என் மலர்
திருநெல்வேலி
- மாணவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் அந்த மாணவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
- உறவினர்கள் நெல்லை- அம்பை பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேரன்மகாதேவி:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரகுமார், விவசாயி. இவரது மகன் சபரி கண்ணன் (வயது 15). இவர், வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில் கடந்த 4-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் சபரி கண்ணன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் அந்த மாணவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 7-ந் தேதி வீட்டில் வைத்து பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) குடித்துவிட்டு சபரி கண்ணன் பள்ளிக்கு வந்தார். பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த சபரி கண்ணனை உடனடியாக மீட்டு, சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று சபரி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு மாணவரின் உடல் வந்த வாகனத்துடன் நெல்லை- அம்பை பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவன் தற்கொலை செய்ததையடுத்து தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
- வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
- பிரசித்தி பெற்ற அல்வா கடை மீது எழுந்துள்ள இந்த புகார் பொதுமக்கள் மத்தியிலும் அல்வா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுகந்தன் அன்பு. இவர் கடந்த 13-ந்தேதி நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஒரு அல்வா கடையில் 4 கிலோ அல்வா பார்சல் வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பிறகு அல்வாவை பிரித்து பார்த்தபோது அல்வாவில் சிறிய அளவில் தேள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவர் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி புஷ்பராஜ் தலைமையிலான குழுவினர் இன்று சந்திப்பு பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட அல்வா கடையில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் உள்ள குடோனில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அல்வாவில் தேள் எவ்வாறு விழுந்தது? என்பது குறித்து உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டதாகவும், நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற அல்வா கடை மீது எழுந்துள்ள இந்த புகார் பொதுமக்கள் மத்தியிலும் அல்வா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும்.
- அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார்.
நெல்லை:
தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஆடிப்பூர திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி நாளை மறுநாள் காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்பு ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 4-ம் திருவிழாவான 21-ந் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு 8 மணிக்கு காந்திமதி அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
10-ம் திருநாளான வருகிற 27-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.
தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
- பொதுவாக கட்சி தலைவர்கள் தங்களுக்கு சாதகமான அதிக செல்வாக்கு உள்ள தொகுதியை தேர்ந்தெடுப்பது வழக்கம்.
- உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் தமிழக அளவில் பாளையங்கோட்டை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறும்.
நெல்லை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சு, தேர்தல் பிரசாரம் என தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக ஆளுங்கட்சியான தி.மு.க. சார்பில் முதலமைச்சரும், கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
இது போன்ற சூழ்நிலையில் துணை முதலமைச்சரும், தி.மு.க. மாநில இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என நிர்வாகி ஒருவர் நெல்லையில் ஒட்டி உள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.வின் 30-வது வார்டு செயலாளர் தென்கரை முத்து சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும், கனவும் நிறைவேற உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும். வேண்டும், வேண்டும் உதய் அண்ணா வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த போஸ்டர் நெல்லை மாநகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் தற்போது சென்னை சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். பொதுவாக கட்சி தலைவர்கள் தங்களுக்கு சாதகமான அதிக செல்வாக்கு உள்ள தொகுதியை தேர்ந்தெடுப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வருகிறது. அதே சமயம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியும் தொடர்ந்து பலமுறை தி.மு.க வெற்றி பெற்று வரும் தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ச்சியாக 5 முறை தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்று வருகின்றனர்.
பொதுவாக பாளையங்கோட்டை தொகுதி என்றாலே தி.மு.க. வின் கோட்டை என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் அங்கு போட்டியிட வேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் அவ்வாறு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் தமிழக அளவில் பாளையங்கோட்டை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறும்.
- தேசத்திற்கு போராடியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும்.
- பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் கவர்னரிடமே உள்ளது.
நெல்லை:
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜையை ஒட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மராட்டிய கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் நிருபர்களை சந்தித்த கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
சுதந்திரப் போராட்ட வீரர்கள் 268 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் மக்களுக்கு தெரிய வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தபால் தலை வெளியிட்டு அவர்களை கவுரவப்படுத்தி வருகிறார்.
தேசத்திற்கு போராடியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும். சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழாவில் கவுரவம் செய்யவே இங்கு வருகை தந்தேன்.
பல்கலைக்கழகங்களில் காவி புகுத்தப்படவில்லை. காவி என்பது மண்ணுக்கு சொந்தமானது. இப்போது மட்டுமல்ல வாஜ்பாய் காலத்தில் இருந்தே காவி புகுத்தப்படுவதாக அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். காவி என்பது அரசியலுக்கான நிறமல்ல. அது பற்றற்ற தன்மையை குறிக்கும் நிறம்.
அறநிலையத்துறை அமைச்சர் கூட காவி அணிந்துதான் கோவிலுக்கு செல்கிறார். மாநில முதலமைச்சர்களுக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளது. அதனை வைத்து மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு ஆளுநருக்கு இருக்கும் ஒரு சில அதிகாரங்களில் அவர்கள் தலையிடக்கூடாது. மாநிலத்தில் முதல் பிரஜையாக செயல்படுபவர் கவர்னர் தான்.
நான் 4 மாநிலங்களில் கவர்னராக இருந்திருக்கிறேன். 2 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தான். ஆனால் அங்கு இது போன்ற எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்பட வில்லை. பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் கவர்னரிடமே உள்ளது.
கேரளா அரசு தொடர்ந்து வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு அதற்கான தீர்ப்பை வழங்கி உள்ளது. தற்போது ஒரு தீர்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு முதலமைச்சர் அதிகாரம் என இவர்கள் கூறி வருகின்றனர். மாநில கவர்னர்களின் அதிகாரங்களுக்குள் முதலமைச்சர்கள் தலையீடு இருக்க கூடாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் முதலமைச்சருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதா?. பிரதமருக்கு முழு அதிகாரம் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? அப்படி என்றால் எதேச்சதிகாரமாக அவர் செயல்பட முடியுமா?. மாணவர்கள் வன்முறைக்குள் செல்லக்கூடாது.
ராஜீவ் காந்தியை கொன்றவரோடு கட்டியணைத்து முதலமைச்சர் நட்பு பாராட்டுகிறார். அது எந்த வகையில் சரியானது. வன்முறை, பயங்கரவாதத்தை யார் செய்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- த.வெ.க. கட்சியை சேர்ந்த மீனவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
- படகுகளில் உள்ள பெயர்களை நீக்கினால் மட்டுமே மானியம் வழங்கப்படும் என்ற அரசின் நிபந்தனை நியாயமற்றது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள கூட்டப்புளி கிராமத்தில் வசிக்கும் சந்தியா, சூசை, சூடி, பெலிக்கான், திபூர்சியான், தீபன், தீபகு ரூஸ், டெலஸ், ரூபன் மற்றும் அஜித் ஆகிய 10 மீனவர்கள் சொந்தமாக படகுகள் வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த படகுகள் தமிழக வெற்றிக் கழக கொடி வண்ணத்தில் இருந்ததை அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட துறையின் உத்தரவின் பேரில், இந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு இந்த மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய 250 லிட்டர் மானிய எரிபொருளை அதிகாரிகள் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீனவர்கள் நலத்துறை அலுவலகத்தில் மீனவர்கள் முறையிட்ட போது, குறிப்பிட்ட கட்சியின் சார்பில் படகுகள் காட்சியளிப்பதால் அதனை மாற்றி அமைக்குமாறும், அவ்வாறு மாற்ற இயலாதபோது அரசின் மானிய சலுகைகளை பெற முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததாக மீனவர்கள் கூறினர்.
இந்த சம்பவத்தால் கூடங்குளம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள த.வெ.க. கட்சியை சேர்ந்த மீனவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இச்சம்பவம் கூட்டப்புளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர்கள் கூறுகையில், படகுகளில் உள்ள பெயர்களை நீக்கினால் மட்டுமே மானியம் வழங்கப்படும் என்ற அரசின் நிபந்தனை நியாயமற்றது. பல கட்சிகளின் வண்ணங்களில் படகுகள் இருக்கும்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர்களை மட்டும் நீக்க சொல்வது பாரபட்சமானது.
அரசு இது போன்ற நிபந்தனைகளை விதித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடாது. எரிபொருள் மானியம் வழங்குவது அரசின் கடமை. அதை அரசியல் உள் நோக்கத்துடன் மறுப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற்று, மீனவர்களுக்கு உரிய எரிபொருள் மானியம் வழங்க வேண்டும் என்றனர்.
- இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது.
- ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரது மனைவி ருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
பாலசுந்தர் காவல்கிணறு இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இவர் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அர்ஜூனன் கடந்த மாதம் இறந்து விட்டார். இதனால் ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு பால சுந்தர் தினமும் சாப்பாடு கொண்டு கொடுப்பது வழக்கம்.
அதன்படி இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது. உடனே பாலசுந்தர் பலமுறை தனது தாயை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் வீட்டின் பின்புறம் சென்றபோது அங்கு பின்கதவு திறந்து கிடந்தது.
பின்வாசல் அருகே ருக்மணி தலையில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் கழுத்தில் 7 பவுன் செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 7 பவுன் எடை கொண்ட வளையல்கள் என 14 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுந்தர் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ருக்மணி தனியாக இருப்பதை அறிந்து மர்மநபர்கள் அவரை அடித்துக்கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது. எனவே மர்மநபர்கள் கழுத்து, கையில் இருந்த நகைகளை பறித்தபோது ருக்மணி தடுத்திருக்கலாம் என்றும், அப்போது கொள்ளையர்கள் ருக்மணியை தள்ளி விட்டு நகையை பறித்துக் கொண்டு ஓடியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. ஆனால் அதில் லாக்கர் இருந்ததால் அதற்குள் வைக்கப்பட்டிருந்த நகை தப்பி உள்ளது.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலைகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு தேரோட்டம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
- மீண்டும் தி.மு.க. ஆட்சி வரும் என திருச்செந்தூரில் திரண்ட மக்கள் கூட்டம் கூறி உள்ளது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேரோட்டத்தை தொடங்கி வைத்த பின்பு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் ஆனிப்பெருந்திருவிழாவையொட்டி 519-வது ஆண்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சிறு, சிறு சிக்கல்கள் இந்த ஆண்டு உருவாகாமல் இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ரூ.59 லட்சம் மதிப்பில் புதிதாக சண்டிகேஸ்வரர் தேர் செய்யப்பட்டுள்ளது. ரூ. 43 லட்சம் மதிப்பில் சுவாமி மற்றும் அம்பாள், விநாயகர் தேர்களுக்கு மரக்குதிரைகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.
ரூ.6 லட்சம் மதிப்பில் புதிதாக தேர்வடங்கள் வாங்கப்பட்டுள்ளன. சாலைகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு தேரோட்டம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ரூ.75 கோடி மதிப்பில் 130 கோவிலில் 134 மரத்தேர்கள் புதிதாக செய்யப்பட்டுள்ளன. ரூ.19 கோடி மதிப்பில் 72 கோவிலில் 75 மர தேர்கள் பராமரிப்பு செய்யப்பட்டுள்ளன.
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வாழ்ந்த தமிழகத்தில், முன்னோர் களது வழியில் ஆட்சி செய்யும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், ரூ.30 கோடியில் 197 திருத்தேர் பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டு மழையிலும், வெயிலிலும் தேர்கள் சேதமாகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.
ரூ.31 கோடியில் 5 கோவில்களில் தங்கத் தேர்கள் திருப்பணி நடைபெற்றுள்ளது. ரூ.29 கோடியில் 9 புதிய வெள்ளித்தேர்கள் செய்யும் பணி தொடங்கப்பட்டு அதில் 2 தேர்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
150 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த சில தேரோட்டம் தி.மு.க. ஆட்சியில் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து பேசி மீண்டும் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுக்கு கூடிய கூட்டத்தால் முதலமைச்சருக்கு ஜுரம் என்று கூறி இருப்பது நகைப்புக்குரியது. திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கூடிய கூட்டத்தைப் பார்த்து அவர்கள் மிரண்டு போய் உள்ளனர். மீண்டும் தி.மு.க. ஆட்சி வரும் என திருச்செந்தூரில் திரண்ட மக்கள் கூட்டம் கூறி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை பார்த்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு தான் விஷக்காய்ச்சல் வந்துள்ளது.
தமிழக திருக்கோவில்களில் உள்ள ஓலைச் சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் அறநிலைத்துறை உதவியுடன் செய்யப்பட்டு வருகிறது. சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஓலைச்சுவடிகளை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எல்லோருக்கும் எல்லாம் வழங்கும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது. நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் மதச்சார்பின்றி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நண்பர்களும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். இந்த ஒற்றுமை எந்நாளும் தொடர, மக்கள் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர வாய்ப்பு அளிக்க வேண்டும். அதற்கு அருள்மிகு நெல்லை யப்பரும் அருள்பாலிப்பார் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆறுமுக கனிக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள மேலபாலாமடை பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகன் ஆறுமுக கனி (வயது 33). டிரைவரான இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
ஆறுமுக கனிக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டின் பெயரிலும், சுய உதவி குழுவிலும் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
ஆனால் அதில் தொடர்ந்து பணத்தை இழந்த நிலையில் பல லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. இதை அவரது குடும்பத்தினர் கண்டித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆறுமுககனி திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுக கனி நள்ளிரவு இறந்தார்.
இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் இழந்து கடனானதால் விரக்தியில் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நிறைய பேர் தனித்து போட்டியிடலாம். இது அவர்களது தனிப்பட்ட முடிவு.
- விஜயின் அறிவிப்பால் சில பேர் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கலாம்.
நெல்லையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
த.வெ.க. தனித்து போட்டியிடுவது தி.மு.க.வுக்கு சவாலாக இருக்காது. த.வெ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி. அவங்க இரண்டு பேருக்கு இடையே வேண்டுமானால் சவாலாக இருக்கும்.
நிறைய பேர் தனித்து போட்டியிடலாம். இது அவர்களது தனிப்பட்ட முடிவு. All the best. வெற்றி என்பது நிச்சயமாக தி.மு.க. கூட்டணிக்கு தான். மக்களின் வரவேற்பை பார்க்கும்போது மிகத் தெளிவாக தெரிகிறது.
முதலிலே இருந்தே தமிழ்நாடு ஓரணியில்தான் இருக்கிறது. வேறு யாரை இணைப்பது என்பது முதலமைச்சரின் முடிவு. எங்களோடு, நம்முடைய முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு வரக்கூடிய யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.
விஜயின் அறிவிப்பால் சில பேர் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கலாம். மக்களின் எதிரிகள் யார் என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுவன் ரியாசுக்கு அவனது தாத்தா, பாட்டி ரம்புட்டான் பழத்தை சாப்பிடுவதற்காக ஆசையுடன் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
- பழத்தை எடுத்து விழுங்கிய சிறுவனுக்கு சிறிது நேரத்தில் அதன் விதை தொண்டையில் சிக்கியுள்ளது.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெரு பகுதியை சேர்ந்தவர் நிஜாம் (வயது 35). இவருக்கு மனைவி மற்றும் 5 வயதில் ரியாஸ் என்ற மகன் உள்ளார்.
நிஜாம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரது பெற்றோர் வீட்டில் நிஜாமின் மனைவி தனது மகனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சிறுவன் ரியாசுக்கு நேற்று இரவு அவனது தாத்தா பாட்டி ரம்புட்டான் பழத்தை சாப்பிடுவதற்காக ஆசையுடன் வாங்கிக் கொடுத்துள்ளனர். உடனே சிறுவன் ரியாசும் அந்த பழத்தை வாங்கி சாப்பிட்டுள்ளான்.
அப்போது பழத்தை எடுத்து விழுங்கிய சிறுவனுக்கு சிறிது நேரத்தில் அதன் விதை தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் சிறுவன் மூச்சுத்திணறி துடித்துள்ளான்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவனது தாத்தாவும், பாட்டியும் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு ரியாசை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மகன் இறந்த தகவலை கேள்விப் பட்டு அவரது தந்தை கதறி துடித்தார். தற்போது அவர் வெளிநாட்டிலிருந்து நெல்லைக்கு புறப்பட்டுள்ளார்.
- குட்டியம்மாள் வயது முதிர்வு காரணமாக தளர்ந்து காணப்படுகிறார்.
- வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகளை சாப்பிடுகிறேன்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையின் உச்சியில் பூங்குளம் பகுதியில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிறது. மலையில் பாய்ந்தோடும் நீரோடைகள் பாபநாசம் காரையாறு அணையை வந்தடைகின்றன. காரையாறு அணை அருகில் அகஸ்தியர் காலனி குடியிருப்பு, சின்ன மைலார், பெரிய மைலார், சேர்வலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட இடங்களில் காணி இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.
காரையார் அணைக்கு மேலே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் பொதிகை மலை உச்சியின் அடிப்பகுதியில் இஞ்சிக்குழி கிராமம் உள்ளது. முன்பு இங்கு 40 குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது 3 குடும்பத்தினர் மட்டுமே வசிக்கின்றனர். அதில் குட்டியம்மாள் (வயது 110) என்ற மூதாட்டி மட்டும் தார்ப்பாயாலான வீட்டில் தனியாக வசிக்கிறார். மற்ற குடும்பத்தினர் வேலைக்காக காரையாறு அணை அடிவாரத்துக்கு சென்று விட்டு, அவ்வப்போது இஞ்சிக்குழி வருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதியான இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலை, தொலைத்தொடர்பு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது. இஞ்சிக்குழியில் அடர்ந்த காட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டி குட்டியம்மாளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த விஷ்ணு முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். மேலும் அவரது வீட்டுக்கு சோலார் மின்வசதி அமைத்து கொடுத்தார்.
தற்போது குட்டியம்மாள் வயது முதிர்வு காரணமாக தளர்ந்து காணப்படுகிறார். சரிவர நடக்க முடியாததால் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். மேலும் காரையாறில் உள்ள ரேஷன் கடைக்கும் சென்று உணவுப்பொருட்களை வாங்க முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து மூதாட்டி குட்டியம்மாள் கூறுகையில், ''இஞ்சிக்குழியில் 40 குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது நான் மட்டுமே வசிக்கின்றேன். இங்கு எந்த வசதியும் இல்லாததால் பலரும் மலையடிவாரத்துக்கு சென்று விட்டனர். 2 குடும்பத்தினர் மட்டும் தங்களது குடியிருப்புகளுக்கு அவ்வப்போது வந்து செல்வார்கள்.
யானைகளின் பிளிறல் சத்தத்தைக் கேட்டுதான் காலையில் கண்விழிப்பேன். சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் இயல்பாக சுற்றி திரியும். வயது முதிர்வு காரணமாக காரையாறு ரேஷன் கடைக்கு செல்ல முடியவில்லை. மளிகை பொருட்களையும் வாங்க முடியவில்லை. வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகளை சாப்பிடுகிறேன்.ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.






