search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வத் நாராயண்
    X
    அஸ்வத் நாராயண்

    கொரோனா உபகரணங்கள் கொள்முதல் விவகாரம்: சித்தராமையா குற்றச்சாட்டுக்கு மந்திரிகள் மறுப்பு

    கொரோனா உபகரணங்கள் கொள்முதல் விவகாரத்தில் சித்தராமையா குற்றச்சாட்டை மறுத்த மந்திரிகள் கொள்முதல் செலவின விவர பட்டியலை வெளியிட்டனர். மேலும் முறைகேடு நடக்கவில்லை என்பதால் எந்த விசாரணையும் அவசியமில்லை என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா உபகரணங்களை கொள்முதல் செய்ததில் ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டுகள் கூறி வந்தார். இந்த நிலையில் நேற்று ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி, அதற்கான ஆதாரங்களை அவர் வெளியிட்டு இருந்தார். அத்துடன் இந்த முறைகேடு குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். காங்கிரஸ் தலைவர்கள் ஆதாரங்களை வெளியிட்டு குற்றச்சாட்டு கூறிய சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா, கொரோனா தடுப்பு பணி செயல்படை குழுவில் இடம் பெற்றுள்ள மந்திரிகளுடன் ஆலோசித்தார். பின்னர் காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுக்கு முதல்-மந்திரி எடியூரப்பாவே ஆதாரங்களை வெளியிட்டு விளக்கம் அளிக்க முடிவு செய்திருந்தார். ஆனால் மந்திரிகள் கேட்டுக் கொண்டதால், எடியூரப்பா நிருபர்களை சந்தித்து பேட்டி அளிக்கவில்லை. மாறாக முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படும் துறைகளின் மந்திரிகள் விளக்கம் அளித்தனர்.

    முன்னதாக விதானசவுதாவில் உள்ள முதல்-மந்திரியின் அலுவலகத்திலேயே துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரிகள் அசோக், பசவராஜ் பொம்மை, ஸ்ரீராமுலு, சுதாகர், சிவராம் ஹெப்பார் அவசர ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அந்த மந்திரிகள் கூட்டாக பேட்டி அளித்ததுடன் தங்களது துறைகளில் கொரோனா உபகரணங்கள் வாங்க ஒதுக்கிய நிதி மற்றும் செலவான விவரங்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டனர்.

    மேலும் தங்களது துறைகளில் எந்த விதமான முறைகேடுகளும் நடக்கவில்லை என்றும், காங்கிரஸ் பொய் குற்றச்சாட்டு கூறுவதாகவும் மந்திரிகள் கூறினார்கள். பின்னர் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் எந்த முறைகேடு நடக்கவில்லை. உயர்கல்வித்துறையில் ரூ.750 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.290 கோடி தான் செலவு செய்யப்பட்டுள்ளது. சீனாவிடம் 1 லட்சம் கவச உடைகள் தலா ரூ.2,200 வாங்கி இருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார். அந்த உபகரணங்கள் தற்போது மார்க்கெட்டில் ரூ.3,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக வென்டிலேட்டர்கள் தமிழ்நாட்டில் ரூ.4 லட்சத்திற்கும், கேரளாவில் ரூ.5.50 லட்சத்திற்கும் வாங்கி இருப்பதாகவும், கர்நாடகத்தில் மட்டும் ரூ.5.60 லட்சத்தில் இருந்து ரூ.21 லட்சத்திற்கு வென்டிலேட்டர்கள் வாங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வென்டிலேட்டர்களின் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப விலை அதிகமாக இருக்கும் என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரியவில்லை.

    இதே தற்போது அரசு வாங்கி இருக்கும் வென்டிலேட்டர்களை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.23 லட்சம் வரை வாங்கி உள்ளனர். அப்போது கூட வென்டிலேட்டர்களின் பற்றாக்குறை இல்லை. தற்போது கொரோனாவால் மக்கள் உயிர் இழப்பு அதிகரித்து வருகிறது. மக்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க தரமான வென்டிலேட்டர்களை கூட்டணி ஆட்சியில் கொடுத்த விலையை காட்டிலும் தற்போது குறைந்த விலைக்கு வாங்கியுள்ளோம்.

    தற்போது முக கவசமான என்.95 மற்றும் 3 எம்.95 ஆகியவை மிக குறைந்த விலைக்கு ரூ.147-க்கும் கூட வாங்கியுள்ளோம். ஆனால் கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் அதனை ரூ.300 முதல் ரூ.800 வரை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது. கொரோனா பரவும் நேரத்தில் சட்டசபைக்கு வந்த காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு கவச உடைகள் வழங்கவில்லை, பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவில்லை என்று அரசு மீது குற்றச்சாட்டு கூறினார்கள். காங்கிரஸ் தலைவர்கள் கூறுவது போல, கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் ஒரு ரூபாய் கூட முறைகேடு நடக்கவில்லை. அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி, மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே காங்கிரஸ் தலைவர்களின் எண்ணம்.

    இந்த கொரோனா பாதித்த நேரத்திலும் அரசு மீது தவறான குற்றச்சாட்டுகளை மக்களிடம் காங்கிரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி விடலாம் என நினைக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் கேட்கும் அனைத்து விதமான ஆவணங்களையும் அளிக்க தயார். எந்த ஒரு முறைகேடும் நடக்காதபட்சத்தில் இதுதொடர்பாக நீதி விசாரணை உள்பட வேறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×