என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு பகுதியில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு 110-22 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 22 கி.வோ திருநகர் காலனி மின் பாதையில் புதிதாக கம்பங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. ஈரோடு வி.சி.டி.வி. ரோடு (மல்லிகை அரங்கம் ரோடு), திருநகர் காலனி, மாதவக்காடு, சிந்தன் நகர், கிருஷ்ணம் பாளையம், கமலா நகர், கக்கன் நகர், ஆர்.கே.வி. நகர், ராஜகோபால் தோட்டம், ராமமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், வண்டியூரான் கோவில்.

    இந்த தகவலை ஈரோடு நகரியம் மின் வாரிய செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்தார்.

    அம்மாபேட்டை அருகே மதிப்பெண் குறைவாக வாங்கியதால் 9-ம் வகுப்பு மாணவன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    அம்மாபேட்டை அடித்த அலங்காரியூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன். கூலி தொழிலாளி. இவரது மகன் சுரேஷ் கிருஷ்ணன் (வயது14). இவர் பூதப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 27-ந் தேதி தேர்வு முடிந்து மார்க் சீட் கொடுக்கப்பட்டது. இதில் சுரேஷ் கிருஷ்ணன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்படுகிறது. தந்தையிடம் மார்க்சீட் காண்பித்து கையெழுத்து வாங்க பயந்த சுரேஷ் கிருஷ்ணன் வீட்டிலிருந்த வி‌ஷத்தை குடித்து வாந்தி எடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் தந்தை கேட்டபோது தான் வி‌ஷம் குடித்து விட்டதாக சுரேஷ் கிருஷ்ணன் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை முடிந்து மாணவன் வீடு திரும்பினார். பின்னர் மீண்டும் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து சுரேஷ் கிருஷ்ணனை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சுரேஷ் கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோட்டில் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து பெரிய வெங்காயம் கிலோ ஒன்று ரூ.200-க்கு விற்பனையானது.
    ஈரோடு:

    சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக வெங்காயம் உள்ளது. இதேபோல் ஓட்டல்களிலும் வெங்காயம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும், வெங்காயத்தின் வரத்து குறைந்ததன் காரணமாகவும் பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும், அதன் விலை உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெங்காயத்தை பொதுமக்கள் ரூ.120 கொடுத்து வாங்கிச்சென்றனர். ஆனால் விலை படிப்படியாக உயர்ந்து வரலாறு காணாத வகையில் நேற்று பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு நேற்று காய்கறி வாங்க வந்த பெண்கள் வெங்காயத்தின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். வெங்காயத்தை உரிக்கும்போது தான் கண்களில் கண்ணீர் வரும். ஆனால் நேற்று விலையை கேட்ட உடனே பெண்களின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

    இதுகுறித்து குடும்ப பெண்கள் கூறும்போது, ‘நாங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய பொருளே வெங்காயம் தான். சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் இப்படி உயர்ந்து கொண்டே சென்றால் நாங்கள் எப்படித்தான் சமையல் செய்வது என்றே தெரியவில்லை.

    தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கித்தான் நாங்கள் பீரோவில் பத்திரமாக வைப்போம். ஆனால் தற்போது வெங்காயத்தை வாங்கி பீரோவில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய -மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

    இதுகுறித்து வெங்காய வியாபாரி ஹக்கீம் என்பவர் கூறும்போது, ‘புனே மற்றும் கர்நாடகா பகுதிகளில் இருந்து அதிக அளவில் பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது அங்கும் வெங்காயம் தட்டுப்பாட்டில் உள்ளதால் ஈரோட்டிற்கு வரத்து மிகவும் குறைந்துள்ளது. வரும் வெங்காயத்தை நாங்கள் உலர வைத்து பக்குவப்படுத்தி விற்பனை செய்து வருகிேறாம்.

    பொதுவாக ஈரோடு மாவட்டத்தில் வெங்காயத்தின் தேவை குறைந்த அளவில் தான் இருக்கும். அதனால் தற்போது அதைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

    ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரையும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரையும் விற்பனையானது. இது வரலாறு காணாத விலை உயர்வு ஆகும். வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் இன்னும் விலை உயர வாய்ப்பு உள்ளது’ என்றார்.
    மொடக்குறிச்சி அருகே பட்டப்பகலில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள செல்லாத்தபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). இவருடைய மனைவி ஜோதி (40). 2 பேரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுடைய மகன் விவேக் (21). இவர் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் வழக்கம்போல் 3 பேரும் வேலைக்கு சென்றுவிட்டனர். வேலை முடிந்ததும் செல்வராஜ் மாலையில் வீ்ட்டுக்கு வந்து உள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் பதற்றத்துடன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் சங்கிலி மற்றும் ரூ.18 ஆயிரத்தை காணவில்லை. ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பட்டப்பகலில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி டாணாபுதூர் அவினாசி சாலையில் வசித்துவரும் ராம்சன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மொபட் திருடப்பட்டது. மேலும் மேட்டுப்பாளையம் சாலையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ரத்தினசாமி (60), அவினாசி சாலையில் வசித்து வரும் திருநங்கை ஓவியா (25) ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 7-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் இல்லத்தில் ஆதரவற்ற சிறுமிகள் 35 பேர் தங்கி உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர். அந்த இல்லத்தில் வாகன டிரைவராக ஈரோடு மூலப்பாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த பசுபதி (வயது 59) என்பவர் வேலை செய்து வருகிறார்.

    இந்தநிலையில் அந்த இல்லத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமிக்கு டிரைவர் பசுபதி கடந்த சில நாட்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். கடந்த மாதம் 19-ந் தேதி அந்த சிறுமியை பசுபதி தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

    பசுபதிக்கு பயந்த அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார். சிறுமி வழக்கம்போல் இல்லாமல் சோகமாக இருப்பதை பார்த்த அங்கிருந்த நிர்வாகிகள் சிறுமியை தனியாக அழைத்து பேசினார்கள். அப்போது பசுபதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்த விவரத்தை அழுதுகொண்டே சிறுமி கூறினாள். இதைக்கேட்டு நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

    அந்த புகாரின்பேரில் பசுபதியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
    அம்மாபேட்டை அருகே ரோட்டை கடந்த முதியவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள ஆனந்தம் பாளையத்தை சேர்ந்தவர் அய்யாகுட்டி (வயது 80) கூலி தொழிலாளி.

    இவர் மேட்டூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது ரோட்டை கடக்க முயன்றார். அந்த வழியாக மேட்டூரில் இருந்து பவானி நோக்கி சென்ற ஒரு ஆம்னி வேன் எதிர்பாராதவிதமாக அய்யாகுட்டி மீது மோதியது.

    இதில் பலத்த அடிபட்ட அய்யாகுட்டியை 108 ஆம்புலன்சு மூலம் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டில் தொழில் அதிபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம் பாளையம் சக்தி நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). இவர் தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கனகராஜ் மனவேதனையுடன் காணப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கனகராஜ் ஈரோடு மொக்கையம் பாளையத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள ஒரு கிணற்றின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கனகராஜ் கிணற்றில் குதித்தார். மாலை அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிள் நிற்பதை பார்த்த பொதுமக்கள் இது குறித்து விசாரித்தனர். அதன் பிறகு தான் கனகராஜ் கிணற்றில் குதித்த விபரம் தெரியவந்தது.

    இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கும் வீரப்பன்சத்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மிதந்த கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த கனராஜிக்கு வனிதா என்ற மனைவியும் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் கனகராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பு தன் கைப்பட கடிதம் எழுதியதாக ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் “என் இனிய அன்பு நண்பர்களே ஜவுளித் தொழிலுக்கு மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே என்னுடைய மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம்” என்று எழுதப்பட்டிருந்தது என கூறப்பட்டது. இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கடிதம் உண்மையில் கனகராஜ் கைப்பட எழுதியது தானா? என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கனகராஜ் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து புதிய பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. கனகராஜ் தனக்கு சொந்தமான இடத்தில் 16 பவர்லூம் தறிபோட்டு தொழில் செய்து வந்துள்ளார்.

    மேலும் தொழிலை விரிவுபடுத்தும் வகையில் வங்கியில் கடன் வாங்கி கடந்த 2 வருடத்துக்கு முன்பு காடா துணி உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்துள்ளார். ஆனால் கடனை அடைக்க முடியாததால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு அடியாக கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கனகராஜ் தந்தை இறந்துவிட்டார். இதனால் அவர் மேலும் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில்தான் கனகராஜ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    பெருந்துறை அருகே இன்று காலை தனியார் பஸ் மோதிய விபத்தில் நிலப்புரோக்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள திருவேங்கபாளையம் புதூர் செல்லம் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60) நிலப்புரோக்கர்.

    இவர் இன்று காலை 8 மணியளவில் தனது மொபட்டில் ஈரோடு ரோடு பகுதிக்கு சென்றார்.

    அப்போது அவர் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தலையில் பலத்த அடிபட்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தமிழகத்தில் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தலை அறிவிக்காமல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவது சரியானதாக இருக்காது. முறைகேடுக்கும், குளறுபடிக்கும் வழிவகுக்கும்.

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தன்னுடைய கடமையை செய்வதற்கே உச்சநீதிமன்றம் கட்டாயப்படுத்த வேண்டிய நிலைமையில் தான் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்ததால் மாநில தேர்தல் ஆணையத்தின் மீது தமிழக மக்களுக்கு இருந்த நம்பிக்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.

    தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தலை நடத்துவது புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கும் செயலாகும். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை முடித்த பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பது அனைவருடைய கோரிக்கையாக இருக்கிறது.

    தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி அறிவித்ததாக தெரியவில்லை. உச்சநீதிமன்றம் கொடுத்த அழுத்தத்தின் பெயரிலே அறிவிக்கப்பட்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் உள்ள சுணக்கத்தை மறைப்பதற்காகவே மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    எனவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி பதவிகளுக்கு நேர்மையான முறையில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதி அருகே உள்ள கிராமத்தில் ரோடு மற்றும் பஸ் வசதி இல்லாததால் 10 மாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி கிராம மக்கள் சுமந்து வந்தனர்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியை அடுத்துள்ளது பர்கூர் வனப்பகுதி. இப்பகுதியில் உள்ள வனக்கிராமமம் கண்டப்பூர்.

    இந்த ஊரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த ஊரில் சாலை கிடையாது மண்பாதை மட்டுமே உள்ளது. அதுவும் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்கு பஸ் வசதியும் கிடையாது. கண்டப்பூரில் இருந்து மெயின் ரோட்டோரம் உள்ள தாமரைகரை என்ற ஊருக்கு 10 கிலோ மீட்டர் தூரம் வர வேண்டும். இதனால் இப்பகுதி மக்கள் தங்களுக்கு தார் ரோடு, பஸ் வசதி கேட்டு பல முறை மனு கொடுத்து விட்டனர்.

    இந்த நிலையில் மண்பாதை தார்சாலையாக போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் பணிகள் தொடங்கவில்லை.

    இதனால் கண்டப்பூர் ஊர் மக்கள் மாட்டு வண்டியிலும் இரு சக்கர வாகனத்திலும் தான் இதுவரை வந்து செல்கிறார்கள்.

    இந்த ஊரை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு ஏற்கெனவே 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    இந்த நிலையில் குமாரி மீண்டும் கர்ப்பம் ஆனார். 10 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு துடித்தார். உடனடியாக அவரது கணவரும் உறவினர்களும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    தற்போது அங்கு மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் பல இடங்களில் தண்ணீர் ஓடியது. இதனால் 108 ஆம்புலன்சால் செல்ல முடியவில்லை.

    இதனால் என்ன செய்வது என தவித்த மாதேஷ் பிறகு ஒரு மூங்கில் மூலம் சேலைகளால் தொட்டில் கட்டி அதில் குமாரியை தூக்கி வைத்து அடர்ந்த காட்டு வழியாக கடந்து வந்தனர்.

    10 கிலோ மீட்டர் தூரம் கடக்க வேண்டும். வேறு வழியில்லை போய்தான் ஆகவேண்டும். தொடர்ந்து காட்டுப்பாதையில் நடந்தனர்.

    6 கிலோ மீட்டர் தூரம் கடந்த பிறகு அந்த வழியாக ஒரு மினி லாரி வந்தது. நிறைமாத கர்ப்பிணி பெண் மீது பரிதாபப்பட்ட லாரி டிரைவர் லாரியை நிறுத்தி கர்ப்பிணி பெண்ணையும் அவரது ஊர்மக்களையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.

    மலைப்பாதை மிகவும் மோசமாக இருந்ததால் லாரியால் விரைவாக செல்ல முடியவில்லை.

    தாமரைக்கரை அரசு ஆரம்பசுகாதார நிலையம் பக்கத்தில் வந்த போது குமாரிக்கு மேலும் வலி ஏற்பட்டு துடித்தார்.

    உடனடியாக லாரியை ஓரமாக நிறுத்தினார்கள். அந்த லாரியில் வந்த ஊர்பெண் ஒருவர் பிரசவம் பார்த்தார்.

    சிறிது நேரத்தில் அந்த காட்டுக்குள் குழந்தையின் அழுகுரல் ஒலித்தது. குமாரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பிறகு அந்த லாரியிலேயே தாயையும் சேயையும் ஏற்றிக் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    அங்கு தாயும் சேயும் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

    இது பற்றி தகவல் அறிந்த கண்டப்பூர் வனமக்கள் ஒரு லாரியில் புறப்பட்டு தாமரைக்கரை வந்து குமாரியை பார்த்து நலம் விசாரித்து சென்றனர்.

    அப்பகுதி மக்கள் கூறும் போது ‘‘எங்கள் நிலைமையை பார்த்த பிறகு இனியாவது தார் ரோடு போட்டு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மேட்டுப்பாளையத்தில் விருந்துக்கு சென்ற பெண் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பு.புளியம்பட்டி:

    மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் வீடு இடிந்து 17 பேர் பலியானார்கள். இதில் விருந்தினராக வந்த ருக்மணியும் ஒருவர். இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து நேற்று முன்தினம் நடூர் வந்தார். இவர் பலியான ஆனந்த குமார் குழந்தைகள் லோகுராம், அட்சயா ஆகியோருடன் விளையாடினார். மேலும் அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை சொந்த ஊருக்கு கிளம்புவதாக இருந்தது.

    ஆனால் அப்போது மழை பெய்ததால் ஆனந்த குமார் வீட்டில் தங்கி விட்டு நேற்று காலை ஊருக்கு கிளம்ப திட்டமிட்டு இருந்தார். ஆனால் நேற்று அதிகாலை சுவர் இடிந்த விபத்தில் அவர் உயிர் இழந்து விட்டார்.

    விருந்தாளியாக வந்த ருக்மணி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனந்த குமாரின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவர் திலகவதி. இவர் ஆனந்த குமாரின் மனைவி நதியாவுடன் உள்ள நட்பால் அடிக்கடி வீட்டிற்கு வருவார். நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் அவரது வீட்டு கூரை ஒழுகியது. இதனை தொடர்ந்து அவர் நதியாவின் வீட்டில் இரவு தூங்குவதற்காக வந்தார்.

    ருக்மணியுடன் பேசி விட்டு இரவு தூங்க சென்றவர் அதிகாலையில் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்தார். இவரது கணவர் பெயர் பழனிசாமி 2 மகன்கள் உள்ளனர்.

    இதே போல் உயிரிழந்த சிவகாமியின் வீட்டில் பக்கத்து வீட்டு பெண் மங்கம்மாள் என்பவரும் தங்கினார். அவரும் பலியாகி விட்டார்.
    ஈரோட்டில் தொழில் அதிபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் சக்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் தனசேகரன் என்பவரது மகன் கனகராஜ் (வயது47). இவருடைய மனைவி பெயர் வனிதா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

    கனகராஜ் சக்திநகரில் 16 பவர்லூம் தறிகள் வைத்து சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சுமார் 10 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் வில்லரசம்பட்டி அருகிலுள்ள மொக்கயைம்பாளையம் சென்ற கனகராஜ் அப்பகுதியில் இருந்த பொது கிணற்றருகில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திடீரென கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    தீயணைப்பு துறை மற்றும் வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு அக்கம்-பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கனகராஜ் உடலை மீட்ட வீரப்பன்சத்திரம் போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வீரப்பன் சத்திரம் போலீசார் தொழிலதிபர் கனகராஜ் எந்தக் காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் அதிபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
    ×