search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்பு சோதனை
    X

    திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்பு சோதனை

    திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நீடித்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 250 பறிமுதல் செய்யப்பட்டது.
    திருப்போரூர்:

    திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அலுவலகத்தின் கதவை வெளிப்புறமாக பூட்டி யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

    அப்போது பத்திர பதிவிற்காக சுமார் 30-க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தின் உள்ளே இருந்தனர். அவர்களிடம் உண்மையில் பத்திரபதிவிற்காக வந்தார்களா? என போலீசார் விசாரணை செய்து அவர்களுடைய பெயர், முகவரிகளை எழுதி வாங்கிக் கொண்டு வெளியில் அனுப்பினர்.

    பின்னர் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். நள்ளிரவு 12 மணிவரை இந்த சோதனை நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 250 பறிமுதல் செய்யப்பட்டது. ஆலந்தூர் லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி. குமரகுரு தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

    பத்திரப்பதிவு செய்வதற்கு பொதுமக்களிடமிருந்து பணம் பெறுவதாக வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது.

    சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு செய்வோர் ஏற்கனவே உள்ள ஆன்லைனில் செலுத்தும் வசதியுடன் ஆயிரத்திற்குள் உள்ள தொகையும் இன்று முதல் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.

    இதனால் பத்திரபதிவு செய்வோர் எந்த ஒரு தொகையும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கொண்டு வர தேவையில்லை. அப்படி பணம் வைத்துஇருந்தால் முறையான கணக்கு காட்டலாம். இந்த சோதனையில் அலுவலகத்திற்குள் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பத்திரப்பதிவு உயர்அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படும். பின்னர் கணக்கில் வராத பணத்திற்கான விளக்கம் சார் பதிவாளரிடம் கேட்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 60 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சார்பதிவாளராக பணியாற்றி வரும் ராங்கியம் கிராமத்தை சேர்ந்த சுமதி என்பவரிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நீடித்தது.
    Next Story
    ×