ட அவரது முடிவுகள் இதற்கு வலு சேர்கின்றன.

    மொத்தத்தில் தனது முதல் பதவிக்காலத்தை விட மிக தீவிரமாக செயல்பட்டு வரும் டிரம்ப் ஒவ்வொரு நாளும் உலகை ஆச்சர்யத்திலோ அல்லது அதிர்ச்சியிலோ ஆழ்த்தி வருவது தொடர்கிறது. இனியும் தொடரும்.                                                                     

    • சட்டசபைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றநிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
    • நாட்டின் தேசிய கீதத்தை மதிப்பது என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமை.

    புத்தாண்டில், தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டத்தில், ஆளுநர் தன் உரையை வாசிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி 6-ந்தேதி நடந்த சட்டசபை கூட்டத்தின்போது ஆளுநர் ஆர்.என். ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

     

    தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி, தன் உரையை முழுமையாக வாசிக்காமல், பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில்,

    நாட்டின் தேசிய கீதத்தை மதிப்பது என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமை. அனைத்து மாநில சட்டசபைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கம், முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

    தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் நாட்டின் அரசியலமைப்பு, தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. சட்டசபைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றநிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.

    தேசிய கீதத்தை பாட சபாநாயகர், முதல்வருக்கு ஆளுநர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தும் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

    ஆளுநர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தும் அதனை மறுப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு அவமரியாதை ஏற்பட்டதால் அவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் சில நிமிடங்களில் அந்த பதிவை ஆளுநர் மாளிகை நீக்கியது. அதன்பிறகு, மீண்டும் சில திருத்தங்களுடன் அந்தப் பதிவு மீண்டும் எக்ஸ் தளத்தில் போடப்பட்டுள்ளது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    கடந்த ஆண்டை போல, இந்த முறையும் ஆளுநர் சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளானது.

    • வரலாற்றில் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.
    • தங்கத்திற்கு போட்டியாக நீ மட்டும் தான் ஏறுவீயா... நானும் ஏறுவேன் என்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    தங்கம்..!

    தங்கத்தின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. அதிலும் பெண்களை கேட்கவே வேண்டாம். புதுப்புது டிசைன்களில் தங்கம் வாங்கி அணியனும்னு என்று ஆர்வம் கொள்வார்கள். இளம்வயது பெண்கள் திருமணத்திற்காக பார்த்து பார்த்து நகை எடுப்பார்கள். திருமணம் ஆன பெண்களோ தனக்கோ அல்லது தன்னுடைய மகளின் எதிர்காலத்திற்கு என நகை வாங்குவார்கள்.

    இப்படி சேமிப்பு, எதிர்கால நலன், அவசர தேவை, திருமணம் போன்றவற்றிற்கு தங்கம் பயன்படும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு 20 சவரன், 50 சவரன் என வசதிக்கேற்ப பெற்றோர்கள் நகை அணிவித்து திருமணம் செய்து வைப்பார்கள்.



    இப்படிப்பட்ட தங்கம் இரு விதமாக விற்பனை செய்யப்பட்டது. அதாவது 22 கிராட், 24 கிராட் என்று... (இதனை சாதாரண நகை என்றும் 916 நகை என்றும் சொல்வர்). அரசாங்கம் ஒரு விதிமுறையை கொண்டு வந்தது. அந்த விதியில் இனி சாதாரண நகை என்று சொல்லப்படும் 22 கிராட் நகை விற்கக்கூடாது. 24 கிராட் முத்திரையிடப்பட்ட நகை தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று. இதனால் ஏழை மக்கள் சிரமம் அடைந்தனர்.



    சரி அதுபோகட்டும் என்று பார்த்தால், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்று தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனையானது. ஆண்டின் தொடக்கத்தில் சற்று தான் உயர்ந்தது என்று பரவாயில்லை என்று தோன்றியது அன்று...



    ஆனால் இன்று அதன் தொடக்கமாக தங்கம் விலை உச்சத்தில் விற்பனையாகிறது. அதாவது வரலாற்றில் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. தங்கத்திற்கு போட்டியாக நீ மட்டும் தான் ஏறுவீயா... நானும் ஏறுவேன் என்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், பார் வெள்ளி 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    ஒவ்வொரு மாத இறுதியில் விற்பனையான தங்கம் மற்றும் வெள்ளி விலை விவரம்:-


    மாதம் கிராம் சவரன் கிராம் பார் வெள்ளி
    ஜனவரி ரூ.7,730 ரூ.61,840 ரூ.107 ரூ.1,07,000
    பிப்ரவரி ரூ.7,960 ரூ.63,680 ரூ.105 ரூ.1,05,000
    மார்ச் ரூ.8,425 ரூ.67,600 ரூ.113 ரூ.1,13,000
    ஏப்ரல் ரூ.8,980 ரூ.71,840 ரூ.111 ரூ.1,11,000
    மே ரூ.8,920 ரூ.71,360 ரூ.111 ரூ.1,11,000
    ஜூன் ரூ.8,915 ரூ.71,320 ரூ.119 ரூ.1,19,000
    ஜூலை ரூ.9,170 ரூ.73,360 ரூ.125 ரூ.1,25,000
    ஆகஸ்ட் ரூ.9,620 ரூ.76,960 ரூ.134 ரூ.1,34,000
    செப்டம்பர் ரூ.10,860 ரூ.86,880 ரூ.161 ரூ.1,61,000
    அக்டோபர் ரூ.11,300 ரூ.90,400 ரூ.165 ரூ.1,65,000
    நவம்பர் ரூ.11,800 ரூ.94,400 ரூ.192 ரூ.1,92,000

    2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு ஏற்ற, இறக்கங்கள் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து இன்று (06-12-2025) முறையே ஒரு சவரன் தங்கம் ரூ.96,320-க்கும் ஒரு கிராம் ரூ.12,040-க்கும், வெள்ளி ஒரு கிராம் வெள்ளி 199 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



    பொருளாதார மந்த நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் விலை உயருகிறது என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும் இனி விலை குறையுமா? என்றால் அது சாத்தியமே இல்லை தான் என்கிறார்கள். மேலும் இனி பிறக்கப்போகும் 2026-ம் ஆண்டில் தங்கம் விலை 15 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 24 ஆயிரம் வரை விற்பனையாகலாம் என்ற தகவலை சொல்லும் போது இடி இறங்கியது போல் இருந்தது. இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் சற்று யோசித்தே செயல்படுவதே நல்லது. 

    ×