search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை ஐயப்பன் கோவில்
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில்

    சபரிமலை தரிசனத்துக்கு தமிழக பெண்கள் 139 பேர் பதிவு - போலீஸ் அனுமதி கிடைக்குமா?

    சபரிமலை செல்ல 319 இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் தமிழகத்தில் இருந்து 139 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

    இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதில் அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மாநில அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறியது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து 65 மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 14-ந்தேதி மறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு வெளியானது. அதில், சபரிமலை விவகாரம் குறித்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து இறுதி முடிவு எடுக்கும் என்று கூறியது.

    அதே நேரம் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை தடை செய்யவில்லை. இதன் மூலம் இப்போதும் இளம்பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் என்ற நிலையே நீடிக்கிறது.

    இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 17-ந்தேதி முதல் மண்டல பூஜை விழா தொடங்கியது. இதை தொடர்ந்து மகரவிளக்கு பூஜை விழாவும் ஆரம்பமாகும். இரு விழாக்களுக்காகவும் சபரிமலை கோவில் சுமார் 2 மாதங்கள் திறந்திருக்கும்.

    கடந்த ஆண்டு இந்த விழாக்களின்போது சபரிமலைக்கு ஏராளமான இளம்பெண்கள் தரிசனத்திற்கு வந்தனர். அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சபரிமலை போராட்டக்களமாக மாறியது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. வருமானமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    சபரிமலை விவகாரம் காரணமாக கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்தது.

    சுப்ரீம் கோர்ட்

    இந்த ஆண்டு கட்சிக்கும், ஆட்சிக்கும் மீண்டும் சிக்கல் வராமல் இருக்க சபரிமலை கோவிலுக்கு வரும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டோம் என்று கேரள அரசு அறிவித்து விட்டது. சபரிமலை விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி இருப்பதால் நடைமுறைப்படி ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று கேரள சட்ட மந்திரி ஏ.கே. பாலன் விளக்கம் அளித்தார்.

    சபரிமலை கோவிலுக்குள் இளம்பெண்களை அனுமதிக்க கேரள அரசு மறுத்துவிட்ட தகவல் வெளியானதும், மண்டல பூஜைக்கு நடைதிறந்த முதல் நாளே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த ஆண்டை காட்டிலும் இரு மடங்கு பக்தர்கள் சபரிமலை வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனமும் செய்தனர்.

    பக்தர்களின் வருகை அதிகரித்ததுபோல் நடைதிறந்த 2 நாட்களிலேயே கோவிலின் வருமானமும் ரூ.3.32 கோடியாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இது ரூ.2.04 கோடியாக இருந்தது.

    சபரிமலையில் மண்டல காலம் சுமூகமாக நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பெண் ஆர்வலர்கள் பலர் கோவிலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளனர். 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து சபரிமலை வர உள்ளதாகவும், பாதுகாப்பு தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கு தேவசம் போர்டு மந்திரி மறுப்பு தெரிவித்துள்ளார். கோவிலுக்கு வர விரும்பும் இளம்பெண்கள் கோர்ட்டில் அனுமதி வாங்கித்தான் வரவேண்டும் என்று கூறி உள்ளார். அவ்வாறு வராதவர்கள் பம்பையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவிப்பை தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பம்பை, நிலக்கல், எரிமேலி பகுதிகளில் பெண் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்து நிறுத்தி அவர்களின் வயது குறித்த ஆதாரங்களை பரிசோதித்து அனுப்பி வருகிறார்கள்.

    இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் கூறும்போது, கோவிலின் ஐதீகம் பற்றி கூறியதும், இளம்பெண்கள் பலர் அவர்களாகவே திரும்பி சென்று விடுகிறார்கள். மற்றவர்களை நாங்கள் நிலக்கல் பகுதியிலேயே தடுத்து நிறுத்தி விடுகிறோம்.

    முதல் நாளில் 10 பெண்களும், நேற்று ஆந்திராவைச் சேர்ந்த 2 பெண்களும் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர் என்றனர்.

    சபரிமலைக்கு வரும் பெண்கள் அனைவரும் அவர்களின் வயது சான்று மற்றும் ஆதார் நகல்களை கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோரும் இந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

    இந்த ஆண்டு சபரிமலை செல்ல சுமார் 8 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெண்களின் எண்ணிக்கையையும், அவர்களின் வயது விவரங்களும் கடுமையாக பரிசோதிக்கப்படுகிறது.

    இன்றைய நிலவரப்படி 319 இளம்பெண்கள் சபரிமலை செல்ல ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் தமிழகத்தில் இருந்து 139 பேரும், ஆந்திரா 160, கர்நாடகா 9, தெலுங்கானா 8, ஒடிசாவில் இருந்து 3 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

    இதனை தெரிவித்த தேவஸ்தான அதிகாரிகள் கேரளாவில் இருந்து இளம்பெண்கள் யாரும் முன்பதிவு செய்யவில்லை என்பதையும் தெரிவித்தனர்.

    கோவிலுக்குள் இளம்பெண்களை அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு தடையில்லை என்றாலும், மாநில அரசு அந்த உத்தரவை பின்பற்றப்போவதில்லை என்று கூறி உள்ளது. இதனால் மண்டல பூஜை காலத்தில் சபரிமலை செல்ல முன்பதிவு செய்துள்ள தமிழக பெண்கள் 139 பேர் உள்பட 319 பேருக்கு ஐயப்பனை தரிசிக்க அனுமதி கிடைக்குமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவர்களை பத்திரமாக அழைத்துச் செல்ல போலீசாரும் முன் வருவார்களா? என்பது கேள்விக்குறிதான்.

    மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழா காலங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதையே போலீசாரும், அரசும் விரும்புகிறது. இதனால் கோவிலுக்கு வரும் இளம்பெண்களை போலீசார் தடுத்து உரிய அறிவுரை கூறி திருப்பி அனுப்புவார்கள் என்றே கூறப்படுகிறது.

    Next Story
    ×