search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசவராஜ் பொம்மை"

    • மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி அரிசி வழங்க தவறிவிட்டனர்.
    • இலவச மின்சார திட்ட விஷயத்தில் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    தேர்தலின்போது ஏழைகளுக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி அரிசி வழங்க தவறிவிட்டனர். அதற்கு பதிலாக கிலோவுக்கு ரூ.34 வீதம் பணம் வழங்குவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். ஒருவருக்கு ரூ.170 கொடுத்தால், அதற்கு கடையில் 2½ கிலோ அரிசி மட்டுமே கிடைக்கும்.

    10 கிலோ அரிசி கொடுத்தே தீருவோம் என்று கூறி வந்தனர். இப்போது அவர்கள் தங்களின் பேச்சை காப்பாற்ற தவறிவிட்டனர். இலவச மின்சார திட்ட விஷயத்தில் நிபந்தனைகளை விதித்துள்ளனர். இதனால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினார்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • குமாரசாமியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
    • அரசியல் என்பது வேறு, தலைவர்களுடனான நட்பு வேறு.

    பெங்களூரு:

    துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்ற பின்பு பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டுக்கு நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி இருந்தார். முன்னதாக இந்த விவகாரம் குறித்து டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. அவர், 2 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்துள்ளார். இதற்கு முன்பு தேவேகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி இருந்தேன். மூத்த தலைவர்களின் அனுபவத்தை பெறுவதில் தவறு எதுவும் இல்லை. அவர்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. அவர்களது ஆட்சி காலத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இருந்திருக்கலாம்.

    அதனை கேட்டு தற்போது செயல்படுத்த முடியும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. பசவராஜ் பொம்மை பெங்களூரு பொறுப்பையும் நிர்வகித்து இருந்தார். அரசியல் என்பது வேறு, தலைவர்களுடனான நட்பு வேறு. குமாரசாமியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வாறு வாய்ப்பு கிடைத்தால் சந்தித்து பேசுவேன். எம்.எல்.ஏ.க்களுக்கான பயிற்சியில் தார்மீக குருக்கள் பேச இருப்பது சபாநாயகர் எடுத்திருக்கும் முடிவு. சபாநாயகர் எடுக்கும் முடிவில் அரசு தலையிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏழை மக்களுக்கு அரிசி கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்.
    • எல்லாவற்றுக்கும் மேலாக கர்நாடகத்தில் வறட்சி நிலவுகிறது.

    உப்பள்ளி :

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார். மத்திய அரசு அரிசி வழங்க மறுத்துவிட்டதாக அவர் சொல்கிறார். அவர் மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். தற்போது அரிசி கிடைக்கவில்லை என்று காரணங்களை சொல்கிறார்கள்.

    இது காங்கிரஸ் தனது உத்தரவாத திட்டங்களில் இருந்து பின்வாங்கிவிட்டதை காட்டுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அரிசியை கொண்டு வருவதாக சித்தராமையா கூறியுள்ளார். ஏழை மக்களுக்கு அரிசி கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். கர்நாடக விவசாயிகள் அரிசி கொடுக்க முன்வந்தால் அரசு அதை கொள்முதல் செய்ய வேண்டும்.

    பா.ஜனதாவினரே அரிசியை கொடுக்க ஏற்பாடு செய்யட்டும் என்று சொல்வது சரியல்ல. ஒருவேளை வருகிற 1-ந் தேதி ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசியை வழங்காவிட்டால் பா.ஜனதா போராட்டத்தில் குதிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கர்நாடகத்தில் வறட்சி நிலவுகிறது. 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நான் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். ஆனால் இந்த அரசு இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    சித்தராமையா காணொலி மூலம் ஒரு கூட்டத்தை நடத்திவிட்டு அமைதியாகிவிட்டார். வறட்சி உள்ள பகுதிகளில் செயல்படையை அமைக்க வேண்டும். இந்த அரசுக்கு மக்கள் மீதான அன்பு நீண்ட நாள் நீடிக்காது என்று கருத தோன்றுகிறது. எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சட்டசபை கூட்டத்திற்கு முன்பு அறிவிக்கப்படும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • யாருக்கு தேவையோ, அவர்களே சமரச அரசியல் செய்து கொள்கிறார்கள்
    • அரசியல் வேறு, சொந்த விவகாரங்கள் வேறு.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    பா.ஜனதா தலைவர்கள் காங்கிரசுடன் சமரச அரசியலில் ஈடுபடுவதாக பிரதாப் சிம்ஹா எம்.பி. குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். நான் பெரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை. எனது அரசியல் வாழ்க்கையில் கிடைத்த அதிகாரத்தை மக்களுக்கு சேவை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி இருந்தேன். என்னுடைய அரசியல் வாழ்க்கையில் யாருடனும் சமரச அரசியல் செய்து கொண்டதில்லை. அதற்கான அவசியமும், சூழ்நிலையும் எனக்கு இல்லை.

    யாருக்கு தேவையோ, அவர்களே சமரச அரசியல் செய்து கொள்கிறார்கள். எனக்கு அதுபோன்ற நிலைமை இதற்கு முன்பும் வந்ததில்லை, தற்போதும் இல்லை. வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பது தெரியாது. இந்த விவகாரத்தில் பிரதாப் சிம்ஹாவுக்கு போதுமான தகவல்கள் கிடைத்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் மேலோட்டமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்

    நான் முதல்-மந்திரியாக இருந்த போது ஊழல் தடுப்பு படையில் பதிவான 65 வழக்குகளை லோக் அயுக்தாவுக்கு மாற்றி இருந்தேன். எதிர்க்கட்சி தலைவர்களுடனும் சரி, எதிர்க்கட்சிகளுடனும் சரி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சமரச அரசியல் செய்து கொண்டது கிடையாது. அரசியல் வேறு, சொந்த விவகாரங்கள் வேறு. இவை இரண்டையும் ஒரு கண்ணில் பார்ப்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை.

    நான் முதல்-மந்திரியாக இருந்த போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா மீதான 5 வழக்குகள் குறித்து விசாரிக்க லோக் அயுக்தாவுக்கு சிபாரிசு செய்திருந்தேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக சமரசம் செய்து கொண்டதில்லை. ஒவ்வொருவரும் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நான் எதற்காக பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்கட்டண உயர்விலும் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது.
    • காங்கிரஸ் அரசு பொய் பேசுகிறது

    பெங்களூரு :

    பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்தால் அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ இலவச அரிசி வழங்குவோம் என்று அறிவித்திருந்தனர். இந்த 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அறிவிக்கும் முன்பாக மத்திய அரசுடன், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் ஆலோசனை நடத்தவில்லை. தற்போது மத்திய அரசிடம் இருந்து அரிசி கிடைக்காது என்று தெரிந்தும், அன்ன பாக்ய திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தடுப்பதாக குற்றச்சாட்டு கூறுகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர்கள் செய்த தவறை மூடி மறைக்கும் விதமாக மத்திய அரசு மீது பழிபோடும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 1-ந் தேதியில் இருந்தே 10 கிலோ அரிசி பெறுவதற்கு தகுதியானவர்களுக்கு கொடுக்க வேண்டும். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) முதல்-மந்திரி சித்தராமையா பேசி இருப்பதை பார்க்கும் போது ஏழை மக்களுக்கு 10 கிலோ அரிசி கொடுக்காமல் மோசம் செய்வதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டு வருகிறது.

    ஏழை மக்களை மோசடி செய்வதற்காக இந்த திட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் செய்கிறார்கள். மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் 5 கிலோ அரிசியை வழங்கி வருகிறது. தற்போது முதல்-மந்திரி சித்தராமையா ஏழை மக்களுக்கு 10 கிலோ அரிசி வழங்குவதாக பொய் பிரசாரம் செய்து வருகிறார். உண்மையில் 5 கிலோ அரிசியை பிரதமர் மோடி தான் ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறார்.

    இதனை மறைத்து விட்டு காங்கிரஸ் அரசும், முதல்-மந்திரி சித்தராமையாவும் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்குவது போன்ற தோற்றத்தை மக்களிடம் உருவாக்க நினைக்கிறார்கள். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிவு செய்தால், 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்க முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே கூடுதல் அரிசி வழங்குவதற்காக டெண்டர் விட்டு இருக்கலாம். தற்போது டெண்டர் மூலமாக அரிசி வாங்கி இருக்கலாம்.

    ஆனால் காங்கிரசாருக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்க மனம் இல்லை. இதன் காரணமாகவே மத்திய அரசு மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். மக்களை திசை திருப்ப பொய் குற்றச்சாட்டுகளையும், காரணங்களையும் சித்தராமையா கூறி வருகிறார். 10 கிலோ அரிசி கொடுக்க முடியாவிட்டால், அதற்கு உரிய பணத்தை ஏழை மக்களின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை காங்கிரஸ் தொடங்க வேண்டும்.

    வருகிற ஜூலை முதல் வாரத்தில் இருந்து பி.பி.எல். கார்டு வைத்திருப்பவர்கள், விவசாயிகளுக்கு 10 கிலோ அரிசியை காங்கிரஸ் அரசு வழங்க வேண்டும். காங்கிரஸ் அரசு அறிவித்தப்படி இந்த திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், பா.ஜனதா தெருவில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபடும். காங்கிரஸ் உத்தரவாதம் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற நினைக்கிறது. இதனை பா.ஜனதா வேடிக்கை பார்க்காது.

    மின்கட்டண உயர்விலும் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. மே 12-ந் தேதி மின் கட்டண உயர்வுக்கு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி கேட்டு இருந்தது. ஜூன் 2-ந் தேதி மின் கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த மாதம் 2-ந் தேதி மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது பா.ஜனதா இல்லை, காங்கிரஸ் கட்சி ஆகும்.

    காங்கிரஸ் அரசு பொய் பேசுகிறது. காங்கிரஸ் அரசு பொறுப்புடன் நடந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காங்கிரஸ் அரசு கூறியபடி 10 கிலோ அரிசி வழங்காவிட்டால், மக்களுடன் சேர்ந்து பா.ஜனதாவும் தீவிர போராட்டத்தில் ஈடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படுவது உறுதி.
    • மோடி மீண்டும் 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்.

    பெங்களூரு :

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரி மாவட்டம் சிக்காவியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இலவச திட்டங்களை நிறைவேற்றுவதாக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்திருந்தனர். மந்திரிசபை கூட்டத்தில் இலவச திட்டங்களுக்கு ஒப்புதல் மட்டும் அளித்துவிட்டு, அமல்படுத்திவிட்டது போல் நாடகமாடுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடனடியாகவே பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

    பழிவாங்கும் அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு, பா.ஜனதாவினர் தலை வணங்கி செல்ல வேண்டும் என்ற பிரச்சினையே இல்லை. பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டங்கள், வளர்ச்சி பணிகளை நிறுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். பல்வேறு தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் பா.ஜனதா தோல்வி அடைந்திருக்கிறது.

    நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். மோடி மீண்டும் 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படுவது உறுதி.

    தற்போது காங்கிரஸ் ஆட்சி செல்லும் பாதை சரியாக இல்லை. அவர்கள் ஆட்சி நடத்தும் விதம், பதவிக்காக மோதல் காரணமாக காங்கிரஸ் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்க வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
    • கர்நாடகம் சுபிட்சமாக இருக்கும் மாநிலம்.

    பெங்களூரு :

    தற்காலிக முதல்-மந்திாி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    சட்டசபை தேர்தல் முடிவு வெளிவந்து 6 நாட்களுக்கு பிறகு முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியை காங்கிரஸ் தேர்ந்தெடுத்துள்ளது. புதிய முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும். அரசியலில் யாருக்கு ஆட்சியை வழங்க வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

    பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்ற மக்கள் ஆசிர்வாதம் வழங்கியுள்ளனர். காங்கிரஸ் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த கட்சி அளித்த வாக்குறுதிகள் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது, நமது மாநிலத்தின் நிதிநிலையை சீர்குலையாமல் பார்த்து கொள்வதும் அவர்களின் கடமை. இந்த விஷயத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    எதிர்க்கட்சியாக நாங்கள் பொறுப்புடன் பணியாற்றுவோம். நிலம், நீர் விவகாரங்களில் அரசியல் இல்லாமல் பணியாற்ற வேண்டும். மக்களுக்கு அநீதி ஏற்படும் அரசை எச்சரிக்கை பணியை நாங்கள் செய்வோம். மாநிலத்தை வளர்ப்பதில் பெரிய சவால்கள் உள்ளன. கர்நாடகம் சுபிட்சமாக இருக்கும் மாநிலம். மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்.

    பா.ஜனதாவின் தோல்வி குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்து வருகிறோம். இந்த பணி பல்வேறு மட்டத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் 2, 3 நாட்களில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தோல்வி அடைந்த வேட்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதே கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். பா.ஜனதாவில் தலைமை பண்பு உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

    சில பகுதிகளில் அரசின் திட்டங்களை கொண்டு செல்வதில் பின்னடைவு ஏற்பட்டது. தேர்தலுக்கு தயாராவதில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. அதனால் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் தோல்வியால் நாங்கள் துவண்டுவிடவில்லை. நாங்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. நாங்கள் மீண்டும் வீறு கொண்டு எழுவோம்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • கர்நாடக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.

    கர்நாடக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தராமையாவுக்கும், துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டி.கே.சிவகுமாருக்கும் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையாவுக்கு வாழ்த்துகள். கர்நாடக மக்களின் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    கர்நாடகாவின் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே.சிவகுமாருக்கு வாழ்த்துகள். கர்நாடக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு டுவீட் செய்துள்ளார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
    • தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா அடைந்த தோல்வி குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். பிரதமர் மோடி உள்பட கட்சியின் அனைத்து தலைவா்களும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. பா.ஜனதா தோல்வி குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்வோம். தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம்.

    ஒரு தேசிய கட்சியாக நாங்கள் தவறுகளை சரிசெய்து கொண்டு, அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம். எங்கள் கட்சியை மீண்டும் வலுப்படுத்தி முழு பலத்துடன் திரும்புவோம்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.
    • இதனால் ஆளுநரிடம் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை ராஜினாமா கடிதம் வழங்கினார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதன் முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, 137 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றியது. இதனால் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை, ராஜ்பவனில் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை இன்று நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தினை வழங்கினார்.

    அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரிடம் எனது ராஜினாமா கடிதம் வழங்கினேன். அது ஏற்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

    ஆளுநரை சந்திக்கும் முன் அவர் கூறுகையில், பா.ஜ.க.வின் இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இந்தத் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு தேசிய கட்சியாக ஒவ்வொரு விஷயங்களைப் பற்றியும் நாங்கள் ஆய்வு செய்வோம். எங்களுடைய அனைத்து தவறுகளையும் நாங்கள் ஆய்வுசெய்து பாராளுமன்ற தேர்தலில் மீண்டெழுந்து வருவோம் என கூறியுள்ளார். 

    • 'சார்லி-777' படத்தில் தெருநாய் பற்றி சிறப்பான கருத்துகள் இடம் பெற்றுள்ளது.
    • இந்த படத்தை பார்த்து மக்கள் விலங்குகள் மீது தனி அன்பு கொள்பவராக மாற வேண்டும்.

    பெங்களூரு :

    கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் ரக்சித் ஷெட்டி நடித்துள்ள படம் 'சார்லி-777'. பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே உள்ள வணிகவளாகத்தில் இருக்கும் தியேட்டரில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 'சார்லி-777' படத்தை பார்த்தார். அவருடன் மந்திரிகள் ஆர்.அசோக், பி.சி.நாகேஸ் ஆகியோரும் அந்த படத்தை பார்த்தார்கள்.

    படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திடீரென்று கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

    'சார்லி-777' படத்தில் தெருநாய் பற்றி சிறப்பான கருத்துகள் இடம் பெற்றுள்ளது. நாய்கள் பற்றி மக்களுக்கு இரக்கம் வேண்டும். தெருநாய்களை மக்கள் முடிந்த அளவுக்கு தத்தெடுத்து வளர்க்க வேண்டும். நாய்கள் செய்யும் செயல்களால் மக்களுக்கு சந்தோஷம் ஏற்படுகிறது. இந்த படத்தை பார்த்து மக்கள் விலங்குகள் மீது தனி அன்பு கொள்பவராக மாற வேண்டும்.

    மாநிலத்தில் தெருநாய்களை வளர்க்கவும், அந்த நாய்களை பாதுகாக்கவும் அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. நாய் மற்றும் விலங்குகள் பற்றியும், அவற்றின் அன்பு குறித்தும் நடிகர் ரக்சித் ஷெட்டி, இயக்குனர் கிரண் சிறப்பான படத்தை கொடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயக்குனர் கிரண்ராஜ் இயக்கத்தில் ஜூன் 10-ந் தேதி வெளியான படம் ‘777 சார்லி’.
    • கர்நாடக முதல் - மந்திரி பசவராஜ் பொம்மை படம் பார்த்துவிட்டு தன் நாயினை நினைத்து அழுத புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

    இயக்குனர் கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்து ஜூன் 10-ம் தேதி வெளியான படம் '777 சார்லி'. கன்னடத்தில் உருவான இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றினார்.

    '777 சார்லி' என்ற நாயுடனான அன்பைச் சொல்லும் நகைச்சுவைப் படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, கர்நாடக முதல் - மந்திரி பசவராஜ் பொம்மை '777 சார்லி' திரைப்படத்தை பார்த்துவிட்டு தான் வளர்த்த நாயினை நினைத்து அழுதுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    பசவராஜ் பொம்மை

    பசவராஜ் பொம்மை


    மேலும், படம் குறித்து அவர் கூறுகையில், ' நாய்களை பற்றிய பல படங்கள் உள்ளன, ஆனால் இந்த திரைப்படம் உணர்சிகள் மற்றும் விலங்குகளின் ஒத்திசைவை காட்டுகிறது. நாய் அதனுடைய கண்கள் வழியாக உணர்சிகளை வெளிப்படுத்துகிறது. இது ஒரு நல்ல திரைப்படம். இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். நாயின் அன்பானது நிபந்தனையற்ற அன்பு அது தூய்மையானது' என்று அவர் கூறியுள்ளார்.

    முதல் - மந்திரி பசவராஜ் பொம்மை ஆசையாக வளர்த்து வந்த நாய் ஒன்று கடந்த ஆண்டு இறந்தபோது அதனை அவர் கட்டிப்பிடித்து கதறி அழுத புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

    ×