என் மலர்
மதுரை
- 1,030 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
- போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வாரம் 10, 11 ஆகிய தேதிகளில் மதுரை வடக்கு சட்ட மன்ற தொகுதி சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில் 1,500-க்கும் மேற்பட்ட காளைகள், 800-க்கும் அதி கமான மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து இன்று 3-வது முறையாக சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக வருவாய் கோட்ட அலுவலர் ஷாலினி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் நரேந்திரன் மற்றும் வருவாய் துறையினர், மருத்துவ துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1,030 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று களமாடி வருகிறார்கள். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளை களை அடக்கும் வீரர்களுக்கும் தங்கநாணயம், சைக்கிள், மிக்சி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இப்போட்டிகளில் பங்கேற்ற காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து அனுப்புகின்றனர். மாடுபிடி வீரர்கள் சுகாதாரத்துறை மருத்துவர்கள் பரிசோதித்து தகுதி சான்று வழங்கிய வீரர்கள் 50 பேர் வீதம் ஒவ்வொரு சுற்றாக பங்கேற்றனர்.
பொதுமக்கள் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இலவசமாக கண்டு ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் வருகை தந்து குதூகலமாக பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தனர்.
இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பட்டிமன்ற பேச்சாளர் பிக்பாஸ் புகழ் அன்னபாரதி தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பொதுமக்களுக்கு பொழுது போக்கு நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி இடையே நவீன இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
- பிரியாணி திருவிழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புக்கட்டி விரதம் மேற்கொள்வார்கள்.
- பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முனியாண்டி சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும், மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் நடத்தி வரும் பிரியாணி திருவிழா அந்த பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். அதில் ஒரு சமுதாயத்தினர் சார்பில் 90-வது ஆண்டாக நடைபெறும் இந்த பிரியாணி திருவிழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புக்கட்டி விரதம் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலை மாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பெண் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
அங்கு சுவாமிக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் வெளியூர் மக்கள் உட்டபட ஏராளமானோர் திரண்டனர்.
விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2,500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார் செய்து இன்று அதிகாலை கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அண்டாக்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த பிரியாணி சுடச்சுட பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் விடிய, விடிய காத்திருந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் பிரியாணியை பெற்றுச் சென்றனர். இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஓட்டல்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும்.
பிரியாணி திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் கூறுகையில், முனியாண்டி சுவாமியை வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியியிடப்பட்டு அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி, மத பேத மில்லாமல் அனைவருக்கும் வழங்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது.
இந்த பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் விழாவையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் இந்த விழாவில் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும்.
திருவிழாவில் பங்கேற்பதற்காக வருகை தரும் இளம்பெண்கள் கைகளில் பூத்தட்டுகளை ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வருவார்கள். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூரில் இருந்து கலந்துகொள்ள வருகை தரும் இளைஞர்கள் தங்கள் மனம் கவர்ந்த பெண்களை தேர்வு செய்து தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பார்கள்.
அதன்பேரில் அவர்களும் அந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்களை அழைத்து கோவில் வளாகத்திலேயே பேசி திருமணத்தை முடிவு செய்யும் பழக்கம் காலம் காலமாக நடந்து வருகிறது. முனியாண்டி சுவாமியின் சன்னதியில் வைத்து நிச்சயிக்கப்படும் இந்த திருமணங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது என்றனர்.
- பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகே 50 அடி தூரத்தில் பெரியார் சிலை இருப்பதால் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.
- அமைதியான முறையில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி.
பழனியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி திவான் மைதீன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வரும் ஞாயிற்றுக்கிழமை 16-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பழனி மின்வாரிய அலுவலக சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி பழனி காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தோம்.
தைப்பூசத்தை காரணம் காட்டி எங்களுக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே காவல் நிலையத்தின் உத்தரவை ரத்து செய்து வரும் 16-ந்தேதி மாலை அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம், அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்றார்.
தொடர்ந்து, நீதிபதி தற்போது தைப்பூச நிகழ்வு என்பது அங்கே நடைபெற்று வருகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகே 50 அடி தூரத்தில் பெரியார் சிலை இருப்பதால் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.
வேறு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறிய நீதிபதி, மனுதாரர் தரப்பில் தகவல் கேட்டு தெரிவிக்க கூறி வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையின்போது பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள பங்களா தெருவில் 22ம் தேதி பொதுக்கூட்டம் நடத்திட நாம் தமிழர் கட்சிக்கு ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
அமைதியான முறையில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
பழனி பெரியார் சிலை அருகே நாதக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்த நிலையில், வேறு இடத்தில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தி.மு.க. முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
- தி.மு.க. ஆட்சியில் பெண்கள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை.
மதுரை:
மதுரை மாவட்டம் பரவையில் பக்தர்களுக்கு நிழற்குடை அமைக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பூமி பூஜை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பொதுச் செயலாளர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அவர் மேற்கொள்வார். அவர் வழியில் நாங்கள் பணியாற்றுவோம்.
இன்றும் நான் என் மனைவியை காதலிக்கிறேன், என் குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறேன். என்னை போல் அனைவரும் அவர்களது மனைவியை காதலியுங்கள் என கூறி அனைவருக்கும் அன்பு தின காதலர் தின வாழ்த்துக்கள்.
வழக்கில் இருக்கும் அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பா? ஜாமீன் மனுவில் வந்தவருக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து என்ன பயன்? செந்தில் பாலாஜியிடம் சுப்ரீம் கோர்ட் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றது.
தி.மு.க. முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தூக்கிவிட்டு இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும்.
ஜாமீன் வாங்கி இருக்கும் அமைச்சர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு கட்சி பணியை பார்க்க சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரை, கலைஞர் பேசாத முதலமைச்சர் என்று கூறினார். ஆனால் ஒரே இரவில் 10 அமைச்சர்களை மாற்றியவர் எம்.ஜி.ஆர்.
அ.தி.மு.க.வில் பிளவுகள் இல்லை. விஜய் ஒரு பிரபலமான நடிகர். மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கி இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சி என்றால் பாதுகாப்பாக இருக்கலாம். தி.மு.க. ஆட்சியில் பெண்கள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை என்பதால் நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல அரசியல் கட்சியினர் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளனர்.
- பல இடங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என வழக்கு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.
மதுரை:
பழனியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி திவான் மைதீன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வரும் ஞாயிற்றுக்கிழமை 16-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பழனி மின்வாரிய அலுவலக சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி பழனி காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தோம்.
தைப்பூசத்தை காரணம் காட்டி எங்களுக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே காவல் நிலையத்தின் உத்தரவை ரத்து செய்து வரும் 16-ந்தேதி மாலை அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம், அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் பல அரசியல் கட்சியினர் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளனர். எங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.
அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி மனுதாரர் அனுமதி கேட்கும் இடம் அருகில் பெரியார் சிலை அமைந்துள்ளது. இவர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தற்போது பெரியாரை பற்றி அவதூறான கருத்துக்களை பேசி வருகிறார். இதனால் பல இடங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என வழக்கு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.
எனவே இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், தற்போது தைப்பூச விழா நடைபெறுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும், ஆகையால் இவர்கள் மாற்று இடமாக ஆயக்குடி பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவோம் என தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இதனை ஏற்க மறுத்தார். இதனை தொடர்ந்து நீதிபதி தற்போது தைப்பூச நிகழ்வு என்பது அங்கே நடைபெற்று வருகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகே 50 அடி தூரத்தில் பெரியார் சிலை இருப்பதால் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.
வேறு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறிய நீதிபதி, மனுதாரர் தரப்பில் தகவல் கேட்டு தெரிவிக்க கூறி வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்.
- சரக்கு ரெயில் வண்டி கார்த்திக் செல்வம் மீது மோதியதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செல்லக்குளம் பள்ளிக் கூடத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் செல்வம் (வயது 26). தையல் வேலை செய்து கொண்டு ஆடுகள் வளர்த்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் 4 மணிக்கு வாடிப்பட்டி-சோழவந்தான் ரெயில் நிலையங்களுக்கு இடையில் கீழ்நாச்சிகுளம் பகுதியில் ரெயில்வே தண்டவாள பகுதிக்கு கார்த்திக் செல்வம் சென்றுள்ளார். அப்போது கூடல் நகரில் இருந்து திண்டுக்கல் சென்ற சரக்கு ரெயில் வண்டி கார்த்திக் செல்வம் மீது மோதியதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த மதுரை ரெயில்வே சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் செல்வம் ரெயில் மோதி விபத்தில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
- கோவிலில் நடந்த கொள்ளை சம்பவம் கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப் புறங்களில் திறந்தவெளிகளில் 50-க்கும் மேற்பட்ட குலதெய்வ கோவில்கள் உள்ளன. பெரும்பாலான நாட்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் மேற்கண்ட கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம், பூஜை சாமான்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம் அருகே திரளி பகுதியில் முத்து அய்யனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குல தெய்வ வழிபாடு நடத்தி வருகிறார்கள். திறந்தவெளியில் உள்ள இந்த கோவில் பெரும்பாலான நாட்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும்.
காலை மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திரளி கிராமத்தை சேர்ந்த பூசாரி போதுராமன் (வயது 59) என்பவர் பூஜை செய்து விட்டு செல்வார். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள அறைகளில் உண்டியல்கள், விளக்குள், பூஜை சாமான்களை வைத்து பூட்டி விட்டு செல்வார்.
கடந்த 31-ந்தேதி பூஜை செய்து விட்டு சென்ற போதுராமனால் அதன் பிறகு சொந்த வேலை காரணமாக கோவிலுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
2 வாரங்களுக்கு பிறகு போதுராமன் பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார். அப்போது வளாகத்தில் உள்ள அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது 2 கோவில் உண்டியல்கள் திருடப்பட்டு இருந்தது. ஒரு உண்டியை உடைத்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள விளக்கு, பூஜை தட்டு உள்ளிட்ட பித்தளை சாமான்கள் திருடுபோய் இருந்தன. திருட்டுபோன உண்டியல்களில் காணிக்கை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போதுராமன் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
முத்துஅய்யனார் கோவிலில் நடந்த கொள்ளை சம்பவம் கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு செங்கோட்டையன் கேட்டாரா?
- த.வெ.க. தலைவர் விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது.
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது.
* எடப்பாடியார் நல்லதை செய்வார். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆட்சியை 2026-ல் கொண்டு வரப்போகிறார்.
* எடப்பாடியார் செல்வாக்கு கூடிக்கொண்டு இருக்கிறது. அந்த செல்வாக்கை மறைப்பதற்காக ஆளுங்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.
* வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு செங்கோட்டையன் கேட்டாரா?
* இந்த ஆட்சியில் எங்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கவில்லை. கேட்காத ஒருத்தருக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள்.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என கூறிய முதலமைச்சர் தற்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை.
* முதலமைச்சர் சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. த.வெ.க. தலைவர் விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது.
* உறுதியாக, இறுதியாக எடப்பாடியார் தலைமையில் ஆட்சி மலரும். அவர் தலைமையில் அ.தி.மு.க. மலரும் என்று கூறினார்.
- இயக்கத்திற்கு சோதனைகள் வரலாம், தொண்டர்கள் அதனை மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
- ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியை நாம் பார்க்கின்ற பொழுது, தென்னிந்திய நல உரிமை சங்கத்தில் தொடங்கி, நீதிக் கட்சி பரிணாம வளர்ச்சியில் திராவிட இயக்கம் தந்தை பெரியார் தலைமையில் தொடர்ந்து, தேர்தல் அரசியல் என்கிற அடிப்படையிலே பேரறிஞர் அண்ணா கொட்டுகிற மழையில் ராவிட்சன் பூங்காவிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் உருவாக்கினார்.
அதனைத் தொடர்ந்து அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கேள்விக்குறியான திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த மிகப்பெரிய பங்கு வகித்த புரட்சித்தலைவர், ஜனநாயகத்தை காக்கும் வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாய மக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தர மக்களையும் வாழ்வில் ஒளியேற்ற 1972-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார்.
அப்போது அவர் சந்தித்த விமர்சனம், அவமானங்களை எல்லாம் தூள், தூளாக்கி மன வலிமையோடு, மக்கள் பேராதரோடு ஆட்சியை அமைத்தார். எம்.ஜி.ஆர். இருக்கும் போது 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அதனைத் தொடர்ந்து அவரது மறைவுக்கு பின் ஜெயலலிதா இந்த இயக்கத்தையும், தமிழகத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பினையும், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்கின்ற பொறுப்பையும் ஏற்றார்.
அத்தனை வேதனைகளையும், கஷ்டங்களையும் தனதாக்கிக் கொண்டு, ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி, மூன்றாம் பெரிய இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கினார். எங்களைப் போன்ற சாமானிய தொண்டர்களை எல்லாம் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக உருவாக்கி சேவை செய்யும் அரிய வாய்ப்பினை அளித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை மீட்டெடுத்து, இந்த இயக்கத்தை காப்பாற்றி, இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ள எடப்பாடியார் சந்தித்த சோதனைகளை எல்லாம் தவிடு, பொடியாக்கி அனைவரும் தாயை போல அரவணைத்து இன்றைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ளார். அதனால் தான் மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்ட காத்து இருக்கிறார்கள்.
இன்றைக்கு தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாய் மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் எடப்பாடியார் திகழ்ந்து உரிமை குரல் எழுப்பி, எட்டு கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இன்றைக்கு இந்த இயக்கதிற்கு கிடைத்த இறையருள் தான் எடப்பாடியார்.
அ.தி.மு.க. என்று சொன்னாலே சோதனையை சந்தித்த இயக்கம். அ.தி.மு.க. என்று சொன்னாலே அது எல்லோருடைய கண் திருஷ்டி பெற்று சோதனைகளை சந்தித்து சாதனைகளாக மாற்றிய இயக்கம். இயக்கத்திற்கு சோதனைகள் வரலாம், தொண்டர்கள் அதனை மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
இன்றைக்கு எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அனைத்தும், அ.தி.மு.க.வை அசைத்துப் பார்க்க முடியாது. எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்களால் அ.தி.மு.க.வுக்கு எந்த சேதாரமும் இல்லை, இது மக்களால் பாதுகாக்கப்படுகிற இயக்கம்.
ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனால் தற்போது அ.தி.மு.க.வில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதில் கூறும் வகையில் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளதாக கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள்.
- அலங்கார நினைவு வாயிலை இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
- விபத்தில் ஒப்பந்ததாரரும் படுகாயம் அடைந்தார்.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் நுழைவு வாயிலை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியது.
இதையடுத்து, அலங்கார நினைவு வாயிலை இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்றிரவு நினைவு வாயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
அப்போது திடீரென அலங்கார நினைவு வாயில் பொக்லைன் இயந்திரம் மீது விழுந்ததில் பொக்லைன் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் ஒப்பந்ததாரரும் படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் நுழைவு வாயிலை இடித்ததால் விபத்து நேரிட்டதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பொக்லைன் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது.
- இ.பி.எஸ். பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அதிமுகவிற்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கொண்டுவரப்பட்டது தொடர்பாக கோவை அருகே முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கத்தால் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய செங்கோட்டையன், "அந்த நிகழ்ச்சியை தான் புறக்கணிக்கவில்லை என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை" என்று பூசி முழுகினார்.
இதனையடுத்து, "பாராட்டு விழா கட்சி சார்பற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி, ஆதலால் அங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்படவில்லை" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், இன்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக உட்கட்சி பூசல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, "அதிமுகவையோ எடப்பாடி பழனிசாமியையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. கட்சிக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை" என்று தெரிவித்தார்.
- விசாரணை சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய மறுபிரேத பரிசோதனை செய்வதும், அதனை வீடியோ பதிவு செய்வதும் அவசியம்.
- உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள், இந்த நடவடிக்கைகளை முடித்து மனுதாரரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும்.
மதுரை:
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியைச் சேர்ந்த லிங்கசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மர்மமான முறையில் உயிரிழந்த எனது மகன் காளையனின் உடலை மூத்த தடய அறிவியல் மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் மகன் காளையன், மாற்று சமூகத்தை சேர்ந்த வனிதா என்ற பெண்ணுடன் பேசியதால் அவரது உறவினர்கள் காளையனை மிரட்டியதாகவும், இது தொடர்பாக புகார் அளித்த நிலையில், மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தனது மகனை கொலை செய்து உள்ளனர்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. மனுதாரர் மகன் உடலை பிரேத பரிசோதனை செய்வது சம்பந்தமாக மனுதாரர் தரப்பினருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என வாதாடினார்.
பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி , மூத்த தடய அறிவியல் மருத்துவர்களைக் கொண்டு மனுதாரர் மகன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல் அழுகும் நிலையில் உள்ளது. ஆகவே மறு பிரேத பரிசோதனை செய்வது சாத்தியமில்லை என தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரர் மகன் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டாலும், அது வீடியோ பதிவு செய்யப்படவில்லை. மனுதாரரிடம் தகவல் தெரிவிக்காமலேயே இது நடைபெற்றுள்ளது. ஆகவே விசாரணை சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய மறுபிரேத பரிசோதனை செய்வதும், அதனை வீடியோ பதிவு செய்வதும் அவசியம்.
ஆகவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் காளையனின் உடல், மறு பிரேத பரிசோதனை செய்யும் நிலையில் உள்ளதா? என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு மறு பிரேத பரிசோதனை செய்ய முடியும் என்றால், தகுதி வாய்ந்த மருத்துவ அலுவலர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும்.
அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள், இந்த நடவடிக்கைகளை முடித்து மனுதாரரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும். அவரும் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.






