என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மேல்மருவத்தூர் அருகே விபத்தில் டீக்கடைக்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேல்மருவத்தூர்:

    மேல்மருவத்தூர் அடுத்து சோத்துப்பாக்கத்தில் இருந்து சித்தாமூருக்கு ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 5 பேர் இருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி ஷேர் ஆட்டோ மீது உரசியது.

    இதில் நிலை தடுமாறி ஓடிய ஆட்டோ எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மதுரை என்பவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தறிகெட்டு ஓடிய ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் மணிமாறன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான மதுரை மதுராந்தகத்தை அடுத்து அவுரிமேடு பகுதியை சேர்ந்தவர். டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    பெருங்களத்தூரில் தனியார் ஆம்னி பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 35 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    தாம்பரம்:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து தேனிக்கு நேற்று இரவு 8.15 மணிக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் பாண்டியன் ஓட்டினார். பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர்.

    மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக பஸ் சென்று கொண்டிருந்தது. இரவு 9.45 மணிக்கு அந்த பஸ் மதுரவாயல் பைபாஸ் சாலை முடியும் இடத்தில் பெருங்களத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது பஸ்சின் வலதுபுற விளக்கில் திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு புகை கிளம்பியது. உடனே டிரைவர் பாண்டியன் சுதாரித்துக் கொண்டு பஸ்சை நிறுத்தினார். உடமைகளை எடுத்துக் கொண்டு உடனே கீழே இறங்குமாறு பயணிகளிடம் கூறினார்.

    பயணிகளும் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு உடனே கீழே இறங்கி ஓடினார்கள். பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ்சில் தீ பரவத் தொடங்கியது. திடீரென்று பஸ் கொளுந்துவிட்டு எரிந்தது.

    இதனால் பஸ்சுக்கு பின்னால் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தீவிபத்து பற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக காட்சியளித்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் 35 பயணிகளும் தப்பினார்கள்.

    உடனே போக்குவரத்து போலீசார் கிரேனுடன் அங்கு விரைந்தனர். முற்றிலும் எரிந்து சேதமடைந்த பஸ்சை கிரேன் மூலம் எடுத்து பீர்க்கங்கரணை ஏரிப்பகுதியில் கொண்டு நிறுத்தினார்கள். தீப்பிடித்து எரிந்த பஸ்சில் வந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த தீவிபத்து காரணமாக மதுரவாயல்- பெருங்களத்தூர் சாலையிலும், தாம்பரம்- செங்கல்பட்டு சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதிகாலை 2 மணி வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
    அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
    ஆலந்தூர்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

    அவருடன் மனைவி பிரேமலதா, மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரும் சென்றனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாட்களில் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து பேச குழு ஒன்றையும் அறிவித்து இருந்தார்.

    அதன்படி துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையிலான குழுவினர் கூட்டணி பற்றி பேசி வருகிறார்கள். விஜயகாந்த் நாடு திரும்பிய பிறகு அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் விஜயகாந்த் இன்று அதிகாலை 1.15 மணிக்கு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

    பிரான்சில் இருந்து விமானம் மூலம் வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் இருந்தார். மகன் விஜய பிரபாகர் மட்டும் வீட்டுக்கு சென்று விட்டார்.



    காலை 8.30 மணிக்கு விஜயகாந்த் வெளியில் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அவரை வரவேற்க மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தொண்டர்கள் விமான நிலையத்தில் அதிகாலையில் குவிந்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.

    இதற்கிடையே விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் காலை 9.05 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தார். அவரை தொடர்ந்து மகன் விஜயபிரபாகர் 9.20 மணிக்கு விமான நிலையத்திற்குள் சென்றார்.

    காலை 11 மணி அளவில் மியாட் ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு டாக்டர், 3 நர்சுகள் அடங்கிய குழுவினர் விமான நிலையத்துக்குள் சென்றதாக தகவல் வெளியானது.

    அவர்கள் விஜயகாந்தின் உடல்நிலையை பரிசோதனை செய்ததாகவும். விமான பயணத்தினால் விஜயகாந்த் சோர்வடைந்து உள்ளதாகவும், அதற்காக சிகிச்சை அளித்ததாகவும் தெரிகிறது.

    விஜயகாந்த் 10 மணி நேரத்துக்கு மேலாக விமான நிலையத்தில் தங்கி இருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அவர் பேட்டரி கார் மூலம் வெளியே வந்தார். அவரைப் பார்த்து தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
    அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா மிரட்டி கூட்டணிக்கு அடி பணிய வைப்பதாக தி.மு.க. தலைவர். மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #BJP #ADMK
    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் திராவிட நாடு அலுவலக கட்டிடத்தின் முகப்பில் புதிதாக அமைக்கப்பட்ட அண்ணா, கருணாநிதி முழு உருவச் சிலைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பின்னர் காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடியில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் நகரச் செயலாளர் சன் பிராண்டு ஆறுமுகம் வரவேற்றார். கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    அறிஞர் அண்ணா பிறந்த ஊரில் அவர் பல்வேறு கட்டுரைகள் எழுதி தி.மு.க. வினை வளர்த்த இடத்தில் அவருடைய சிலையும், அவரது அன்பிற்கு என்றும் பாத்திரமாக இருந்து கழகத்தினை கட்டிக் காத்த கலைஞர் சிலையையும் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    மத்தியில் மோடி தலைமையில் பாசிச ஆட்சி நடைபெற்று வருகின்றது. மத்தியில் இருந்து தமிழகத்திற்கு வரும் அவர்களுடைய சதியினை தகர்த்தெறிய வேண்டும். நதிகள் இணைக்கப்படவில்லை. அதி நவீன நகரத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தினை மீட்டு அனைவரது கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்றார் மோடி. ஆனால் 15 ரூபாய் கூட போடவில்லை. மோடியின் அனைத்து வாக்குறுதியும் பொய்.

    ராணுவ பாதுகாப்பு தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என்று சொன்னார்கள். வெளிநாட்டு பெரு நிறுவனம் தனியார் துறைகளிடம் அத்திட்டம் தாரை வார்க்கப்படுகின்றது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மத்தியில் மன்னர் ஆட்சியும் மாநிலத்தில் கொத்தடிமை ஆட்சியும் நடைபெற்று வருகின்றது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.4 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளோம் என்கிறார்கள். ஆனால் 21 சதவீதம் உலக முதலீடு குறைந்துள்ளது என மத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. ஜி.எஸ்.டி. வரி ரூ.5454 கோடியினை மத்திய அரசிடம் கேட்டுப்பெற தமிழக அரசுக்கு திராணியில்லை.

    பாராளுமன்ற தேர்தலோடு, சட்டப்பேரவைத் தேர்தலையும் உள்ளாட்சித் தேர்தலையும் நடத்துங்கள் என மக்கள் தெரிவிக்கின்றனர். நீதி மன்றம் எச்சரித்தும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. 21 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டும் அங்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா இறப்பின் மர்மம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். தமிழக சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது நான் அதனை உதவாக்கரை பட்ஜெட் என சொன்னேன். அந்த வார்த்தையினை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.

    ஆனால் ஓ.பி.எஸ். பதில் அளித்து பேசும்போது எதிர்கட்சித் தலைவர் பட்ஜெட்டினை உதவாக்கரை பட்ஜெட் எனக் கூறுகிறார் என பேசி அந்த வார்த்தையினை அவைக் குறிப்பிலே ஏறுவதற்கு வழி செய்து விட்டு மேலும் எதிர்கட்சித் தலைவர் கருப்புக் கண்ணாடி அணிந்து வெறுப்புக் கண்ணோடு பார்க்கின்றார் எனத் தெரிவிக்கின்றார்.

    நானாவது சில சமயங்களில் கருப்புக் கண்ணாடி மட்டுமே அணிகின்றேன். ஆனால் ஓ.பி.எஸ். கருப்பு உள்ளத்தோடு உள்ளார் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது எனக் கூறி அவரின் சமாதியில் சபதம் செய்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த மர்மம் கண்டு பிடிக்கப்படும்.

    தமிழகத்தை ஆள்பவர்கள் மக்கள் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் மோடியின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள். சிறிய கட்சிகள் கூட பா.ஜனதாவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

    ஆனால் அ.தி.மு.க.வை மிரட்டி கூட்டணிக்கு அடி பணிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நாட்டு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ.க்கள், சி.வி.எம்.பி. எழிலரசன், புகழேந்தி, ஆர்.டி.அரசு, மற்றும் சி.வி.எம்.அ.சேகரன், வி.எஸ்.ராமகிருஷ்ணன், சிறுவேடல் செல்வம், தசரதன், சுகுமார், ஜெகன்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #MKStalin #BJP #ADMK
    துபாயில் இருந்து சென்னைக்கு மின் சாதனங்களில் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ. 18 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து நேற்றிரவு சென்னைக்கு வந்த விமான பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அந்த விமானத்தில் பயணம் செய்த 2 பேரின் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அவர்கள் கொண்டு வந்த மின் சாதனங்கள் சிறிய வகை மிக்சி, எடை பார்க்கும் மெஷின் ஆகியவற்றின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனை உடைத்து உள்ளே பார்த்த போது அதில் தங்க கட்டிகள் இருந்தன.

    530 கிராம் எடையுள்ள ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

    சென்னையில் யாருக்கு இந்த தங்கம் கடத்தி வரப்பட்டது. கேரளாவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டார்களா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

    சென்னை விமான நிலையம் வழியாக தினமும் தங்கம் கடத்தி வருவதும் பிடிபடுவதும் வாடிக்கையாகி உள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளின் கண்ணீல் மண்ணை தூவும் அளவிற்கு தங்கம் கடத்தல் பேர்வழிகள் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனாலும் அவர்களின் ‘கழுகு’ பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கி கொள்கிறார்கள். #ChennaiAirport
    பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் படிக்கட்டில் தொங்கிய முதியவர் நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    தாம்பரம்:

    சென்னை புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    காலை, மாலை நேரங்களில் ஏராளமான பயணிகள் ரெயில் பெட்டியின் வாசலில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். இதனால் உயிர் பலி அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் தொங்கியபடி சென்ற முதியவர் கீழே விழுந்து பலியானார்.

    செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயில் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது கூலி தொழிலாளி விநாயகம் (65) என்பவர் ரெயிலில் ஏற முயன்றார்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் ரெயில் பெட்டி வாசலில் தொங்கியபடி நின்றார்.

    ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் விநாயகரம் நிலை தடுமாறி பிளாட்பாரத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விநாயகம் பரிதாபமாக இறந்தார்.

    கடந்த ஆண்டு பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் தண்டவாள மின்கம்பத்தில் மோதி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    இரண்டு ஷேர் ஆட்டோக்கள் மோதி கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவி கை முறிந்தது குறித்து 2 ஆட்டோ டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு காஞ்சீபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

    நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் மாணவிகள் சிலர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறினர். அப்போது பின்னர் வந்த மற்றொரு ஷேர் ஆட்டோ அடுத்த இடத்தில் பயணிகளை ஏற்றவதற்காக முந்தி சென்றது.

    இதையடுத்து 2 ஷேர் ஆட்டோக்களும் போட்டி போட்டு முந்தி சென்றனர். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோக்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் ஒரு ஷேர் ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்தது.

    இதில் கல்லூரி மாணவிகளான வாலாஜாபாத்தை சேர்ந்த பொன்னி, அரப்பாக்கத்தை சேர்ந்த சாலினி ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் பொன்னியின் வலது கை முறிந்தது. மேலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 13 பேரும் காயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்த பொன்னிக்கு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாலினி காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இது தொடர்பாக ஷேர் ஆட்டோ டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். #tamilnews
    செங்கல்பட்டு அருகே போலீஸ் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ஜெயக்குமார். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஜெயக்குமார் தரப்பினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினரும் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதில் எதிர்தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் ஜெயக்குமார் ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவரது நண்பர்கள் குறித்து போலீசார் அவரிடம் அடிக்கடி விசாரித்தனர். அவர்களை அடையாளம் காட்டும்படி மிரட்டியதாக தெரிகிறது. மேலும் கொடுத்த புகாரை வாபஸ் பெறும்படி நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த ஜெயக்குமார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் மிரட்டியதால் தான் ஜெயக்குமார் தற்கொலை செய்ததாக கூறி அவரது உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை சென்னை-திருச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.

    டி.எஸ்.பி. கந்தன், இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து ஜெயக்குமாரின் உறவினர்கள் கூறும்போது, “போலீசாரின் மிரட்டலால்தான் ஜெயக்குமார் தற்கொலை செய்து உள்ளார். இதில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

    கூட்டணிக்காக பிரதமர் மற்றும் மத்திய-மந்திரிகள் தமிழ்நாடு உள்பட எல்லா மாநிலத்துக்கும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். #NarayanaSwamy #PMModi
    ஆலந்தூர்:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சி நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த ஓட்டு வாங்கியது. அந்த கட்சி இன்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை தங்களுடன் கூட்டணி வைக்க மிரட்டுகிறது.

    பா.ஜனதாவுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. கூட்டணிக்காக பிரதமர் மற்றும் மத்திய-மந்திரிகள் தமிழ்நாடு உள்பட எல்லா மாநிலத்துக்கும் சுற்றுப் பயணம் செய்து வருகின்றனர்.



    பிரதமர் மோடியும், மத்திய மந்திரிகளும் என்ன செய்தாலும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை.

    காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி குறித்து தமிழிசை பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #NarayanaSwamy #PMModi
    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    மேற்கு தாம்பரம் கேப் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வின் (58). தாம்பரத்தை அடுத்த படப்பையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் போன் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

    நேற்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அலுவலகத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் செல்வின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார். விபத்தில் இறந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் செல்வினுக்கு ஜெயராணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    ரபேல் விவகாரத்தில் காங்கிரசார் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #BJP #RafaleDeal

    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ஈரோட்டுக்கு வருகிறார். மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வேலூருக்கு வருகிறார். மத்திய மந்திரி ஸ்மிருதிராணி திருவண்ணாமலை வருகிறார். நிதின் கட்காரி நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளார்.

    மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு தொண்டர்களை சந்திக்க வருகிறார்கள். அவர்கள் வருகை பாராளுமன்ற தேர்தலை நாங்கள் வெற்றிகரமாக சந்திக்க உதவியாக இருக்கும்.

    ரபேல் விவகாரத்தை வைத்துக்கொண்டு ராகுல் காந்தி மற்றும் காங்கிரசார் அரசியல் செய்து வருகிறார்கள். பா.ஜ.க. ஆட்சி நம்நாட்டிற்கு நல்ல திட்டங்களை கொடுத்து இருக்கிறது. ஊழலற்ற நிர்வாகத்தை அமைத்திருக்கிறது. அதனால்தான் ரபேல் தவிர எதிர்க்கட்சிகள் வேறு எந்த திட்டத்தை பற்றியும் பேச முடியவில்லை.

    ரபேல் விவகாரம் குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டனர். ஆனாலும் 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் அதிகமாக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது. அப்படிப்பட்ட காங்கிரசார் இன்று பொய்யான ரபேல் விவகாரத்தை தூக்கி வைத்து பேசுகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறியிருந்தார். அவர் கூறியது சரியாகத்தான் இருக்கும். பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் சேரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #RafaleDeal

    ஸ்ரீபெரும்புதூரில் திமுக பிரமுகர் தொழில் போட்டியில் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது45). இவர் பழைய கார் வாங்கி விற்பது, கம்பெனி, தொழிற்சாலைகளில் கழிவுகளை வாங்கி விற்பது மற்றும் கட்டுமான தொழில் செய்து வந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு சங்க இயக்குனராக பதவி வகித்து வந்தார். மேலும் தி.மு.க.வில் பிள்ளைப்பாக்கம் ஊராட்சி செயலாளராகவும் இருந்தார்.

    இவரது அலுவலகம் அதே பகுதி ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் உள்ளது.

    நேற்று மதியம் ரமேஷ் அலுவலகத்தில் இருந்தார். அப்போது 3 ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் அலுவலகத்துக்குள் புகுந்து ரமேசை வெட்டிக் கொலை செய்து தப்பி சென்று விட்டது. இந்த தாக்குதலில் அலுவலக ஊழியர் பார்த்திபனுக்கும் கையில் வெட்டு விழுந்தது.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தொழில் போட்டி காரணமாக ரமேஷ் தீர்த்து கட்டப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். தொழிற்சாலையில் பழைய பொருட்களை எடுப்பது தொடர்பாக ரமேசுக்கும், சிலருக்கும் இடையே ஏற்கனவே தகராறு உள்ளது.

    எனவே இதில் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் கூலிப்படையை ஏவி ரமேசை கொன்று இருக்கலாம் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக கிளாப் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியை தேடி வருகிறார்கள்.

    ×