என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ரஜினி, சீமான் ஆதரவு தனக்கு இருக்கும் என்று நம்புவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #MakkalNeedhimaiam #KamalHaasan #Rajinikanth
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருச்சியில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    நான் மக்களை நேரடியாக சந்திக்கும்போது அவர்கள் அமைதியாக என்னுடைய கருத்துக்களை கேட்டார்கள். கை தட்டி ஆர்ப்பரிக்காமல் யோசிக்க ஆரம்பித்தார்கள். அது நன்றாகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது. நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இருந்தது. மக்களின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒத்துப்போனது.

    இதே போல் பல இடங்களில் உள்ள மக்களின் கருத்தும் ஒத்துப்போக ஆசையாக இருக்கிறது. இதுவரையில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். நாங்கள் ஒரு அணி. எங்களிடம் நேர்மையானவர்கள் சேரலாம். இதுவெறும் அழைப்பு தானே தவிர, சுயநலமோ, யுக்தியோ கிடையாது.



    ரஜினி, சீமான் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன். ஆதரவு என்பது அவர்கள் விரும்பி தர வேண்டும். நான் 3-வது அணி என்று சொல்லவில்லை.

    வேட்பாளர் தேர்வு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. விருப்ப மனுக்கான அறிவிப்பு நாளை வெளிவரும். டாக்டர் தமிழிசைக்கு நான் பேசுவது திரைப்பட வசனம்போல் இருக்கிறது என்பதற்கு காரணம் என்னையும் திரைப்படத்தையும் ஒன்றாக சேர்த்து பார்ப்பதுதான்.

    எங்களுடைய தேர்தல் அறிக்கை கவர்ச்சியாக இருக்காது. நாங்கள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்ல. நேர்மைக்கும் உணர்ச்சிக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்போம்.

    அதை நோக்கிதான் எங்கள் தேர்தல் அறிக்கை இருக்கும். தேர்தல் அறிக்கைக்கு ஒன்றும் அவசரமில்லை. கூடிய சீக்கிரம் அறிவிப்போம். செய்யப்போவதை தான் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக கொடுப்போம்

    எங்களுடைய பலம் மக்கள் தான். நாங்கள் அதை நோக்கி பயணிக்கிறோம். யாருடன் கூட்டணி சேர்ந்தால் காசு வரும், ஓட்டு கிடைக்கும் என்று நினைக்காமல் மக்கள் நலன் கருதி செயல்படுவோம். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவேண்டும் என்றால் ஏன் வரவில்லை என்று கேள்வி கேட்கலாம். வந்தால் ஒரு சிறிய நன்றி சொல்லலாம்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் பரீட்சை என்றுதான் சொன்னேன். சோதனை என்று சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்தது அ.தி.மு.க. அதனால் ரஜினி ரசிகர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு தான் என்று ஒரு நாளிதழில் செய்தி வந்திருக்கிறதே என்று நிருபர்கள் கேட்டபோது, “எந்த தண்ணீர் என்று தெரியவில்லை” என்று கமல் பதில் அளித்தார். #MakkalNeedhimaiam #KamalHaasan #Rajinikanth
    சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #DindigulSreenivasan #chennaiairport
    ஆலந்தூர்:

    தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

    இவர் கடந்த 17-ந்தேதி காலை 8.10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் திருச்சியில் இருந்து சென்னை வந்தார். அப்போது அவருடைய செல்போன் திடீரென மாயமாகி இருந்தது.

    வீட்டிற்கு சென்ற பின்பே செல்போன் திருடு போய் இருப்பது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அமைச்சரின் உதவியாளர் ஏர் இந்தியா அலுவலகம் மற்றும் விமானநிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

    மேலும் சென்னை விமானநிலைய போலீஸ் மற்றும் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது.

    சென்னை விமான நிலையத்தில் அன்றைய தேதியில் பதிவாகியுள்ள கேமரா காட்சிகள் மற்றும் அந்த விமானத்திற்குள் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    விமான நிலைய தொழிலாளர்களிடமும் விசாரணை நடந்தது. #DindigulSreenivasan #chennaiairport
    மாமல்லபுரத்தில் 16 வயது சிறுவன் கடலில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    கேளம்பாக்கத்தை அடுத்த ஏகாட்டூரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் தினேஷ் (வயது 16). மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரிக்கு தேவராஜ் குடும்பத்துடன் வந்தார். பின்னர் அனைவரும் கடலில் குளித்தனர்.

    அப்போது ராட்சத அலையில் சிக்கிய தினேஷ் கடலில் மூழ்கினார். நேற்று மதியம் கடற்கரை கோவில் அருகே தினேசின் உடல் பிணமாக கரை ஒதுங்கியது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயிலில் இருந்து விழுந்து போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்தவர் சுபாஷ் (27). சொந்த ஊர் விழுப்புரம்.

    இவர் நேற்று முன்தினம் எழும்பூரில் இருந்து சேலம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யாத பெட்டியில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் வாசல் அருகே நின்று பயணம் செய்தார்.

    ரெயில் சிங்கப்பெருமாள் கோவிலுக்கும், செங்கல்பட்டுக்கும் இடையே ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சுபாஷ் கீழே தவறி விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவர் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் இன்று மரணம் அடைந்தார். செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம் அருகே ரெயிலில் அடிபட்டு ஆசிரியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தாம்பரம்:

    கிழக்கு தாம்பரம் கணபதி புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்..

    நேற்று மாலை பணி முடிந்ததும் மின்சார ரெயிலில் பெருங்களத்தூர் வந்தார். இங்கு ரெயிலில் இருந்து இறங்கிய அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அவர் செல்போனை பார்த்தபடியே நடந்து சென்றார்.

    அப்போது கால் தடுக்கி தண்டவாளத்தில் விழுந்ததால் அவர் மீது ரெயில் மோதியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 11 பேரும் மீட்கப்பட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள கொளத்தாஞ்சேரியில் செங்கல் சூளை வைத்திருப்பவர் சதீஷ்.

    இந்த செங்கல் சூளையில் 11 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. முத்துவடிவேலன் உத்தரவுப்படி தாசில்தார் பாக்ய லட்சுமி அந்த செங்கல் சூளைக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 11 பேர் அந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரிய வந்தது. இதில் 5 பேர் குழந்தைகள், அவர்கள் பள்ளிக் கூடம் போகாமல் இருந்தனர்.

    இதையடுத்து, கொத்தடிமைகளாக இருந்த 11 பேரும் மீட்கப்பட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அரிசி, துணி, பண உதவி ஆகியவை வழங்கப்பட்டது.

    அனைவரும் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 5 சிறுவர்களையும் பள்ளியில் சேர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். செங்கல் சூளை உரிமையாளர் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் செல்போன்களை திருடி வந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு- உள்நாட்டு முனையங்களில் பயணிகளின் உடமைகளை ஏற்றி, இறக்கும் போது அவர்களது செல்போன்கள் அடிக்கடி திருட்டு போய் வந்தது. இது குறித்த புகாரின் பேரில் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் பயணிகளின் உடமைகளை ஏற்றி இறக்கும் தற்காலிக ஊழியரான மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் செல்போன் திருடி வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். மேலும் 20 செல்போன்களை வெளியில் விற்றுவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

    ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான பயணிகளிடம் செல்போன்களை திருடியதாக 3 தற்காலிக ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நீடித்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 250 பறிமுதல் செய்யப்பட்டது.
    திருப்போரூர்:

    திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அலுவலகத்தின் கதவை வெளிப்புறமாக பூட்டி யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

    அப்போது பத்திர பதிவிற்காக சுமார் 30-க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தின் உள்ளே இருந்தனர். அவர்களிடம் உண்மையில் பத்திரபதிவிற்காக வந்தார்களா? என போலீசார் விசாரணை செய்து அவர்களுடைய பெயர், முகவரிகளை எழுதி வாங்கிக் கொண்டு வெளியில் அனுப்பினர்.

    பின்னர் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். நள்ளிரவு 12 மணிவரை இந்த சோதனை நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 250 பறிமுதல் செய்யப்பட்டது. ஆலந்தூர் லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி. குமரகுரு தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

    பத்திரப்பதிவு செய்வதற்கு பொதுமக்களிடமிருந்து பணம் பெறுவதாக வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது.

    சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு செய்வோர் ஏற்கனவே உள்ள ஆன்லைனில் செலுத்தும் வசதியுடன் ஆயிரத்திற்குள் உள்ள தொகையும் இன்று முதல் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.

    இதனால் பத்திரபதிவு செய்வோர் எந்த ஒரு தொகையும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கொண்டு வர தேவையில்லை. அப்படி பணம் வைத்துஇருந்தால் முறையான கணக்கு காட்டலாம். இந்த சோதனையில் அலுவலகத்திற்குள் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பத்திரப்பதிவு உயர்அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படும். பின்னர் கணக்கில் வராத பணத்திற்கான விளக்கம் சார் பதிவாளரிடம் கேட்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 60 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சார்பதிவாளராக பணியாற்றி வரும் ராங்கியம் கிராமத்தை சேர்ந்த சுமதி என்பவரிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நீடித்தது.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை ஓடஓட வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பள்ளமொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (35). மரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி ஆதிலட்சுமி (30).

    கண்ணன்-ஆதிலட்சுமி தம்பதிக்கு சாருமதி (10) என்ற மகளும், வெற்றிவேல் (5) என்ற மகனும் உள்ளனர். கண்ணனுக்கு குடிப்பழக்கம் உண்டு. சாருமதி ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவி நடத்தையில் கண்ணன் சந்தேகப்பட்டார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இன்று காலை கண்ணனும், ஆதிலட்சுமியும் வேலைக்கு புறப்பட்டனர். அப்போது மனைவியை கண்ணன் திட்டினார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், அவரது மனைவி ஆதிலட்சுமியை தன்னிடம் இருந்த மரம் வெட்டும் கத்தியால் வெட்டினார். ரத்தம் சொட்டச் சொட்ட அலறிய படி ஆதிலட்சுமி அங்கிருந்து ஓடினார். அவரை ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டினார்.

    ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆதிலட்சுமி ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சுங்குவார்சத்திரம் போலீசார் கண்ணனை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெறுகிறது.
    திருப்போரூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் கணவன், மனைவி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 72). இவரது மனைவி கஸ்தூரி பாய் (65). இவர்களுடைய ஒரே மகள் திருமணமாகி கணவருடன் விருதுநகரில் வசித்து வருகிறார்.

    ஆனந்தராஜும், அவரது மனைவியும் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டின் ஒரு பகுதியில் சிறிய பெட்டிக் கடை நடத்தி வந்தனர்.

    நேற்று இரவு கடையை மூடி விட்டு இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டில் தீப்பிடித்தது.

    மேலும் கியாஸ் சிலிண்டரும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ஆனந்தராஜ், அவரது மனைவி கஸ்தூரி பாய் ஆகியோர் உடல் துண்டாகியும், கருகியும் பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்ததும் மறைமலைநகர், சிறுசேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் குடிசை முழுவதும் இடிந்து தரை மட்டமானது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.

    தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. மின் கசிவினால் ஏற்பட்ட தீயில் கியாஸ் சிலிண்டர் வெடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    2 பேரின் உடலையும் காயார் போலீஸ் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவான்மியூரில் கணவர் முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றியதால் புதுப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சோழிங்கநல்லூர்:

    திருவான்மியூர் காமராஜர் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் சிவசங்கர். இவரது மனைவி நித்தியா (27). இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் சிவசங்கருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே திருமணம் நடந்த தகவல் நித்தியாவுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    கணவர் அவருக்கு நடந்த முதல் திருமணத்தை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்து அவரிடம் சண்டை போட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கர் நித்தியாவிடம் தகராறு செய்து விட்டு வெளியே சென்று விட்டார்.

    இதனால் மன உளைச்சல் அடைந்த நித்தியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்த திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நித்தியாவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நித்தியா எழுதி கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசங்கரை தேடி வருகின்றனர்.
    பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்தார். #DMDK #Vijayakanth #Premalatha
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.  அவருடன் மனைவி பிரேமலதா, மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரும் சென்றனர்.

    இந்த நிலையில் விஜயகாந்த் இன்று அதிகாலை 1.15 மணிக்கு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

    பிரான்சில் இருந்து விமானம் மூலம் வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் இருந்தார்.

    விஜயகாந்த் 10 மணி நேரத்துக்கு மேலாக விமான நிலையத்தில் தங்கி இருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அவர் பேட்டரி கார் மூலம் வெளியே வந்தார். அவரைப் பார்த்து தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

    அப்போது பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-


    கேப்டன் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். பயண களைப்பால் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். வேறு எதுவும் இல்லை. அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் தனது முடிவை விஜயகாந்த் அறிவிப்பார்.

    யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் அவர் அறிவிப்பார். பெரிய கட்சிகளை சேர்ந்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை இடம், எந்த தொகுதி என்பது குறித்தெல்லாம் கலந்து ஆலோசித்து தெரிவிப்பார்.

    இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. எந்த கட்சியும் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை. அப்படியிருக்கும் போது தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை இப்போது எப்படி சொல்ல முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார். #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
    ×