என் மலர்tooltip icon

    ஈரோடு

    பவானி அருகே உள்ள பூலப்பாளையம் பகுதியில் வசிக்கும் அந்தியூர் வங்கி கேசியர் தனது வீட்டில் தண்ணீர் மோட்டார் ஸ்விட்ச் போடும் போது மின்சாரம் தாக்கி பலியானார்.
    சித்தோடு:

    பவானி காலிங்கராயன் பாளையம், பூலப்பாளையம், செல்லிக்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40) அந்தியூரில் உள்ள ஒரு வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்தார்.

    நேற்று இரவு 7.30 மணியளவில் தனது வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் மேலே ஏற்றிட மின் மோட்டார் சுவிட்ச் போட்டுள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மேலே இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அடிபட்ட அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிவக்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசில் இறந்த சிவக்குமாரின் தந்தை குப்புசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இறந்த சிவக்குமாருக்கு மனைவி மற்றும் 6 வயதில் பெண் குழந்தையும், 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
    அந்தியூர் அருகே ஆற்றில் துணிகளை துவைத்து வீடு திரும்பிய பெண் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்த அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் காளிதாஸ் காலணியை சேர்ந்தவர் கோபால் (வயது-45), இவரது மனைவி மாதேவி (வயது-35). இவர்கள் நேற்று மாலை அத்தாணி கைகாட்டி பவானி ஆற்றில் துணிகளை துவைக்க வந்துள்ளார்.

    துணிகளை துவைத்து மொபட்டில் வைத்துக் கொண்டு அந்தியூர் நோக்கி வீடு திரும்பி கொண்டு இருந்த கோபால் இவரது மனைவி மாதேவி கரட்டூர் மேடு என்ற பகுதியில் வந்த போது கோவையில் இருந்து மேட்டூர் நோக்கி அந்தியூர் சாலையில் வந்த லாரி எதிர்பாராத விதமாக இவர்கள் வந்த மோபட்டின் பின்பக்கம் மோதியதில் மாதேவி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்நிலையில் மாதேவியின் கணவர் கோபால் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

    மேலும் லாரியை பறிமுதல் செய்து மேட்டூர் டேம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் கணேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோபி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கல்லூரி மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    கோபி:

    கோபி அருகே உள்ள கூகலூரை சேர்ந்தவர் ஜெயசந்தியா (வயது 23). இவர் ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் உடல் நலம் சரியில்லாமல் இருந்த ஜெயசந்தியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இதில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் வரை வந்துள்ள எகிப்து வெங்காயம் இன்னும் ஈரோடு நகருக்கு வரவில்லை. வந்தாலும் அதை வாங்கி விற்பனை செய்ய ஈரோடு வியாபாரிகள் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
    ஈரோடு:

    வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளது. விலை குறைந்தபாடில்லை. ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் இன்று பெரிய வெங்காயம் கிலோ ரூ.130-க்கு விற்பனையானது. சில்லரை மார்க்கெட்டில் ரூ.150, ரூ.160-க்கு விற்கப்பட்டது.

    இதே போல் சின்ன வெங்காயம் நேதாஜி மார்க்கெட்டில் கிலோ ரூ.80 முதல் 90 வரை விற்கப்பட்டது. சில்லரை மார்க்கெட்டில் ரூ.100 முதல் 120 வரை விற்பனையானது.

    வெங்காயம் தட்டுப்பாட்டை போக்க எகிப்து நாட்டில் இருந்து இந்தியாவுக்கு பெருமளவிலான பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

    திருச்சி, கடலூர், கோவை, சேலம், திருப்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் எகிப்து நாட்டின் (பெரிய) வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

    ஆனால் அந்த வெங்காயம் சிகப்பு கலரில் பீட்ரூட் போல் இருப்பதால் எகிப்து வெங்காயத்தை பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை.

    திருப்பூர் வரை வந்துள்ள எகிப்து வெங்காயம் இன்னும் ஈரோடு நகருக்கு வரவில்லை. வந்தாலும் அதை வாங்கி விற்பனை செய்ய ஈரோடு வியாபாரிகள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஈரோட்டுக்கு எகிப்து வெங்காயம் வருமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

    தற்போது ஈரோட்டுக்கு அந்தியூர், பாசூர், பகுதியிலிருந்து வெங்காயம் வரத்து சற்று கூடி உள்ளதால் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் சட்ட நகலை எரித்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஈரோட்டில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அருகே போராட்டம் நடத்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திரண்டனர்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் நிர்வாகிகள் ஒன்று திரண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்த குடியுரிமை திருத்தம் தொடர்பான சட்ட நகலை திடீரென எரித்தனர்.

    இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜீ தலைமையிலான போலீசார் நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். 9 பெண்கள் உள்பட மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டனர். அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இரவில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் போலீசார் இன்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் எங்கேயாவது இதே போல் போராட்டம் நடைபெற்றால் உடனடியாக அவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    பவானி-அந்தியூர் குடோன்களில் சோதனையிட்ட அதிகாரிகள் வெங்காயத்தை பதுக்கினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, சத்தி, பவானி, பெருந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் வெங்காயத்தின் விலை ஏறு முகமாக உள்ளது.

    ஈரோட்டில் இன்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.110 முதல் 130 வரைக்கும், இதே போல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.130 முதல் 140 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெங்காயத்தின் விலை தொடர்ந்த ஏறுமுகமாகவே இருப்பதால் பெண்கள் வெங்காயம் வாங்குவதை தற்போது அதிகமாக தவிர்க்க தொடங்கி விட்டனர்.

    இந்த நிலையில் ஈரோடு உள்பட மாவட்டம் முழுவதும் ஒரு சில வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைத்து உள்ளார்களா? என அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் அதிகாரிகள் கூறும் போது, ‘‘ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பவானி பகுதிகளில் கடைகள் மற்றும் சில குடோன்களில் சோதனை நடத்தினோம். அரசு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக அங்கு வெங்காயம் இல்லை. குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெங்காயத்தை பதுக்கி இருந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர்.
    அடர்ந்த காட்டில் விலங்குகளை வேட்டையாட வந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்டம் கேர்மாளம் வனச்சரகம் மேற்கு வனப்பகுதி இது இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது.

    இப்பகுதியில் வனத்துறையினர் அடர்ந்து காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வனபகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கு பகுதியில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் கேர்மாளம் அருகே உள்ள கானக்கரையை சேர்ந்த ஜடையன்(53), மாதேஸ்(32) மற்றும் கோத்தகிரியைச் சேர்ந்த முருகேஷ்(40) என்பது தெரியவந்தது. அவர்கள் வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய சுருக்கு கம்பி, அரிவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அனுமதியின்றி காட்டில் சுற்றித்திரிந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஆசனூர் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் குமளி வெங்கட் அப்பலா நாயுடு முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த அவர், வனத்தில் அத்துமீறி நுழைந்து விலங்குகளை வேட்டையாட முயன்றதாக மூவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    ஈரோட்டில் வீட்டை விட்டு டீ குடிக்க சென்ற முதியவர் மாயமானார். இது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மூல்பட்டறை 3-வது வீதியை சேர்ந்தவர் நடராஜன் என்ற தமிழ் குமரன் (வயது 85). இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன் நடந்த சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

    இந்த நிலையில் அவர் வீட்டை விட்டு காலை செல்பவர் இரவு 10 மணிக்கெல்லாம் வந்து விடுவார்.

    இதே போல் கடந்த 6-ந் தேதி காலை 10 மணிக்கு டீ குடிக்க கடைக்கு சென்ற தமிழ் குமரன் இதுவரை வீட்டுக்கு வரவில்லையாம்.

    அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என தெரியவில்லை.

    இது குறித்து அவரது மகன் கோபால கிருஷ்ணன் ஈரோடு கருங்கல் பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    மாயமான முதியவர் கருப்பு கலர் கட்டம் போட்ட சட்டையும், நீல நிற கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார். அவரது நெற்றியில் ஒரு காய தழும்பும் உள்ளது.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி விசாரணை நடத்தி மாயமான முதியவரை தேடி வருகிறார்.

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கடப்பாரை, மண்வெட்டியுடன் வந்ததால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்று வந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்துள்ளது.

    இதன் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. பொதுமக்கள் கொண்டு வரும் மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பட்டியல் போடலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களிலிருந்து வந்த மக்கள் மனுக்களை புகார் பெட்டியில் போட்டனர்.

    ஈரோடு இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரகாஷ் என்பவர் கையில் மண்வெட்டி கடப்பாரையுடன் கழுத்தில் ஈரோட்டில் விரைவில் கரசேவை என்ற வாசகத்துடன் வந்திருந்தார். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் அந்த நபரை தடுத்து நிறுத்தி மண்வெட்டியுடன் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று கூறினார் இதையடுத்து அவர் மண்வெட்டி கடப்பாரையை வெளியில் விட்டு புகார்ப் பெட்டியில் மனு போட்டார் அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு அடுத்த கணபதி பாளையம் காளமங்கலம் குலவிளக்கு அம்மன் கோவிலின் கதவின் முகப்புப் பகுதியில் அண்ணா பெரியார் அன்னை தெரேசா போன்றோரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த உருவங்களை அகற்றி விட்டு ஈரோடு மக்களுக்காக பாடுபட்ட தீரன் சின்னமலை காளிங்கராயன் பொல்லான் ஆகியோர் உருவங்கள் பொறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இந்து மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

    சென்னிமலை பகுதியில் தனியார் பள்ளி மற்றும் பொதுமக்கள் அதிகம் செல்லும் இடங்களில் பில்லி சூனிய வாதிகளால் கொட்டப்படும் மாந்தீரிக பொருட்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து பெருந்துறை ரயில்வே ஸ்டேசன் செல்லும் மெயின் ரோட்டில் இருந்து வெங்கிட்டியம்பாளையம் செல்லும் பிரிவில் (மூன்று ரோடு பகுதி) பில்லி சூனிய மாந்தீரிக வாதிகளால் பல்வேறு பூஜை பொருட்களை கொட்டி சென்றுள்ளனர்.

    இதில் தேங்காய், பூசணிகாய், சிறிய பானை, நவதானியம், பிஸ்கட், இரண்டு எலுமிச்சை பழம் இதில் முழுவதும் குண்டூசி குத்தி போட்டுள்ளனர்.

    இந்த பொருட்களை பார்த்து மக்கள் பீதியடைந்து செல்கின்றனர். மேலும் அருகில் தனியார் பள்ளி மற்றும் கம்பெனி வேறு உள்ளது. இங்கு அதிகபடியான பெண்கள் பணியாற்றுகிறார்கள் இவர்களும் இந்த மந்தீரிக பொருட்களை பார்த்து பீதியுடன் பணிக்கு செல்கின்றனர்.

    மேலும் இரவு பகல் என எந்த நேரமும் மக்கள் வந்து செல்லும் ரோடு இப்படி மெயின் ரோட்டில் கொட்டுவது பெண்கள், குழந்தைகளை பயத்தை ஏற்படுத்துகிறது. இப்படி மந்திரத்தை நம்பும் பில்லி சூனிய வாதிகள் இனி மேலாவது இப்படி பொதுமக்கள் கூடும் இடங்களில் கொட்டி பொதுமக்களுக்கு பீதி உள்ளாக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    சத்தியமங்கலத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே டாஸ்மாக் புதிய கடை அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த மதுக்கடைக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த மதுக்கடையை திறந்தால் பெண்கள் அந்த பகுதியில் சுதந்திரமாக நடமாட முடியாது. தேவையில்லாத பிரச்சினை ஏற்படும். எனவே மதுக்கடையை திறக்க கூடாது என போர் கொடி தூக்கி வந்தனர்.

    மேலும் மதுக்கடையை திறந்தால் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம். யாருக்கும் ஓட்டு போட மாட்டோம் என்று நோட்டீசு அச்சடித்து பொதுமக்கள் அதை வினியோகம் செய்தனர்.

    இந்த பரபரப்புக்கு இடையே இன்று காலை 9 மணி அளவில் அந்த பகுதி பொதுமக்கள் மதுக்கடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம்- கோவை நெடுஞ்சாலையில் நடுரோட்டில் அமர்ந்து இந்த சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. பிறகு மறியல் நடத்திய பொதுமக்கள் அந்த இடத்தில் இருந்து சென்று எஸ்.ஆர்.டி. கார்னரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அசம்பாவிதம் சம்பவம் நடக்காமல் இருக்க சத்திய மங்கலம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு தாசில்தார் பெரியசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் சாலை மறியல் நடத்திய மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த பகுதியில் மதுக்கடை அமையக்கூடாது. திறக்க கூடாது என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருந்தனர். மேலும் உள்ளாட்சி தேர்தலையும் புறக்கணிப்போம் என்று கூறினர்.

    அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஈரோடு பகுதியில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு 110-22 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 22 கி.வோ திருநகர் காலனி மின் பாதையில் புதிதாக கம்பங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. ஈரோடு வி.சி.டி.வி. ரோடு (மல்லிகை அரங்கம் ரோடு), திருநகர் காலனி, மாதவக்காடு, சிந்தன் நகர், கிருஷ்ணம் பாளையம், கமலா நகர், கக்கன் நகர், ஆர்.கே.வி. நகர், ராஜகோபால் தோட்டம், ராமமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், வண்டியூரான் கோவில்.

    இந்த தகவலை ஈரோடு நகரியம் மின் வாரிய செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்தார்.

    ×