search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல் சூளை"

    • நேற்று இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைக்க தீ மூட்டப்பட்டது‌.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 40). இவரது மனைவி அமுல் (30). தம்பதியினருக்கு சந்தியா (16), சினேகா (14), அரவிந்த் (12) ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

    தெய்வசிகாமணியும், அவரது மனைவி அமுலுவும் அதே ஊரை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில், 15 ஆண்டுகள் வாடகை மூலம் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.

    தம்பதியினர் தினமும் பகல் முழுவதும் சூளையில் வேலை செய்துவிட்டு, இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று விடுவார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைக்க தீ மூட்டப்பட்டது. அப்போது தெய்வசிகாமணி மற்றும் அமுல் ஆகியோர் சூளைக்கு பக்கவாட்டில் இறக்கப்பட்டுள்ள தகர சீட் அருகே தங்கியுள்ளனர்.

    மேலும் செங்கல் சூளையில் மூட்டப்பட்ட தீ அணையாமல் இருக்க சூளையை சுற்றி தார்பாய் மூடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் விடியும் வரை கணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    தொடர்மழையின் காரணமாக சூளை மூடப்பட்டு இருந்த தீ அணைந்து புகை மண்டலம் சூழ்ந்தது.

    அப்போது கிளம்பிய புகை அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதிலும் குபீரென பரவியது. அப்போது தூக்கத்தில் இருந்த தெய்வசிகாமணி, அமுலு ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அலறி கூச்சலிட்டனர்.

    பலத்த மழை பெய்ததால், இவர்களது கூச்சல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில், இவர்களது பக்கத்து சூளை உரிமையாளர் சீனிவாசன், அந்த வழியாக சென்றபோது அமுலுவின் முனகல் சத்தம் கேட்டது.

    உடனே சீனிவாசன் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தெய்வசிகாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ஆபத்தான நிலையில் இருந்த அமுலுவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

    ஆனாலும் சிகிச்சை பலனின்றி அமுலுவும் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த, வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தாசில்தார் செந்தில், இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், வருவாய் ஆய்வாளர் சந்தியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • புகாரின் பேரில் தன்னார்வ அமைப்பின் இயக்குனர் தங்கவேல் மற்றும் அலங்கியம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு முன்பு ஆஜர்படுத்தி, அவர்களது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் அருகே திருமலைபாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக அவினாசி தன்னார்வ அமைப்பினருக்கு புகார் வந்தன. புகாரின் பேரில் தன்னார்வ அமைப்பின் இயக்குனர் தங்கவேல் மற்றும் அலங்கியம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 2 குழந்தை தொழிலாளர்கள் தாராபுரம் அருகே உள்ள திருமலைபாளையம் தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில் அரசனுக்கு புகார் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் போலீசார் 2 குழந்தை தொழிலாளர்களையும் மீட்டனர்.

    இதனை தொடர்ந்து அவர்களை திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு முன்பு ஆஜர்படுத்தி, அவர்களது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிறுவர்கள் 2 பேரும் கொரோனா தொற்று காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் தாராபுரத்தை அடுத்த திருமலை பாளையம் தனியார் செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தது வருவாய்த்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

    • செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிலர் பணிபுரிந்து வருவதாக சென்னை தொழிலாளர் ஆணையத்திற்கு புகார் வந்தது.
    • அதிகாரிகள் செங்கல் சூளையில் திடீர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி-சுக்காம்பட்டி சாலையில் ரமேஷ் என்பவர் செங்கல் காளவாசல் நடத்தி வருகிறார். இந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிலர் பணிபுரிந்து வருவதாக சென்னை தொழிலாளர் ஆணையத்திற்கு புகார் வந்தது.

    அதன் அடிப்படையில் சிவகங்கை தொழிலாளர் நல உதவி ஆணையர் ராஜ்குமாருக்கு மின்னஞ்சல் மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால் துரை தலைமையில் அதிகாரிகள் செங்கல் சூளையில் திடீர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது வீரன் (வயது58), செல்வி (46), மகேஸ்வரி (29), குணா (22), திருமூர்த்தி (21), பிரகாஷ் (17), முத்துக்கருப்பன் (39), கயல்விழி (22), விஜயசாந்தி (17) உள்ளிட்ட 9 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டது தெரிய வந்தது.

    உடனடியாக 9 பேரும், அவர்களுடன் இருந்த 5 குழந்தைகளும் உடமைகளுடன் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்களது சொந்த ஊரான மதுரை மாவட்டம் புலிப்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தென் சிங்கம்புணரி கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த ஆய்வின்போது சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கிருஷ்ண மூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), சிவகங்கை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், திருப்பத்தூர் வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல்துறையினர் உடனிருந்தனர். 

    • செங்கல் சூளையை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்ட நாங்கள் புதிய தொழில் தொடங்கி உள்ளோம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல்சூளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொத்தடிமையாக பணிபுரிந்து மீட்கப்பட்டவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டு திருத்தணி அருகே வீரகநல்லூர் பகுதியில் கொத்தடிமை முறையில் இருந்து மீட்கப்பட்ட 80 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, சிறகுகள் செங்கல் சூளை ஆரம்பிக்கப்பட்டது.

    அது தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதனால் அங்கு வேலைபார்த்து வருபவர்களின் வாழ்க்கை நிலை உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் திருவள்ளூர் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும், கொத்தடிமை தொழில் முறையில் இருந்து மீட்கப்பட்ட 40 குடும்பங்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக "சிறகுகள் செங்கல் சூளை-2" கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் பகுதியில் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த செங்கல் சூளையை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இதில் 54 மீட்டெடுக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் 27 மீன் பிடிக்கும் வலைகள் மற்றும் செங்கல் சூளைக்கு தேவையான பொருட்கள், தலா ரூ.10 ஆயிரம் காசோலைகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் கேத்ரின் சரண்யா, மகளிர் திட்ட அலுவலர் மலர்விழி, வளர்ச்சி அலுவலர் லதா, ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பாக தொழிலாளர்கள் கூறும்போது, 'கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்ட நாங்கள் புதிய தொழில் தொடங்கி உள்ளோம். இதற்கு உதவிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. நாங்கள் இந்த செங்கல் சூளையை சிறப்பாக நடத்தி எங்களது வாழ்வில் முன்னேறுவோம்' என்றனர்.

    • மனைவி யிடம் சண்டையிட்டு கொண்டு வீட்டை விட்டு சென்ற வீரமணி வீடு திரும்பவில்லை.
    • இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தை அடுத்துள்ள கே.என்.பாளையம் தெம்பினி காலனியை சேர்ந்தவர் வீரமணி (42). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். வீரமணியும், செல்வியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

    இந்த நிலையில் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான வீரமணி வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு சென்று விடுவார். பின்னர் 2 நாளில் மீண்டும் திரும்பி வந்துவிடுவார்.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல மனைவி யிடம் சண்டையிட்டு கொண்டு வீட்டை விட்டு சென்ற வீரமணி வீடு திரும்பவில்லை.

    சம்பவத்தன்று இரவு அதே ஊரை சேர்ந்த நபர் ஒருவர் செல்விக்கு போன் செய்து கணவர் வீரமணி சத்தியமங்கலம் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பாக மயங்கி கிடப்பதாகவும், அவரை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து செல்வி உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது டாக்டர் வரும் வழியிலேயே வீரமணி இறந்து விட்டார் என தெரிவித்தார்.

    இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெருமாள் (வயது 50) இவர் ஒரு தனியார் கொரியர் நிறு வனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • பெருமாளின் இளையமகன் உன்னி கிருஷ்ணன் (16) நெருப்பில் தவறி விழுந்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள புதூர் காடம்பட்டி பகுதியைசேர்ந்தவர் பெருமாள் (வயது 50) இவர் ஒரு தனியார் கொரியர் நிறு வனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜானகி மற்றும் 2 மகன்களும் புதூர் காடம்பட்டியில் உள்ள குமார் என்பவரின் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 15-ந்தேதி இரவு சூளையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது பெருமாளின் இளையமகன் உன்னி கிருஷ்ணன் (16) நெருப்பில் தவறி விழுந்தார். அவரை

    மீட்டு சேலம் அரசு மருத்து மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தீவிர சிகிச்சையில் இருந்த உன்னிகிருஷ்ணன் நேற்று சிகிச்சை இறந்தார். இதுபற்றி பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • இந்த துயர சம்பவம் பற்றி கேள்விப்பட்ட முதல்வர் நிதிஷ் குமார், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    மோதிஹரி:

    பீகார் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டம், ராம்கர்வா பகுதியில் செங்கல் சூளை உள்ளது. இன்று வழக்கம்போல் ஊழியர்கள் செங்கல் சூளையில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மாலையில் திடீரென அங்கு குண்டுவெடித்ததுபோன்று பலத்த சத்தம் கேட்டது. சிம்னி வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. இதனால் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். சிலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் செங்கல் சூளை உரிமையாளர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த துயர சம்பவம் பற்றி கேள்விப்பட்ட முதல்வர் நிதிஷ் குமார், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • திருவட்டார், குலசேக ரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு உள்ளிட்ட பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொடர் மழையால் குழித்துறை, ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக காணப்படும்.

    பின்னர் மாலை நேரங் களில் வனத்தில் கருமே கங்கள் சூழ்ந்து மழை பெய்யத்தொடங்குகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகப்படியான மழை மாலை நேரங்களில் பெய்து வருகிறது.

    இதனால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர் மழையால் பிரதான அணையான பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    திருவட்டார், குலசேக ரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உயர்தரமான ரப்பர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது தொடர் மழை பெய்து வருவதால் ரப்பர் மரத்தில் இருந்து பால் வடிக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்ப டுகிறார்கள். ரப்பர் உற்பத்தி செய்யும் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்டத்தில் செங்கல் சூளை அதிக அளவில் உள்ளன. இந்த தொடர் மழையால் குழித்துறை, ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    • மாதானம் பகுதியில் ஆய்வு செய்த பொழுது செங்கல் சூளையில் 13 வயதுடைய சுபஸ்ரீ என்ற மாணவி பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக கூறினர்.
    • பள்ளியில் 8-ஆம் வகுப்பு சேர்க்கப்பட்டு புத்தகம்,சீருடை மற்றும் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றி யத்தில் வட்டார வளமை யத்தின் சார்பாக பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்று திறன் படைத்த மாணவர்களை கண்டறியும் பணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உத்தரவின் படி நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் ஆகியோர் மாதானம் பகுதியில் ஆய்வு செய்த பொழுது செங்கல் சூலையில் 13 வயதுடைய சுபஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும் கூறினார். காலை மாதானம் செங்கல் சூளைக்கு சென்ற பொழுது மாணவி சுபஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரிய வந்தது பெற்றோர்களிடம் விசாரி த்த பொழுது கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியம் கல்பூண்டியில் 4 ஆம் வகுப்பு படித்தாகவும் தாரபுரம் கடலூர் கேரளா போன்ற இடங்களுக்கு. சென்று கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டதால் படிக்க வைக்க முடிய வில்லை என்று பெற்றோர்கள் கூறினார்கள்.

    பெற்றோர்களுடன் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் மாவட்டஉதவி. திட்ட அலுவலர் ஞானசே கரன் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் திருசங்கு மற்றும் ஜெய்கிருஷ்ணன் ஆலோசனையின் படி மாணவி அருகில் உள்ள சிவானந்த உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு சேர்க்க ப்பட்டு புத்தகம்மற்றும் சிருடை மற்றும் விலையி ல்லா பொருட்கள வழங்க ப்பட்டது. அப்பொழுது பள்ளியின் தலைமை ஆசிரியர் பவானி ஆசிரி யர்கள் மணிமாறன் மற்றும் சேகர் ஆகியோர் இருந்தனர்.

    • ரெஜிக்கும் கிறிஸ்டோபர் ஜாணுக்கும் செங்கல் சூளை நடத்துவதில் தொழில் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.
    • தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கன்னியாகுமரி:


    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி கடவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜாண் (வயது 56) செங்கல் சூளை நடத்தி வருகிறார்.


    இவருக்கும் சிதறால் வருக்கவிளையை சேர்ந்த ரெஜி (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்டோபர் ஜாண் வீட்டின் காம்பவு ண்டின் உள்பகுதியில் நின்றபோது ரெஜி (43), ஆல்பர்ட் ராஜ் (42), சத்யன் (40), வர்கீஸ் (40) ஆகியோர் சேர்ந்து கிறிஸ்டோபர் ஜாணை கம்பியால் அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயமடைந்த கிறிஸ்டோபர் ஜாணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


    இது குறித்து மார்த்தா ண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். ரெஜி மார்த்தா ண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ரெஜிக்கும் கிறிஸ்டோபர் ஜாணுக்கும் செங்கல் சூளை நடத்துவதில் தொழில் போட்டி உள்ளதாகவும், இதில் இருவருக்கும் முன் விரோதம் இருந்ததாலும் சம்பவத்தன்று ரெஜி தந்தையின் கல்லறையின் அருகாமையில் நின்றபோது கிரிஸ்டோபர் ஜாண், ரெஜியை கம்பியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

    இதனையடுத்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 5 பேர் மீது ழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×