என் மலர்
மதுரை
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் சித்திரை வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த 10-ந்தேதி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. 11-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

அதனைத்தொடர்ந்து கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, காமராஜர் சாலை வழியாக சிந்தாமணியில் உள்ள கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கதிர் அறுப்பு திருவிழா நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதிகாலை 5 மணிக்கு வெள்ளி அவுதா தொட்டில், வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி, பிரியா விடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் எழுந்தருளினர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர் சாலை வழியாக மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு சென்றடைந்தனர்.

அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலை 10.40 மணியளவில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தெப்பக்குளத்தின் வெளிப்புறமாக நின்று வடம் பிடித்து தெப்பத்தை இழுத்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவும் தெப்பத்தில் சுவாமி-அம்மாள் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளனர். தெப்பத்திரு விழாவை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தை தெப்பத்திரு விழாவை முன்னிட்டு சுவாமி-அம்பாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளியதால் மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதனால் கோவிலுக்கு வந்த வடமாநில பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
- 80 வயது மூதாட்டி வீராயி, வயது மூப்பு காரணமாக நள்ளிரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
- மறுநாள் வீராயியின் கணவர் முத்து அம்பலமும் (85) தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்டம் கருப்பாயூரணியில் 80 வயது மூதாட்டி வீராயி, வயது மூப்பு காரணமாக பிப்ரவரி 8 நள்ளிரவு உடல்நலக்குறைவால் தூக்கத்திலேயே உயிரிழந்தார்;
இந்நிலையில் இவருடைய கணவரான 85 வயதுடைய முத்து அம்பலம் மனைவியின் பிரிவு தாங்காது தவித்த நிலையில், நேற்று இரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
67 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்த தம்பதி இறப்பிலும் இணைபிரியாது அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
- பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் பஸ் மற்றும் ரெயில்களிலும் வந்து குவிந்து வருவதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.
பழனி தண்டாயுதபாணி கோவிலில் நாளை தைப்பூச திருவிழா நடைபெவுள்ள நிலையில் சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, மதுரை- பழனி இடையே நாளை மற்றும் நாளை மறுநாள் இரு நாட்களும் சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு ரெயில் 2 நாட்களும் மதுரையில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு பழனி சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் சிறப்பு ரெயில் பழனியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மதுரை சென்றடைகிறது.
- திருப்பரங்குன்றம் சமண மத நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகும்.
- திருப்பரங்குன்றம் மலையை பிறர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல.
மதுரை:
மதுரை ஐகோர்ட்டில் விழுப்புரம் ஸ்வஸ்தி லட்சுமி சேன சுவாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் சமணர் நினைவுச்சின்னங்கள் பல உள்ளன. திருப்பரங்குன்றம் கோவில் சமண சமயத்திற்கான பல கட்டமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் தற்போது திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என பல இந்து அமைப்புகள் கூறிவருகின்றன.
திருப்பரங்குன்றம் மலையிலும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள், அவை சமண காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிபடுத்துகிறது.
திருப்பரங்குன்றம் சமண மத நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகும். திருப்பரங்குன்றம் மலையின் ஒரே இடத்தில் பாறையின் சுமார் 1 அடி உயரத்தில் இரண்டு சமண பாறைகள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த மலைகள் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக, மற்ற மதங்களைச் சேர்ந்த சிலர் இந்த மலைகளில் உள்ள சமணர் குகைகளை சீர்குலைப்பது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இது அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது. இது சமண மக்களின் மத உணர்வுகளை பாதித்துள்ளது. இந்த சட்ட விரோத செயல்களால் திருப்பரங்குன்றம் பகுதியில் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதோடு சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை பிறர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல.
ஆகவே திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவித்து, சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிப்பதோடு, திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுத்து, பராமரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, விக்டோரியா கவுரி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு, அரசு யாரிடமும் மதபாகுபாட்டை காட்ட விரும்பவில்லை, நல்லிணக்கத்தையே விரும்புகிறது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், இந்த வழக்கை நிலுவையில் உள்ள அணைத்து வழக்குகளோடு சேர்த்து பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
- தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி கோயில் உண்டியலில் போட வேண்டும்.
- உத்தரவை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயில்களில் ஆரத்தித் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது என்று மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும், தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி கோயில் உண்டியலில் போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை கோயிலை கண்காணிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், உத்தரவை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அர்ச்சகர்களுக்கு பொது மக்கள் கொடுப்பதை தட்டடில் போடுவதை பிடுங்கி எந்த அரசாங்கத்திற்கும் உரிமையில்லை.
மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் சுற்றறிக்கையால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- மக்கள், பத்திரிக்கையாளர்களை விஜய் சந்தித்து பேச வேண்டும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
- யாரோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பதை விஜய் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் முதல்முறையாக யாருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு சாதனை செய்தது தேமுதிக மட்டும்தான்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
விஜயை செந்தூரப்பாண்டி படம் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் கேப்டன் விஜயகாந்த். விஜய் எங்கள் வீட்டு பிள்ளை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சினிமா வேறு அரசியல் வேறு.
மக்களை சந்தித்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினால் தான் அரசியலில் விஜய் நிலைத்து நிற்க முடியும். யாரோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பதை விஜய் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் கால் முறிவும் ஏற்பட்டது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவர் தனக்கு சொந்தமான பழைய ஓட்டு வீட்டை இடிக்க இன்று காலை அதே ஊரை சேர்ந்த 3 பேரை வேலைக்கு அழைத்திருந்தார். அதன்பேரில் 3 பேர் வந்திருந்தனர். அவர்கள் காலையிலேயே பணிகளை தொடங்கினர்.
வீட்டின் சுவரை இடித்து கொண்டிருந்த போது பக்கவாட்டு சுவர் இடிந்து அவர்களது மேலேயே எதிர்பாராத விதமாக விழுந்தது. இதில் வலசை, கருப்பு கோவில் தெருவை சேர்ந்த அரியமலை (வயது 35) என்பவர் மீது சுவர் முழுவதுமாக இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த வீடு இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கார்த்திக் (35), கருப்புசாமி (32) ஆகியோருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் கால் முறிவும் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
பின்னர் அவர்களை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.
- தமிழர்கள் தமிழில் வழிபாடு செய்வதற்கும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கும் இயலாத நிலை இருப்பது வேதனை அளிக்கிறது.
மதுரை:
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். பா.ஜ.க. போன்ற சங்பரிவார கும்பல்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் மதப் பதட்டங்களை உண்டு பண்ண முயற்சிக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களின் அதிகாரிகள் எடுக்கிற சட்ட ஒழுங்கு சார்ந்த நிலைப்பாடுகள் தான் சமூக பதட்டங்களை ஏற்படுத்துகின்றன.
எல்லா பிரச்சனைகளையும் சட்டம் ஒழுங்கு அடிப்படையில் மட்டுமே வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அணுகுகிறார்கள். திருப்பரங்குன்றத்திலே மாவட்ட ஆட்சி நிர்வாகம் எடுத்த நிலைப்பாடு இந்த பதற்றத்திற்கு காரணம் என்பதை மாற்று கருத்து இல்லை. நாங்களும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறோம்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் குற்றங்கள் பெருகி வருகிறது. பாலியல் குற்றங்களை பெருகுவதை காவல்துறை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் பா.ஜ.க. விரும்புகிற ஒரே கல்வி முறையை கொண்டு வருவதற்கு தேசிய கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது. இதற்கு உடன்படாத தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ. 2,152 கோடி இன்னும் மத்திய அரசால் விடுவிக்கப்படாமல் உள்ளது.
பா.ஜ.க அரசு இந்த முறை பீகாருக்கும் ஆந்திராவுக்கும் தான் அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளார்கள். பா.ஜ.க. அல்லாத மாநிலங்களையும், தமிழகத்தையும் வஞ்சிக்கிறார்கள். கோவை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு தமிழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கூறினார்கள். நீதிமன்றம் முதலில் அந்த அனுமதியை வழங்கியது மேல்முறையீட்டு வழக்கில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்ட தமிழர்கள் தமிழில் வழிபாடு செய்வதற்கும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கும் இயலாத நிலை இருப்பது வேதனை அளிக்கிறது. நீதிமன்றமும் அதற்கு துணையாக இருப்பது கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- தங்கவேல் என்னை அணுகி, நிலம் வாங்குவதற்காக ரூ.1 கோடியே 63 லட்சம் தேவைப்படுகிறது என்றார்.
- இதில் ரூ.1 கோடியே 30 லட்சத்தை எனக்கு திரும்ப தந்துவிட்டார்.
மதுரை:
தஞ்சாவூரை சேர்ந்த முகமது அப்துல் காதர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றேன். நானும், தஞ்சாவூர் அருகே உள்ள கரம்பயம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் தங்கவேல் என்பவரும், நானும் நட்பாக இருந்து வந்தோம்.
இந்நிலையில் தங்கவேல் என்னை அணுகி, நிலம் வாங்குவதற்காக ரூ.1 கோடியே 63 லட்சம் தேவைப்படுகிறது. இந்தத் தொகையை கொடுத்தால் அசலையும் லாபத் தொகையும் சேர்த்தும் தருகிறேன் என்றார்.
இதனை நம்பி, நண்பரின் உதவியுடன் அந்த தொகையை அவரிடம் கொடுத்தேன். இதில் ரூ.1 கோடியே 30 லட்சத்தை எனக்கு திரும்ப தந்துவிட்டார். மீதமுள்ள தொகையை தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். இது சம்பந்தமாக போலீசில் புகார் அளித்தேன், நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக தங்கவேல் கொடுத்த பொய் புகாரின் பேரில் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டி வருகின்றனர்.
எனவே என்னை ஏமாற்றி தொடர்ந்து மிரட்டி வரும் தங்கவேலு மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் முறையான விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பாக இன்று விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கலந்தர் ஆசிக் அகமது ஆஜராகி, மனுதாரரின் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது சட்டவிரோதம் என வாதாடினார்.
விசாரணை செய்த நீதிபதி மனுதாரர் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
- சூரசம்கார லீலை நடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், பச்சைக்குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்பத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷே கங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து தெப்ப மிதவையை இழுத்தனர். மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதே போல இன்று இரவில் மின்னொளியிலும் சுவாமிகள் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி சன்னதி தெருவில் சூரசம்கார லீலை நடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச் செல்வன், பொம்மதேவன் ராமையா மற்றும் கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் பணி யாளர்கள் செய்துள்ளனர்.
- காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க சிறப்பு வழிபாடு நடத்த போவதாக அறிவித்தார்.
- பக்தர்களை தவிர மற்ற அமைப்பினர், கட்சியினர் திரண்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை:
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா விவகாரம் இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.
இதனால் மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து இரு சமயத்தை சேர்ந்த மக்கள் திருப்பரங்குன்றத்தில் திரளுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று மாலை சென்னை சத்திய மூர்த்திபவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இன்று மாலை திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க சிறப்பு வழிபாடு நடத்த போவதாக அறிவித்தார்.
திருப்பரங்குன்றம் பகுதியில் தற்போது அமைதி நிலவும் நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் செல்வப்பெருந்தகையின் இந்த அறிவிப்பு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டியிடம் தொடர்பு கொண்டு சில தகவல்களை தெரிவித்தனர். அப்போது அவரிடம் பக்தர்களை தவிர மற்ற அமைப்பினர், கட்சியினர் திரண்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரும் மாநில தலைமைக்கு அதை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காங்கிரசாரின் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் மத நல்லிணக்க வழிபாடு ஒத்திவைக்கப்பட்டு, செல்வப்பெருந்தகையின் பயணமும் ரத்தாகி உள்ளது.
- அலங்காநல்லூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்களும் வந்து பள்ளியில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
- பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து குழந்தைகளை வந்து அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில் பாபாக்குடி பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2035 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். பள்ளி மாணவர்களை அழைத்து வருவதற்காக நிர்வாகம் சார்பில் பஸ், வேன்கள் இயக்கப்படுகிறது.
இந்தநிலையில் பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு இன்று மர்ம நபர் ஒருவர் மெயில் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் இந்த தனியார் பள்ளியில் வெடிகுண்டு வீச போவதாக தெரிவித்து இருந்தார். இதைப்பார்த்த பள்ளி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நிர்வாகத்தினருக்கும் தகவல் கூறினர்.
இதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஏராளமானோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து அலங்காநல்லூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்களும் வந்து பள்ளியில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
அனைத்து வகுப்பறைகளிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாகவும் சோதனை நடத்தப்பட்டது. அத்துடன் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன்கள், இருசக்கர வாகனங்களிலும் போலீசார் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். இதற்கிடையே பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து குழந்தைகளை வந்து அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதைக்கேட்டு பதட்டம் அடைந்த பெற்றோர்கள் அவசரம் அவசரமாக பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வளாகத்தில் தயாராக இருந்த பிள்ளைகளை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே, பள்ளி நிர்வாகம் போக்குவரத்துக்காக எந்த ஒரு ஏற்பாடும் செய்யாமல் அலட்சியமாக இருப்பதாக கூறி பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.






