என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டு நாட்டை காப்பாற்ற சிந்திக்க வேண்டும்- திருமாவளவன்
- டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.
- தமிழர்கள் தமிழில் வழிபாடு செய்வதற்கும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கும் இயலாத நிலை இருப்பது வேதனை அளிக்கிறது.
மதுரை:
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். பா.ஜ.க. போன்ற சங்பரிவார கும்பல்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் மதப் பதட்டங்களை உண்டு பண்ண முயற்சிக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களின் அதிகாரிகள் எடுக்கிற சட்ட ஒழுங்கு சார்ந்த நிலைப்பாடுகள் தான் சமூக பதட்டங்களை ஏற்படுத்துகின்றன.
எல்லா பிரச்சனைகளையும் சட்டம் ஒழுங்கு அடிப்படையில் மட்டுமே வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அணுகுகிறார்கள். திருப்பரங்குன்றத்திலே மாவட்ட ஆட்சி நிர்வாகம் எடுத்த நிலைப்பாடு இந்த பதற்றத்திற்கு காரணம் என்பதை மாற்று கருத்து இல்லை. நாங்களும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறோம்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் குற்றங்கள் பெருகி வருகிறது. பாலியல் குற்றங்களை பெருகுவதை காவல்துறை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் பா.ஜ.க. விரும்புகிற ஒரே கல்வி முறையை கொண்டு வருவதற்கு தேசிய கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது. இதற்கு உடன்படாத தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ. 2,152 கோடி இன்னும் மத்திய அரசால் விடுவிக்கப்படாமல் உள்ளது.
பா.ஜ.க அரசு இந்த முறை பீகாருக்கும் ஆந்திராவுக்கும் தான் அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளார்கள். பா.ஜ.க. அல்லாத மாநிலங்களையும், தமிழகத்தையும் வஞ்சிக்கிறார்கள். கோவை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு தமிழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கூறினார்கள். நீதிமன்றம் முதலில் அந்த அனுமதியை வழங்கியது மேல்முறையீட்டு வழக்கில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்ட தமிழர்கள் தமிழில் வழிபாடு செய்வதற்கும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கும் இயலாத நிலை இருப்பது வேதனை அளிக்கிறது. நீதிமன்றமும் அதற்கு துணையாக இருப்பது கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.






