என் மலர்
திருநெல்வேலி
- பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது.
- சிறப்பான முறையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராகி உள்ளார். அவர் தலைவராக வருவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் என்பதை பொது வெளியில் சொல்ல முடியாது.
அவர்கள் முதலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்துவிட்டு கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சி அமைப்பார்களா? என்பதை முடிவு செய்துவிட்டு எங்களை பற்றி பேசட்டும்.
பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது. பொதுப்பணித்துறையால் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகையை வழங்கி அவர்கள் கடையை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்து விட்டோம். ஆனால் தனிநபர் ஒருவர் தொடர்ந்து நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த பிரச்சனை எழுந்துள்ளது. தற்போது அந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக வியாபாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
வருகிற 8-ந்தேதி நடைபெறும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிதலமடைந்த சாலைகளை செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பான முறையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேண்டாம் தி.மு.க. வேண்டாம் என்பது தான் எங்களது கோஷம்.
- இன்றளவும் தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல்களில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது.
நெல்லை:
நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் ரமேஷ் ஏற்பாட்டில் சுத்தமல்லி, கங்கைகொண்டான், ராமையன்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பிரதமர் மோடி அரசின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டதாகவும், அவரது திட்டங்களால் பயனடைந்ததாகவும் கூறி இன்று பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தங்களை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த நயினார்நாகேந்திரன் கூறியதாவது:-
எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியில் எந்தவித முரண்பாடும் இல்லை. கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டணி குறித்து என்னிடம் மட்டும் தான் கேள்வி கேட்கிறீர்களே தவிர முதலமைச்சரிடம் யாரும் போய் கேள்வி கேட்பதில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவீர்கள் என்று உங்களால் கேள்வி கேட்க முடியுமா? தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. தேர்தல் சமயத்தில் என்னிடம் கூட்டணி பற்றி கேளுங்கள். சிறப்பான கூட்டணி அமையும். வேண்டாம் தி.மு.க. வேண்டாம் என்பது தான் எங்களது கோஷம். அதனை தமிழக மக்கள் பிரதிபலிப்பார்கள். தி.மு.க. என்ன செய்தாலும் ஆட்சிக்கு வர முடியாது. அரசியல் சம்பந்தம் இல்லாமல் எந்த அரசியல் கட்சித் தலைவரும் மற்றொரு அரசியல் கட்சி தலைவரை போய் சந்திப்பது கிடையாது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை டாக்டர் ராமதாசை சந்தித்ததிலும் அரசியல் கண்டிப்பாக இருக்கும்.
பா.ஜ.க.வில் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை டெல்லி மேல் இடத்தில் கொடுத்துள்ளோம். விரைவில் புதிய மாநில நிர்வாகிகளுக்கான அறிவிப்பு வெளியாகும். தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைபாடு இருக்கிறது. 96 ஆயிரம் மாணவர்கள் அந்த பள்ளியில் படித்தனர். தற்போது 67 ஆயிரம் மாணவர்கள் தான் படிக்கின்றனர். அந்தப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை 20 சதவீதம் வரை இருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களுக்கு மனதில் மாற்றம் வர வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி தான் நடக்கிறது என்று கூறுகிறார்கள். அது தவறு. தமிழகத்தில் தினமும் பாலியல் சம்பவங்கள் நடக்கிறது. கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இன்றளவும் தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல்களில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது. இதுதான் ஆன்மீக அரசியலா?
இவ்வாறு அவர் கூறினார்.
- உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் அதிகாரிகள் பேக்கரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
- உணவு பொருட்களை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய பொருட்களை வைத்து சான்றிதழ் பெறவேண்டும்.
நெல்லை:
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பேக்கரியில் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் தனது குழந்தைகளுக்கு பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் முந்திரி பழங்கள் உட்பட ரூ.2 ஆயிரத்து 198-க்கு பொருட்களை வாங்கி உள்ளார்.
அதனை வீட்டிற்கு எடுத்துச்சென்று பார்த்தபோது, வாங்கிய முந்திரி பருப்பில் புழுக்கள் நெளிந்துள்ளது. இதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் அதிகாரிகள் பேக்கரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது முந்திரி பருப்பு மற்றும் அத்திப்பழங்களும் கெட்டுப்போன நிலையில் இருந்ததை கண்டறிந்தனர். தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு, உணவு பொருட்களின் தரத்தில் கடும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் உடனடியாக அந்த கடை செயல்பட அதிகாரிகள் தற்காலிகமாக தடை விதித்து மூடினர். மேலும் அந்த கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும் தற்காலிகமாக அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உணவு பொருட்களை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய பொருட்களை வைத்து சான்றிதழ் பெறவேண்டும். அதன்பின்னரே கடையை திறக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அந்த கடையில் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர் கையில் வைத்திருந்த முந்திரி பருப்பில் வெள்ளை நிற புழுக்கள் நெளிவதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சந்துரு ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளும், நந்த பெருமாள் 7 மாத்திரைகளும், நரேஷ் 3 மாத்திரைகளும் சாப்பிட்டுள்ளனர்.
- நரேஷ், வெற்றி மதன் ஆகியோர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ வடகரை இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் சந்துரு(வயது 12).
அதே பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் மகன் நந்த பெருமாள் (12), கீழ பத்தையை சேர்ந்த மாரியப்பன் மகன் நரேஷ் (12), ஜீவா மகன் வெற்றி மதன் (12). இவர்கள் 4 பேரும் கீழ பத்தையில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு மருத்துவக்குழுவினர் சென்று மாணவ-மாணவிகளை பரிசோதனை செய்தனர். அப்போது சத்து குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதுபோல சந்துரு, நந்த பெருமாள், நரேஷ், வெற்றி மதன் ஆகியோருக்கும் மருத்துவ குழுவினர் சத்து மாத்திரைகள் வழங்கினர்.
இந்நிலையில் மாலை இடைவேளையின்போது 4 பேரும் விளையாட்டுக்காக யார் சத்து மாத்திரையை அதிகளவில் சாப்பிடுவது என்று போட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சந்துரு ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளும், நந்த பெருமாள் 7 மாத்திரைகளும், நரேஷ் 3 மாத்திரைகளும், வெற்றி மதன் 4 மாத்திரைகளும் சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் 4 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்று விட்ட நிலையில், வீட்டிற்கு சென்றதும் 4 பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடும் வயிற்று வலியும் ஏற்பட்டது.
இதனால் பதறிய பெற்றோர்கள் 4 பேரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து சந்துரு, நந்த பெருமாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நரேஷ், வெற்றி மதன் ஆகியோர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து களக்காடு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டாக அதிக அளவில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் களக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டோம். அவ்வளவு தான்.
- குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக விரும்பமாட்டார்கள்.
நெல்லை:
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. அண்மையில் நடத்திய முத்தமிழ் முருகர் மாநாடு உண்மையான முருகர் மாநாடு கிடையாது. முருகருடைய அருள் எங்களுக்குத்தான் கிடைக்கும்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுளை கல்லாக நினைத்து தூக்கிப் போட்டு உடைப்பவர்கள், மற்ற மதங்களை இழிவாக பேசுபவர்கள் முருகர் மாநாடு நடத்தினால், முருகர் எப்படி அவர்கள் பக்கம் போவார்.
மதுரையில் நாங்கள் நடத்திய முருகர் மாநாட்டில் 5 லட்சம் பேருக்கும் மேல் கலந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது முழுக்க முழுக்க ஒரு பக்தி மாநாடு தான். அதில் நாங்கள் யாரையும் தவறான இடத்திற்கு கொண்டு செல்லவோ, குறை சொல்லவோ இல்லை.
அரசியல் பேசவில்லை. பிற மதங்களையோ, யாரையும் புண்படுத்தியோ பேசவில்லை. இந்த மாநாட்டில் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கவும் இல்லை.
இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டோம். அவ்வளவு தான். இதைத் தேர்தல் பயன்பாட்டிற்காகவோ, மக்களை குழப்புவதற்காகவோ, வாக்கு வங்கியாக மாற்றவோ நாங்கள் முயற்சிக்கவில்லை.
திருச்செந்தூர் கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு பொதுவானது. தி.மு.க. தனது பெயருக்காக அதனை மாற்ற பயன்படுத்துகிறது.
அவர்கள் முதலில் ஒரு முருகன் மாநாடு நடத்தினர். அது முருகர் பக்தி மாநாடா என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் நடத்தியது முருகர் பக்தர்களுடைய மாநாடு. ஆனால் இப்போது அவர்கள் அதை திசை திருப்பி, தி.மு.க.வுக்கு சாதகமான வாக்கு வங்கியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.
கேள்வி: 2026 சட்டமன்றத் தேர்தலிலும், 2031, 2036 தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே?
பதில்: தி.மு.க. தொடர்ந்து 2-வது முறையாக ஜெயித்ததாக வரலாறு கிடையாது. அந்த வரலாறு மாறப் போவதில்லை. அதனால் அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக விரும்பமாட்டார்கள். அதற்கு அடுத்த தலைமுறை ஆட்களும் தயாராக இருக்கிறார்கள். அதை நிச்சயமாக யாரும் விரும்பமாட்டார்கள்.
அ.தி.மு.க.-பா.ஜ.க கூட்டணி என்று அமித்ஷா சொன்னதில் இருந்து தி.மு.க.வினர் பயத்தில் ஒன்று சொல்லி, அதனை மாற்றி மாற்றிச் சொல்கின்றனர். அவர்களுக்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது.
கேள்வி: 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அதற்கு அ.தி.மு.க.வை சேர்ந்த வைகை செல்வன், கூட்டணி ஆட்சி அமைக்க தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: இதைப்பற்றி அமித்ஷாவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பழனிசாமியும் பேசுவார்கள்.
கேள்வி: கூட்டணி ஆட்சியின்போது முதலமைச்சர் யார்? என்பது குறித்து அமித்ஷா பேசிய போது பழனிசாமியின் பெயரை சொல்லவில்லையே?
பதில்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்று ஏற்கனவே அமித்ஷா சொல்லிவிட்டார். இன்று பேசுவதை சொல்லக்கூடாது.
கேள்வி: விஜய் கூட்டணிக்கு வருவாரா?
பதில்: நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய நெல்லை அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.
திருநெல்வேலி:
டி.என்.பி.எல். தொடரின் 24-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது.
என்.எஸ்.ஹரிஷ் 20 பந்தில் 43 ரன்னும், சோனு யாதவ் ஆட்டமிழக்காமல் 24 பந்தில் 39 ரன்னும் விளாசினர். சந்தோஷ் குமார் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
திண்டுக்கல் அணி சார்பில் பெரியசாமி, அஸ்வின், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. விமல் குமார் 31 பந்தில் 45 ரன்னும்,
மான் பாப்னா 28 பந்தில் 38 ரன்னும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய ஹன்னி சைனி 14 பந்தில் 37 ரன்கள் குவித்தார்.
இறுதியில், திண்டுக்கல் அணி 180 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் திண்டுக்கல் அணி மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
ஏற்கனவே சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
- டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- மதுரை அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
திருநெல்வேலி:
டி.என்.பி.எல். தொடரின் 23-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, மதுரை அணி முதலில் களமிறங்கியது. திருச்சி அணியின் துல்லிய பந்துவீச்சினால் மதுரை அணி முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்தது. அந்த அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
6-வது விக்கெட்டுக்கு இணைந்த அதிக் உர் ரகுமான்-சரத்குமார் ஜோடி 56 ரன்கள் சேர்த்த நிலையில் அதிக் உர் ரகுமான் 30 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. 37 ரன்னுடன் சரத்குமார் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
திருச்சி அணி சார்பில் சரவணகுமார், ஈஸ்வரன், டேவிட்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.
- புலிமான்குளம் செல்லும் அணுகு சாலையில் இன்று அதிகாலை கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.
- வனத்துறையினர் கரடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி பகுதியில் புலிமான்குளம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் இருக்கிறது.
இங்குள்ள ராமன்குடியில் இருந்து ஆத்தாங்கரை பள்ளிவாசல் செல்லும் மெயின் சாலையில் இருந்து புலிமான்குளம் செல்லும் அணுகு சாலையில் இன்று அதிகாலை கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அச்சம் அடைந்தனர். மேலும் இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியதால் மக்கள் அந்த பகுதியில் குவிந்து கரடி நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.
தகவல் அறிந்து உவரி போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் கரடி மாயமாகிவிட்டது. தற்போது வனத்துறையினர் கரடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உணவு தட்டுப்பாடு, வாழ்விட அழிப்பு அல்லது மனிதர்களின் அத்துமீறல் போன்ற காரணங்களால் வனவிலங்குகள் இது போன்று குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகிறது.
தற்போது இந்த கரடியால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்பாக, அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கரடியை கண்டால் அதற்கு அருகில் செல்லாமல் உடனடியாக வனத்துறை அல்லது தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- திருப்பூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
திருநெல்வேலி:
டிஎன்பிஎல் 2025 சீசனின் 20-வது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. திருப்பூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சரத்குமார் 31 ரன்னும், ராஜலிங்கம் 22 ரன்னும் எடுத்தனர்.
திருப்பூர் அணி சார்பில் சிலம்பரசன், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா 40 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.
இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்து வென்றது. இது திருப்பூர் அணி பெற்ற 3வது வெற்றி ஆகும். அமித் சாத்விக் 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 165 ரன்கள் குவித்தது.
திருநெல்வேலி:
டிஎன்பிஎல் 2025 சீசனின் 18-வது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் குவித்தது. லோகேஷ்வர் 90 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக் கான் 30 ரன்கள் எடுத்தார்.
நெல்லை அணி சார்பில் சோனு யாதவ், சச்சின் ராதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. கோவை அணியின் துல்லிய பந்துவீச்சில் நெல்லை அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினர்.
அதிகபட்சமாக அத்னன் கான் 26 ரன்னும், சோனு யாதவ் 23 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நெல்லை அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கோவை அணி, தொடர் தோல்விக்குப் பிறகு நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
கோவை அணி சார்பில் திவாகர் 3 விக்கெட்டும், புவனேஸ்வரன், சித்தார்த் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- தமிழக அரசு எதிர்க்கட்சி கூட்டணி குறித்து பேசுவது புலி வருது, புலி வருது என சொல்வதை போல் உள்ளது.
- தேர்தலுக்கு இன்னும் 10 மாத கால அவகாசம் உள்ளது. பா.ஜ.க. கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்து வருகிறது.
நெல்லை:
சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள திருமால் நகர் அழகர் பூங்காவில் கட்சி நிர்வாகிகளுடன் யோகாசனம் செய்தார். பின்னர் நிருபர்களை சந்திந்த அவர் கூறியதாவது:-
முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினரும் கலந்து கொள்கிறோம். கட்சி பேதமின்றி முருக பக்தர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கடுமையான நெருக்கடி தமிழக அரசால் கொடுக்கப்பட்டது. தமிழக அரசிடம் நீதி கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது வரவேற்க கூடிய விஷயம். மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களை தான் மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசு திட்டமாக அதனை செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு கொடுக்கும் பணத்தை மாநில அரசு கொடுப்பதை போல் கொடுக்கிறார்கள். மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கரை ஒட்டி தமிழை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் உலகத்தில் சிறந்த மொழி. மூத்த மொழி தமிழ் என்பது அனைவருக்கும் தெரியும். இதனை வைத்து தமிழக அரசு வியாபாரம் செய்து வருகிறது.
தமிழக அரசுக்கு 5 ஆண்டு ஆட்சி முடிய போகிறது. 2500 முகாம்கள் நடத்தி 12 லட்சம் மனுக்களை பெற்று தீர்வு கண்டதாக சொல்கிறார்கள். ஆனால் எந்த தீர்வும் காணப்படவில்லை. கீழடியை மட்டுமே வைத்து தமிழக அரசு மத்திய அரசை பேசி வருகிறது. வெளிநாடு சென்றாலும் சரி, ஐ.நா சபை சென்றாலும் சரி. தமிழை பிரதமர் மோடி பெருமைப்படுத்தி வருகிறார். தமிழுக்காக வாழும் ஒரே தலைவர் நரேந்திர மோடி மட்டும் தான்.
தி.மு.க. கூட்டணியில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும். புகைச்சல் இருக்கிறது. கூட்டணியில் சீட்டுகள் எத்தனை என்பது குறித்து பிரச்சனை இல்லை. கூட்டணியில் தொடர்வோம் என திருமாவளவன் சொல்கிறார். அப்படி என்றால் அது ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை காட்டுகிறது. தி.மு.க. 2 சீட்டுகள் கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தொடருமா?. நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வாருங்கள் என சொல்ல முடியாது. பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாத கால அவகாசம் உள்ளது. பா.ஜ.க. கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்து வருகிறது.
தமிழகத்தில் தேர்தல் வரப்போகிறது. ஆளுங்கட்சி தமிழக மக்களுக்கு என்னென்ன செய்து உள்ளது என்பதை தெளிவுபடுத்தி வாக்கு கேட்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியின் கூட்டணி குறித்து அவர்கள் பேசி வருகிறார்கள். தமிழக அரசு எதிர்க்கட்சி கூட்டணி குறித்து பேசுவது புலி வருது, புலி வருது என சொல்வதை போல் உள்ளது. பிரதமர் தமிழகத்திற்கு வருவதற்கான அவசியம் இல்லை. அவர் வந்து தமிழகத்தில் பார்க்கக்கூடிய வேலைகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பார்த்துக் கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மின்னல் வேகத்தில் பஸ்சை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றார்.
- டிரைவரின் சமயோசித செயலும், துரித முடிவும், மூதாட்டிக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்க உதவியது.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 70). இவர் நெல்லை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலையில், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் பகுதியில் அவர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து பாளை கே.டி.சி. நகர் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று லேசாக மோதியது.
இதில் நிலை தடுமாறிய செல்லம்மாள் மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.
பொதுவாக இதுபோன்ற சூழல்களில் 108 ஆம்புலன்சை வரவழைத்து உதவி பெறுவது வழக்கம். ஆனால், ஆம்புலன்ஸ் வர ஆகும் நேரத்தையும், மூதாட்டியின் உடல் நிலையையும் கருத்தில் கொண்ட பஸ் டிரைவரான சுரேஷ்குமார், துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார்.
உடனடியாக, தான் ஓட்டி வந்த பஸ்சில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு பஸ்சை தற்காலிக ஆம்புலன்சாக மாற்றினார். எந்தவித தாமதமும் இன்றி, மயங்கி விழுந்த மூதாட்டி செல்லம்மாளை சுரேஷ் குமார், கண்டக்டர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பஸ்சில் ஏற்றினர்.
பின்னர், மின்னல் வேகத்தில் பஸ்சை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றார். 108 ஆம்புலன்ஸ் போல் மருத்துவமனை வளாகத்திற்குள் பஸ் விரைந்து சென்றதை அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் உள்ளிட்டோர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
டிரைவரின் இந்த சமயோசித செயலும், துரித முடிவும், மூதாட்டிக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்க உதவியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்லம்மாளுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் உள்ளார்.
இக்கட்டான சூழ்நிலையில் ஒரு உயிரை காப்பாற்ற அவர் மேற்கொண்ட முயற்சி, மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக வணிக மேலாளர் பூல்ராஜ் கூறுகையில், இந்த விபத்தில் 2 தரப்பு மீதும் தவறு இருக்கிறது. எனினும் சற்றும் தாமதிக்காமல் பஸ்சில் அந்த மூதாட்டியை ஏற்றி சென்ற சம்பவத்திற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அந்த பஸ்சில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார்.






