என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அடவிநயினார் அணை நிரம்பி வழியும் காட்சி.
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
- சேர்வலாறு அணை நீர்மட்டம் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- அடவிநயினார் அணை தனது முழு கொள்ளளவை 3-வது முறையாக எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மலைப்பகுதியில் தொடர்மழையால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 116.10 அடியாக இருந்த நிலையில், இன்று 2 அடி உயர்ந்து 118.30 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 108.20 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 115.68 அடியை எட்டியுள்ளது.
இந்த அணைகளுக்கு நேற்று வினாடிக்கு 1176 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 3936 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
மாநகர பகுதியில் பாளையில் 4.40 மில்லிமீட்டரும், நெல்லையில் 3.40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சேரன்மகா தேவி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள செங்கோட்டை சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அங்கு 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் கோவில் அணை தனது முழு கொள்ளளவை 3-வது முறையாக எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.
தற்போது 60 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அணை நிரம்பி வழிந்து வருவதால் 60 கனஅடி நீர் அப்படியே வெளியேறி வருவதால் அனுமன் நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றுபடுகை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குண்டாறு அணை பல மாதங்களாக நிரம்பி வழிகிறது. இந்த 2 அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தலா 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 68.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 61 அடியாகவும் உள்ளது.






