என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வியாபாரியிடம் ரூ.33 லட்சம் மோசடி: மனுதாரர் புகார் மீதான நடவடிக்கை என்ன?- சூப்பிரண்டு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
- தங்கவேல் என்னை அணுகி, நிலம் வாங்குவதற்காக ரூ.1 கோடியே 63 லட்சம் தேவைப்படுகிறது என்றார்.
- இதில் ரூ.1 கோடியே 30 லட்சத்தை எனக்கு திரும்ப தந்துவிட்டார்.
மதுரை:
தஞ்சாவூரை சேர்ந்த முகமது அப்துல் காதர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றேன். நானும், தஞ்சாவூர் அருகே உள்ள கரம்பயம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் தங்கவேல் என்பவரும், நானும் நட்பாக இருந்து வந்தோம்.
இந்நிலையில் தங்கவேல் என்னை அணுகி, நிலம் வாங்குவதற்காக ரூ.1 கோடியே 63 லட்சம் தேவைப்படுகிறது. இந்தத் தொகையை கொடுத்தால் அசலையும் லாபத் தொகையும் சேர்த்தும் தருகிறேன் என்றார்.
இதனை நம்பி, நண்பரின் உதவியுடன் அந்த தொகையை அவரிடம் கொடுத்தேன். இதில் ரூ.1 கோடியே 30 லட்சத்தை எனக்கு திரும்ப தந்துவிட்டார். மீதமுள்ள தொகையை தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். இது சம்பந்தமாக போலீசில் புகார் அளித்தேன், நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக தங்கவேல் கொடுத்த பொய் புகாரின் பேரில் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டி வருகின்றனர்.
எனவே என்னை ஏமாற்றி தொடர்ந்து மிரட்டி வரும் தங்கவேலு மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் முறையான விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பாக இன்று விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கலந்தர் ஆசிக் அகமது ஆஜராகி, மனுதாரரின் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது சட்டவிரோதம் என வாதாடினார்.
விசாரணை செய்த நீதிபதி மனுதாரர் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.






