என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி: பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்
    X

    அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி: பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

    • 1,030 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
    • போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வாரம் 10, 11 ஆகிய தேதிகளில் மதுரை வடக்கு சட்ட மன்ற தொகுதி சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில் 1,500-க்கும் மேற்பட்ட காளைகள், 800-க்கும் அதி கமான மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து இன்று 3-வது முறையாக சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


    முன்னதாக வருவாய் கோட்ட அலுவலர் ஷாலினி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் நரேந்திரன் மற்றும் வருவாய் துறையினர், மருத்துவ துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1,030 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று களமாடி வருகிறார்கள். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளை களை அடக்கும் வீரர்களுக்கும் தங்கநாணயம், சைக்கிள், மிக்சி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    இப்போட்டிகளில் பங்கேற்ற காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து அனுப்புகின்றனர். மாடுபிடி வீரர்கள் சுகாதாரத்துறை மருத்துவர்கள் பரிசோதித்து தகுதி சான்று வழங்கிய வீரர்கள் 50 பேர் வீதம் ஒவ்வொரு சுற்றாக பங்கேற்றனர்.

    பொதுமக்கள் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இலவசமாக கண்டு ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் வருகை தந்து குதூகலமாக பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தனர்.

    இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பட்டிமன்ற பேச்சாளர் பிக்பாஸ் புகழ் அன்னபாரதி தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பொதுமக்களுக்கு பொழுது போக்கு நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி இடையே நவீன இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×