
தேசிய அரசியல் கட்சிகள் தங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைத்தது? அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது? என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளன.
அதன்படி 6 தேசிய கட்சிகளுக்கு 2018-19ம் நிதி ஆண்டில் கிடைத்த மொத்த வருமானம் ரூ.3698 கோடி என்று தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.918 கோடி கிடைத்துள்ளது. திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.192 கோடி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ரூ.100 கோடி வருமானம் கிடைத்துள்ளன. பா.ஜனதா கட்சிக்கு முந்தைய ஆண்டை விட 134 சதவீதம் அதிக வருவாய் கிடைத்து இருக்கிறது.
தேசிய கட்சிகளுக்கு அன்பளிப்பு மற்றும் பங்கு தொகைகள் மூலம் வருமானம் கிடைத்து இருப்பதாக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வருவாயை 6 கட்சிகளும் எப்படி, எவ்வளவு செலவிட்டுள்ளன என்ற விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பா.ஜனதா கட்சி தனக்கு கிடைத்த வருவாயில் சுமார் 50 சதவீதத்தை செலவிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கும், 4 மாநில சட்டசபைக்கும் பா.ஜனதா கட்சி 1264 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் 1,078 கோடி ரூபாய் பா.ஜனதா செலவு செய்துள்ளது. வேட்பாளர்களுக்கு ரூ.186 கோடியை கொடுத்துள்ளது. பொதுக்கூட்டங்கள் நடத்த ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்காக இந்த அளவுக்கு பணத்தை செலவிடவில்லை. வேட்பாளர்களுக்கும் காங்கிரஸ் சார்பில் அதிக பணம் வழங்கப்படவில்லை. அதுபோல மற்ற மாநில கட்சிகளும் தேர்தலுக்காக அதிகம் செலவு செய்யவில்லை.