என் மலர்tooltip icon

    மதுரை

    • கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி இதுவரை வரவில்லை.
    • டெல்லி தலைநகரில் துப்பாக்கி சூடுகள், குண்டு வெடிப்பு, அடிக்கடி பள்ளி மாணவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடிக்கடி நடந்து வருகிறது.

    மதுரை:

    ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை.வைகோ எம்.பி. மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சகோதரர் உதயநிதிக்கும், அண்ணாமலைக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என அண்ணாமலை கூறுகிறார். தமிழகத்தில் பா.ஜ.க.வை தவிர அனைத்து இயக்கங்களும், இருமொழிக் கொள்கையால் கல்வி உயர்ந்து அனைவரும் படித்துள்ளனர் என உறுதியாக இருக்கிறோம்.

    வடமாநிலங்களுக்கு தமிழக பா.ஜ.க.வினர் செல்ல வேண்டும். அங்கு பா.ஜ.க. தலைவர்கள் வைக்கின்ற பிரசாரம் ஆங்கிலம் தேவையில்லை என்று. இன்றைக்கு உலக அளவில் மருத்துவத்துறை, வர்த்தகத் துறை, தொழில்துறை ஆகியவற்றில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஆங்கில புலமை தான் காரணம்.

    பள்ளிக் கல்வியிலிருந்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவர்களின் புள்ளி விவரம் தமிழ்நாட்டில் இன்றைக்கு 50 சதவீதம். இன்றைக்கு உள்ள பள்ளி மாணவர்களுக்கு மன உளைச்சல் அதிகம். மருத்துவத்துறையில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்வு எழுத வேண்டும். பொறியியல் படிப்பு செல்ல வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. அப்படி இருக்கையில் எதற்காக மாணவர்கள் மூன்றாவது மொழியில் படிக்க வேண்டும்.

    மூன்றாவது மொழியாக இந்தியை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறுகிறார்கள். ஆனால் மூன்றாவது மொழியை தேர்ந்து எடுத்தால் இந்தியை தான் தேர்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகும். உலக மொழியை கற்றுக் கொள்வதில் என்ன தவறு? இதற்கிடையே ஒன்றிய பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், தமிழகம் என்றைக்கு தேசிய கல்விக் கொள்கையை ஆதரிக்கிறதோ அப்போது தான் நிதி வழங்கப்படும் என தெள்ளத்தெளிவாக கூறி விட்டார்கள்.

    கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி இதுவரை வரவில்லை. பா.ஜ.க. அல்லாத பிற மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு நிதியை கொடுக்காமல் இருக்கிறது. அதன் மூலமாக மக்களுக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்துவது அல்லது ஆளுநர் மூலமாக இடையூறு அளித்து மாநில அரசுக்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது.

    கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் பாலியல் வன்முறை அதிகம் நடந்துள்ளது. தனிமனித ஒழுக்கம் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டும். தவறு செய்யும்போது தவறு செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய வழக்குகள் இந்தியாவிலேயே முதலிடம். டெல்லியை பொறுத்தவரை காவல் துறை ஒன்றிய அரசின் கையில் தான் இருக்கிறது. அங்கேயும் சட்டம், ஒழுங்கு மோசமடைந்துள்ளது.

    டெல்லி தலைநகரில் துப்பாக்கி சூடுகள், குண்டு வெடிப்பு, அடிக்கடி பள்ளி மாணவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடிக்கடி நடந்து வருகிறது. வெளிநாடுகளில் உள்ள டான்கள் டெல்லியில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை மற்றும் மாநிலங்களை விட குற்றச்சம்பங்கள் குறைவுதான்.

    மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகள், ஜாதி, மத அரசியல் செய்கிற இயக்கங்கள் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு இன்றைக்கு அதிகரித்துள்ளது. பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் நடக்கின்ற சம்பவங்களை முதலில் பார்க்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆங்கிலம் உலகப் பொதுமறையாக இருக்கிறது.
    • தமிழை வளர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பங்கேற்றனர். உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு அதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டி உள்ளதால் கூட்டத்திலேயே ஏற்கலாம் என மாவட்ட கலெக்டர் சங்கீதா கூறினார்.

    அதனை தொடர்ந்து அரசு அலுவலர்கள் வளாக கூட்ட அரங்கில் பங்கேற்றனர். தொடர்ந்து விவசாயிகளும், அரசு அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் உறுதி மொழியை வாசிக்க தொடர்ந்து பின் உறுதிமொழியை ஏற்றனர்.

    அனைவரும் உறுதி மொழி ஏற்று அமர்ந்த பிறகு விவசாயி ஒருவர் எழுந்து "தமிழை வளர்க்க வேண்டும் தமிழ்நாடு அரசு கூறுகிறது. உறுதி மொழி ஏற்கிறோம், ஆனால் சென்னையில் தலைமை செயலகம் சென்றால் அங்கு உள்ள அமைச்சர்கள் பெயர் பலகை ஆங்கிலத்தில் உள்ளது என கூறினார்.

    இதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் சங்கீதா, தமிழ்நாட்டில் தமிழ் தான் தாய் மொழி, ஆங்கிலம் உலகப் பொதுமறையாக இருக்கிறது. அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழில் தான் கையொப்பம் இடுகிறோம். வெளி மாநிலத்திலிருந்து வந்தாலும் அவர்களும் தமிழில் தான் கையெழுத்து இடுவார்கள். தமிழை வளர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    அதனையும் விடாமல் விவசாயி ஆனால் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது என கூறியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

    • கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கைதான் இருக்கிறது.
    • மும்மொழி கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு இருந்தால் உதயநிதி ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும்.

    மதுரை:

    உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பூஜை செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தாய் மொழியை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்தேன். தி.மு.க.வினர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்படுகிறது. நவோதயா பள்ளி வந்தால் தி.மு.க.வின் கல்வி வியாபாரம் கெட்டுப் போய்விடும் என்பதற்காக மும்மொழி கல்விக் கொள்கையை அவர்கள் எதிர்க்கிறார்கள்.

    கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கைதான் இருக்கிறது. இதில் தி.மு.க.வினர் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். தமிழர்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். மும்மொழி கொள்கை நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை. கம்யூனிஸ்ட் காரர்கள் கேரளாவில் வேண்டும் என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் வேண்டாம் என்கிறார்கள்.

    உதயநிதி ஸ்டாலின் கெட் அவுட் மோடி என்று சொல்கிறார். இதன் மூலம் அவர் அரசியல் தளத்தை தாழ்த்தி விட்டார். எடப்பாடி பழனிசாமியை தவறாக பேசுகிறார். கெட் அவுட் மோடி என்று சொல்கிறார். அவருக்கு அண்ணாமலை உரிய பதிலடி கொடுத்திருக்கிறார். உலகத்தில் நம்பர் ஒன் டிரெண்டிங் கெட்டவுட் ஸ்டாலின் தான்.

    மும்மொழி கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு இருந்தால் உதயநிதி ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும். இரு மொழி கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் ஆங்கிலக் கல்வி திணிக்கப்படுகிறது. கர்நாடகாவில் ஆங்கிலத்தை திணிக்க முடியாது கன்னடம் மட்டும்தான்.

    அ.தி.மு.க. மட்டும் எதிர்க்கட்சி அல்ல. பா.ஜ.க., நாம் தமிழர் உள்ளிட்டவைகளும் எதிர்க்கட்சிகள் தான். அனைவரும் சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்-முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க ஏற்பாடு.
    • நல உதவிகளையும் நலிந்த தொண்டர்களுக்கு சசிகலா வழங்குகிறார்.

    மதுரை:

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற நிலையில் அவரது தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.

    2016-21 வரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வினரின் ஏகோபித்த ஆதரவை பெற்றார். இதையடுத்து சசிகலா மற்றும் தினகரனின் ஆதிக்கத்தையும் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

    இந்தநிலையில் பிரதமர் மோடியின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்த ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வந்தார். அ.தி.மு.க.வில் இணைந்ததும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் பொறுப்பையும் பெற்றார்.

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இரட்டை தலைமையில் 2021 சட்டமன்ற தேர்தலை அ.தி.மு.க. சந்தித்தது.

    ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் வலுப்பெற்றது. ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக நீக்கம் செய்யப்பட்டனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

    தற்போது அ.தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. இதனை சுட்டிக்காட்டும் முன்னாள் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் அவ்வப்போது சில விமர்சனங்களை எடப்பாடிக்கு எதிராக முன்னெடுத்து வைக்கிறார்கள்.

    அவர்களின் கருத்துக்களை ஆமோதிக்கும் வகையில் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசி வருகின்றனர்.

    இந்தநிலையில் தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்தும் அ.தி.மு.க. தொண்டர்களின் மத்தியில் சலசலப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது செங்கோட்டையன் விவகாரம் சற்று ஓய்ந்துள்ளது.

    இந்த நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அ.தி.மு.க.வினர், அ.ம.மு.க.வினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் ஜெயலலிதா பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக கொண்டாடி வருகிறார்கள்.

    சமீபத்தில் பேசிய சசிகலா, அ.தி.மு.க. என் கைக்கு விரைவில் வரும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என்று கர்ஜனை செய்தார்.

    இவரது கருத்து அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல தரப்பட்ட விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் அ.தி.மு.க.வில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஒரு தரப்பு தொண்டர்கள் என்று சசிகலாவின் கருத்தை ஆமோதிக்கும் ஒரு கூட்டமும் அ.தி.மு.க.வில் இருக்கத்தான் செய்கிறது.

    அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்று சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களை காட்டிலும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளும் இதே கருத்தை மறைமுகமாக சொல்கிறார்கள்.

    இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி சசிகலா பங்கேற்கும் வகையில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை உசிலம்பட்டியில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பொதுக்கூட்ட ஏற்பாடுகளை தென் மாவட்டம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து செய்துள்ளனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் திரளாக இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இந்த பொதுக்கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும் மறைமுகமாக இந்த பொதுக்கூட்டத்தை வெற்றி பெறச் செய்யும் வகையில் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் திரை மறைவில் இருந்து செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    எனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க. தொண்டர்களை திசை திருப்பும் வியூகமாக உசி லம்பட்டி பொதுக்கூட் டத்தை சசிகலா பயன்படுத்துவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரி வித்துள்ளனர்.

    பல்வேறு நல உதவிகளையும் நலிந்த தொண்டர்களுக்கு கூட்டத்தில் சசிகலா வழங்குகிறார். இந்த பொதுக் கூட்டம் அ.தி.மு.க. ஒற்று மைக்கு இது தொடக்க புள்ளியாக அமையும் என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கி றார்கள்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறுகையில், சசிகலாவின் நடவடிக்கைகள் அ.தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உறுதியாக இருக்கிறார்கள்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி கூட்டணி அமையும், அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தின் நல்லாட்சி மீண்டும் அமையும்.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற சிலர் அவ்வப்போது எழுப்பும் சலசலப்பு மற்றும் பரபரப்பு காரணமாக எடப்பாடியார் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க.விற்கு சிறிதளவு சேதாரமும் ஏற்படாது. எனவே உசிலம்பட்டி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வில் இருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள்.

    சசிகலாவின் ஆசைக்கு பெரும் ஏமாற்றமாகவே உசிலம்பட்டி பொதுக்கூட்டம் முடியும் என்று முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

    எப்படி இருந்தாலும் சசிகலாவின் உசிலம்பட்டி பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் மிகுந்த எதிர்பார்ப்பையும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

    • தலைவர்களின் சிலைகள், கட்சி கொடிகளை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?
    • மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

    மதுரை:

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் முத்துக்கிருஷ்ணன், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருவாரூர் குடவாசல் சாலை பகுதியில் நாச்சியார் கோவில் குளக்கரை பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலை பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ பாதிப்பு இல்லாத வகையில் தான் உள்ளது. இருப்பினும் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியியல் பிரிவு அதிகாரிகள் எம்.ஜி.ஆர். சிலை அதன் அருகில் உள்ள கட்சிக்கொடியை அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.

    எம்.ஜி.ஆர். சிலையை அகற்றக்கூடாது என அ.தி.மு.க. சார்பிலும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 3 முறை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் சிலையை தன்னிச்சையாக அகற்றக்கூடாது, எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டால் மக்கள் வருத்தமடைவார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு சிலை மற்றும் அதனருகில் உள்ள அ.தி.மு.க. கொடியை அகற்ற வழங்கிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களின் தலைவர்களின் சிலைகள், கட்சி கொடிகளை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே? பொது இடங்களில் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. இயக்கமாக இருந்தாலும் சரி. கட்டாயமாக அனுமதிக்க முடியாது.

    எனவே இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்ப பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

    • அபிஷேக பொருட்களை 26-ந்தேதி மாலைக்குள் மீனாட்சி கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம்.
    • இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகாசிவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை வரை நடக்கிறது. இதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை 26-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 10.40 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.40 மணி வரையிலும் நடைபெறும்.

    இதேபோல் சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கும், 4-ம் கால பூஜை 2 மணிக்கும் நடைபெறும். அதை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளன.

    இதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த பழைய சொக்கநாதர் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில் உள்ளிட்ட உபகோவில்களிலும் இரவு முழுவதும் பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அன்று இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை 26-ந்தேதி மாலைக்குள் மீனாட்சி கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம்.

    மேலும் மீனாட்சி அம்மன் கோவிலில் அரசு உத்தரவின்படி வடக்கு ஆடி வீதிகளில் 26-ந்தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை விடிய, விடிய ஆன்மிக இசை மற்றும் நடனம் நடைபெறுகிறது. சிவராத்திரியையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • மும்மொழி கொள்கையில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?.
    • போராட்டக்களத்தில் தலைவனை தேடுபவர்கள் மட்டுமே என்னுடன் இருப்பார்கள்.

    மதுரை:

    நாம் தமிழர் கட்சியின் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மதுரை கோச்சடை பகுதியில் நடந்தது. இதில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மும்மொழி கொள்கையில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?. இந்தியை திணித்தவர்களுடன் தி.மு.க. கூட்டு சேர்ந்திருந்தது. இனி தேர்தல் நேரம் என்பதால், இந்தி நாடகத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். இந்தி மொழி தேவைப்பட்டால், தேவைப்படும் இடங்களில் கற்றுக்கொள்ளலாம் என்பதே எங்களின் கருத்து. ஆனால் அதனை திணிப்பதை ஏற்கமாட்டோம். இந்தியை தி.மு.க. உளமாற எதிர்க்கவில்லை. இந்தி படித்தால்தான் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்றால், வடமாநிலத்தில் இருந்து 1½ கோடி மக்கள் ஏன் தமிழகத்திற்கு வேலைக்காக வருகிறார்கள்.

    ஒரு நடிகரின் ரசிகராக இருப்பவர்கள் என்னிடம் வரமாட்டார்கள். பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடுபவர்கள் என்னை தேடமாட்டார்கள். போராட்டக்களத்தில் தலைவனை தேடுபவர்கள் மட்டுமே என்னுடன் இருப்பார்கள்.

    வருண்குமார் ஐ.பி.எஸ். தி.மு.க.காரர் போல பேசுகிறார். இவரது வேலையே, எங்கள் கட்சி நிர்வாகிகளின் செல்போனை நோட்டமிடுவதுதான். உயரதிகாரிகள் வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தபோதே நான் செல்லவில்லை. ஆகவே விஜய்யுடன் கூட்டணி எனக்கு சரிவராது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பரங்குன்றம் மக்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
    • ஏன் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள் எனவும் உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர்.

    திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்து ஹிந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தொடரப்பட்டன.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் முன்பு வந்தது.

    அப்போது, திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்து அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    வழிகாட்டுத் தலங்கள் குறித்தி வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, திருப்பரங்குன்றம் மக்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    ஏன் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள் எனவும் உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர்.

    • கட்சியை விட்டு விலகிய கோ. தமிழரசன் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
    • தன்னை முன்னிறுத்திக் கொள்பவர்கள் கட்சியில் இருந்து விலகிச் செல்கிறார்கள் என்றார்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோ.தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

    கட்சியை விட்டு விலகிய கோ. தமிழரசன் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

    அப்போது அவர், " ஜாதி பெருமை பேசுவோரை கண்டிக்காமல் ஜாதி வெறியை சீமான் தூண்டுகிறார். அழிவுப்பாதையை நோக்கி நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்திக்கொண்டிருக்கிறார்" என்றார்.

    கொ.ப.செ. தமிழரசன் விலகல் குறித்து மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் கூறியதாவது:-

    தன்னை முன்னிறுத்திக் கொள்பவர்கள் கட்சியில் இருந்து விலகிச் செல்கிறார்கள்.

    நாதகவில், கட்சிக்காக நான் என செயல்பட வேண்டும். சீமானுக்கு பின் யார் தலைவர் எனும் போட்டியால் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். நேர்மையாக கட்சி நடத்த வேண்டுமானால் சர்வாதிகாரியாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீங்கள் விரக்தியின் விளிம்பிலே இருந்து கேட்ட கேள்விக்கு, நான் வேதனையின் உச்சியில் இருந்து கேட்கிறேன்.
    • இரட்டை இலை என்பது வாழ்வுக்கு சமம், அதை எதிர்த்து நிற்பது இறப்புக்கு சமம்.

    மதுரை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தனக்கு நற்சான்று கொடுத்தார் என்று அடிக்கடி தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.

    அம்மா நம்மோடு இருந்த போது இதே தேனி மாவட்டத்தில் இவர் தான் அதிகாரம் மையம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது, 2010 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு இவரை தள்ளி வைத்துவிட்டு அம்மா இந்த சாமானிய தொண்டரான உதயகுமாரை தான் தேனி மாவட்டத்தில் தலைமை தாங்க உத்தரவிட்டார்.

    அதே 2010-ம் ஆண்டு இன்றைய எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலே செயல் வீரர்கள் கூட்டம் நடத்துகிற போது ஓ.பன்னீர் செல்வத்தை தள்ளி வைத்துவிட்டு அம்மா என்னை அந்த செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஆலோசனை வழங்குவதற்கு இந்த சாமானிய தொண்டன் உதயகுமாருக்கு ஆணையிட்டார் என்பதும் அந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

    கடந்த 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக எனக்கு பணியாற்றுகிற வாய்ப்பு கிடைத்தபோது தலைமைக்கும், இரட்டை இலைக்கும் விசுவாசமாக நான் பணியாற்றி, தமிழகம் முழுவதும் வெற்றி வாய்ப்பு நழுவி போகிற போது தேனி தொகுதியில் இரட்டை இலை மலர்ந்தது.

    அதற்கு இந்த சாமானிய தொண்டனின் விசுவாசமான உழைப்பு எப்படி என்பதை நீங்கள் வேண்டுமானால் உங்கள் வசதிக்காக மறந்து இருக்கலாம். நான் விசுவாசத்தோடு இரட்டை இலை சின்னத்திற்காக எப்படி உழைத்தேன் என்பதையும், எப்படி பாடுபட்டேன் என்பதையும் அ.தி.மு.க. தொண்டர்கள் அறிவார்கள்.

    அம்மா தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை குறைபாட்டில் தான் சாமானிய தொண்டனான என்னிடம் பகிர்ந்து கொண்டார் என்பதை நான் வெளியே சொன்னால் அது அரசியல் நாகரிகமாக இருக்காது.

    அம்மாவின் மறு வடிவமாக இருக்கிற எடப்பாடியார் ஆணையிட்டால், இந்த நிமிடமே தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், அம்மா பேரவை பொறுப்பு, மாவட்ட செயலாளர், ஏன் சட்டமன்ற உறுப்பினர் என்கிற பொறுப்பணியில் கூட அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்காக, கட்சியின் வெற்றிக்காக, என்னை தியாகம் செய்ய ஒரு நாளும் தயங்கவில்லை. இந்த நிமிடமே அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்வதற்கும் நான் தயங்குபவன் அல்ல?

    நான் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஒரு நாளும் ஒருபோதும் ஆசைப்பட்டவன் அல்ல. நான் வகிக்கின்ற இந்த பொறுப்புகள் எல்லாம் விசுவாசத்தோடு நான் பணியாற்றியதற்காக தலைமை என்னை தேடிக் கொடுத்த பதவிகள் தானே தவிர, நான் தேடிப்போய் பெற்ற பதவிகள் அல்ல.

    அன்றைக்கு அம்மா இருந்த சமயத்தில், டாக்டர் வெங்கடேஷ் சோபாவில் அமர்ந்திருந்த போது இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள். தயவு செய்து அதை சொல்லுங்கள். நீங்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலே தான் நானும் உட்கார்ந்திருந்தேன்.

    ஆகவே தயவு செய்து நீங்கள் ஏதோ ஒரு மூடு மந்திரம் போல என்மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை என் கழகப்பணி மீதும், நான் கொண்டுள்ள விசுவாசத்தின் மீதும் நீங்கள் களங்கம் கற்பிக்க முயற்சிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,

    நீங்கள் விரக்தியின் விளிம்பிலே இருந்து கேட்ட கேள்விக்கு, நான் வேதனையின் உச்சியில் இருந்து கேட்கிறேன். எங்களை ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று பிரச்சனையை திசை திருப்பும் பாணியில் நீங்கள் பேசி வருவது ஆண்டவனுக்கே பொருந்தாது. இந்த கோடான கோடி அப்பாவி தொண்டர்களையும், தமிழக மக்களையும் இனியும் நீங்கள் ஏமாற்றக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிலை சொல்கிறேன்.

    உங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் நீங்கள் போவீர்கள் என்பது தான் சமீபகால நடவடிக்கை. உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னால் பிரச்சனை. இப்போது பிரச்சனை நீங்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான்.

    ஏனென்றால் எங்களைப் போன்றவர்கள் அதை நன்றாக அறிவோம். அப்பாவி சாமானிய ஏழை, எளிய தொண்டர்களுக்கும், மக்களுக்கும் இந்த உண்மை புரிய வேண்டும். இதை நான் சத்தியமாக தெய்வ சாட்சியாக சொல்கிறேன், அத்தனையும் உண்மை.

    வெளியில் இருந்து யாரும் எந்த சோதனையும் ஏற்படுத்தவில்லை. இத்தனை பிரச்சனைகளுக்கும் நீங்கள்தான் காரணம். பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் நீங்கள் நிற்பதற்கு யார் காரணம்? நீங்கள் பதவி ஆசையினாலே மத்திய அமைச்சராகி விடவேண்டும் என்ற ஆசைதானே காரணம்.

    தேனி மாவட்டத்தில் அதிகாரம் தங்கள் பிள்ளைக்கு வேண்டும் என்று தான் நினைத்தீர்களே தவிர, வேறு யாரையாவது உருவாக்கி உள்ளீர்களா? இரட்டை இலை என்பது வாழ்வுக்கு சமம், அதை எதிர்த்து நிற்பது இறப்புக்கு சமம்.

    உங்களுடைய சுயநலத்திற்காக, அதிகாரத்திற்காக நீங்கள் உண்மையை மறைத்து செயல்பட்டீர்கள். அது தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி, நயினார் நாகேந்திரன் வரை உங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இதுதான் நீங்கள் கடைபிடித்த பாதை, தர்மம்.

    ஆகவே எனக்கு எச்சரிக்கை விடுகிற தகுதி உங்களுக்கு இல்லை. நான் எந்த எச்சரிக்கையையும் எதிர்கொள்வதற்கு தயாராகத்தான் இருக்கிறேன். இன்னும் விவாதிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பப்பட்டால் நான் தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி எந்தவொரு தேர்தல் வந்தாலும் நமக்கான வெற்றியை அந்த இயற்கையே உருவாக்கி கொடுக்கும்.
    • வாரிசு அரசியல் வேண்டாம் என்பதற்காகவே நான் எனது மகன்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம் என்று கூறினேன்.

    மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் எனது விசுவாசத்திற்கு ஜெயலலிதா பலமுறை சான்று அளித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் அனைத்தும் ஒன்றாக இணைய வேண்டும்.

    6 மாதம் நான் அமைதியாக இருந்தால் அ.தி.மு.க.வில் என்னை சேர்த்துக் கொள்வதற்காக சிபாரிசு செய்கிறேன் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியிருக்கிறார்.

    என்னை அழைத்துச்சென்று அ.தி.மு.க.வில் சேர்த்துவிடுமாறு நாங்கள் யாரையும் கேட்கவில்லை. எனக்காக யாரும் சிபாரிசு செய்ய வேண்டாம்.

    ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி எந்தவொரு தேர்தல் வந்தாலும் நமக்கான வெற்றியை அந்த இயற்கையே உருவாக்கி கொடுக்கும்.

    இதற்காக எந்தவிதமான சிபாரிசோ, பரிந்துரையோ செய்ய தேவையில்லை. என்னை அ.தி.மு.க.வில் சேர்த்துவிடுமாறு யாரிடமும் சொல்லவும் இல்லை. சொல்லவும் மாட்டோம்.

    ஆர்.பி.உதயகுமார் பற்றி நான் கருத்து சொல்ல தேவையில்லை. அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளராக வெங்கடேசன் இருந்தபோது என்னுடைய மகன்கள் 2 பேரில் ஒருவரை மாவட்ட செயலாளராக நியமனம் செய்ய இருப்பதாக கூறினார்.

    அப்போது ஆர்.பி.உதயகுமார் எந்த நிலையில் இருந்தார் என்பதை நான் கண்கூடாக பார்த்தேன். அதை சொல்வது அரசியல் நாகரீகமாக இருக்காது. வாரிசு அரசியல் வேண்டாம் என்பதற்காகவே நான் எனது மகன்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம் என்று கூறினேன்.

    இதுபற்றி ஜெயலலிதாவும் உங்கள் மகன்களில் ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி அளிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

    எனவே இனிமேலும் ஆர்.பி.உதயகுமார் என்னைப்பற்றி விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கையை அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பின்பற்றி வந்தனர். எனவே இருமொழிக்கொள்கையே தமிழர்களின் உயிர் மூச்சாக இருந்து வருகிறது.

    செங்கோட்டையன் தனது மனத்தாங்கலை வெளிப்படுத்தியுள்ளார். விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாததால் அவர் மனம் வெதும்பி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆரம்பக் கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்.
    • மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்.

    மதுரை:

    மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தொலைநோக்கு பார்வையுடன் 2047-ம் ஆண்டுக்கான அடித்தளமாக பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது. ஏழை எளிய மக்களுக்கான இந்தியா வல்லரசு நாடாக அடித்தளமாக உள்ள பட்ஜெட் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதிகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த பத்தாண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டின் மேல் பிரதமர் மிகுந்த பற்று வைத்துள்ளார். ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்பி கொண்டுள்ளார். தவறான தகவல்களை பேசிக் கொண்டு வருகிறார்.

    மத்திய கல்வித்துறை மந்திரி மிகத் தெளிவாக சொல்லி உள்ளார். பிரதமரின் திட்டத்திற்கு முதலில் கையெழுத்து போட்டார்கள். திரும்ப பின்வாங்கி விட்டார்கள். நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதாக தர்மேந்திர பிரதான் என்னிடம் சொன்னார். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை?

    ஆரம்பக் கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர்களின் ஆலோசனைபடி உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை.

    இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியம். முன்பு இருந்ததை போல இப்போது நாடு இல்லை. மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்.

    மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை. வெற்றிவேல் யாத்திரை நான் நடத்தினேன். நான் திருப்பரங்குன்றம் செல்வதில் எந்த அரசியலும் இல்லை. சர்ச்சையும் இல்லை. நான் என் வழிபாட்டு உரிமை அடிப்படையில் செல்கிறேன். கூட்டணி தொடர் பான அனைத்து முடிவுகளையும் தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×