search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு
    X

    காவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு

    காவிரி வரைவு செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CauveryIssue #CauveryManagementBoard #CentralGovt #TNGovt
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது. அதன்படி செயல் திட்ட அறிக்கை நகல்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டன.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில், காவிரி வழக்கின் விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது தமிழகம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.


    வரைவு செயல் திட்டத்தில் குறிப்படப்பட்டுள்ள குழுவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. வரைவு செயல் திட்டக் குழுவின் தலைமையகம் பெங்களூரில் இருக்கக் கூடாது என்றும் தலைநகர் டெல்லியில் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வாதிட்டது. அப்போது அந்த குழுவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க தயார் என மத்திய அரசு தெரிவித்தது.  

    காவிரி விகாரத்தில் மத்திய அரசின் முடிவே இறுதியானது என்ற விதியை எதிர்த்து புதுச்சேரி அரசு வாதிட்டது. கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து, குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்றும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது, குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியை கோரலாம். குழுவின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இந்த உத்தரவினை ஏற்று வரைவு செயல் திட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர். #CauveryIssue #CauveryManagementBoard #CentralGovt #TNGovt
    Next Story
    ×