search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பர்கூர் அருகே சுண்டப்பூரில் இருந்து வனப்பகுதி வழியாக தொட்டில் கட்டி நிறைமாத கர்ப்பிணியை தூக்கி வந்த காட்சி.
    X
    பர்கூர் அருகே சுண்டப்பூரில் இருந்து வனப்பகுதி வழியாக தொட்டில் கட்டி நிறைமாத கர்ப்பிணியை தூக்கி வந்த காட்சி.

    பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை தொட்டில் கட்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்த அவலம்

    பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தார்கள்.
    ஈரோடு :

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ளது சுண்டப்பூர் கிராமம். இந்த கிராமத்துக்கு முறையான சாலை வசதி கிடையாது. அதனால் பஸ் வசதியும் இல்லை. இங்கு வசிக்கும் மக்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் வனப்பகுதி மண் சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம்வரை நடந்து தாமரைக்கரைக்கு வரவேண்டும். பின்னர் அங்கிருந்து பஸ் ஏறி செல்ல வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தமிழக அரசு இங்குள்ள மண்பாதையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால் தற்போது அங்கு ரோடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்தநிலையில் சுண்டப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ். இவருடைய மனைவி குமாரி (வயது 23). இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மீண்டும் குமாரி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான குமாரிக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. பஸ் வசதி இல்லாததால், வேறு வழியில்லாமல் மாதேசும் அவருடைய உறவினர்களும் ஒரு மூங்கிலில் தொட்டில் கட்டி அதில் குமாரியை அமர வைத்து காட்டுப்பாதையில் தூக்கிவந்தார்கள்.

    கடந்த 3 நாட்களாக பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. அதனால் ஏற்கனவே மேடு, பள்ளமாக இருந்த மண்பாதை மிகவும் மோசமாக இருந்தது. ஆனாலும் சிரமப்பட்டு குமாரியை தொட்டிலில் தூக்கி சென்றார்கள்.

    சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தை அவர்கள் கடந்தபோது, அந்த வழியாக ஒரு மினி லாரி வந்தது. உடனே அந்த லாரியில் குமாரியை ஏற்றிக்கொண்டு தாமரைக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி விரைந்தார்கள். ஆனால் அதற்குள் குமாரிக்கு பிரசவ வலி மேலும் அதிகமானது.

    அதனால் மினிலாரியை ரோட்டு ஓரமாக நிறுத்தினார்கள். பின்னர் அவர்களுடன் சென்ற மாதேசின் தாய் சன்னியம்மாளே மருமகளுக்கு லாரியிலேயே பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த மினி லாரியிலேயே இருவரையும் தாமரைக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்கள். அங்கு தாய், சேய்க்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.

    நிறைமாத கர்ப்பிணியை பாதுகாப்பான ஒரு வாகனத்தில் ஆஸ்பத்திரியில் கூட சேர்க்க முடியாமல், பாதை வசதி இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. இதுபோன்ற கிராமங்களில்தான் அரசின் நலத்திட்டங்கள் உடனே சென்று சேரவேண்டும். தங்கள் ஊருக்கு எப்போது ரோடு போடுவார்கள்? எப்போது பஸ் வரும்? என்று சுண்டப்பூர் மக்களும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள். 
    Next Story
    ×