என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை பார்ப்பது மகிழ்ச்சி.
    • உழைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் சகோதரி திருமண விழா நடைபெற்றது.

    இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மண மக்களை வாழ்த்தி பேசுகையில், என்னுடைய நம்பிக்கைக்குரிய தளபதி காளியம்மாள் தங்கையின் திருமணம் என்னுடைய தங்கையின் திருமணம் ஆகும்.

    நாங்கள் பாராளு மன்றத்திற்கு சென்று பேசுகிறோமோ இல்லையோ மக்கள் மன்றத்தில் எங்கள் கருத்துக்களை தொடர்ச்சியாக பேசி வருகிறோம். தேர்தலில் வெல்வது இல்லை எங்கள் கனவு. மக்களின் மனதை வெல்வதும் ,சிந்தனை வெல்வதும் தான் எங்கள் கனவு.

    பிரபாகரன் காட்டிய வழியில் அவர் விட்டுச் சென்ற பணியை அவர் ஆயுதம் மிச்சம் வைத்ததை அரசியலாக இன்று முடிக்க வேண்டும் என பேராவலில் அவருடைய பிள்ளைகள் நாங்கள் களத்தில் பாய்கின்றோம்.

    என் தோளுக்கு துணையாக என் படைக்கு வலிமைமிக்க தளபதியாக என்னுடைய சகோதரி காளியம்மாள் இயங்கிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை கூட்டத்தை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைக்கு பெரும் கடமையும் பொறுப்பும் உங்களது பிள்ளைகளால் எங்களது தோல்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

    உயர்ந்த லட்சிய நோக்கம் உள்ளது. உழைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 4 பேர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.
    • தனிப்படை போலீசார் வாரணாசிக்கு சென்று செந்திலை கைது செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரியா சாமிகள் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி சிலர் பணம் கேட்டு ஆதீனத்தை மிரட்டினர்.

    இதுகுறித்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் வினோத், ஆதீனகர்த்தரின் முன்னாள் உதவியாளர் செந்தில், சீர்காழி பா.ஜனதா முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், செம்பனார்கோவில் தனியார் கல்வி நிறுவனங்களில் தாளாளர் குடியரசு, செம்பனார்கோ வில் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் விஜயகுமார், செய்யூர் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன், மயிலாடுதுறை பா.ஜனதா மாவட்ட செயலாளர் அகோரம், பந்தநல்லூர் சீனிவாஸ், திருச்சியை சேர்ந்த பிரபாகர் ஆகிய 9 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீனிவாஸ், அகோரம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அதில் 4 பேர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.

    இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில், மயிலாடுதுறை மாவட்ட அமர்வு கோர்ட்டில் முதல் முறையாக முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

    ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது செய்யப்படாததால் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும், செந்திலை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு வக்கீல் ராம.சேயோன் வாதாடினர்.

    இதைத்தொடர்ந்து, ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலின் முன்ஜாமீன் மனுவை தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். விசாரணையில் தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில், உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை சிறப்பு தனிப்படை போலீசார் வாரணாசிக்கு சென்று செந்திலை கைது செய்தனர். பின்னர், அவர் மயிலாடுதுறைக்கு அழைத்து வரப்பட்டார். செந்தில் கைதை தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    • கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு ஒவ்வொரு சன்னதியிலும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
    • பொதுமக்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    சீர்காழி:

    நவகிரகத்தில் கேது ஸ்தலமாக விளங்கும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றார்.

    நவகிரக கோவில்களில் ஒன்றான இக்கோவிலில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கேது ஸ்தலத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு ஒவ்வொரு சன்னதியிலும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். தொடர்ந்து கேது பகவான் வழிபாட்டுக்கு பின் தாமரைப்பூமாலை அணிவித்து பரிவட்டம் கட்டி சிறப்பு செய்தனர்.

    தொடர்ந்து பொதுமக்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் பொதுமக்களுடன் அண்ணாமலை புகைப்படம் எடுத்துக் கொண்டார். தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் பல்வேறு கோவில்களில் வழிபாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று கேது பகவான் ஸ்தலத்தில் வழிபாடு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டின் கழிவறையில் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் கிராமமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் நாங்கூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கேசவன் என்பவரது வீடு அமைந்துள்ளது.

    இந்நிலையில் அவரது பழைய வீடு இடிக்கப்பட்டு அதன் அருகிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால், அந்த வீட்டின் அருகில் உள்ள கழிவறை தொட்டி மட்டும் அகற்றப்படாமல் அப்படியே இருந்துள்ளது. இந்த தொட்டியானது மூடி கொண்டு மூடாமல் திறந்த நிலையில் கிடந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை சிறுவர்கள் சிலர் அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.

    அப்போது சிறுவன் ஒருவன் விளாசிய பந்து கேசவன் வீட்டு வளாகத்தில் விழுந்துள்ளது. இதனால் பந்தை தேடி சிறுவர்கள் கேசவன் வீட்டின் அருகே வந்துள்ளனர். சுற்று முற்றி தேடி பார்த்தனர் ஆனால் பந்து கிடைக்கவில்லை. அப்போது அங்குள்ள கழிவறை தொட்டியின் உள்ளே பந்து கிடக்கிறதா? என சிறுவர்கள் எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது தொட்டியின் உள்ளே மனித எலும்புக்கூடு கிடந்துள்ளது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர், சிறுவர்கள் இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கிராமமக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர் இந்த சம்பவம் குறித்த பாகசாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகசாலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த எலும்புக்கூட்டில் கிழிந்த நிலையில் சேலை துண்டுகள் கிடந்துள்ளது. இதனால் அது பெண்ணின் எலும்புக்கூடாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    அப்படியே இருந்தாலும் அவர் இறந்ததற்கு காரணம் என்ன? தொட்டியில் உள்ளே தவறி விழுந்து இறந்துள்ளாரா? அல்லது வேறு காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், இதற்காக இன்று தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர் குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதற்கு பின்னரே எத்தனை நாட்களான எலும்புக்கூடு? என்பன உள்ளிட்ட முழு தகவல் தெரியவரும்.

    வீட்டின் கழிவறையில் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் கிராமமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    • யார் அந்த பெண்? என்று நேரடியாகவே கேட்ட சிந்துஜாவிடம் ‘பிரண்டு’தான் என்று சமாளித்து இருக்கிறார் ஆகாஷ்.
    • தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் ஆகாசுடன் வேறொரு பெண் சிரித்து பேசிக் கொண்டிருந்ததை சிந்துஜாவால் ஜீரணிக்க முடியவில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பஸ் நிலையம் முன்பு உடல் முழுவதும் எரியும் நெருப்போடு ஓடிய காதல் ஜோடியை பார்த்து பஸ் பயணிகள் கதிகலங்கி போனார்கள்.

    மயிலாடுதுறை டவுன் ஸ்டேசன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (24). பூம்புகாரில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    சிதம்பரம் அடுத்த புவனகிரி கச்சபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிந்துஜா (22). மயிலாடுதுறையில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    ஆகாஷ் தினமும் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் இருந்து பூம்புகாருக்கு பஸ்சில் செல்வது வழக்கம். முதலாம் ஆண்டு படிப்பை எந்த இடையூறும் இல்லாமல் முடித்தார் ஆகாஷ்.

    2-ம் ஆண்டு படிப்பை தொடர்ந்த போது சிந்துஜா புவனகிரியில் இருந்து பஸ்சில் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் வந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்றார்.

    அப்போதுதான் அவர்களுக்குள் காதல் குறுக்கிட்டு உள்ளது. நேருக்கு நேர் சந்தித்த இருவருக்குள்ளும் காதல் பத்திக்கிச்சு, அவ்வளவுதான்.

    ஆகாஷ் ஆகாயத்தில் பறந்தார். சிந்துஜா காதல் சிந்து பாட தொடங்கினார். இருவரும் தினமும் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் காதல் மொழி பேசிவிட்டுத் தான் கல்லூரிக்கு படிக்க செல்வார்கள்.

    இப்படியே இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த காதல் அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரித்தது.


    அப்போது ஒருநாள் சிந்துஜா கண்ட காட்சி அவர் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் ஆகாசுடன் வேறொரு பெண் சிரித்து பேசிக் கொண்டிருந்ததை சிந்துஜாவால் ஜீரணிக்க முடியவில்லை.

    யார் அந்த பெண்? என்று நேரடியாகவே கேட்ட சிந்துஜாவிடம் 'பிரண்டு'தான் என்று சமாளித்து இருக்கிறார் ஆகாஷ். ஆனால் சிந்துஜாவுக்கு சந்தேகம் வலுத்து கொண்டே வந்தது. அதற்கு காரணம் ஆகாஷின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றம்தான். இருவரது நெருக்கத்திலும் ஏற்பட்ட விரிசல் சிந்துஜாவுக்கு சந்தேகத்தை அதிகரித்து வந்தது.

    இதனால் 'என்னை ஏமாற்றிவிடாதே' என்று காதலுடன் கெஞ்சி இருக்கிறார். அதை கேட்டதும் 'உன்னை ஏமாற்றுவேனா?' என்று சொல்லி சிந்துஜாவை நம்ப வைத்துள்ளார் ஆகாஷ்.

    ஆனால் மறுநாளே அந்த பெண்ணும் ஆகாஷும் தனியாக பேசிக் கொண்டிருந்ததை சிந்துஜா பார்த்து உள்ளார். அதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த சிந்துஜா ஆகாஷை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு முன்னுக்குப்பின் முரணாக பேசி இருக்கிறார்.

    அதை கேட்டதும் சிந்துஜாவுக்கு புரிந்துவிட்டது. ஆகாஷுக்கு நம் மீதான காதல் கசிந்துவிட்டது. புதுஆளை பிடித்துவிட்டான் என்று வேதனைபட்டு உள்ளார்.

    எனக்கு கிடைக்காத ஆகாஷ் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது. என்னை ஏமாற்றிய ஆகாஷ் இன்னொருத்தியுடன் வாழக் கூடாது. அதற்கு என்ன வழி? என்று யோசித்த சிந்துஜா கையில் ஒரு பாட்டிலில் பெட்ரோலை வாங்கி கைப்பையில் வைத்து கொண்டு அடிக்கடி இருவரும் அமர்ந்து பேசும் பூம்புகாருக்கு போவோம் என்று அழைத்துள்ளார். ஆகாஷும் சரி என்று பைக்கில் அழைத்து சென்று உள்ளார்.

    தனது திட்டத்தை நிறைவேற்ற ஏனோ தருணம் வாய்க்காததால் திரும்பி வந்த போது ஆகாஷிடம் மீண்டும் அந்த பெண்ணை பற்றி கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை பஸ் நிலையம் வந்ததும் பைக்கை விட்டு இறங்கிய சிந்துஜா, ஆகாஷ் மீது பெட்ரோலை ஊற்றி மின்னல் வேகத்தில் கொளுத்தி விட்டு தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    உடலில் பற்றி எரிந்த நெருப்போடு காவிரி ஆற்றுக்குள் ஆகாஷ் ஓடி இருக்கிறார். ஆனால் தண்ணீர் இல்லாததால் தரையில் விழுந்து உருண்டு இருக்கிறார்.

    சிந்துஜா ரோட்டில் ஓடியதை பார்த்ததும் அருகில் இருந்த கடைக்காரர் போர்வையை தூக்கி போட்டு தீயை அணைத்து உள்ளார்.

    காதலர்கள் இருவரும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பஸ் நிலையத்தில் மலர்ந்த காதல் அதே பஸ் நிலையத்தில் கருகியதை பார்த்து சக மாணவ-மாணவிகள் வேதனைப்பட்டார்கள்.

    • தரங்கம்பாடி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தரங்கம்பாடி அருகே வந்து கொண்டிருந்தனர்.
    • விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்தி விட்டு அதன் டிரைவர் தப்பியோடி விட்டார்.

    தரங்கம்பாடி:

    கடலூர் மாவட்டம் பட்டான் குப்பத்தை சேர்ந்த வாலிபர்கள் ஹரி, ஆகாஷ், சச்சின். இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புதுக்சேரி மாநிலம் காரைக்காலுக்கு சுற்றுலாவிற்காக சென்றனர். பின்னர் இன்று காலையில் அங்கிருந்து வீடு திரும்பினர்.

    தரங்கம்பாடி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தரங்கம்பாடி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது 3 பேர் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஹரி, ஆகாஷ், சச்சின் ஆகிய 3 பேரும் சாலையில் தூக்கி விசப்பட்டனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த லாரி 3 பேர் மீதும் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொறையார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்தி விட்டு அதன் டிரைவர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

    • கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில் 10 நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வசம் சிக்கவில்லை.
    • சிறுத்தையை பிடிக்க மீண்டும் மயிலாடுதுறை பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்களுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில் 10 நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வசம் சிக்கவில்லை.

    இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சிறுத்தை ஒன்று அரியலூர் மாவட்டத்தில் சுற்றி திரிந்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது. மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை நீர் வழி பாதை வழியாக அரியலூர் மாவட்டம் சென்று இருக்கலாம் என்று வனத்துறை தெரிவித்து 2 நாட்கள் தொடர் கண்காணிப்புக்கு பிறகு தனது தேடுதல் வேட்டையை மயிலாடுதுறை மாவட்டத்தில் நிறுத்தியது.

    இந்நிலையில் ஏற்கனவே சிறுத்தை ஆட்டை அடித்து கொன்ற மயிலாடுதுறை புறநகர் பகுதியான சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் சிறுத்தை தென்பட்டதாகவும் அது தன்னை விரட்டி வந்த நாய்களில், ஒரு நாயை தூக்கி செல்லும் பொழுது நாய்கள் சேர்ந்து சிறுத்தையை விரட்டியதாகவும் நேற்று முன்தினம் இரவு கட்டுமான தொழிலாளி ஒருவர் வனத்துறையினரிடம் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள காலடி தடயங்களை ஆய்வு செய்தனர். இதில் சற்று பெரிதான காலடி தடம் ஒன்றை கண்டுபிடித்து அதனை சுற்றி அடையாளம் காண, சுன்னாம் பால் வட்டம் வரைந்து மூடி, பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    இதனால் சிறுத்தை அரியலூரில் இருந்து மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்ததா? என குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிறுத்தை வந்ததற்கான எந்த தடயமும் இல்லை. இருந்தாலும் சிறுத்தையை பிடிக்க மீண்டும் மயிலாடுதுறை பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்களுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    • வனத்துறையினர் இவைகள் சிறுத்தை கால் தடம் இல்லை இவைகள் நாய்கள் கால்தடம் என்று தெரிவித்தனர்.
    • சிறுத்தை நடமாட்டம் முந்திரி காடுகளில் இருப்பதாகவும் யாரும் முந்திரி கொட்டை பறிக்க செல்ல வேண்டாம் என்றும் கால் தடங்களை வைத்து பதிவிட்டனர்.

    செந்துறை:

    மயிலாடுதுறை பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கடந்த 11-ந்தேதி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்பரப்பி முந்திரி காடு, செந்துறை அரசு மருத்துவமனை, நின்னியூர் பகுதியில் உலவியது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வாத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

    இந்நிலையில் செந்துறை அரசு மருத்துவமனையில் தென்பட்ட சிறுத்தை இன்னமும் செந்துறை பகுதியில் சுற்றி வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் சிறுகளத்தூர் தனியார் முந்திரி காட்டில் சிறுத்தை நடமாற்றம் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

    அதேபோல் இரவு துளாரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை சுரங்கம் மற்றும் இருளாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அங்கு இருந்த லாரி ஓட்டுநர் ஒருவர் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சமூக வலைதளங்களில் சிறுத்தை நடமாட்டம் முந்திரி காடுகளில் இருப்பதாகவும் யாரும் முந்திரி கொட்டை பறிக்க செல்ல வேண்டாம் என்றும் கால் தடங்களை வைத்து பதிவிட்டனர்.


    இந்த தகவல் அப்பகுதியில் காட்டு தீயாக பரவியது. இதனால் முந்திரி விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

    இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் சிறுத்தையை பிடிக்க திரண்டதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் இவைகள் சிறுத்தை கால் தடம் இல்லை இவைகள் நாய்கள் கால்தடம் என்று தெரிவித்தனர். இருப்பினும் இந்த பகுதி மக்கள் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக அச்சத்தில் உள்ளனர். இதனை போக்கு வதற்காக வனத்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டி.பி.டி.ஆர். பள்ளி வாக்குச்சாவடி முன்பு கடந்த 19-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • வாக்குசாவடியில் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தொகுதி தேர்தலின் போது மகாதானத்தெரு டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    இதனால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த வாக்காளர்கள் தங்களது பெயர்களை நீக்கப்பட்டதை கண்டித்தும், தங்களை வாக்களிக்க அனுமதி வழங்க கோரியும் மகாதான தெரு டி.பி.டி.ஆர். பள்ளி வாக்குச்சாவடி முன்பு கடந்த 19-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க. வேட்பாளர், பா.ம.க.வினர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர். இதனை அடுத்து கூடுதல் கலெக்டர் சபீர் ஆலம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுரேகா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலை மறியலில் ஈடுப்பட்டதாக பா.ம.க. மாவட்ட தலைவர் பழனிச்சாமி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • மேகதாது அணை கட்டப்பட்டால், நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராது.
    • எதற்கு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என அதிமுகவுக்கே தெரியவில்லை.

    மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ஸ்டாலினை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    57 ஆண்டு காலம் ஆட்சி செய்யும் திமுக, அதிமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    பாமக இல்லாவிட்டால், டெல்டாவே அழிந்து போயிருக்கும். தேர்தலுக்காகவோ, ஓட்டுக்காகவோ நான் பேசவில்லை.

    டெல்டாவை அழிக்க பார்த்த கட்சிகள் திமுக, அதிமுக. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாமக தான் வலியுறுத்தியது.

    மேகதாது அணை கட்டப்பட்டால், நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராது.

    எதற்கு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என அதிமுகவுக்கே தெரியவில்லை.

    பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால், பிரதமரை நேரடியாக சந்தித்து பேச முடியும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வனத்துறையினர் 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
    • ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க இருக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    கபிஸ்தலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு செம்பங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.

    இதைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க 30-க்கும் மேற்பட்ட வனத்துறை குழுக்கள் அமைத்து, ஆனை மலை புலிகள் காப்பத்தில் இருந்து வந்த வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சித்தர்காடு, ஆரோக்கியநாதபுரம், அசிக்காடு, மறையூர் சுற்று வட்டார பகுதியில் முழுவதையும் கண்காணித்து தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் மோப்ப நாய்களும் தேடுதல்பணியில் ஈடுப்பட்டது.

    மயிலாடுதுறை சித்தர்காடு ரெயில் தண்டவாள பாலத்தில் வனத்துறையினர் சிறுத்தையின் கழிவுகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இந்த சிறுத்தை மயிலாடுதுறை கூறைநாடு செம்பங்குளம் பகுதியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் கிராமத்தில் சுற்றி திரிந்ததாக அப்பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவர் தகவல் தெரிவித்தார். அங்கு முகாமிட்ட வனத்துறையினர் 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

    பின்னர் குத்தாலம் காஞ்சி வாய் கிராமத்தை அடுத்த பேராவூர் ஊராட்சியில் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சிறுத்தையை பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் எங்கும் தேடியும் சிறுத்தை கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை அரியலூர் மாவட்டம் செந்துறையில் காணப்பட்டதாக தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் அங்கு முகாம்மிட்டு சிறுத்தையை தேடி வந்தனர். தற்போது சிறுத்தை அரியலூர்-பெரம்பலூர் எல்லை பகுதியில் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் பகுதி உமையாள்புரம் ஊராட்சி, உடப்பாங்கரை கிராமத்தில் வசிக்கும் அய்யப்பன் என்பவர் கடந்த 13-ந் தேதி மாலை 7 மணியளவில் தனது பருத்தி வயலில் தண்ணீர் பாய்ச்சும் போது சத்தம் கேட்டு பார்த்த போது சிறுத்தை சென்றதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவரது வயலில் அண்டகுடி கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததில் சிறுத்தை சென்றதாககால் தடம் எதுவும் இல்லை எனவும், புல்வெளிகள் மிகுந்த பகுதியாக இருப்பதாகவும், தெரிவித்தனர்.

    மேலும் இந்த இடங்களை பார்வையிட்ட வனத்துறையினர் உமையாள்புரம், உடப்பாங்கரை, திருமண்டங்குடி, கூனஞ்சேரி, ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க இருக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் சிறுத்தை என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • பனங்காட்டு தெருவில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். இவர் நேற்று இரவு சீர்காழி நகரத்தில் உள்ள 24 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    ஒவ்வொரு வார்டு பகுதியிலும் அவரை வரவேற்கும் விதமாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பனங்காட்டு தெருவில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது வெடிக்கப்பட்ட பட்டாசிலிருந்து சிதறிய தீப்பொறி அருகில் இருந்த அய்யாதுரை என்பவரது வீட்டின் கூரையில் விழுந்துள்ளது.

    இதை யாரும் கவனிக்காத நிலையில் வேட்பாளரும் உடன் வந்தவர்களும் அங்கிருந்து வேறு பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றனர். சில நிமிடங்களில் அய்யாதுரையின் வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சீர்காழி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததுடன் துரிதமாக செயல்பட்டு வீட்டின் மீது தண்ணீரை ஊற்றியும் கூரையை பிரித்து அப்புறப்படுத்தியும் தீயை அணைத்தனர்.

    இதனால் வீட்டிலிருந்த பொருட்கள் தப்பியது. அதேநேரம் தீயை அணைப்பதற்காக வந்த தீயணைப்பு வாகனம் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உரிய நேரத்தில் செல்ல முடியாமலும், குறுகிய சாலை என்பதால் தீ பிடித்த வீட்டிற்கு எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், மக்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×