search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளிகள்"

    • மாணவர் சேர்க்கைப் பணியை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து பணிகளையும் வேகப்படுத்தி உள்ளார்.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 1-ந்தேதி தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறது. வழக்கமாக மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும்.

    ஆனால் இந்த வருடம் முன் கூட்டியே நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று வரை 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவர்கள் சேர்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. தொடக்கப் பள்ளியில் 4,959 பேரும் மேல்நிலைப் பள்ளியில் 5,452 பேரும் சேர்ந்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் 3,890 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,770 பேரும் சேர்ந்து அடுத்தடுத்து முதலிடத்தில் உள்ளனர்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளில் மட்டும் 46,586 பேரும் நடுநிலைப் பள்ளிகளில் 21,853 பேரும் சேர்ந்துள்ளனர். உயர்நிலைப் பள்ளிகளில் 6,287 பேரும், மேல்நிலைப் பள்ளிகளில் 5,350 பேரும் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து மாணவர் சேர்க்கைப் பணியை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதற்கான அனைத்து பணிகளையும் வேகப்படுத்தி உள்ளார்.

    • அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
    • அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் தற்காப்பு கலைப் பயிற்சி, கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ந்தேதி முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

    5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர்கள் அறிவொளி மற்றும் கண்ணப்பன் ஆகியோர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி அதில் உள்ளூர் பிரமுகர்களை பங்கு பெறச்செய்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

    மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமைகள் குறித்து பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும்.

    அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது உடையவர்களை கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

    வீடு தோறும் நேரடியாக சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5 வயது உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    வருகிற கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் முழு முயற்சியோடு பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியக்கப்படுகிறார்.

    இண்டர்நெட் வசதியுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.

    இதைப் போல 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும்.

    இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம்.

    அந்த அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வருகிற கல்வியாண்டில் செயல்படுத்த டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-

    தொடக்க கல்வித் துறை யின் தரத்தை உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வருகிற கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்களுக்கு பிடித்தமான உடை அணியலாம் என அரசாணை இருந்தும், வேறு வழியின்றி சேலையை மட்டும் கட்டி வருகின்றனர்.
    • நாங்கள் எத்தகைய ஆடைகள் அணிந்து பள்ளிக்கு செல்வது என்பது குறித்து அரசாங்கம் தெளிவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

    கோவை:

    தமிழகத்தில் எண்ணற்ற அரசு பள்ளிகள் உள்ளன. இதுதவிர அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அதிகளவில் உள்ளன. இந்த பள்ளிகளில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், பேண்ட், சட்டையும், ஆசிரியைகள் சேலையும் அணிந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை எண் 67 ஒன்றை வெளியிட்டது. அதில் பள்ளியில் வேலை பார்க்கும் பெண் ஆசிரியைகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற பாரம்பரிய மற்றும் மேற்கத்திய கலாச்சாரம் கொண்ட உடைகளை அணிந்து கொள்ளலாம் என்றும், ஆண் ஆசிரியர்கள் தமிழக பாரம்பரிய அடையாளமான வேட்டி, சட்டை, சாதாரண பேண்ட், சட்டை என தங்களுக்கு பிடித்தமானவற்றை அணியலாம்.

    இப்படி ஒரு அரசாணை இருப்பது இதுவரை தமிழகத்தில் உள்ள பல கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கே தெரியவில்லை என்பது தான் ஆச்சர்யமாக உள்ளது.

    அரசாணை தெரிந்து, சில ஆசிரியைகள் சுடிதார் அணிந்து சென்றபோது, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், அரசாணை பற்றி அறிந்து கொள்ள முயலாமல் ஆசிரியைகளை திட்டுவதுடன், இனி இதுபோன்று அணியக்கூடாது எனவும் அவர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதனால் தங்களுக்கு பிடித்தமான உடை அணியலாம் என அரசாணை இருந்தும், வேறு வழியின்றி சேலையை மட்டும் கட்டி வருகின்றனர்.

    கோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவரும் இதுபோன்ற சம்பவத்தை கடந்து வந்துள்ளார்.

    கோவையில் உள்ள ஒரு பள்ளியில் 35 வயது பெண் ஒருவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் பள்ளிக்கு புடவை கட்டியே வந்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது அவருக்கு வசதியாக இல்லை என தோன்றியுள்ளது.

    இருப்பினும் பள்ளிக்கு புடவை தானே கட்டி செல்ல வேண்டும் என கட்டி சென்றார். இந்த நிலையில் தான், அவருக்கு சுடிதார், துப்பட்டா அணிந்து கொள்ளலாம் என்று ஒரு அரசாணை இருப்பதே தெரியவந்தது.

    இதையடுத்து அவர் பள்ளிக்கு சுடிதார், துப்பட்டா அணிந்து சென்றார். இதை பார்த்த சக ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் இது பள்ளி, இங்கு சுடிதார் அணிந்து வரக்கூடாது. உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

    அதற்கு அந்த பெண் ஆசிரியை, தமிழக அரசே ஆசிரியர்கள் சுடிதார், சல்வார் கமீஸ், புடவை இந்த 3-ல் எதுவென்றாலும் அணிந்து கொள்ளலாம் என கூறியுள்ளது. அதன்படியே எனக்கு புடவை வசதியாக இல்லாத காரணத்தால் நான் சுடிதார் அணிந்து வந்தேன் என தெரிவித்துள்ளார்.

    ஆனால் தலைமை ஆசிரியர், அப்படி ஒரு அரசாணையே கிடையாது. நீங்கள் அணிந்து வந்தது தவறு. இனி இதுபோன்று அணியாதீர்கள் என ஆசிரியையை எச்சரித்துள்ளார்.

    இதையடுத்து அந்த ஆசிரியை வேறு வழியின்றி தற்போது புடவை அணிந்தே பள்ளிக்கு செல்கிறார்.

    இதுகுறித்து அந்த பெண் ஆசிரியை கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள், தங்களுக்கு பிடித்தமான ஆடைகளான, வேட்டி, சட்டை, சுடிதார், துப்பட்டா, சல்வார் கமீஸ், புடவை ஆகியவை அணிந்து கொள்ளலாம் என்றும், அது தமிழக கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அரசாணை பிறப்பித்துள்ளது.

    அதன்படி தான் நான் அணிந்து சென்றேன். ஆனால் சக ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் அதனை ஏற்க மறுத்து விட்டனர்.

    சில இடங்களில், புடவை அணியாமல் வரும் ஆசிரியைகளிடம் பள்ளி நிர்வாகம் விளக்கம் கேட்டு விசாரணையும் நடத்துகின்றனர். இது அவர்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தும்.

    இப்படி ஒரு அரசாணை இருப்பது, தமிழகத்தில் உள்ள பல கல்வி அதிகாரிகள் மற்றும், சக ஆசிரியர்களுக்கே தெரியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

    இதனால் அவர்கள், விவரம் தெரிந்து அணிந்து வருபவர்களிடம் கூட பொத்தாம் பொதுவாக பள்ளி ஆசிரியைகள் சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளை அணிந்து வரக்கூடாது என்று நெருக்கடி கொடுக்கின்றனர். மேலும் ஆசிரியைகள் சேலை அணிந்து தான் வரவேண்டும் எனவும் கட்டாயப்படுத்துகிறார்கள்.

    மேலும் அவர்கள் நீங்கள் குறிப்பிடும் உத்தரவு பள்ளிகளுக்கு பொருந்தாது என குறிப்பிடுகின்றனர். எனவே நாங்கள் எத்தகைய ஆடைகள் அணிந்து பள்ளிக்கு செல்வது என்பது குறித்து அரசாங்கம் தெளிவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பொதுசெயலாளர் ராம்குமார் கூறும்போது, இதுபோன்று எண்ணற்ற ஆசிரியர்கள் பள்ளிகளில் அசாதாரண சூழ்நிலையை அனுபவிக்கின்றனர். இந்த அரசாணை தொடர்பாக பலருக்கு விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

    "ஆசிரியர் மனசு" திட்ட இயக்குனர் கூறும்போது, ஆசிரியைகள் சுடிதார் மற்றும் நவநாகரிக உடைகள் அணிந்து பள்ளிக்கு வரலாம். இதுகுறித்து அரசாங்கம் ஏற்கெனவே உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மேலும் அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் இது தொடர்பாக விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார்.

    • அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்த 30 குடும்பங்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்ற தலைவர் செலுத்தினார்.
    • கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள வடபழஞ்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வன்னிச்செல்வி மணி தலைமை வகித்தார். ஆனந்த வள்ளி ராஜாங்கம் முன் னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வடபழஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் அவர்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்ற தலைவர் பயணப்படி மற்றும் அமர்வுப்படியில் இருந்து கட்டப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டது.

    கிராம சபை சிறப்பு கூட்டத்தில் வடபழஞ்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் 30 பேர் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தனர். அவ்வாறு சேர்த்த 30 குடும்பங்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்றம் செலுத்தியதற்கான ரசீதை பயனாளிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வன்னிச்செல்வி மணி வழங்கினார்.

    கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் தொடங்கப்பட்டது.
    • இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் என ரூ. 4 லட்சம் நிதியில் உயர்தர (ஸ்மார்ட்) வகுப்பறை அமைக்கப் பட்டது. அதனை எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனும், யூனியன் சேர்மன் சிங்கராஜூம் மாணவ மாணவிகளின் பயன் பாட்டிற்கு திறந்து வைத்த னர்.

    அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாகவும், ஏழை எளிய குழந்தைகளின் கற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் முதல்கட்டமாக ராஜ பாளையம் தொகுதியிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு தலா ரூ. 2 லட்சம், 30 லட்சம் நிதி ஒதுக்கி ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது அதில் முதல் பள்ளியாக சோலைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டுமெனும் நோக்கில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்து நல்லதொரு வழிகாட்டுதலை அடுத்த தலைமுறைக்கு உருவாக்கி தந்துள்ளார். இந்தியாவில் கல்வியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்திலும் உள்ளது.

    ராஜபாளையம் தொகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்கையில் மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கும் ஆண்டு விழா நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதன்படி அந்த பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தியிருந்தோம் இதேபோல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் கல்வித்துறையின் மானியக்கோரிக்கையில் ரூ. 12கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் அழகு ராஜலட்சுமி, கவுன்சிலர் அனுசுயாகண்ணன், கிளைச்செயலாளர்கள் ரத்தினக்கனி, பிள்ளையார், வைரமுத்து ,ரமேஷ், கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் குறித்து தகவல் சேகரிக்க வேண்டும்.
    • மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்.

    சென்னை:

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்க வேண்டும்.

    மத்திய அரசின் திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல்நல சோதனை நடத்தப்படுகிறது.

    இதில் மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்.

    ஆய்வின்போது மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்பு கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சைகள் அளிப்பதற்கு அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 64 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • கல்வித்தரம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 71 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 138 பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மே மாதம் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை நடந்தது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் பணி மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் பெற்றுச்சென்றனர்.

    இப்பணி மாறுதல் கலந்தாய்வுக்கு பின்னர் மாவட்டத்தில் 42 அரசு மேல்நிலை பள்ளிகளிலும், 22 அரசு உயர்நிலை பள்ளிகளிலும், ஆக மொத்தம் 64 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின. ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய வெளி மாவட்டத்தை சேர்ந்த தலைமையாசிரியர்கள் அவர்களது சொந்த மாவட்டம் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பணி மாறுதலில் சென்றதே இதற்குக் காரணமாகும்.

    தற்போது இந்த 64 பள்ளிகளில் மூத்த ஆசிரியர் கள் தலைமையாசிரியராக பொறுப்பு வகிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவால் ஆசிரியர்கள் கலந்தாய்வில் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வில்லை. அதனால் தலைமை யாசிரியர் பணியிடங்களும் நிரப்பப் படவில்லை.

    நிரந்தர தலைமையாசிரியர் இல்லாமல் பள்ளிகள் திறம்பட செயல்பட முடியாது. மேலும் தலைமையாசிரியர் பணியை மற்றொரு ஆசிரியர் பொறுப்பு வகிப்பதால் அவரும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறையும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் 10-ம் வகுப்பு, மேல்நிலை அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. நடந்து முடிந்த பிளஸ்-2 அரசு பொது தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் 96.3 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 12-ம் இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. ஆனால்

    கடந்த 2022-ம் ஆண்டில் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்திருந்தது. மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.86 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 12-ம் இடத்திற்கு பின் தங்கியது. கடந்த 2022-ம் ஆண்டில் 5-ம் இடம் பிடித்தி ருந்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏற்கனவே கல்வித்தரத்தில் பின்தங்கி வரும் நிலையில், 64 பள்ளிகள் தலைமை ஆசிரியர் இல்லாமல் செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக கல்வி அமைச்சர் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலியாக உள்ள அரசு பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டி-ஷர்ட் வாங்க ரூ.62 லட்சத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.
    • மாணவர்களுக்கான டி-ஷர்ட் வழங்கும் ஆர்டர், தமிழ்நாடு ஜவுளிக் கழகத்திடம் வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் 281 பள்ளிகள் இருந்தன. தற்போது மாநகராட்சி எல்லையில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த 139 பள்ளிகளும் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநகராட்சி பள்ளிகளின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது.

    இவற்றில் 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்த முள்ள 81 பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக 4 குழுக்களாகப் பிரித்து, அவர்களுக்கு அரக்கு நிறம், பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய வண்ணங்களில் டி-ஷர்ட் கொள்முதல் செய்து வழங்கப்படும் என்று நடப்பாண்டு பட்ஜெட்டில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அறிவித்திருந்தார்.

    அதைச் செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி நிர்வாகம், மொத்தம் உள்ள 81 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துள்ளது. அதன்படி தற்போது 29 ஆயிரத்து 258 பேர் படித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு டி-ஷர்ட் வாங்க ரூ.62 லட்சத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. மாணவர்களுக்கான டி-ஷர்ட் வழங்கும் ஆர்டர், தமிழ்நாடு ஜவுளிக் கழகத்திடம் வழங்கப்பட்டு உள்ளது. இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், விரைவில் மாணவர்களுக்கு வண்ண டி-ஷர்ட் வழங்கப்பட இருப்பதாக மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • நிலையான ஆசிரியர்களை அமர்த்தாமல் இடைக்கால ஆசிரியர்களை அமர்த்த எந்த நியாயமும் இல்லை.
    • தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு பள்ளியில் இடைக்கால ஆசிரியர்களை அமர்த்துவது கல்வி வளர்ச்சிக்கு மட்டுமின்றி, சமூக நீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. நிலையான ஆசிரியர்களை அமர்த்தும்போது, இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படும். ஆனால், இடைக்கால ஆசிரியர்கள் பணியமர்த்தலில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. நிலையான ஆசிரியர்களை அமர்த்தாமல் இடைக்கால ஆசிரியர்களை அமர்த்த எந்த நியாயமும் இல்லை.

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நிலையான ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்களுக்கு எவ்வாறு தரமான கல்வியை வழங்க முடியும்? தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அரசு பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
    • வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    வருகின்ற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே பள்ளிகளை சுத்தப்படுத்துதல், வளாகத்தில் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளி வாகனங்கள் நல்ல முறையில் இயங்குகிறதா? எனவும் அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற முழு விவரம் தெரியவரும்.

    முதலமைச்சரின் வானவில் மன்றம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்துள்ளன.

    கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

    வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு தகுந்தாற்போல் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்வித்தரத்தில் மாணவர்கள் மேம்பட வேண்டும் என்பதை மையமாகக்கொண்டே இவை அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது.
    • புகழ்பெற்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர்.

    மடத்துக்குளம்:

    உடுமலை கல்வி மாவட்ட அரசுப்பள்ளிகளில், கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி, கல்வி கற்பித்தலில் மாற்றம், எளிமையான கற்றல் மற்றும் கற்பித்தல் என பல்வேறு செயல்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

    கல்வித்தரத்தில் மாணவர்கள் மேம்பட வேண்டும் என்பதை மையமாகக்கொண்டே இவை அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது.அதேநேரம் கொரோனா பரவல் காரணமாக கல்வியைக்கடந்து மாணவர்களுக்கு, எதிர்காலத்தை கற்றுக்கொடுக்கக்கூடிய இணை செயல்பாடுகள் குறைந்தது.தற்போது துவக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், இணைச்செயல்பாடுகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர் முக்கியத்துவம் அளிக்க அரசு அறிவுறுத்தியுள்ளதால், அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன.

    இதற்காக பல பள்ளிகளில், விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடத்தும் பொருட்டு, மைதானங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு, பாடப்புத்தக கல்வியோடு, தனித்திறன்களை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.அவ்வகையில், பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச்செயல்பாடுகளான மன்றச்செயல்பாடுகள், புத்தகம் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கண்டறியப்படுவர்.

    அவர்கள் புகழ்பெற்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர். இதேபோல, பள்ளிகளில் இலக்கியம், கவின்கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் புதுப்பிக்கப்படும்.இதேபோல் புதிதாக தொழில்நுட்ப அறிவு, கம்ப்யூட்டர் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கம்ப்யூட்டர் நிரல் மன்றங்கள் மற்றும் எந்திரனியல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்.இணைச் செயல்பாடுகளைத் தொடர்ந்து பின்பற்றும் வகையில், கால அட்டவணையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×