என் மலர்
இந்தியா
- முதல் கட்டமாக டிசம்பர் 15-ம் தேதி பிரதமர் மோடி ஜோர்டான் செல்கிறார்.
- இரண்டாவது கட்டமாக பிரதமர் மோடி 16-ம் தேதி எத்தியோப்பியா செல்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதல் கட்டமாக, மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று டிசம்பர் 15-ம் தேதி பிரதமர் மோடி ஜோர்டான் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ஜோர்டான் மன்னருடன் இருநாட்டு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இரண்டாவது கட்டமாக பிரதமர் மோடி 16-ம் தேதி எத்தியோப்பியா செல்கிறார். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது அலியைச் சந்தித்து பிரதமர் மோடி இந்தியா-எத்தியோப்பியா இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்து உள்ளார்.
தனது சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக 17-ம் தேதி பிரதமர் மோடி ஓமன் நாட்டிற்கு செல்கிறார். அந்நாட்டிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ள இருக்கும் 2-வது சுற்றுப்பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின்போது இந்தியா-ஓமன் இடையிலான வர்த்தகம், முதலீடுகள், இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர்.
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில்,டெல்லி கலவர வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சமூக ஆர்வலர் உமர் காலித்துக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனைகளுடன் 2 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது
2020 முதல் உமர் பலமுறை ஜாமின் கேட்டு போராடி வரும் நிலையில், டிசம்பர் 16 முதல் 29 வரை குடும்ப திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
- நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை.
- பொதுப் பிரிவினர் மட்டும் 76.45% பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவையில் நீதிபதிகள் நியமனம் குறித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில், "நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை. ஆதலால் 2018 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 841 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பொதுப் பிரிவினர் மட்டும் 76.45% பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பட்டியலினத்தவர் 3.8% பேரும் பழங்குடியினர் 2.0% பேரும் ஓபிசி பிரிவில் 12.2% பேரும் சிறுபான்மையினர்கள் 5.5% பேரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ராம் சிங் சமீபத்தில் ரூ.200க்கு ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
- தனது மனைவியுடன் கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகினார்.
பஞ்சாபின் பரித்கோட் மாவட்டத்தில் உள்ள சைடேக் கிராமத்தைச் சேர்ந்த நசீப் கவுர் மற்றும் அவரது கணவர் ராம் சிங், விவசாயத் தொழிலாளர்கள் ஆவர்.
ராம் சிங் சமீபத்தில் ரூ.200க்கு ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த சீட்டுக்கு குலுகலில் தேர்வாகவே, ரூ.1.5 கோடி பரிசுத் தொகையை ராம் சிங் வென்றார்.
இந்த விஷயம் சுற்றியுள்ள கிராமங்களில் பரவினால் யாரவது தங்களை தாக்கிவிட்டு பணத்தை அபகரித்துக் கொள்வார்கள் என ராம் சிங்- நசீப் கவுர் தம்பதியினர் பயந்தனர்.
இதனால் ராம் சிங் வீட்டைப் பூட்டி, தனது செல்போனை அணைத்துவிட்டு, தனது மனைவியுடன் யாருக்கும் சொல்லாமல் கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகினார்.
இது குறித்து அறிந்ததும், பரித்கோட் போலீசார் ராம் சிங் மற்றும் நசீப் கவுரைத் தொடர்பு கொண்டனர்.
மக்களின் பாதுகாப்பிற்காக தான் நாங்கள் இருக்கிறோம் என்றும், உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும் போலீசார் அவர்களிடம் உறுதியளித்துள்ளனர். இதனால் தைரியம் அடைந்தராம் சிங் மற்றும் நசீப் கவுர் வீடு திரும்பினர்.
- மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
- தலைமை நீதிபதி அமர்வு எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும்.
எஸ்ஐஆர் வழக்கில் ஜனவரி மாதம் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு அறிவித்துள்ளது.
எஸ்ஐஆர் விவகாரத்தில் இதற்குமேல் புதிதாக எந்த வழக்குகளும் அனுமதிக்கப்படாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
எஸ்ஐஆர் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும் தலைமை நீதிபதி அமர்வு ஜனவரி மாதத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
- எனக்கு எந்த பதிலும் வரவில்லை என்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நேற்று பேசும் போது அமித்ஷாவின் கைகள் நடுங்கியதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நேற்று அமித்ஷா மிகவும் பதட்டமாக இருந்தார். அவர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவரது கைகள் நடுங்கின. அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார். இவை அனைத்தையும் நேற்று அனைவரும் பார்த்தனர்.
நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை. அவர் எந்த ஆதாரங்களையும் அளிக்கவில்லை. களத்துக்கு வாருங்கள், எனது அனைத்து செய்தியாளர்கள் சந்திப்பு பற்றியும் பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று நான் அவருக்கு நேரடியாக சவால் விடுத்தேன். ஆனால், எனக்கு எந்த பதிலும் வரவில்லை என்றார்.
- சர்தார் படேலின் மகள் மற்றும் தனிச் செயலாளராக இருந்த மணிபென் படேலின் நாட்குறிப்பில் உள்ள பதிவுகளைச் சுட்டிக்காட்டினார் .
- ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களுக்காகவே அரசு நிதியைப் பயன்படுத்த விரும்பினார்.
குஜராத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜவஹர்லால் நேரு பாபர் மசூதியைக் கட்ட அரசு நிதி நிதியைப் பயன்படுத்த விரும்பினார் என்றும், ஆனால் சர்தார் வல்லபாய் படேல் அதை உறுதியாக எதிர்த்து தடுத்தார் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு ஆதாரமாக அப்போதைய பாஜக தலைவர்கள் மற்றும் சர்தார் படேலின் மகள் மற்றும் தனிச் செயலாளராக இருந்த மணிபென் படேலின் நாட்குறிப்பில் உள்ள பதிவுகளைச் சுட்டிக்காட்டினார் .
அந்த நாட்குறிப்பின்படி, 1950 செப்டம்பர் 20 அன்று நேரு, பாபர் மசூதி குறித்து ஒரு கேள்வியை எழுப்பியதாகவும், அதற்குப் படேல், "மசூதி கட்ட அரசு பணம் கொடுக்க முடியாது" என்று தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ராஜ்நாத் சிங்கின் கூற்றுக்களை மறுத்த காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் இது வரலாற்றைத் திரிக்கும் முயற்சி என்று சாடினார்.
மேலும், மணிபென் படேலின் நாட்குறிப்பின் அசல் குஜராத்தி பக்கங்களை இன்று பாராளுமன்ற கூட்டத்திற்கு வருகை தந்த ராஜ்நாத் சிங்கிடம் ஜெய்ராம் ரமேஷ் தந்துள்ளார்.
முன்னதாக ராஜ்நாத் சிங் பரப்பும் கருத்துகளுக்கும் அசல் பதிவுகளுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
நேரு எப்போதும் கோவிலோ, மசூதியோ, தேவாலயமோ என எந்த மத ஸ்தாபனத்திற்கும் அரசுப் பணம் செலவழிக்கப்படுவதை எதிர்த்தார் என்றும், மாறாக ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களுக்காகவே அரசு நிதியைப் பயன்படுத்த விரும்பினார் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
- மீட்புப் படையினர் கிளப்பில் தீயை அணைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மறுபுறம் லூத்ரா சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டனர்.
- கிளப்பின் சட்டவிரோத கட்டுமானம் குறித்து ரவி ஹர்மல்கர் என்ற சமூக சேவகர் புகார் அளித்த பிறகு, அதை இடிக்க உத்தரவிடப்பட்டபோதும் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, 'பிர்ச் பை ரோமியோ லேன்' இரவு விடுதியில், கடந்த 6ம் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதி ஊழியர்கள் 20 பேர், வாடிக்கையாளர்கள் ஐந்து பேர் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த விடுதியின் உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்தும் பணிகள் நடந்து வருகிறது.
கிளப்பின் சட்டவிரோத கட்டுமானம் குறித்து ரவி ஹர்மல்கர் என்ற சமூக சேவகர் புகார் அளித்த பிறகு, அதை இடிக்க உத்தரவிடப்பட்டபோதும் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
முன்னதாக கோவா காவல்துறை நடத்திய விசாரணையில், விபத்து நடந்ததும் தீயணைப்புப் படையினரும் பிற மீட்புப் படையினரும் கிளப்பில் தீயை அணைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மறுபுறம் லூத்ரா சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டனர்.
விபத்து நடந்த சில மணி நேரங்களில் அதிகாலை 1:17 மணிக்கு, இருவரும் மேக் மை டிரிப் தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இருவரும் அதிகாலை 5:30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏறி நாட்டை விட்டு வெளியேறினர். தாய்லாந்தின் ஃபூகெட்டுக்கு அவர்கள் சென்றுள்ளனர்.
இந்தச் சகோதரர்களைப் பிடிக்க சிபிஐ கோரிக்கையின் பேரில் இன்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
மேலும் தாய்லாந்து போலீசாரை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு சகோதரர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் சவுரப் லூத்ரா, கவுரவ் லூத்ரா ஆகியோரை இன்று அதி காலை தாய்லாந்து போலீ சார் கைது செய்து உள்ளனர். அவர்கள் இருவரும் புக்கெட்டில் உள்ள தடுப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, கோவா கிளப்பின் உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குடிவரவு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அவை முடிந்ததும் இன்று மாலை அல்லது நாளைக்குள் இருவரும் விமானம் மூலம் இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வரப்படுவார்கள் என்றனர்.
லூத்ரா சகோதரர்கள் பாஸ்போர்ட்களை ரத்து செய்வது குறித்து வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
மேலும் திங்களன்று, இதேபோன்ற முறையில் இயங்கி வந்த ரோமியோ கிளப்புக்குச் சொந்தமான இரண்டு இரவு விடுதிகளை அதிகாரிகள் மூடினர்.
மேலும் இரவு விடுதியின் இணை உரிமையாளரான அஜய் குப்தா டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே லூத்ரா சகோதரர்கள் சார்பில் முன்ஜாமீன் கோரி டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட வணிகப் பயணத்திற்காக தாய்லாந்து சென்றதாக அவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மனு குறித்து நாளை விசாரணை நடைபெறுகிறது. ஆனால் இருவருக்கும் ஜாமீன் வழங்குவதை கோவா காவல்துறை கடுமையாக எதிர்த்துள்ளது.
- மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார்.
- மெஸ்ஸியுடன் ரசிகர்கள் சிறப்பு புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிப்பு.
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். 13-ந் தேதி ஐதராபாத் வரும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியுடன் ரசிகர்கள் சிறப்பு புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம். ஒரு புகைப்படத்திற்கு ரூ. 10 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகர் பார்வதி ரெட்டி கூறியதாவது:-
மெஸ்ஸி வருகிற 13-ந் தேதி மாலை ஐதராபாத் வருகிறார். ஃபலக்னுமா அரண்மனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மெஸ்ஸியை சந்திக்கலாம். நிகழ்வில் நீங்கள் அவருடன் புகைப்படம் எடுக்கலாம். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரூ.9.95 லட்சம் (ஜிஎஸ்டி) கூடுதலாக செலவாகும். இதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் மாவட்ட செயலியில் கிடைக்கும். 100 பேர் மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும்.
உப்பல் மைதானத்தில் 3 மணி நேர நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுகளில் மெஸ்ஸி பங்கேற்பார்.
பின்னர் நடைபெறும் அணிவகுப்பில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மெஸ்ஸியை கவுரவிப்பார். மாவட்ட செயலியில் அனைத்து வகையான டிக்கெட்டுகளும் கிடைக்கும்.
இந்த நிகழ்வுக்கு கிரிக்கெட் வீரர்கள் அழைக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- டிரைவர் அக்ஷய், பள்ளி மாணவி ஸ்ருதி லட்சுமி, ஜோதி லட்சுமி ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் தாழமேல் கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷய்(வயது23). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் கவரலூர் பள்ளிவடக்கம் பகுதியை சேர்ந்த சுனில் பினி-நீலம்மாள் தம்பதியின் மகளான 10-ம் வகுப்பு மாணவி ஸ்ருதி லட்சுமி(16) மற்றும் ஜோதிலட்சுமி(21) ஆகிய இருவரும் பயணம் செய்தனர்.
அவர்கள் அஞ்சல் பகுதியில் இருந்து கரவலூருக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களது ஆட்டோ மாவிலா கோவில் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக எதிரே ஐயப்ப பக்தர்கள் குழுவை அழைத்து வந்த சுற்றுலா பஸ் வந்தது.
அந்த பஸ்சும், ஆட்டோவும் திடீரென நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த டிரைவர் அக்ஷய், பள்ளி மாணவி ஸ்ருதி லட்சுமி, ஜோதி லட்சுமி ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
ஆட்டோ டிரைவர் அக்ஷய் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த பள்ளி மாணவி மற்றும் இளம்பெண்ணை மீட்டு அஞ்சல் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆனது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் பலியான சம்பவம் அஞ்சல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.
- நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார்.
இந்தியாவின் கலாச்சாரம், தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் மகாகவி பாரதியார் என பிரதமர் மோடி புகழந்துள்ளார்.
மேலும், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன.
இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் “ஸ்பாட் புக்கிங்” எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
- கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக கூட்ட நெரிசல் இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட்டதன் காரணமாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
ஆன்லைன் முன்பதிவு மூலமாக தினமும் 70 பேருக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக 20 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
ஐகோர்ட் உத்தரவின் பேரில், கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் "ஸ்பாட் புக்கிங்" எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் தற்போது பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனால் தினமும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் 45 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மதியம் ஒரு மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கும் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் கூடுதலாக 3,500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும். சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 45 நிமிடங்கள் கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.






