என் மலர்tooltip icon

    ஈரோடு

    பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தார்கள்.
    ஈரோடு :

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ளது சுண்டப்பூர் கிராமம். இந்த கிராமத்துக்கு முறையான சாலை வசதி கிடையாது. அதனால் பஸ் வசதியும் இல்லை. இங்கு வசிக்கும் மக்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் வனப்பகுதி மண் சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம்வரை நடந்து தாமரைக்கரைக்கு வரவேண்டும். பின்னர் அங்கிருந்து பஸ் ஏறி செல்ல வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தமிழக அரசு இங்குள்ள மண்பாதையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால் தற்போது அங்கு ரோடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்தநிலையில் சுண்டப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ். இவருடைய மனைவி குமாரி (வயது 23). இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மீண்டும் குமாரி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான குமாரிக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. பஸ் வசதி இல்லாததால், வேறு வழியில்லாமல் மாதேசும் அவருடைய உறவினர்களும் ஒரு மூங்கிலில் தொட்டில் கட்டி அதில் குமாரியை அமர வைத்து காட்டுப்பாதையில் தூக்கிவந்தார்கள்.

    கடந்த 3 நாட்களாக பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. அதனால் ஏற்கனவே மேடு, பள்ளமாக இருந்த மண்பாதை மிகவும் மோசமாக இருந்தது. ஆனாலும் சிரமப்பட்டு குமாரியை தொட்டிலில் தூக்கி சென்றார்கள்.

    சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தை அவர்கள் கடந்தபோது, அந்த வழியாக ஒரு மினி லாரி வந்தது. உடனே அந்த லாரியில் குமாரியை ஏற்றிக்கொண்டு தாமரைக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி விரைந்தார்கள். ஆனால் அதற்குள் குமாரிக்கு பிரசவ வலி மேலும் அதிகமானது.

    அதனால் மினிலாரியை ரோட்டு ஓரமாக நிறுத்தினார்கள். பின்னர் அவர்களுடன் சென்ற மாதேசின் தாய் சன்னியம்மாளே மருமகளுக்கு லாரியிலேயே பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த மினி லாரியிலேயே இருவரையும் தாமரைக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்கள். அங்கு தாய், சேய்க்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.

    நிறைமாத கர்ப்பிணியை பாதுகாப்பான ஒரு வாகனத்தில் ஆஸ்பத்திரியில் கூட சேர்க்க முடியாமல், பாதை வசதி இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. இதுபோன்ற கிராமங்களில்தான் அரசின் நலத்திட்டங்கள் உடனே சென்று சேரவேண்டும். தங்கள் ஊருக்கு எப்போது ரோடு போடுவார்கள்? எப்போது பஸ் வரும்? என்று சுண்டப்பூர் மக்களும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள். 
    பவானி அருகே தோட்டத்தில் வி‌ஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பவானி அடுத்த சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 84). பழனிச்சாமி கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டு வந்தாராம். அவரது குடும்பத்தார் அவருக்கு ஆறுதலாக இருந்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமியின் மகன் ராஜேந்திரன் தந்தைக்கு போன் செய்துள்ளார். ஆனால் பழனிச்சாமி போன் எடுக்கவில்லை இதனால் சந்தேகமடைந்த ராஜேந்திரன் தந்தையை பல்வேறு இடங்களில் தேடினார்.

    பெரியபுலியூர் அருகே பூலப்பாளையம் பகுதியில் ஒரு தோட்டத்தில் சென்று பார்த்தபோது பழனிச்சாமி வி‌ஷத்தைக் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் தந்தையை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். டாக்டர் பரிசோதனை செய்தபோது பழனிச்சாமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    2021 சட்டமன்ற தேர்தலிலும் இந்த ஆட்சியே தொடரும். இதில் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    கோபி:

    கோபி அடுத்த லக்கம்பட்டி பேரூராட்சியில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் சாலை, கழிவு நீர், குடிநீர் வசதி உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது. இதனை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இதுவரை கோபி சட்டமன்ற தொகுதியில் ரூ.62 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து உள்ளது. மேலும் கோபி நகராட்சியில் ரூ. 53 கோடி செலவில் குடிநீர் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையே இருக்காது. மேலும் கோபி தினசரி மார்க்கெட் ரூ.10 கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் காய்கறி வாங்க பொதுமக்கள் வந்தால் மழையில் நனையாமல் இருக்கும் வகையில் வசதி செய்து தரப்படும்.

    கீரிப்பள்ளம் ஓடையை கான்கிரீட் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் தண்ணீரை மறு சுழற்சி மூலம் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும்.

    தமிழகம் சட்டம்- ஒழுங்கில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது. முதல்வர் செய்த வரும் திட்டங்களை மோடி தலைமையிலான மத்திய அரசு பாராட்டி வருகிறது. அது அம்மா கண்ட கனவு நிரூபிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு சமீபத்தில் நடந்த 2 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அதே போல் 2021 சட்டமன்ற தேர்தலிலும் இந்த ஆட்சியே தொடரும். இதில் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை.

    மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபடும் மாணவர்களுக்கு பிரேயர் முடிந்த பிறகு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த அரசு மாணவர்களின் எதிர் காலத்தை மனதில் கொண்டு கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

    ரூ.128 கோடி செலவில் சி.எஸ்.ஆர். நிதி மூலம் பள்ளிகளில் வர்ணம் பூசுதல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    மேலும் அமைச்சர் கூறும்போது, கோபி பகுதியில் விவசாய பயிர்களை பூச்சிகளின் தாக்குதல் குறித்து ஆய்வு குழு வரையறுக்கப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் அரசகுமார் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார் என்று கூறியுள்ளாரே...? என்று கேட்டதற்கு ஒவ்வொருவருக்கும் கருத்துகள் கூற உரிமை உள்ளது என்றார்.

    உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைப்பது நல்லது என்று தனியரசு எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் தனியரசு எம்.எல்.ஏ. இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பலமுறை நடத்த ஏற்பாடு செய்தும் நடைபெறவில்லை தற்போதும் கூட இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் உள்ளது. அனைத்து கட்சியினர் கலந்தாலோசித்து உள்ளாட்சித் தேர்தலை வரும் 2021-ம் ஆண்டு வரை ஒத்தி வைப்பது நல்லது என்று நினைக்கிறேன் .

    ரஜினி கமலால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது இருவரும் 70 ஆண்டுகள் எந்த ஒரு கட்சியிலும் அடிப்படை உறுப்பினராக கூட சேராமல் எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்காமல் திடீரென அரசியல் அரியணையில் ஏற நினைப்பது தவறு. அவர்கள் மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம் தமிழக மக்கள் இனி நடிகர் நடிகைகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.  அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட விழாது.

     இவ்வாறு அவர் கூறினார்.
    பெருந்துறை அருகே திருமணமான 1½ ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள தாசம்பாளையத்தை சேர்ந்தவர் லதா (வயது 23). இவருக்கும் பள்ளி பாளையம் அடுத்த அஞ்சுபனை பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. நந்தகுமார் திருப்பூர் பணியன் கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் லதா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். இதற்கிடையே பெற்றோர் வீட்டில் இருந்த லதா திடீரென வி‌ஷம் குடித்து விட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே லதா இறந்து விட்டது தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் திருமணமாகி 1½ ஆண்டில் இளம்பெண் இறந்து விட்டதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோட்டில் மகனை டியூசனுக்கு அழைத்து சென்ற பெண்ணிடம் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் 6 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோடு செல்வம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். சொந்தமாக ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி (வயது 41). சுமதி தனது மகன் ஆதித்யாவை தனது மொபட்டில் டியூசன் கொண்டு சென்று விடுவது வழக்கம். பின்னர் டியூசன் முடிந்ததும் மகனை வீட்டுக்கு அழைத்து வருவார்.

    இதேபோன்று நேற்றும் வழக்கம் போல் டியூசன் முடிந்ததும் தனது மகனை மொபட்டில் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.

    கணபதி நகர் பகுதி அருகே வந்தபோது அவர்கள் பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர். பின்னால் அமர்ந்து வந்த நபர் திடீரென சுமதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து கொண்டு தப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி திருடன்.. திருடன்..என கத்தினார். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பிச் ஓடி விட்டனர்.

    இதுகுறித்து விரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர். கொள்ளை சம்பவம் நடந்த இடம் அருகே வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் ஜனவரியில் நிரப்பப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூரில் இன்று காலை தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.87 கோடி மதிப்பில் தார்சாலை பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆசிரியர் தகுதி தேர்வாளர்கள் வழக்கு தொடருவதை தடுக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். 2 மாத காலத்தில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும்.

    மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை கூடுதலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    2,472 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கணினி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    பிப்ரவரி மாதத்திற்கு பிறகு அனைத்து ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது.

    அதே போன்று 4,017 ஆய்வக உதவியாளர் பணியிடம் ஒரே தேர்வில் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    ஆசிரியர் தேர்வு மையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும்போது ஒவ்வொரு முறையும் யாராவது வழக்கு தொடர்ந்து வருகின்றனர். இனி அதை தவிர்க்க ஆசிரியர் தகுதி தேர்வாணையத்திற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

    ஆசிரியர்கள் தலைமையாசிரியராக பதவி உயர்வு செய்யும் நடவடிக்கையில் அரசு மேற்கொண்டு உள்ளது.

    அரசு பள்ளிகள்

    அரசு பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்ய அந்த பகுதியில் உள்ள முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களை அழைத்து உள்ளோம்.

    செயல்பாட்டில் இல்லாத பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் நிரப்புவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்து விட்டதால் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் ஜனவரி முதல் வாரத்தில் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பவானி சங்மேஸ்வரர் கோவில் யானை வேதநாயகி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
    பவானி:

    ஈரோடு மாவட்ட கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருவதுதான் பவானி சங்கமேஸ்வரர் கோவில் ஆகும்.

    இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சேர்ந்த பக்தர் ஒருவர் மூலமாக மூன்றரை வயது உடைய பெண் யானை குட்டி ஒன்று பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த யானைக்கு வேதநாயகி என்ற பெயர் சூட்டி வளர்க்கப்பட்டு வந்தது. கோவிலில் நடக்கும் பல்வேறு விசே‌ஷங்களுக்கும் வேதநாயகி சென்று கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வரும். தற்போது 43 வயது தொட்ட வேதநாயகி அதிக உடல் பருமனால் அவதிப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் வேதநாயகிக்கு எந்தவிதமான உணவும் வழங்க கூடாது என உத்தரவு பிறப்பித்து யானைப்பாகன் மூலமாக காலை மற்றும் மாலை 2 வேளைகளிலும் நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் வேதநாயகிக்கு சிறியதாக தோள்பட்டையிலும், கால் பகுதியிலும் புண் ஏற்பட்டது.

    இந்நிலையில் தோள் பட்டையின் இரண்டு பக்கமும் பெரிய அளவில் உருவாகியது. மேலும் கால் நகசுத்தி அவதி ஏற்பட்டு கடந்த சில தினங்களாக உணவு கூட அருந்த முடியாத நிலை ஏற்பட்டதாக பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்ட கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்து பரிசோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5 .10 மணி அளவில் வேதநாயகி தங்க வைக்கப்பட்டிருந்த அறையிலேயே இறந்துள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த பவானி, குமாரபாளையம், காலிங்கராயன்பாளையம் உட்பட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள் இறந்த வேதநாயகிக்கு பொன்னாடை, மலர்மாலை திருநீறு, மஞ்சள், குங்குமம் இட்டு அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் மதியம் 1 மணியளவில் கிரேன் மூலமாக லாரியில் ஏற்றப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சங்கமேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகிலுள்ள பணியாளர்கள் குடியிருப்பு பகுதி காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் இறந்த யானை வேதநாயகிக்கு பல்வேறு திரவியங்கள் மூலமாக அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இதில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் உதவி ஆணையர்களான நந்தகுமார் சபர்மதி, மாவட்ட வன அலுவலர் விசுவநாதன், அந்தியூர் வனசரக அலுவலர் உத்திர சாமி பருப்பு வனசரக அலுவலர் மணிகண்டன், புலிகள் காப்பகம் கால்நடை மருத்துவர் அசோகன் மற்றும் பவானி நகரின் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    பவானி டி.எஸ்.பி. சேகர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    முன்னதாக தேவநாயகி உடல் ஊர்வலமாக கொண்டு சென்ற போது சாலையோரம் இருப்புறங்களிலும் மக்கள் நின்று மலர் தூவினர். சில பெண்கள் துக்கம் தாங்காமல் அழுதனர்.

    ஈரோட்டில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு காசிபாளையம், மாரியம்மன் கோவில், நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் தம்பிரான். வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கற்பகம் (வயது50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தம்புரானுக்கும் கற்பகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தம்பிரான் வெளியே சென்று விட்டார். கற்பகம் வீட்டில் இருந்த மண் எண்ணெயை எடுத்து திடீரென தனக்கு தானே உடலில் தீ வைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி கற்பகம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர் அருகே நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே இந்த வங்கியின் ஏ.டி.எம் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்திற்குள் நள்ளிரவு ஒரு மணியளவில் மர்ம கும்பல் புகுந்தது. அந்த கும்பல் கடப்பாரை உள்பட பயங்கர ஆயுதங்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அவரால் முடியவில்லை.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் சத்தம் ஒலித்தது. இதனைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் கொள்ளையர்கள் தங்கள் திட்டத்தை கைவிட்டு தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இதுகுறித்து அந்தியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி, குற்றப்பிரிவு போலீசார் திருநாவுக்கரசு, செந்தில் குமார் உள்பட பல்வேறு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    வங்கி ஏ.டி.எம்.மில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நல்ல வேளையாக அலாரம் ஒலித்ததால் பொதுமக்கள் திரண்டு வந்ததன் காரணமாக கொலையாளிகள் தப்பிச் சென்றனர். இதனால் பல லட்ச ரூபாய் தப்பியது.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    பவானியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.

    முன்னதாக பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 2020 ஜனவரி 4-ந்தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடக்க உள்ளது. அந்த மாநாட்டில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் பற்றிய முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

    மேலும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் எங்கள் கூட்டணி தொடரும். உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையில் ராக்கெட் ஏவப்பட்டது. இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பாக கருதப்படுகிறது. அதற்காக எங்கள் கட்சி சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்கிறோம்.

    டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை உள்பட மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டங்களை அறிவித்து தனியார் நிறுவனங்களுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வேலையை தொடங்கியது.

    டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். டெல்டா மாவட்ட பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டங்களில் புகுந்து நெற்பயிர்களை அழித்து வரும் எலிகளை விவசாயிகள் கொன்று குவித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உக்கரம்,மில் மேடு ,கேத்தம் பாளையம் ஆகிய கிராம பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது இதில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கேத்தம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கான எலிகள் சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல் அக்கம்பக்கத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெல் வயல் வெளிகளில் எலிகள் புகுந்து சேதப்படுத்தி வந்தன.

    நெல் பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் இரவு பகலாக காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டு மின்றி எலிகள் தொல்லை அதிகரித்து வருவதால் அதை பிடிப்பதற்காக கிடுக்கிப்பிடி அமைக்கப்பட்டு எலிகளை பிடித்து கொன்று குவித்த வண்ணம் உள்ளனர்.

    எலிகளிடமிருந்து நெல் பயிர்களை பாதுகாக்க வேளாண்மைதுறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எலிகளால் தினந்தோறும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்து வாய்க்கால் நீர் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் மூழ்கின இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது விவசாயிகளுக்கு இதனை தொடர்ந்து எலிகள் தொல்லைகள் அதிகரித்து வருவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×