என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோபி அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    பெருந்துறையை அடுத்த பச்சாக் கவுண்டன் பாளையம், அரிஜன காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்தவர் திவாகரன் (21). இருவரும் நண்பர்கள். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். வண்டியை ராமசாமி ஓட்ட பின்னால் திவாகரன் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தார்.

    கிரேநகர் - விஜயமங்கலம் ரோடு, கோடாபுலியூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ராமசாமி, திவாகரன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இருவருக்கும் தலை, கால்களில் பலத்த அடிபட்டு மயக்கமடைந்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திங்களூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சட்டவிரோதமாக பல் டாக்டர் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்கில், நித்தியானந்தாவுக்கு, சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    சென்னை:

    ஈரோட்டை சேர்ந்தவர் அங்குலட்சுமி. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறி இருப்பதாவது:-

    எனது மகன் பிரானாசாமி பல் மருத்துவராக பணி புரிந்து வந்தார். திடீரென நித்யானந்தா சீடராக மாறிய அவர் கடந்த 15 வருடங்களாக பெங்களூர் அருகே உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இருந்து வந்தார்.

    ஆனால் தற்போது எனது மகனை பார்க்கவோ, பேசவோ ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. நித்யானந்தாவின் சட்ட விரோத காவலில் இருந்து எனது மகனை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடத்தப்பட்டது.

    அங்கு லட்சுமி அளித்துள்ள புகார் குறித்து 4 வாரங்களுக்குள் நித்தியானந்தா பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அங்குலட்சுமி புகார் அளித்து இருந்தார். இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்க ஈரோடு போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை ஐகோர்ட்

    நித்தியானந்தாவுக்கு எதிராக ஏற்கனவே கர்நாடக மற்றும் குஜராத் மாநில கோர்ட்டுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

    இந்த நிலையில் 3-வதாக ஐகோர்ட்டும் நித்தியானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக பணிபுரிந்த 20 பேரை வருவாய் துறையினர் மற்றும் போலீசார் இன்று மீட்டனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள முனியப்பம்பாளையம் பகுதியில் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு வந்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதில் 11 பெரியவர்கள், 9 குழந்தைகள் என 20 பேர் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் அவர்கள் தங்கள் ஊருக்கு செல்வதாக கூறினார்கள். ஆனால் சூளைக்காரர் அந்த குடும்பத்தினரை ஊருக்கு செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த குடும்பத்தினர் கடலூரில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்களது உறவினர்கள் கோபி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து இன்று காலை கோபி வருவாய் துறையினர் மற்றும் போலீசார் செங்கல் சூளைக்கு சென்று கொத்தடிமையாக வேலை பார்த்த 20 பேரையும் மீட்டனர்.

    பின்னர் அவர்கள் அனைவரும் அந்தியூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


    அந்தியூர் அருகே கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்த சித்தையன் (45) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 6 மாதமாக குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் நேற்று இரவு ஜே.ஜே. நகரில் உள்ள தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனையடுத்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த சித்தையனை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் மனைவி மீனாட்சி ஆகியோர் உள்ளனர். இதுகுறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு அருகே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கல்லூரி மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோடு:

    மத்திய அரசு பாராளுமன்றத்தில் குடியுரிமை மசோதாவை தாக்கல் செய்து அது நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை கண்டித்து அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    டெல்லி பல்கலைக்கழகத்தில் குடியுரிமை மசோதாவை கண்டித்தும் அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

    இதையடுத்து இந்த வி‌ஷயம் விசுவரூபம் எடுத்தது. குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தும் உள்ளிருப்பு போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு சி.என்.சி. கல்லூரி மாணவர்கள் குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து கல்லூரி வளாகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இன்று காலை கல்லூரி நுழைவுவாயில் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய திரண்டு வந்தனர். அப்போது கல்லூரி முதல்வர் அங்கு வந்து போராட்டம் நடத்தி வந்த மாணவர்களை தடுத்து நிறுத்தி உங்கள் போராட்டத்திற்கு வெளி மாணவர்கள் யாரும் கல்லூரிக்குள் வரக்கூடாது.

    நீங்களே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டுமென்றால் செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார். இதை ஏற்று ஆர்ப்பாட்டத்திற்கு வந்த மாணவர்கள் கல்லூரிக்குள் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
    சென்னிமலை அருகே மனவேதனையில் இருந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த தோப்புபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பஞ்சர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பெயர் ராணி (வயது 34). வீட்டில் இருந்து வந்த ராணி சில நாட்களாகவே மன வேதனையில் இருந்தாராம்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்த ராணி தற்கொலை செய்து கொள்ள வி‌ஷம் குடித்து விட்டார்.

    வெளியே சென்றவர்கள் வீட்டுக்கு வந்தபோது அங்கு வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்த ராணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமானார். இதனால் வீடு திரும்பினார்.

    எனினும் அவர் தொடர்ந்து கவலையிலேயே இருந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் விரைந்து சென்று ராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்வதில் முடிவாக இருந்த ராணி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று உடனடியாக தெரியவில்லை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 6 லட்சத்து 74 ஆயிரம் ரே‌ஷன் கார்டுகளுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளன.
    சூரம்பட்டி:

    பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு வருடமும் ரே‌ஷன் கடைகளில் அரிசி கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதை விட இந்த ஆண்டு அதை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்கள் அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், அவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறி உள்ளது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் சர்க்கரை கார்டுகள் அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன இவர்களுக்கும் இந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 6 லட்சத்து 74 ஆயிரம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கார்டுகளுக்கும் தலா ரூ.1000 மற்றும் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, பாசிப்பருப்பு போன்ற பொருட்களும் வழங்கப்பட உள்ளன.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    பொங்கல் பரிசு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவு வந்தவுடன் 20-ந் தேதிக்கு பிறகு இது வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக கரும்பு மற்றும் பொருட்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக கொடுக்கப்படும்.

    பொங்கல் பரிசு வழங்கப்படும்போது ரே‌ஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் வீதி வாரியாக எந்தந்த ரே‌ஷன் கார்டுகளுக்கு எந்த தேதியில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று ரே‌ஷன் கடைகளில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படும்.

    இதை தெரிந்து பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு உரிய பொங்கல் பரிசுகளை வாங்கிக் கொள்ளலாம். அரிசி கார்டுகள் வைத்துள்ள அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சத்தியமங்கலம் அருகே ரோட்டோரம் நின்று குட்டிக்கு பால் புகட்டிய தாய் யானையை சுற்றிலா பயணிகள் நேரில் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் 50-க்கும் மேற்பட்ட கரும்பு லாரிகள் செல்கிறது.

    இப்படி கரும்பு ஏற்றி கொண்டு போகும் லாரிகளில் அளவுக்கு அதிகமாக கரும்புகள் ஏற்றி கொண்டு செல்லும் லாரிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால் லாரி டிரைவர்கள் அதிகமாக உள்ள கரும்புகளை அவிழ்த்து ரோட்டோரம் மற்றும் காட்டுக்குள் வீசி விட்டு சென்று விடுகிறார்கள்.

    இந்த கரும்புகளை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் அங்கு ஆஜர் ஆகி விடுகிறது. இதனால் பண்ணாரி சோதனை சாவடி அருகே இப்போது தினம் தினம் குட்டிகளுடன் யானைகள் வருகிறது.

    அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் யானைகளை நேரில் பார்த்து குதூகலிக்கிறார்கள். இன்னும் சிலர் விபரீதம் தெரியாமல் யானை அருகே சென்று செல்பி எடுக்கிறார்கள்.

    இது ஆபத்தான செயல் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    பொதுவாக யானைகள், குட்டி யானையுடன் நிற்பதையும் ரோட்டை கடந்து செல்வதையும் பார்க்கலாம். ஆனால் தனது குட்டிக்கு பாசத்துடன் பால் புகட்டுவதை எவராலும் எளிதில் பார்த்து விட முடியாது. ஆனால் நேற்று பண்ணாரி வன சோதனை சாவடி அருகே ஒரு தாய் யானை தனது குட்டிக்கு ரோட்டோரம் நின்று பால் ஊட்டியதை பலர் நேரில் பார்த்து வியந்தனர். பரவசம் அடைந்தனர்.

    வன சோதனை சாவடி அருகே பணியில் இருந்த வன ஊழியர்கள் அந்த யானை அருகே யாரையும் செல்ல விடாமல் பார்த்து கொண்டனர். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து குட்டியுடன் தாய் யானை காட்டுக்குள் புகுந்தது.
    டி.என்.பாளையம் அருகே மூதாட்டி சுருண்டு விழுந்து திடீரென பரிதாபமாக உயிரிந்தார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள சேட்டுக்காட்டு புதூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 68). இவரது 2-வது மனைவி நாகம்மாள் (55).லட்சுமணனின் முதல் மனைவிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் பெருமாள் (50) செல்லம்மாள் ஆகியோரின் மகன் சிவராஜ் (28). இவர் அந்தியூரில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் லாரி டிரைவராக வேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிவராஜ் பாட்டி வீட்டுக்கு சென்றார். குடும்ப பிரச்சினை குறித்து தனது பாட்டி நாகம்மாளிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சிவராஜ் தனது பாட்டியை தாக்கினார். இதில் அவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்ததாக தெரிகிறது.

    அவரது உறவினர்கள் அத்தாணி அரசு மருத்துவ மனைக்கு நாகம்மாளை சிகிச்சைக்காக அழைத்து சென்று விட்டு மீண்டும் வீட்டு வந்தனர்.

    இந்நிலையில் நாகம்மாள் நேற்று அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்று இந்த பிரச்சினை குறித்து அண்ணனிடம் கூறி அழுதார். இதனையடுத்து நாகம்மாள் தனக்கு தலை வலி மற்றும் மயக்கம் வருவதாக கூறி கீழே சுருண்டு விழுந்து அங்கேயே அவர் இறந்து விட்டார்.

    தகவல் அறிந்து பங்களா புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நாகம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

    நாகம்மாள் சாவுக்கு என்ன காரணம் குறித்து இன்று நடக்கும் பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு அருகே ஆசிரியையை கரம்பிடித்த தொழிலாளி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(வயது25) கட்டிட தொழிலாளி. இவர் கட்டிட பணிக்காக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வேலை பார்ப்பது வழக்கம் அப்போது ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவிலைச் சேர்ந்த நந்தினி (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நந்தினி ஈரோட்டில் உள்ள தனியார் குழந்தைகள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இருவரும் ஒன்றரை வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான். இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரியவந்தது. பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 9-ந் தேதி அந்தியூர் குலதெய்வம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் ஜோடி உயிருக்கு பயந்து நண்பர்கள் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் பிரகாஷ் குடும்பத்தினரை பெண் வீட்டார் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காதல் ஜோடி பிரகாஷ்- நந்தினி இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு தனது உறவினருடன் வந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். பின்னர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளியுங்கள் என்று அனுப்பி வைத்தனர்.
    கோபி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட 3 பேரை கத்தியால் குத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபி அருகே உள்ள தாழைகொம்பு புதூரை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 40). இவர் நம்பியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார், ராஜ்குமார், வெற்றிசெல்வன் ஆகியோர் முன் விரோதம் காரணமாக கண்டக்டர் கண்ணதாசனை தாக்கியதாக தெரிகிறது.

    கண்ணதாசன் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதை கண்டித்து மேற்கண்ட 3 பேரும் தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணதாசன் தான் வைத்திருந்த கத்தியால் 3 பேரையும் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நண்பரின் மனைவிக்கு தொல்லை கொடுத்த நிதி நிறுவன அதிகாரியை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோபி:

    சேலம் கிச்சிபாளையம், அப்பர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 25). திருமணமாகாதவர். இவர் ஈரோடு மாவட்டம் கோபி நாயக்கன் காட்டில் செயல்படும் சாவேரி என்ற நிதி நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு சண்முகம் தனது அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் மற்ற பணியாளர்களும் வேலை செய்து கொண்டிருந்தனர். நிதி நிறுவன அலுவலகம் அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில் இரவு 7.45 மணி அளவில் கையில் அரிவாளுடன் 4 பேர் கொண்ட கும்பல் திடீரென நிதி நிறுவன அலுவலகத்திற்குள் புகுந்தது. பின்னர் அந்த கும்பல் அரிவாளால் சண்முகத்தை வெட்டத் தொடங்கினார்கள். அவர் அய்யோ அம்மா என்று அலறியபடியே அலுவலகத்தை விட்டு வெளியே தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தினார்கள்.

    அப்போது மாடிப் படிக்கட்டில் சண்முகத்தை 4 பேரும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே சண்முகம் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சண்முகம் உடலில் மொத்தம் 30 வெட்டுகள் விழுந்தன.

    சண்முகத்தை அலுவலகத்துக்குள் புகுந்து மர்ம நபர்கள் வெட்டும்போது அருகே வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் பயந்து ஓடி விட்டார்கள். இதேபோல் கொலை நடந்ததும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த கொலை தொடர்பாக 4 பேரை கோபி போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் கொலை பற்றி பரபரப்பான தகவல் கிடைத்தது.

    சேலம் கிச்சிப்பாளையம் அப்பர் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்கிற கார்த்தி (வயது 28) என்பவர் தான் இந்த கொலைக்கு மூலையாக செயல்பட்டது தெரியவந்தது. கார்த்தி சேலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கார்த்தியும் இறந்து போன சண்முகமும் நண்பர்கள். இருவரும் ஒரே பகுதி என்பதால் சண்முகம் அடிக்கடி கார்த்தி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது சண்முகம் கார்த்தி மனைவியை போனில் அடிக்கடி பேசி தொந்தரவு கொடுத்துள்ளார்.

    மேலும் வீட்டிற்கு சென்றும் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் தெரிந்து கார்த்தி, சண்முகத்தை கண்டித்துள்ளார். ஆனால் சண்முகம் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சண்முகம் கார்த்திக்கை கொலை செய்ய திட்டம் தீட்டிய தகவல் கார்த்திக்கு தெரியவந்தது.

    இதையடுத்து கார்த்தி தனது நண்பர்களான சபரி சித்தார் (23), வேலவன் (37), ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரிடம் பேசி சண்முகத்தை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

    இதையடுத்து தான் நேற்று இரவு 4 பேரும் ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்து நிதி நிறுவனத்துக்குள் புகுந்து சண்முகத்தை ஓட ஓட வெட்டு கொடூரமாக் கொலை செய்துள்ளனர்.

    மேற்கண்ட தகவலை கொலையாளிகள் போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×