என் மலர்
இந்தியா
- டிரைவர் அக்ஷய், பள்ளி மாணவி ஸ்ருதி லட்சுமி, ஜோதி லட்சுமி ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் தாழமேல் கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷய்(வயது23). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் கவரலூர் பள்ளிவடக்கம் பகுதியை சேர்ந்த சுனில் பினி-நீலம்மாள் தம்பதியின் மகளான 10-ம் வகுப்பு மாணவி ஸ்ருதி லட்சுமி(16) மற்றும் ஜோதிலட்சுமி(21) ஆகிய இருவரும் பயணம் செய்தனர்.
அவர்கள் அஞ்சல் பகுதியில் இருந்து கரவலூருக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களது ஆட்டோ மாவிலா கோவில் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக எதிரே ஐயப்ப பக்தர்கள் குழுவை அழைத்து வந்த சுற்றுலா பஸ் வந்தது.
அந்த பஸ்சும், ஆட்டோவும் திடீரென நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த டிரைவர் அக்ஷய், பள்ளி மாணவி ஸ்ருதி லட்சுமி, ஜோதி லட்சுமி ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
ஆட்டோ டிரைவர் அக்ஷய் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த பள்ளி மாணவி மற்றும் இளம்பெண்ணை மீட்டு அஞ்சல் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆனது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் பலியான சம்பவம் அஞ்சல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.
- நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார்.
இந்தியாவின் கலாச்சாரம், தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் மகாகவி பாரதியார் என பிரதமர் மோடி புகழந்துள்ளார்.
மேலும், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன.
இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் “ஸ்பாட் புக்கிங்” எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
- கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக கூட்ட நெரிசல் இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட்டதன் காரணமாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
ஆன்லைன் முன்பதிவு மூலமாக தினமும் 70 பேருக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக 20 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
ஐகோர்ட் உத்தரவின் பேரில், கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் "ஸ்பாட் புக்கிங்" எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் தற்போது பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனால் தினமும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் 45 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மதியம் ஒரு மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கும் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் கூடுதலாக 3,500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும். சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 45 நிமிடங்கள் கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
- மும்பையில் உள்ள போலி நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தம் வழங்குவதாக கூறி இந்த மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டு இருந்தது.
- விசாரணையின் ஒரு பகுதியாக ஆர்-இன்ப்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 13 வங்கிக்கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
மும்பை:
அனில் அம்பானிக்கு சொந்தமான ஆர்-இன்ப்ரா நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுமான திட்டங்களுக்கான பொது நிதியை மோசடி செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மும்பையில் உள்ள போலி நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தம் வழங்குவதாக கூறி இந்த மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ஆர்-இன்ப்ரா நிறுவனத்துக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக ஆர்-இன்ப்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 13 வங்கிக்கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த கணக்குகளில் உள்ள ரூ.54.82 கோடியும் முடக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் கடந்த மாதம் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஒருவாரமாக இண்டிகோ விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
- மற்ற விமான நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் விமான பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
முக்கிய தருணத்தில் சிலர் சமயோசிதமாக செயல்பட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். அப்படி ஒரு ஆட்டோ டிரைவரின் செயல் சமூக வலைத்தளத்தில் பாராட்டை குவித்து வருகிறது.
கடந்த ஒருவாரமாக இண்டிகோ விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதற்கிடையே மற்ற விமான நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் விமான பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் தனது ஆட்டோவை இண்டிகோ விமானம் போல் மாற்றி அமைத்து கவனம் பெற்றார். அவரது ஆட்டோ பலரின் விருப்பங்களை பெற்று கூடுதல் சவாரிகளை பெற்றுக்கொடுத்தது. அவர் ஆட்டோ இயக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியும் வைரலானது. இருந்தாலும், இந்த வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருத்து பதிவிட்டனர்.
- ஆதார் அட்டையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய, ‘யுதய்’ அனுமதித்த ஆவணப்பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது.
- பான்கார்டு என்பது முக்கியமாக வரிவிதிப்பு தொடர்பான ஆவணம், அடையாளம் அல்லது முகவரி நிரூபிக்கும் ஆவணம் அல்ல.
ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 'யுதய்' என்று அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை பெயர் மாற்றத்துக்கான ஆதார ஆவணமாக ஏற்கப்பட்டு வந்த பான்கார்டு தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் இதற்கு முன்பாக 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பட்டியல் ஒன்றும், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பட்டியல் என 2 வகையான ஆவணப்பட்டியல் மட்டுமே இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் 4 வகையான புதிய ஆவணப்பட்டியலை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டு உள்ளது.
இதில் 5 வயதிற்கு உட்பட்டவர்கள், 5 வயதுக்கு மேல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 4 வகையான ஆவணப்பட்டியல் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதில் குறிப்பாக ஆதார் அட்டையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய, 'யுதய்' அனுமதித்த ஆவணப்பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது.
அதாவது பெயர் திருத்தம் போன்ற மாற்றங்களுக்கு பான் கார்டு சமர்ப்பித்தாலும் அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு வந்தது. பான் கார்டில் பெயர், தந்தை பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதால், அது ஒரு அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்பட்டது.
ஆனால் நேற்று முன்தினம் 'யுதய்' புதிதாக வெளியிட்டுள்ள ஆவணப்பட்டியலில் பான் கார்டு நீக்கப்பட்டுள்ளது. அதாவது இனி ஆதார் பெயர் மாற்றத்திற்காக பான் கார்டை சமர்ப்பிக்க முடியாது. பான் கார்டில் முகவரி குறிப்பிடப்படவில்லை. பெயர் தவிர மற்ற அடையாள உறுதிப்படுத்தும் விவரங்கள் குறைவாக உள்ளன.
பான்கார்டு என்பது முக்கியமாக வரிவிதிப்பு தொடர்பான ஆவணம், அடையாளம் அல்லது முகவரி நிரூபிக்கும் ஆவணம் அல்ல. பான் கார்டில் பெயர் மட்டுமே இருப்பதால், அது முறையான அடையாள சான்றாக போதுமானதாக கருதப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், இந்திய பாஸ்போர்ட், ரேஷன்கார்டு (புகைப்படம் இருக்கும் குடும்ப தலைவர் மட்டும்), வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை இணைக்கலாம்.
இனி 18 வயதுக்கு மேற்பட்டோர் பெயர் திருத்தம் செய்ய ஆவணம் வழங்க முடியாமல் கடும் நெருக்கடியை சந்திக்கும் சூழல் நிலவ உள்ளது என்பதால் 'யுதய்' வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
- எம்.எல்.ஏ.க்களுக்கு தற்போதுள்ள சம்பளத்தை விட 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
- ரூ.1.11 லட்சம் சம்பளம் பெறும் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.3.45 லட்சமாக உயர்த்தப்பட்டது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநில எம்.எல்.ஏ.க்கள் தங்களது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கடந்த சில ஆண்டுளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஒடிசாவில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை 3 மடங்காக உயர்த்த சட்டப்பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, எம்.எல்.ஏ.க்களுக்கு தற்போதுள்ள சம்பளத்தை விட 3 மடங்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது எம்.எல்.ஏ.க்கள் ரூ.1.11 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். இது ரூ.3.45 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல் மந்திரி, மந்திரிகள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது பதவியில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் யாராவது உயிரிழந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-வது சட்டசபை பொறுப்பேற்றது. அன்றைய தினம் முதல் இந்த சம்பள உயர்வு அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.
- தீபாவளியை உலகளவில் எடுத்துச் செல்ல இந்தக் கவுரவம் உதவுகிறது என்றார்.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டையில் அரிய பாரம்பரிய கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கு இடையோன குழுவின் 20வது அமர்வு கடந்த 8ம் தேதி துவங்கியது.
இந்தக் கூட்டத்தில் 78 நாடுகளிலிருந்து வந்த பல்வேறு பரிந்துரைகளை ஆய்வுசெய்த ஐ.நா. கலாசார நிறுவனம், தீபாவளி பண்டிகையை பட்டியலில் சேர்த்துள்ளது குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
இதுதொடர்பாக, மத்திய கலாசாரத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள், மனித குலத்தின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் தீபாவளிப் பண்டிகையும் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பதவி காலத்தில், இந்தியாவின் கலாசார பாரம்பரியங்களுக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
தீபாவளியைக் கொண்டாடும் நோக்கமான, நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் போன்றவற்றை உலகளவில் எடுத்துச் செல்ல இந்தக் கவுரவம் உதவுகிறது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை தீபாவளி நமது கலாசாரம் மற்றும் வாழ்வியலுடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. இது நமது நாகரிகத்தின் ஆன்மா. இது வெளிச்சத்தையும், நீதியையும் வெளிப்படுத்துகிறது. யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி சேர்க்கப்படுவது இத்திருவிழாவின் உலகளாவிய பிரபலத்துக்கு மேலும் பங்களிக்கும். ஸ்ரீ ராமரின் கொள்கைகள் நம்மை என்றென்றும் வழிநடத்தட்டும் என பதிவிட்டுள்ளார்.
- விவசாய நிலத்தில் மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்டினார்.
- மாதந்தோறும் 5-ம் மற்றும் 19-ந் தேதிகளில் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரத்தை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி ஸ்ரீதேவி. மகன் வேத சாய் தத்தா (வயது 13).
வேத சாய் தத்தா கடந்த 2016-ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்தார். பாசத்துடன் வளர்த்த மகன் இறந்துவிட்டதால் பெற்றோர்களால் வலியில் இருந்து மீள முடியவில்லை. மகன் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக கோவில் கட்ட முடிவு செய்தனர்.
அதன்படி கிழக்கு கோவதாரி மாவட்டம், கொருக்கொண்டா அடுத்த கனுப்பூரில் உள்ள விவசாய நிலத்தில் மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்டினார்.
ரூ.45 லட்சம் செலவில் பளிங்கு கற்களால் நினைவிடம் கட்டப்பட்டது. அதற்கு வேத சாய் தத்த மந்திர் என பெயரிட்டனர். சுற்றிலும் பூந்தோட்டம் அமைத்தனர்.
மகனின் நினைவாக ஓம்காரேஸ்வரர் அறக்கட்டளை நிறுவி ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளனர். மாதந்தோறும் 5-ம் மற்றும் 19-ந் தேதிகளில் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
- 2015 முதல் 2025 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் இந்த மோசடி நடந்திருப்பதாக தேவஸ்தானம் குற்றச்சாட்டு
- கலப்பட நெய், நன்கொடை திருட்டு சர்ச்சைகளை தொடர்ந்து தற்போது பட்டு சால்வை ஊழல்
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பட்டு சால்வை விநியோகத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அக்கோயிலை நிர்வகிக்கும் திருப்பதி தேவஸ்தானம் குற்றம் சாட்டியுள்ளது. 2015 முதல் 2025 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் இந்த மோசடி நடந்திருப்பதாக தேவஸ்தானம் குற்றம் சாட்டியுள்ளது.
நன்கொடையாளர்கள் மற்றும் விஐபி தரிசனத்தின் போது வழங்கப்படும் 'பட்டு சால்வைகள்', பட்டால் செய்யப்பட்டவை இல்லை என்றும் 100% பாலியஸ்டர் துணியால் செய்யப்பட்டவை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
VRS Export என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே இந்த பட்டு சால்வைகளை கோயிலுக்கு விநியோகித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துவிட்டது. இந்த மோசடி மூலம் ரூ.54 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, "கொள்முதல் துறையில் சில முரண்பாடுகள் இருப்பதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு, விசாரணையை மாநில ஊழல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
கலப்பட நெய், நன்கொடை திருட்டு சர்ச்சைகளை தொடர்ந்து தற்போது பட்டு சால்வை ஊழல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 120 எம்பிக்கள் கையெழுத்து
- வாக்கு வங்கிகளை காப்பாற்றி கொள்வதற்காகவே இந்த செயல்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. மற்றும் பல அரசியல் விமர்சகர்களும் இந்த கருத்தை முன்வைத்தன.
இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் 'இம்பீச்மெண்ட்' செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் சொன்னவாறே இந்தியா கூட்டணி தலைவர்கள் நேற்று, ஜி.ஆர். சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனக்கூறி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதத்தை அளித்தனர். அதில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 120 எம்பிக்கள் கையொமிட்டிருந்தனர்.
இந்நிலையில் நீதிபதி சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசிய அமித்ஷா, நீதிபதிக்கு எதிரான இந்த தீர்மானம் அர்த்தமற்றது என்றும், தங்களது வாக்கு வங்கிகளை காப்பாற்றி கொள்வதற்காக எதிர்க்கட்சியினர் இவ்வாறு செய்வதாக தெரிவித்தார். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தனது உரையை நிகழ்த்தி வருகிறார்.
- நாடாளுமன்றம் மிகப்பெரிய பஞ்சாயத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
- நாடாளுமன்ற விதிகளின்படி நாங்கள் எப்போதும் விவாதங்களுக்குத் தயாராக இருக்கிறோம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தம் தொடர்பாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அமித் ஷா மேலும் கூறியதாவது:-
இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகளிடம் இதைப் பற்றி இரண்டு அமர்வுகளுக்குப் பிறகு விவாதிக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அவர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் ஒப்புக்கொண்டோம்... ஏன் 'இல்லை' என்று சொன்னோம்? 'இல்லை' என்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று, அவர்கள் SIR பற்றிய விவாதத்தை விரும்பினர். இந்த சபையில் SIR பற்றிய விவாதம் இருக்க முடியாது என்பதை நான் தெளிவாக அறிவேன். SIR தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.
இந்தியாவின் EC மற்றும் CEC அரசாங்கத்தின் கீழ் செயல்படவில்லை. விவாதம் நடத்தப்பட்டு கேள்விகள் எழுப்பப்பட்டால், அதற்கு யார் பதிலளிப்பார்கள்? தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் சொன்னபோது, உடனடியாக ஒப்புக்கொண்டோம்.
இந்த விஷயத்தில் விவாதம் தொடர்பாக முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு தடை ஏற்பட்டது. இது மக்களுக்கு இதைப் பற்றி விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை என்ற தவறான தகவல் பரவியது. இந்த நாட்டில் விவாதங்களுக்கு நாடாளுமன்றம் மிகப்பெரிய பஞ்சாயத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பாஜக- தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபோதும் விவாதங்களிலிருந்து விலகிச் செல்லாது. எந்த விஷயமாக இருந்தாலும், நாடாளுமன்ற விதிகளின்படி நாங்கள் எப்போதும் விவாதங்களுக்குத் தயாராக இருக்கிறோம்.
இந்திய வாக்காளர் மட்டுமே இந்தியாவில் வாக்களிக்க வேண்டும் என்பதை எஸ்ஐஆர் உறுதி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.






