search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடகத்தில் முழுஊரடங்கை நீட்டிப்பது பற்றி இன்று முடிவு

    கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் முழு ஊரடங்கை நீடிப்பது பற்றி எடியூரப்பா தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் மந்திரிசபை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது.

    நேற்று முன்தினம் நிலவரப்படி தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் தலைநகர் பெங்களூருவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே பெருநகரங்களில் பெங்களூரு தான் வைரஸ் பாதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது.

    இதில் பெங்களூருவில் மட்டும் 1½ லட்சம் பேர் உள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பெங்களூரு விழிபிதுங்கி நிற்கிறது. புதிதாக வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டதாக முதல்-மந்திரி எடியூரப்பாவே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வருகிற 4-ந் தேதி வரை வார இறுதியில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து 57 மணி நேர ஊரடங்கு கடந்த 23-ந் தேதி இரவு 9 மணிக்கு தொடங்கியது.

    இதனால் நேற்று முன்தினம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அத்தியாவசிய சேவைகள் தவிர பிற சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அத்தியாவசிய சேவைகளுக்கு தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பொதுமுடக்கம் வெற்றிகரமாக அமைந்தது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். காய்கறி, அரிசி, பருப்பு உள்பட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 10 மணி வரை அனுமதிக்கப்பட்டன. இறைச்சி கடைகள் முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

    இந்த நிலையில் 2-வது நாள் முழு ஊரடங்கிலும் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினா். இறைச்சி, காய்கறி, பலசரக்கு கடைகள், பால் கடைகள் காலை 10 மணி வரை திறந்திருந்தன. பொதுமக்கள் அதிகளவில் காலையிலேயே வந்து பொருட்களை வாங்கி சென்றனர். பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அவதிப்பட்டனர். ஒரு சில கடைகளில் மட்டும் பால் கிடைத்ததால் அங்கு பொதுக்கள் கூட்டமாக குவிந்து பால் வாங்க முண்டியடித்தனர். இதனால் அங்கு சமூக இடைவெளி என்பது காற்றில் பறந்தது.

    பெங்களூருவில் எம்.ஜி.ரோடு, ரிச்மாண்டு ரோடு, ஜே.சி.ரோடு, லால்பாக் ரோடு, ஓசூர் ரோடு, கெம்பேகவுடா ரோடு உள்பட பல்வேறு முக்கியமான ரோடுகள் வாகனங்கள், ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் ஒரு சில பி.எம்.டி.சி. பஸ்கள் மற்றும் சில தனியார் வாகனங்கள் மட்டும் ஓடியதை காண முடிந்தது. முக்கியமான சர்க்கிள்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பசவராஜ் பொம்மை

    தேவையின்றி வாகனங்களில் நடமாடியவர்களை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சில வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர். பி.எம்.டி.சி., கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பஸ்கள் வந்து சென்றன. பணிகள் இல்லாததால் பஸ்கள் ஓய்வெடுத்தன. மருத்துவமனைகள், மருந்தகங்கள் எந்த தடையும் இன்றி முழு நேரமும் இயங்கியது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கின.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் அடுத்த வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் மேலும் 14 நாட்களுக்கு மாநிலம் தழுவிய முழுஊரடங்கை நீடிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் மந்திரி சபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) பெங்களூருவில் நடக்கிறது. இதில் முழு ஊரடங்கு நீடிப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய அரசு கேட்டதை விட 80 டன் ஆக்சிஜனை கர்நாடகத்திற்கு கொடுத்துள்ளது. இது ஆக்சிஜன் தேவையின் மீதான நெருக்கடியை குறைக்கும். அடுத்து வரும் நாட்களில் அனைவருக்கும் எளிதாக ஆக்சிஜன் கிடைக்கும். கர்நாடக அரசிடம் 50 ஆயிரம் டோஸ் ரெம்டெசிவர் மருந்து உள்ளது. மத்திய அரசு 1.22 லட்சம் டோஸ் ரெம்டெசிவர் மருந்தை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

    இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வருகிற 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். 45 வதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி போடப்படும். தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வார இறுதி நாட்கள் முழு ஊரடங்கிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரசின் கட்டுப்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கொரோனா பரவலை தடுப்பதில் மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். அப்போது தான் கொரோனா 2-வது அலையை தடுக்க முடியும். கர்நாடகத்தில் தற்போதைக்கு வார இறுதி ஊரடங்கு மட்டுமே அமலில் இருக்கும்.

    மற்ற நாட்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்திகள் குறித்து நான் எந்த கருத்தையும் கூற மாட்டேன்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
    Next Story
    ×