search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கோபியில் நிதி நிறுவன அதிகாரியை கொலை செய்த 4 பேர் கைது

    நண்பரின் மனைவிக்கு தொல்லை கொடுத்த நிதி நிறுவன அதிகாரியை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோபி:

    சேலம் கிச்சிபாளையம், அப்பர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 25). திருமணமாகாதவர். இவர் ஈரோடு மாவட்டம் கோபி நாயக்கன் காட்டில் செயல்படும் சாவேரி என்ற நிதி நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு சண்முகம் தனது அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் மற்ற பணியாளர்களும் வேலை செய்து கொண்டிருந்தனர். நிதி நிறுவன அலுவலகம் அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில் இரவு 7.45 மணி அளவில் கையில் அரிவாளுடன் 4 பேர் கொண்ட கும்பல் திடீரென நிதி நிறுவன அலுவலகத்திற்குள் புகுந்தது. பின்னர் அந்த கும்பல் அரிவாளால் சண்முகத்தை வெட்டத் தொடங்கினார்கள். அவர் அய்யோ அம்மா என்று அலறியபடியே அலுவலகத்தை விட்டு வெளியே தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தினார்கள்.

    அப்போது மாடிப் படிக்கட்டில் சண்முகத்தை 4 பேரும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே சண்முகம் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சண்முகம் உடலில் மொத்தம் 30 வெட்டுகள் விழுந்தன.

    சண்முகத்தை அலுவலகத்துக்குள் புகுந்து மர்ம நபர்கள் வெட்டும்போது அருகே வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் பயந்து ஓடி விட்டார்கள். இதேபோல் கொலை நடந்ததும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த கொலை தொடர்பாக 4 பேரை கோபி போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் கொலை பற்றி பரபரப்பான தகவல் கிடைத்தது.

    சேலம் கிச்சிப்பாளையம் அப்பர் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்கிற கார்த்தி (வயது 28) என்பவர் தான் இந்த கொலைக்கு மூலையாக செயல்பட்டது தெரியவந்தது. கார்த்தி சேலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கார்த்தியும் இறந்து போன சண்முகமும் நண்பர்கள். இருவரும் ஒரே பகுதி என்பதால் சண்முகம் அடிக்கடி கார்த்தி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது சண்முகம் கார்த்தி மனைவியை போனில் அடிக்கடி பேசி தொந்தரவு கொடுத்துள்ளார்.

    மேலும் வீட்டிற்கு சென்றும் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் தெரிந்து கார்த்தி, சண்முகத்தை கண்டித்துள்ளார். ஆனால் சண்முகம் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சண்முகம் கார்த்திக்கை கொலை செய்ய திட்டம் தீட்டிய தகவல் கார்த்திக்கு தெரியவந்தது.

    இதையடுத்து கார்த்தி தனது நண்பர்களான சபரி சித்தார் (23), வேலவன் (37), ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரிடம் பேசி சண்முகத்தை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

    இதையடுத்து தான் நேற்று இரவு 4 பேரும் ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்து நிதி நிறுவனத்துக்குள் புகுந்து சண்முகத்தை ஓட ஓட வெட்டு கொடூரமாக் கொலை செய்துள்ளனர்.

    மேற்கண்ட தகவலை கொலையாளிகள் போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    Next Story
    ×