search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசேனா
    X
    சிவசேனா

    அதிகாலையில் பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது ஏன்?: அமித்ஷாவுக்கு சிவசேனா கேள்வி

    பாஜக பூட்டிய அறையில் அரசியல் செய்யாது என்றால் பட்னாவிஸ் அதிகாலையில் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது ஏன்? என அமித்ஷாவுக்கு சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
    மும்பை :

    முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டனர் என கூறி சிவசேனா பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியது. பின்னர் அந்த கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சியை அமைத்தது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிந்துதுர்க் வந்த அமித்ஷா முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதாக சிவசேனாவுக்கு எந்த உறுதி மொழியும் வழங்கப்படவில்லை என்றார்.

    மேலும் அவர் பா.ஜனதா எதையும் வெளிப்படையாக செய்யும், பூட்டிய அறைகளில் அரசியல் செய்யாது எனவும் தெரிவித்து இருந்தார்.

    இதற்கு சிவசேனா கட்சி சாம்னாவில் பதிலடி அளித்து உள்ளது. அதில், “பா.ஜனதா பூட்டிய அறையில் அரசியல் செய்யாது என்றால் அஜித்பவாருடன் சேர்ந்து அவசரமாக அதிகாலையில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது ஏன்” என கேள்வி எழுப்பி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, சிவசேனா பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியவுடன் ஆட்சி அமைப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் இரவோடு இரவாக தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆதரவுடன் கவர்னர் மாளிகையில் ரகசியமாக நடந்த விழாவில் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனினும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் 2 நாளில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
    Next Story
    ×